ஸ்ரீ புருஷோத்தம பெருமாள்

விழாக்களின்போது பெருமாள், கருடன் மீது எழுந்தருளி காட்சி தருவார். ஆனால், மூலஸ்தானத்திலேயே பெருமாள் அப்படி சேவை சாதிக்கும் தலம் அம்பாசமுத்திரம். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது ஸ்ரீ புருஷோத்தம பெருமாள் திருக்கோயில். கிபி 10ம் நூற்றாண்டுக்கு முன்பு சோழ மரபைச் சார்ந்த ஒரு மன்னனுக்கு குழந்தைச் செல்வம் இல்லாத காரணத்தால், அவன் அவைப்புலவர் பொருணை (தாமிரபரணி) நதி தீரத்தில் ஒரு விஷ்ணு ஆலயம் அமைக்கச் சொன்னார் எனவும், மன்னனும் அவ்வாறே செய்ய, அவனுக்குக் குழந்தைச் செல்வம் உண்டானது எனவும் கூறுகின்றனர். தாமிரபரணி நதியின் கரையில் அமைந்த முதல் விஷ்ணு ஆலயம் இதுவே. இது அளவில் சிறிய கோயிலாக இருந்தாலும் இன்றும் பழைய பொலிவுடன் திகழ்கிறது. இங்கு 1998ம் வருடம் ஸ்ரீஸ்ரீஜோதி ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதன்பின் புரட்டாசி சனிக்கிழமைகளில் கருட உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மற்றும் மார்கழி ஸ்ரீவைகுண்ட ஏகாதசி, ஸ்ரீஹனுமத் ஜயந்தி ஆகியவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
கிழக்கு முகமாக அமைந்துள்ள கருவறையில் ஸ்ரீ புருஷோத்தம பெருமாள், அலர்மேல் மங்கை தாயாரும், அர்த்த மண்டபத்தில் துவாரபாலகர்கள், ஆழ்வார்கள், உடையவர், விஷ்வக்கேனர், ஸ்ரீவேணு கோபாலகிருஷ்ணன் ஆகிய மூர்த்திகளையும், மகா மண்டபத்தில் ஸ்ரீ ஜோதி ஆஞ்சநேயர், கருடன், துவஜஸ்தம்பம், பலிபீடம் என்று தரிசிக்கிறோம்.
பிராகாரத்தில் துளசிமாடம் என்னும் சிறிய கோயிலும், கோயிலின் தென் சுவற்றின் தென் பகுதியில் வாசுகி என்னும் நாகர் சுதை வடிவமும் உள்ளன. வடகிழக்குப் பகுதியில் ஸ்ரீ மூலகருட பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கருவறையின் நடுவில் சதுர பீடமும், அவற்றின் மத்தியில் மலர்ந்த தாமரை மலரும் அதன்மேல் ஆதிசேஷனின் அடிபாகமும், அதில் கருட பகவான் ஒருகாலை மடித்து, மறுகாலை ஊன்றித் திகழ, அவரின் ஒரு கை பெருமாளின் வலது திருப்பாதத்தைத் தாங்கியவாறும், மற்றொரு கை மலர்ந்த தாமரை மலரை கையில் கொண்டும் இருக்கிறது. கருடன் தோளின்மேல் உள்ள பீடத்தில் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் இடதுகாலை மடித்து, வலது காலை கருட பகவானின் கையில் வைத்தவாறும், பிராட்டியை தன் இடது மடியில் அமர்த்தி அஷ்டகரங்களைக் கொண்டும், ஆதிசேஷன் குடைபிடிக்க, வரதஹஸ்தம் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இவரை, ‘அஷ்டபுயகரப் பெருமாள்’ எனவும் கூறுகின்றனர். சங்கம், சக்கரம், வாள், வில், அம்பு, கேடயம் ஆறு கரங்களில் திகழ, ஒரு கரம் அலர்மேல் மங்கை தாயாரை அணைத்தபடியும், மற்றொரு கரம் வரதஹஸ்தமாகவும் திகழ்கிறது. இந்தத் திருவுருவம் ஒரே கல்லால் செய்யப்பட்டது என்பது சிறப்பு. தாயார் தன்னுடைய இடது கையில் தாமரை மலர் ஏந்தியுள்ளார். கருடனின் கையில் உள்ள தாமரை மலர்மீது தாயாரின் திருப்பாதங்கள் அமைந்துள்ளன.
கோயிலின் வடகிழக்கில் அமைந்துள்ளது ஸ்ரீபுருஷோத்தம புஷ்கரணி. இதிலிருந்து தீர்த்தம் எடுக்கப்பட்டு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. மற்றொன்று, கோயிலின் மேற்கு பகுதியில் நஞ்சை நிலங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள பொங்கிக்கரை தீர்த்தம். இது பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு சித்தரால் ஏற்படுத்தப்பட்டது. அவர் தினமும் தன்னுடைய தவத்தின் சக்தியால் வடநாட்டு கங்கையிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்தார். வயது முதிர்வின் காரணமாக பெருமாள் அவர்முன் தோன்றி நாளை முதல் நீ கங்கை செல்ல வேண்டாம். தன்னுடைய விமானத்தின் மீது கதிரவனின் கதிர்கள் பட்டு ஒரு தீர்த்தம் உருவாகும்" எனக் கூறி மறைந்தார். இன்றும் காலை வேளையில் தக்ஷிணாயன காலத்தில் சூரிய கதிர்கள் படுகின்றன. சித்தர் ஜீவசமாதி ஆன இடமும் பொகையின் அருகில் சிறிய மண்டபமாக உள்ளது. (தற்போது, அதிலிருந்து தீர்த்தம் எடுக்கப்படுவதில்லை.)
கருவறையின் மேல் உள்ளது இந்திர விமானம். இது மூன்று நிலைகளைக் கொண்டு விளங்குகிறது. முதல்நிலையில் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியின் தசாவ தாரங்களையும், இரண்டாம் நிலையில் மேற்கே இந்திரன், வடக்கே ருத்திரன், தெற்கே பிரம்மன் மற்றும் கிழக்கே ஹயக்ரீவ மூர்த்தியைக் கொண்டு விளங்குகிறது. மூன்றாம் நிலையில் வட்ட வடிவ கட்டு மானத்தின் மேல் கலசம் அமைந்துள்ளது.
சித்திரா பௌர்ணமி, ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி சனிக் கிழமைகள், கார்த்திகை தீபம், மார்கழி மாதம் தினமும் திருப்பள்ளி எழுச்சி, வைகுண்ட ஏகாதசி, ஹனுமத் ஜயந்தி மற்றும் மாதாந்திர திருவோண நட்சத்திர தினங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. திருப்பணி செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது பழைமையான இந்தத் திருக்கோயில். புருஷோத்தமரின் அருட்பார்வைக்கு ஆளாகப்போகும் அதிர்ஷ்டசாலி யாரென்றே நினைக்கத் தோன்றுகிறது.
செல்லும் வழி
திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் 40 கி.மீ. இவ்வூர் அகத்தியர் கோயில் பேருந்து நிறுத்தத்திலிருந்து கோயில் 2 கி.மீ. ஆட்டோ வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 7.30 மணி முதல் 10 வரை. மாலை 5.30 மணி முதல் 7.30 வரை.
தொடர்புக்கு: 04634-255609 / 90956 49236.

Comments