ஷர்தா மாதா

மாயி, மா, மாதா... இவையெல்லாம் அன்னை என்று குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொற்கள். அதனுடன் ஹாரம் எனும் பொருள்படும் ‘ஹார்’ என்று இணைத்து குறிப்பிடப்படும் தலம் மைஹார் (ட்ச்டிடச்ணூ); மாஹர், மாயிஹர்... என்றெல்லாம் வழக்கில் குறிப்பிடுகிறார்கள். இங்கே திரிகூட மலை உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் ஷர்தா மாதா.
மத்தியப் பிரதேச மாநிலம், சாத்னா மாவட்டத்தில் உள்ளது இந்தத் தலம். தட்சயக்ஞத்தில் பிராணத் தியாகம் செய்த தாட்சாயணியின் கழுத்திலிருந்த மாலை விழுந்த இடம் என்பதால் ‘மாஹர்’ என்று அழைக்கப்படுகிறது. அந்தப் பெயரிலேயே ஊரும், கோயிலும் அழைக்கப்பட்டன.
மலை உச்சியிலுள்ள கோயிலுக்குச் செல்ல 1063 படிகள் உள்ளன. வயதானவர்களுக்காகவும், மலையேற சிரமப்படுபவர்களுக்காகவும் இழுவை ரயிலும் இயக்கப்படுகிறது.
கோயில் பளிங்கு கற்களால் அமைக்கப்பட்டு, மிகவும் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது.
இக்கோயிலைப் பற்றி இரண்டு வரலாறுகள் கூறப்படுகின்றன. ஒரு இடைச் சிறுவன் மாடுகளை மேய்ப்பதற்கு இந்த மலை உச்சிக்கு தினமும் வருவானாம். மாலையில் மாடுகளை அதனதன் சொந்தக்காரர்களின் வீட்டில் விடுவது அவனது வழக்கம்.
ஒரு நாள் தமது மாட்டு மந்தையில் தங்க நிறத்தில் புதிய பசு ஒன்றும் கலந்திருப்பதைப் பார்த்தான். மேய்ச்சலுக்குப் பின், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பசு மந்தையிலிருந்து பிரிந்து போய்விட்டது. அது யாருடைய பசு என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. மறுநாள் அந்தப் பசு வந்தால் அது எங்கு போகிறதென்று பார்த்து, அதன் சொந்தக்காரரிடம் அதை மேய்ப்பதற்கான கூலியை வாங்க வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். மறுநாளும் அந்தப் பசு வந்து எல்லா பசுக்களோடும் புல் மேய்ந்து, மாலையில் தனியாகப் பிரிந்து சென்றது. அவனும் அதைப் பின் தொடர்ந்து சென்றான். பசு ஒரு குகையில் புகுந்து மறைந்துவிட்டது. இடைச் சிறுவன் அந்தக் குகை வாசலுக்குச் சென்று அழைத்துப் பார்த்தான். யாரும் வரவில்லை. ஆகையால், அங்கேயே உட்கார்ந்துவிட்டான். இரவு அந்தக் குகையிலிருந்து ஒரு மூதாட்டி வந்து அவனிடம் ஏன் இங்கு உட்கார்ந்திருக்கிறாய்" என்று கேட்டாள். இவன், பசுவை மேய்த்ததற்குக் கூலி வேண்டும்" என்று சொன்னான். உள்ளே சென்ற மூதாட்டி, சிறிது நேரத்தில் திரும்பி வந்து அவனிடம் கொஞ்சம் தானியங்களைக் கொடுத்துவிட்டு, இனி இங்கு வராதே" என்று சொல்லிச் சென்று விட்டாள்.
வீட்டுக்கு வந்து அந்த தானியங்களைப் பார்த்த போது அவை எல்லாம் நவரத்னங்களாக மாறியிருந்தன. அதைக் கண்ட சிறுவன் பயந்து, அந்த நவரத்னங்களை அந்நாட்டு மன்னனிடம் கொடுத்து, நடந்தவற்றை சொன்னான்.
அதைக்கேட்ட அரசன் தானும் மறுநாள் மாடு மேய்க்கப் போகும்போது உடன் வருவதாகவும், அந்தக் குகையை காட்டும்படியும் கூறினான். ஆனால், மறுநாள் குகையைச் சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. அன்று இரவு மன்னன் கனவில் அந்த மூதாட்டி தோன்றி, ‘தான் ஆதிசக்தியின் அம்சம். தாம் அக்குகையில் இருப்பதாகவும், தனக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபடும்படியும்’ சொன்னாள். அதன்படியே மன்னனும் அங்கு ஒரு கோயில் அமைத்து அதற்கு ‘மாஹர்’ என்று பெயரிட்டு வழி பட்டான். அன்றிலிருந்து அனைவரும் இக்கோயிலுக்கு வந்து வழிபடத் தொடங்கினார்கள்.
இதுபோன்று மற்றொரு நிகழ்வும் கூறப்படுகிறது.
இங்கு ‘அல்கா’ (அடூடச்), ‘உதல்’ எனப் பெயர் கொண்ட அண்ணன் - தம்பி இருவர் இருந்தனர். இவர்கள் சிறந்த போர் வீரர்கள். இந்த ஷர்தா தேவியிடம் இருந்த ஈடுபாடு கொண்டவர்கள். அண்ணன் அல்கா இந்த தேவியை குறித்து 12 வருடங்கள் தவமிருந்ததாகவும், தவத்தின் முடிவில் தோன்றிய தேவி அவனுக்கு சாகா வரம் அளித்து மறைந்தாள் என்பதும் செவிவழிக் கதை.
அப்போதிலிருந்து இங்கு மிகச்சிறப்பான முறையில் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலின் மற்றொரு அதிசயம், தினமும் அதிகாலை (எவராலோ) கர்ப்பக்கிரகம் சுத்தமாக்கப்பட்டு, தேவிக்கு அலங்காரம் செய்து பூஜை நடக்கிறது. வழக்கம்போல, காலை 5 மணிக்கு சன்னிதி திறக்கும் போது, விளக்குகள் எரிவதும், புது மலர்கள் சூட்டப் பட்டிருப்பதும் வியப்பளிக்கும் விஷயம். யார் அந்த பூஜையை செய்கிறார்கள் என்பது இன்றுவரை தெரியாது என்கிறார்கள். சாகா வரம் பெற்ற அல்காதான் அந்த பூஜையை செய்வதாகவும் நம்புகிறார்கள்.
இந்தக் கோயிலுக்கு சிறிது தொலைவில் அல்காவும் அவன் சகோதரனும் மல்யுத்தம் செய்வதற்காக ஏற்படுத்திய மைதானம் உள்ளது. அங்கு அல்காவினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு குளம் இன்றும் ‘அல்கா குளம்’ என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் இக்குளம் தூர்வாரப்பட்டு அதைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஷர்தா தேவி பீடத்தின் கீழ் உள்ள கல்லில், தேவி சிலையும், இங்குள்ள நரசிம்மர் சிலையும் நிபுலதேவன் என்பவனால் கி.பி. 502ல் அமைக்கப்பட்டதாக தேவநாகரி எழுத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது.
‘சாரதா’ என்று கலைகளின் நாயகியாக நாம் வழிபடும் அம்பிகையைத்தான், ஷர்தா மாதா என்று அவர்கள் குறிப்பிட்டு வழிபடுகிறார்கள். நவராத்திரி காலங்களில் லட்சக்கணக்கில் பெருந்திரளாகக் குழுமுகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை, அதனால் பெற்ற பலனை, அங்குள்ள மரத்தில் கட்டப்பட்டுள்ள கயிறுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
செல்லும் வழி
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து சாத்னா செல்லும் ரயில் தடத்தில் 97 கி.மீ. maihar. ஸ்டேஷன் உண்டு. அங்கிருந்து 5 கி.மீ. கோயில்.

 

Comments