சிம்லாவில் ஸ்ரீதுர்கை

ஸ்ரீமகேஸ்வரி திருக்கோயில்- சிம்லாவுக்கு வரும் யாத்ரீகர்கள் பலரும் இறைத் தேடலுடன் விரும்பிச் செல்லும் திருவிடம்! 
டெல்லியிலிருந்து சண்டிகர், அம்பாலா என சாலை வழியாகவும், மலைக் குகைகளுக்கு நடுவேரயில் பாதை மூலமும் சிம்லாவை அடையலாம்.
இங்கே ஃபாகூ பள்ளத்தாக்கு, மாஷோ மலைச் சிகரம், ஆப்பிள் தோட்டம், தேஷூ சிகரம் ஆகிய இடங்களைக் கண்டுகளிக்கும் யாத்ரீகர்கள் (இந்த இடங்களுக்கு குதிரைச் சவாரி மூலமாகவே செல்லமுடியும்; கட்டணம் ரூ.380), ஜாக்கூமலை அனுமனையும், ஸ்ரீமகேஸ்வரி அம்மனையும் தவறாமல் தரிசித்து வழிபட்டு வருகிறார்கள்.
சிம்லாவில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது குஃப்ரி மலை. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீமகேஸ்வரி ஆலயம் (குதிரையில் பயணம் செய்து திரும்புவதற்கு ரூ.250 கட்டணம்).
குறுகலான பாதை, கரடுமுரடான கற்கள்; சேறும் சகதியுமாகச் சில இடங்களைக் கடந்து பயணித்தால்,  ஸ்ரீமகேஸ்வரி அம்மனின் ஆலயத்தை அடையலாம்.
இந்த ஆலயத்துக்குச் செல்லும் வழியில்... சாய், பிரெட் பாவ்பாஜி மற்றும் வெஜிடபிள் சாண்ட்விச் விற்பனைக் கடைகள், ரூ.20 கட்டணத்தில் இமாசலப் பிரதேச  மக்களின் பாரம்பரிய உடையை அணிந்தபடி, கையில் துப்பாக்கியுடன், காட்டெருமையின் மீது கம்பீரமாக அமர்ந்து புகைப்படம் எடுக்கும் இடங்கள், ரூ.100 கட்டணத்தில் தூரத்து மலைச் சிகரங்களை 'டெலஸ்கோப்’ மூலம் பார்க்கும் இடம், கலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் என சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமின்றிப் பயணிக்கலாம்!

ஸ்ரீதுர்கையையே, ஸ்ரீமகேஸ்வரி எனும் திருநாமத்துடன் வணங்கி வழிபடுகின்றனர், பக்தர்கள். சிவனாருக்கும் ஸ்ரீஅனுமனுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைந்துள்ளன.
கோயிலின் மேற்பகுதி, நம் வீட்டு மொட்டை மாடி போல் காட்சி தருகிறது. மாடியின் கைப்பிடிக் கட்டையில், நீளமான சரிகைத் துணியைக் கட்டிக்கொண்டிருந்தார் யாத்ரீகர் ஒருவர். விசாரித்ததில், ஹரியானா வைச் சேர்ந்த அவர் பெயர் சாரதா எனத் தெரியவந்தது. ''இங்கு வந்து ஜரிகைத் துணியைக் கட்டி, மகேஸ்வரி மாதாவை மனதாரப் பிரார்த்தனை செய்தால், நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்'' என்று சிலிர்ப்புடன் தெரிவித்தார்.
மகேஸ்வரி கோயிலையட்டி, நாகதேவதைக்கும் தனி ஆலயம் உள்ளது. அர்ச்சகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ; ஸ்ரீதுர்கையை வணங்கிவிட்டு, சந்நிதியில் உள்ள தட்டில் காணிக்கையைச் செலுத்திச் செல்கின்றனர் பக்தர்கள்.
சர்வ அலங்காரத்துடன் காட்சி தருகிறாள் மகா துர்கை. ஸ்ரீசெந்தூரமேனியராக அபயக்கரம் காட்டி அருள்பாலிக்கிறார் ஸ்ரீஅனுமன்.
தசராவின்போது, நம்மூரைப் போலவே சிம்லாவிலும் கொண்டாட்டங்களுக்கும் குதூகலங்களுக்கும் குறைவே இல்லையாம்! மகேஸ்வரி ஆலயத்தில், தசரா விழாவின் போது மொத்த சிம்லா மக்களும் திரண்டு வருவார்கள் என்கிறார் கோயில் குருக்கள்.

Comments