ஸ்ரீரமண மகரிஷி-1

வானம் முழுவதும் நீல நிறம் மின்னிற்று. மிகத் துப்புரவாக இருந்தது. மேல் மாடியில் இருந்து வானத்தைப் பார்க்க, உலகத்திலேயே மிகப் பிரமாண்ட விஷயம் இந்த வானம்தான் என்று தோன்றியது.
மலையோ மடுவோ, ஆறோ கடலோ, மிருகமோ பறவையோ அதிசயம் இல்லை. பூமியினுடைய அதிசயம் இந்த வானம்; மேகமே இல்லாத நீல நிற வானம்.
இது, சொல்ல முடியாத பிரமாண்டம். அந்த வானத்தைப் பார்த்ததும், வேங்கடரமணனுக்கு மெல்லியதாய் சிரிப்பு வந்தது. நண்பனைப் பார்த்த போது எப்படிச் சிரிக்க முடியுமோ, அப்படி அவன் வானம் பார்த்துச் சிரித்தான். பூமி- மனிதர்களுடைய இடம். வானம்- கடவுளுடைய இடம். நாயன்மார்களுக்கு மலை உச்சியிலோ, கடல் மீதோ, கோயில் சுவரிலோ, கோபுரத்தின் உச்சியிலோ சிவபெருமான் காட்சியளிக்கவில்லை. வானத்தில்தான் ரிஷபாரூடராக சிவன் காட்சி அளித்திருக்கிறார். எனவே, வானம்தான் சிவன்; சிவன்தான் வானம். இறைவன் அசையாதது; எங்கும் நிறைந்தது; எல்லாமும் ஆனது. பூமி அசைவது; அசைவில்தான் சக்தி. எல்லா கிரகங்களும் அசைகின்றன.
அசைகின்ற எல்லாமும் சக்தி. அசையாதது சிவன். அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் சிவன் காட்சியளித்திருக்கிறார். மிகப் பிரியமாக இருந்திருக்கிறார். கண்ணப்பரின் கைப் பிடித்து, 'நில்லு கண்ணப்ப...' என்று கொஞ்சியிருக்கிறார். இயற்பகை நாயனாருக்கு வானம் முழுவதும் நிறைந்தபடி காட்சியளித்திருக்கிறார். திருநீலகண்ட குயவனாருக்குக் காட்சி அளிக்கும்போது, ஊர் மக்கள் அத்தனை பேரும் பார்த்திருக்கிறார்கள். சுந்தரருக்கு உதவி செய்திருக்கிறார். திருஞானசம்பந்தருக்கு அமுது வழங்கியிருக்கிறார். போர் வீரருக்குக் காட்சியளித்திருக்கிறார். சூதாடுபவருக்குத் துணை செய்திருக்கிறார். கையால் தவழ்ந்து கயிலை ஏறிய காரைக்கால் அம்மையாருக்குத் திருவாலங்காட்டில் கால் தூக்கி நடனமாடியிருக்கிறார். இறைவனைக் காண்பது கடினமல்ல; எளிது. ஆனால், ஒரு விஷயம் செய்தே ஆக வேண்டும். கடவுளே கதி என்று இறுக்கப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
வேறு எதுவும் முக்கியமில்லை. நீயே எல்லாமும், உனக்காகவே என்னுடைய எல்லாமும் என்று தீர்மானமாய் இருக்க வேண்டும். நெல்முனையளவும் மாறாது, அவரையே உள்ளுக்குள் ஆராதித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால், ரிஷபாரூடராய் நிச்சயம் சிவன் காட்சியளிப்பார்.
என்னால் அப்படி இருக்க முடியுமா? எல்லாமும் விட்டுவிட்டு, கடவுளே கதி என்று இறுக்கப் பிடித்துக்கொள்ள முடியுமா? முடியும் என்று தோன்றுகிறது; ஆனால், பயமாகவும் இருக்கிறது. கணக்குப் பாடம் எழுத வேண்டும்; ஆங்கிலம் மனனம் செய்ய வேண்டும்; கால்பந்து விளையாட வேண்டும்; மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் நீச்சலுக்கு கூப்பிட்டிருக்கிறார்கள். அங்கும் போக வேண்டும். கபடி ஆடிவிட்டு நீச்சலா, நீச்சலடித்துவிட்டுக் கபடியா... தீர்மானம் செய்ய வேண்டும். இத்தனை விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு ரிஷபாரூடராகக் கடவுள் தோன்றவேண்டுமெனில் எப்படி நடக்கும்? வேங்கடரமணனுக்கு உள்ளே வேதனை பொங்கியது. நான் பொய்யாக இருக்கிறேனோ... உள்ளே ஒரு கவலை எழுந்தது.
கடவுள் மீதும் ஆசை; கணிதப் பாடத்தின் மீதும் ஆசை. ஆங்கிலத்திலும் முதலாவது வர வேண்டும்; கபடியிலும் ஜெயிக்க வேண்டும். எப்படி... எப்படி கடவுள் வருவார்? அவனுக்குள் கேள்வி எழுந்தது. தன் மேலே கோபம் பொங்கியது. 'நீ சரியில்லை வேங்கடரமணா' என்று உள்ளுக்குள்ளே குரல் எழுந்தது. மேல் மாடியில் இருந்து, வேங்கடரமணன் கீழே இறங்கினான்.
சிறிய அறை ஒன்றில், சிறிது நேரம் உட்கார்ந்தான்; முன்னும் பின்னும் உலாவினான்; கீழே இறங்கினான். முற்றத்தில் பாதி வாழைத்தார் இருந்தது. இரண்டு வாழைப்பழங்களைப் பிய்த்து எடுத்துக் கொண்டான். உரித்துச் சாப்பிட்டான். வாசலுக்கு வந்தான். மாட்டு வண்டிகள் கோயில் நோக்கிப் போய்க்கொண்டிருந்தன.
மாட்டு வண்டிக்குள் ஏகப்பட்ட ஜனங்கள் நெருங்கி உட்கார்ந்து கொள்ள, மாடு சிரமப்பட்டு இழுத்துக்கொண்டு போயிற்று. அந்தச் சிறிய மாட்டுக்குச் சுமை அதிகம்தான். ஆனாலும், இழுத்துக்கொண்டு போகிறது. கோயில் நோக்கி ஓடுகிறது. நானும் அந்த மாடு மாதிரி ஓட வேண்டும்; எத்தனைச் சுமை இருந்தாலும் கோயில் நோக்கி ஓட வேண்டும்; கடவுள் நோக்கி ஓட வேண்டும்.
''அவர்கள் எல்லாம் தவம் செய்தார்கள்; கடவுளை அடைந்தார்கள். நீ நன்றாகத் தின்றுவிட்டு, ஆனந்தமாக உறங்குகிறாய். இடி இடித்தாலும் எழும்பாத கும்பகர்ண தூக்கம். உன்னால் எப்படித் தவம் செய்ய முடியும்?'' அண்ணா அடிக்கடி கேலி செய்வான். ''போதும், கடவுளை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். இப்போது படி!'' என்று கட்டளையிடுவான்.
இந்தக் குத்தல் மிக வேதனையாக இருக்கும். வயிற்றைப் பிசையும். கடவுள் தரிசனம் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா? இந்த ஏக்கம் உடம்பு முழுவதும் பொங்கி எழும். குறுக்கும் நெடுக்கும் அலையத் தோன்றும். எங்கேனும் கால்போன போக்கில் போய்விடலாமா என்று வேகம் எழும்.
இப்போது இங்கே கேலி செய்ய யாரும் இல்லை. இருந்தாலும் வேங்கடரமணன் தனக்குத் தானே கேலி செய்து கொண்டான். 'உனக்கெல்லாம் இது எப்படி வரும்?' என்று மெள்ள, தனக்குத் தானே இடித்துப் பேசிக்கொண்டான்.
குளத்திலே நீச்சலுக்குக் கூப்பிட்டா மாட்டேன் என்று சொல்ல முடியுமா? கபடிக்குக் கட்சி பிரிச்சா மாட்டேன் என்று சொல்ல முடியுமா? முன்னால் போய் இடுப்பிலே கை வெச்சுண்டு நிப்பே இல்லே.
வேட்டியை அவிழ்த்து வெச்சுட்டு கோமணத்தோடு குதிப்பே இல்லே. பிசாசு மாதிரி எதிர்ப்பக்கம் பாஞ்சு பாஞ்சு கபடி கபடின்னு ஓடுவே இல்லே. அப்ப எல்லாம் கடவுள் எங்கே போச்சு? கபடி ஆடறபோது ரிஷபாரூடர் வருவாரா? நமசிவாயம், நமசிவாயம்னு சூதாடினாரே... அவருக்குக் கடவுள் காட்சி கொடுத்தாரே... என்ன செய்தாலும் சுந்தரருக்கு கடவுள் நண்பராக இருந்தாரே... எனக்கு நண்பராக இருக்கக் கூடாதா? என் கட்சியிலே சேர்ந்து கபடி ஆடக் கூடாதா?
உள்ளே ஏக்கம் பொங் கியது. ஒரு பதற்றம் உள்ளுக்குள் நிலவியது. என்னமோ சரியில்லை; நான் சரியில்லை; எனக்கு எதுவும் சரியில்லை என்று உள்ளே ஒரு ஆக்ரோஷமான ஆவலாதி பிறந்தது.
சித்தாப்பாவிடம் கேட்டால் சிரித்துக் கொண்டு, ''வேற யாராவது பெரியவா கிட்ட கேளு!'' என்று தள்ளிவிடுவார்.
அப்பா இருந்தால் கேட்கலாம். அப்பா நிதானமாக பதில் சொல்வார். ஆனால், அப்பா இறந்து வெகு நாளாயிற்று. அப்பா இறந்ததால்தான் சித்தாப்பாவின் தயவு நாடி, அவரின் குடையின்கீழ் வளர, மதுரைக்கு வந்தாகிவிட்டது.
இந்த சொக்கப்ப நாயக்கர் தெரு வீடு, கோயிலுக்கு வெகு அருகில் இருக்கிறது. நினைத்தபோதெல்லாம் கோயிலுக்கு ஓடிப்போய்விட முடியும். எல்லாச் சந்நிதிகளிலும் நின்று நின்று வணங்க முடியும். கொஞ்ச நாட்கள் முன்பு பெரியபுராணம் புத்தகத்தைப் படித்ததை ஞாபகம் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாயன்மாராகத் தொட்டு வணங்க முடியும்.
அப்பா இருந்தால், மறுபடியும் எல்லோருடைய கதையையும் சொல்லுங்கள் என்று கேட்கலாம். அண்ணாவுக்குத் தெரியும்; சொல்லமாட்டான். சித்தப்பாவுக்கும் தெரிந்திருக்கக்கூடும். ஆனால், ''எனக்கு வேலை இருக்குடா, குழந்தை!'' என்று நகர்ந்துவிடுவார்.
கடவுள் பற்றிச் சொல்லிக் கொடுக்க யாருமில்லை. இது சொல்லிக் கொடுத்து வராது என்று அண்ணா சொல்லியிருக்கிறான். தானாகவே வர வேண்டும் என்று சித்தப்பாவும் சொல்லியிருக்கிறார். கடவுள் விஷயம் பேசுகிறபோது, அண்ணா எல்லாம் தெரிந்தவனாய் சித்தப்பாவுடன் பேசுவான்; வேங்கடரமணனை லட்சியம் செய்யமாட்டான். ''உனக்கெல்லாம் இது புரியாத விஷயம்; மிக உயர்வான விஷயம்'' என்று அவனை நகர்த்திவிடுவான். இருந்தாலும், அண்ணா பேசுவதை வேங்கடரமணன் விடாது கேட்பான். மறுபடி மறுபடி ஞாபகம் வைத்துக் கொள்வான்.
அப்பா இறந்ததுதான் வாழ்க்கையில் மிகப் பெரிய நஷ்டம். குடும்பம் காணாமல் போயிற்று. வீடு குலைந்து போயிற்று. அம்மா ஒரு பக்கம், தங்கை ஒரு பக்கம், தம்பி ஒரு பக்கம், அண்ணாவும் வேங்கடரமணனும் ஒரு பக்கம் என்று பிரிந்தனர். ''உன்னை வளர்க்கறது என் பொறுப்பு. தயவுசெய்து என் பேச்சைக் கேளு; கணக்கு போடு!'' என்று அண்ணா அதிகாரமாக, அதே நேரம் கெஞ்சலாகப் பேசுவான்.
வேதனையாக இருக்கும். கணக்குப் பாடத்தின் மீது வெறுப்பு வரும். ''கோயிலுக்கு ஏதோ ஒரு மாலை மரியாதை, மேளதாளத்தோடு போறது. கொஞ்சமாவது அசைய வேண்டாமா? இப்படி தூங்கறியேடா!'' - அண்ணா வியப்பான்.
''குழந்தைதானேடா, தூங்கிட்டுப் போறான்!'' - சித்தி ஆதரவாகப் பேசுவாள். ''இவனுக்குத் தபஸ் பண்ணணும்னு ஆசை. இவன் தபஸ், இப்போதைக்குத் தூக்கம்தான்!'' என்று மறுபடியும் அண்ணா குத்திக் காட்டுவான். அவமானமும் துக்கமும் பொங்கும். ஏன் இப்படித் தூங்குகிறோம் என்று வேதனை வரும். அப்பா இருந்தால், இந்தத் தூக்கம் இல்லாமல் இருப்பதற்கு என்ன வழி என்று தெரிந்துகொள்ளலாம்.
இவர்களைக் கேட்டு என்ன பயன்? நாமாக முயற்சி செய்ய வேண்டும். நாயன்மார்கள் எல்லாம் யாரைக் கேட்டார்கள்? கடவுளைப் பற்றி எங்கு அறிந்தார்கள்? தானாகத் தெரிந்துகொண்டது அல்லவா! அப்படித் தானாகத்தானே முயற்சி செய்ய வேண்டும். வேகமாகத் தாவி, படி ஏறினான். மேல் மாடியில் உள்ள சிறிய அறையில் போய் உட்கார்ந்து கொண்டான்.
படபடப்பு அடங்கும்வரை வெறுமே சுவரைப் பார்த்துக்கொண்டு இருந்தான். இப்போது என்ன யோசிக்கிறது மனசு என்று தன் மனதைப் பார்த்தான். அப்பாவை யோசிக்கிறது. அப்பா எப்படி இருந்தார். மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவந்தபோது, அப்பா நடந்ததும், நின்றதும், பேசியதும், ஞாபகம் வராமல் படுக்கையில் கிடந்ததும், தன்னை நோக்கிக் கை நீட்டியதும்தான் ஞாபகம் வந்தது.
அப்பா மரணப் படுக்கையில் இருக்கிறார் என்று சுற்றியுள்ளவர்கள் பேசிக்கொண்டனர். குசுகுசுப்பாய் பேசினாலும், அது வேங்கடரமணன் காதில் விழுந்தது. அப்பா இறந்துபோகப் போகிறார் என்ற எண்ணம் அவனுக்குத் திகிலூட்டியது. அப்பா, அவன் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டார். அவனை உற்றுப் பார்த்தார். அவனுக்கு அழுகை பொங்கியது. அவனை மெள்ள அணைத்தபடி, உறவினர்கள் வெளியே வந்தார்கள்.
அப்பா கை பொத்தென்று படுக்கையில் விழுந்தது மட்டும் கடைசியாகப் பார்த்தது ஞாபகம் இருக்கிறது. ''தொந்தரவு பண்ணாதே... இருக்கட்டும்'' என்று அவனை வெளியே உட்கார வைத்தனர். அடுத்த அரை மணியில் அப்பா இறந்துவிட்டதாக அறிவித்தார்கள். நடந்ததெல்லாம் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தது.
சுற்றி உள்ளோர் வேகமாகச் செயல்பட்டார்கள். அப்பாவின் இறப்புக்குக் காத்திருந்தவர்கள்போல் பல பேர் ஓடி வந்தார்கள். மூங்கில், ஓலை எல்லாம் தயாராயிற்று. வீட்டினுள் பெரிய அழுகைச் சத்தம் கேட்டது. இவன் ஓடிப் போய்ப் பார்த்தான். அம்மாவைக் கட்டிக் கொண்டான்; அவனும் அழுதான். மறுபடியும் வெளியே வந்தான்.
அப்பாவை அடுத்த மூன்று மணி நேரத்தில் தூக்கிவிட்டார்கள். அண்ணாதான் ஈரத் துணியோடும் நெருப்புச் சட்டியோடும் முன்னே போனான். இவனைத் தடுத்துவிட்டார்கள். ''தகனம் பண்ணிட்டேன்டி, தகனம் பண்ணிட்டேன்டி, சுந்தரத்தை தகனம் பண்ணிட்டேன்டி'' என்று சித்தப்பா பெருங்குரலில் அழுதார். அந்த அழுகுரல் மறுபடியும் மனசுள் ஒலித்தது; துக்கம் பொங்கியது; கண்ணில் நீர் கோத்தது.
'இறந்துபோதல் என்றால் என்ன? அப்பாவை எப்படித் தகனம் பண்ணியிருப்பார்கள்? நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா? ஏன் வலிக்காமல் போயிற்று? எது இருந்தால் வலி? எதை இழந்தால் மரணம்?' என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெள்ளத் தேடினான். இறந்துபோதல் என்றால், எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான். இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால்தானே தெரியும்?!
மிகப் பெரிய அறிவாளிகள்கூட மரணம் பற்றி யோசிக்க விரும்பமாட்டார்கள். பதினாறு வயது வேங்கடரமணன் அதை அறிய விரும்பினான். பளீரென்று ஒரு பயம் வந்தது. செத்துப் போயிடுவோமோ? உடம்பு ஆரோக்கியமாய் இருந்தாலும், பயம் பதற வைத்தது. 'பரவாயில்லை, போ!' அவன் மரணத்துக்குத் தயாரானான்.

Comments