வாலி மோட்சம்

யாரைக் கேட்டாலும் ‘வாலி வதம், வாலி வதம்’ என்றுதான் சொல்வார்கள். அது தவறானது. மேலான, உயர்வான நிலைக்கு வாலியை கொண்டு சென்றார் ராமர். அப்படி இருக்கும்போது அது எப்படி வதமாகும்? ‘வாலி மோட்சம்’ என்றுதான் அதைச் சொல்ல வேண்டும்" என்றார் தமது சொற்பொழிவில் ‘திருப்புகழ் திலகம்’ மதிவண்ணன்.
‘உயர்ந்த குலத்தில் பிறந்தேன், இப்படி மனைவியை தொலைத்து விட்டேனே’ என மனம் வருந்தியபடி ராமனும், தமையனுக்கு நேர்ந்த துன்பத்தில் தவித்த இலக்குவனும் ரிஷ்யமுக பர்வதம் பக்கம் வருகிறார்கள். சுக்ரீவனின் இருப்பிடம் அது. இவர்கள் இருவரும் வருவதை சுக்ரீவன் தூரத்திலிருந்து பார்க்கிறான். வருவது வாலியின் ஆட்களோ என அவனுக்குள் ஒரு பயம். அவன் அமைச்சரான ஹனுமனை கூப்பிட்டு யார் அவர்கள் எனப் பார்க்கச் சொல்கிறான்.
ஹனுமன் பார்த்துவிட்டுச் சொல்கிறார்: வருவது அந்தணர்கள் கிடையாது. ஏனெனில், இவர்கள் கையில் வில் இருக்கிறது. தேவர்களும் கிடையாது. ஏனென்றால், தேவர்களுக்கு கண்களும் இமைக்காது; கால்களும் பூமியில் படாது. அரசர்களும் கிடையாது. ஏனெனில், இவர்கள் மரவுறி தரித்திருக்கிறார்கள். ஞானிகளும் கிடையாது. ஞானிகளாக இருப்பவர்களுக்கு கவலைகளும் இருக்காது; சந்தோஷமும் இருக்காது. இவர்கள் கவலை தோய்ந்த முகத்தோடு வருகிறார்கள்" என்கிறார். ‘மந்திரிக்கு அழகு பெரும் பொருள் உரைத்தல்’ என்கிறது தமிழ். இந்த மந்திரிக்கு வருவது பரம்பொருள் என்றே புரிகிறது. அதைச் சொல்லாமல், தன் ராஜாவுக்கு என்ன தேவையோ, அதை மட்டும் சொல்கிறார். இதில்தான் அனுமனின் ஞானம் ஒளிந்திருக்கிறது. அப்படியென்ன சொல்கிறார்? வாலிக்கு காலன் வந்திருக்கிறார்கள்" என்று சொல்கிறார்.
எப்படிச் சொன்னால், எதைச் சொன்னால் சரியான படி, சரியான நேரத்தில் வேலை நடக்கும் என்பது ஹனுமனுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர், ‘சொல்லின் செல்வர்.’ ஹனுமனின் சொற்களைக் கேட்டு சுக்ரீவன் ராமரையும் லட்சுமணரையும் அழைத்தான். ஆனால், உடனே நட்பு பிரதிக்ஞை செய்து கொள்ளவில்லை. ஏன்?
ஒரு வீட்டுக்குப் போனால், அவ்வீட்டில் உள்ள பெண்மணி தான் (மனைவி) தண்ணீர், பலகாரங்களைக் கொண்டு வருவார்கள் இல்லையா? இங்கே சுக்ரீவன் வீட்டில் சுக்ரீவனே தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததுமே ராமருக்குப் புரிந்து விட்டது. உடனே சுக்ரீவனைப் பார்த்து, நீயும் மனைவியைப் பிரிந்திருக்கிறாயோ?" என்று கேட்டான் ராமன். ஹனுமன் உடனே, வாலி இவர் மனைவியை அபகரித்து விட்டான்" என்று சொல்லவும், ராமன் சுக்ரீவனைத் தழுவி, இனி உன் பகைவர்கள், என் பகைவர்கள். உன் நண்பர்கள் என் நண்பர்கள்" என்கிறார். அங்கேதான் சுக்ரீவ சக்யம்(நட்பு) உண்டானது. இது அமைச்சரின் மதியூகம். இது மட்டுமா?
ராமரின் பலத்தின் மீது சுக்ரீவனுக்கு அவ்வளவாக நம்பிக்கை ஏற்படவில்லை. ராவணனையே தன் வாலால் சுற்றியடித்தவன் ஆயிற்றே வாலி என்ற சந்தேகம் சுக்ரீவனுக்கு. இறைவன் நம்மைக் காப்பாற்றுவாரா, மாட்டாரா? நம்மைக் கைவிட்டு விடுவாரோன்னு இறைவனேயே சந்தேகப் படக்கூடாது. ராமரின் பலத்தை அறிய சுக்ரீவன் ராமருக்கு ஒரு டெஸ்ட் வைத்தான். ஒரே அம்பால் ஏழு மராமரங்களைத் துளைக்க வேண்டும் என்பதுதான் அந்த பரீட்சை. ராமர் அதைச் செய்து காட்டிய பிறகுதான் சுக்ரீவனுக்கு ராமர் மீது நம்பிக்கையே வந்தது.
தைரியமாக வாலியின் இருப்பிடத்துக்குச் சென்று, அடே போருக்கு வா" என சுக்ரீவன் கர்ஜித்ததும், வாலியின் மனைவி தாரை அவனை, போருக்குப் போக வேண்டாம்" என அறிவுறுத்தினாள். ஆனாலும், வாலி போர் புரியப் புறப்பட்டு விட்டான். முதல் அடியிலேயே சுக்ரீவனுக்கு உள் காயம் கிடைத்தது. வாலியின் குத்து அப்படி. பகவானை, அவனது பலத்தை சந்தேகப்பட்டதுக்குக் கிடைத்த குத்து அது. சுக்ரீவன் ராமரிடம் சென்று, என்ன ராமா வேடிக்கை பார்த்துண்டு இருக்கியே"ன்னு புலம்பினான். யார் வாலி... யார் சுக்ரீவன்னு தெரியலை"ன்னார் பரவாசு தேவர். அவருக்கா தெரியாது யார் என்று? சந்தேகத்துக்குக் கிடைத்த அடி அது என்றும் அவருக்கு நன்றாகத் தெரியுமே. சரி, சுக்ரீவா இந்த நாகவல்லி பூ மாலையைப் போட்டுக்கோ"ன்னு ராமர் கொடுக்க, அதையே போட்டுண்டு போனான் சுக்ரீவன்.
நன்றாக இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். மாலை போட்டுக் கொண்ட சுக்ரீவனை வாலி தலைக்கு மேல் தூக்கி பூமியில் போட எத்தனிக்கும்போது, சுக்ரீவனின் உடம்பு வாலியின் கண்களை மறைக்கின்றது. அவன் பூமியில் போட இருந்த நேரத்தில்தான் ராமர் அம்பைச் செலுத்தினார். உயிர் காப்பான் தோழன் இல்லையா? ராமர் மறைந்து நின்று கொல்லலை.
வாலி அழுது கதறினான். ஏகப்பட்ட கேள்விகளை ராமரிடம் கேட்டான். நான் என்ன அதர்மம் செய்தேன்? விலங்குகளுக்கு அதர்மம், தர்மம் என்று கிடையாதே" என்று வாதிட்டான்.
குரங்குன்னு சொன்னா, நித்யகர்மா தவறாம பண்றியே; தவறாம சிவபூஜை பண்றியே... இதெல்லாம் எல்லா விலங்குக்கும் இருக்கல. நீ வாலி. குரங்கே கிடையாது" என்றார் ராமர்.
மறைந்திருந்து ராமர் கொன்றார்னு சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கிறது. தசரதர், வசிஷ்டரிடம் ராமர் ஜனனம் நடக்கறதுக்கு முன்னாடி, குழந்தை எனக்கு உண்டா"ன்னு கவலையோடு கேட்க, வசிஷ்டர் கண்களை மூடிண்டு பாற்கடலில் நாராயணன் இருப்பதைப் பார்க்கிறார். அவர்களிடம் தேவர்கள் ராவணனின் கொடுமை பற்றி முறையிடுவதையும், நாராயணன் தாமே ராமராக அவதாரம் செய்ய இருப்பதையும் அவருக்குத் துணையாக சூரியனை சுக்ரீவனாகவும், இந்திரனை வாலியாகவும் பிறக்கச் சொல்வதும் தெரிகிறது. ஆக, ராம அவதாரத்தில் அவருக்கு உதவி செய்வதற்காகப் படைக்கப்பட்ட வாலியான இந்திரன் அதனை மறந்து விட்டு வேறு வேலைகளில் ஈடுபட்டதால் அவனுக்கு அப்படி ஒரு முடிவைத் தந்தார்.
தன் எதிரில் வந்து தன் சரணத்தில் விழுபவர்களைக் காப்பதுதான் இறைவனின் தன்மை. எங்கே தான் எதிரில் தோன்றி விட்டால், வாலி தன் கால்களில் விழுந்து விடுவானோ, தன்னை சரணாகதி செய்தவர்களைக் காப்பது தன் கடமை ஆயிற்றே. சுக்ரீவ சத்தியத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுமே. அதை மீறக்கூடாதே என்று நினைத்தும் வாலியை வதம் செய்யும் வரை அவன் எதிரில் ராமர் தோன்றாமல் இருந்தார்.
தெய்வம் என்றுமே தான் படைத்த அனைத்துயிர்களுக்கும் நன்மைதான் செய்யும். கடைசியில் தன் தவற்றை உணர்ந்த வாலிக்கு முக்தி, மோட்சம் தந்து மிகப்பெரிய ஞானத்தையும் அவனுக்குத் தந்து விட்டாரே ராமர்."

 

Comments

Post a Comment