பெண்களும் ஐயப்பனின் பேரருளைப் பெற வேண்டும்

ஆண்கள் மாலையணிந்து, விரதமிருந்து, இருமுடி கட்டி, சபரிமலை சென்று ஸ்ரீஐயப்பனைத் தரிசித்துத் திரும்பும்வரை, அவர்களுக்கு இணையாக விரதமிருந்து தினமும் விளக்கேற்றி வழிபடுபவர்கள், அவர்களது வீட்டுப் பெண்கள்! அவர்களுக்கும் ஐயனின் பேரருள் கிடைக்கவேண்டும் என்பதற்காக, சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீரத்தின மணிகண்டன் பக்த ஜன சபாவினர் வருடந்தோறும் திருவிளக்கு பூஜை நடத்தி வருகின்றனர்.

''நாம இருமுடி கட்டிக்கிட்டு போறோமே; நம்ம வீட்டுப் பொம்பளைங்களும் ஸ்ரீஐயப்பனை மனதார வழிபடுறதுக்கு ஏதாவது செய்யணும்னு யோசிச்சோம். அதன் விளைவுதான், சபரிமலை வாசனை நினைச்சு பெண்கள் நடத்துற திருவிளக்கு பூஜை! இருமுடி கட்டிக் கிளம்பறதுக்கு முன்னாடி நடக்கற இந்த விளக்கு பூஜைக்கு இப்ப பெண்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து கலந்துக்கிறாங்க!'' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார் இந்த பக்த ஜன சபாவின் குருசாமி ராஜு.
''ஸ்ரீஐயப்பனுக்கு, வாழைத்தண்டு மற்றும் மட்டையால் சின்னதாக கோயில் அமைப்போம். அன்னிக்கி சாயந்திரம், ஸ்வாமியை பல்லக்கில் ஏற்றி வீதியுலா வந்து, விளக்கு பூஜை நடத்திப் பிரார்த் திக்கும்போது, மனசே நிறைஞ்சிடும்'' என்கின்றனர் சூளைமேடு மக்கள்.  
''வருஷா வருஷம், டிசம்பர் 30-ஆம் தேதியன்னிக்கி, சூளைமேடு பகுதியே களைகட்ட ஆரம்பிச்சிடும். கணபதி ஹோமத்துல துவங்கி, அன்னதானம்,
சாயந்திரம் விளக்கு பூஜை, அப்புறம் இருமுடி கட்டுதல்னு கோலாகலமா நடக்கும். விளக்கு பூஜைக்கு வர்றவங்க பித்தளை தாம்பூலத்தட்டு மட்டும் எடுத்துட்டு வந்தா போதும். சாயந்திரம், ஐயப்ப ஸ்வாமி பல்லக்குல
வர்றப்ப, பெண்கள் அகல் விளக்கு ஏந்திக்கிட்டு வர்றதைப் பார்க்கும்போதே, நம் பாவமெல்லாம் பறந்தோடிடும்'' என்கிறார் சபா பொருளாளர் சேகர்.
இந்தப் பூஜையில் கலந்துகொண்டு, ஸ்ரீஐயப்பனைப் பிரார்த்தித்த பலருக்கும் திருமண வரமும் குழந்தை பாக்கியமும் கிடைத்திருக்கிறதாம்!
''என் மகனுக்கு ரத்தின மணிகண்டன்னு ஸ்வாமி பேரையே வைச்சோம். அவனையும் ஒரு தடவை மலைக்குக் கூட்டிட்டுப் போயிருந்தோம். மலையில, கோயில்ல எல்லாரும் அசந்து தூங்கிட்டிருந்தப்ப, அவன் பாட்டுக்கு எழுந்து, கால் போன போக்கில் நடந்து, எங்கேயோ போயிட்டான். திடீர்னு எங்களை யாரோ தட்டி எழுப்பின மாதிரி இருந்தது. தடக்குன்னு கண் விழிச்சு எழுந்து பார்த்தா, சுத்துமுத்தும் யாருமே இல்லை. மகனையும் காணோமேன்னு பதறித் தேடிக்கிட்டு ஓடினோம். அங்கிருந்து ஒரு 500, 600 அடி தூரத்துல

பையன் அழுதபடி நின்னுக்கிட்டிருந்தான். ஓடிப்போய் அவனைத் தூக்கி அணைச்சுக் கிட்டு, கரகரன்னு அழுதுட்டேன். அந்த நேரத்துல எங்களை எழுப்பினது, சாட்சாத் ஐயப்பனைத் தவிர, வேற யாரா இருக்கமுடியும்?!'' என நெக்குருகிச் சொல்கிறார் சபாவின் தலைவர் துரை.  

Comments