ஆங்கிலப் புத்தாண்டில்...தேர்த்திருவிழா

ருகாலத்தில், வள்ளிக்கிழங்குச் செடிகள் நிறைந்திருந்த வனமாகத் திகழ்ந்தது அந்தப் பகுதி. அன்னி எனும் வேடன், கிழங்கு எடுப்பதற்காக அங்கே ஓரிடத்தில் கோடரியால் தோண்டினான். அப்போது, பூமியில் இருந்து ரத்தம் பீறிட்டு வரவே, அதிர்ந்து போனான் அன்னி. பிறகு, ஊர்மக்கள் அனைவரும் திரண்டு வந்து அந்த இடத்தை மேலும் தோண்டிப் பார்க்க, அங்கிருந்து வெளிப்பட்டது சுயம்புலிங்கம். 
இதை அறிந்த சேர மன்னன், அங்கு வந்து அந்த லிங்கத்தை கயிறு கட்டி இழுத்தான். அப்போது, 'நான் இங்கேயே கோயில் கொள்ள விரும்புகிறேன்’ என்று அசரீரி கேட்டது. அதையடுத்து, மன்னன் அவ்விதமே அங்கு சிவனாருக்குக் கோயில் எழுப்பினான் என்கிறது ஸ்தல வரலாறு.
 அன்னி எனும் வேடனால் சிவலிங்கத் திருமேனி வெளிப்பட்டதால், இந்த ஊர் அன்னியூர் என்று அழைக்கப் பட்டு, பின்னாளில் அன்னூர் என மருவியது. கோடரியால் வெட்டிய வேடனையும், கயிறு கட்டி இழுத்த மன்னனையும் மன்னித்து அருளியதால் ஸ்வாமிக்கு ஸ்ரீ மன்னீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது என்கின்றனர் பக்தர்கள்.
கோயம்புத்தூரிலிருந்து சுமார் 29 கி.மீ. தொலைவில் உள்ளது அன்னூர். இங்கே அழகுற திருக்கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ மன்னீஸ்வரருக்கு, 21 விளக்குகள் ஏற்றி வழிபட்டால், நம் பாவங்களையெல்லாம் போக்கி, மன்னித்து அருள்வார் சிவனார் என்பது ஐதீகம்!
தென்காளஹஸ்தி என்று போற்றப்படும் இந்த ஆலயம், மேற்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பு. அம்பாள் ஸ்ரீ அருந்தவச்செல்வி. சனி பகவான், ஸ்ரீ ஞானபைரவர் ஆகியோருக்கும் இங்கு சந்நிதிகள் உள்ளன. ஸ்ரீ மன்னீஸ்வரருக்குப் பிரதோஷம், அன்னாபிஷேகம் முதலான நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.ஸ்ரீ அருந்தவச்செல்வி அம்பாள் சமேதராக ஸ்ரீ மன்னீஸ்வரர் மார்கழி மாதத்தில் தேர் பவனி வரும் வைபவம், கண்கொள்ளாக் காட்சியாக அமையும்.
வருகிற டிசம்பர் 26ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது திருவிழா. ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில், திருத் தேரோட்டம் நடைபெறுகிறது.
தேரோட்ட வைபவத்தில் நாமும் கலந்து கொண்டு, அருள்மிகு மன்னீஸ்வரரை யும், அம்பாள் அருந்தவச் செல்வி யையும் தரிசித்து வழிபட்டு வருவோம். நம் பாவமெல்லாம் பறந்தோடட்டும்!

Comments