வியாக்ரபாதர் வழிபட்ட தலத்தில் விழாக்களும் பூஜையும் எப்போது?

ஸ்ரீநடராஜப் பெருமானைப் போற்றுகிறபோதெல்லாம் இரண்டு பேர் நிச்சயம் நம் நினைவுக்கு வருவார்கள். இவர்களில் ஒருவருக்கு உடலின் கீழ்ப் பாகம் பாம்பின் உடலாக அமைந்திருக்கும். இன்னொருவரோ புலியின் பாதங்களை வரமாகப் பெற்றவர்.  ஸ்ரீநடராஜப் பெருமான் இந்த இருவருக்கும் தரிசனம் தந்து, இவர்களின் தவத்தைச் சிறப்பித்துள்ளார். அந்த இரண்டு பேர்... பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர். 
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகா கல்குல மடவிளாகத்தில் அமைந்திருக்கிறது திருக்காமேஸ்வரர் திருக்கோயில். அம்பாளின் திருநாமம் ஸ்ரீகோகிலாம்பாள். திருக்காமேஸ்வரர் எனும் திருநாமத்துடன் சிவனார் கோலோச்சும் ஆலயங்கள் தமிழகத்தில் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே உள்ள பிள்ளையாருக்கு சூரிய விநாயகர் என்பது திருநாமம். இதுவும் விசேஷமானது என்கின்றனர் ஊர்க்காரர்கள். மேலும், வள்ளி தெய்வானை சமேதராக ஸ்ரீஆறுமுக னார் அழகுறக் காட்சி தருகிறார் இங்கே.
இந்த ஆலயத்தின் இன்னொரு சிறப்பு... வியாக்ரபாதருக்கு இங்கே சிவனார் திருக்காட்சி தந்தருளினார். எனவே, இங்கு வியாக்ரபாதருக்கும் சந்நிதி உள்ளது. வியாக்ரபாதர் வில்வ இலை கொண்டு பூஜித்த சிவத் தலங்களில் இதுவும் ஒன்று. சுமார் ஆயிரம் வருடப் பழைமை வாய்ந்த ஆலயம் என்பது கோயில் கட்டுமானத் திலிருந்து தெரிகிறது. ஆனாலும் என்ன... இத்தனை பெருமை வாய்ந்த கோயில் இன்றைக்குச் சிதைந்தும் புதைந்துமாகக் கிடப்பதைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது.
சந்நிதியைச் சுற்றி உள்ள கோஷ்டப் பகுதியாகட்டும், சந்நிதிகளாட்டும்... முட்களும் செடிகொடிகளும் காடாக முளைத்திருக் கின்றன. கோயில் விமானத்திலும் செடிகள் முளைத்து, விரிசல்களை ஏற்படுத்தியுள்ளன. உள்ளே நுழைய முடியாதபடி சிதைந்துவிட்ட கோயிலில், நித்தியப்படி பூஜைகள் மட்டும் நடந்து வருவது, ஆறுதல் தரும் ஒன்று!
'ஆறு வருடங்களுக்கு முன், கோயிலின் கலசம் திருடு போய்விட்டது. அன்று முதல் திருவிழாக்களோ உத்ஸவங்களோ  எதுவும் நடப்பதில்லை. பின்னர், அந்தக் கலசத்தை ஏரியில் கண்டெடுத்துவிட்டோம். ஆனாலும், திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் நின்றது நின்றதுதான்!' என்கிறார்கள் ஊர்மக்கள் வருத்தம் தோய்ந்த குரலில்.
''நீண்ட காலமாக பூஜைகள் நடக்காமல் இருந்தது. பிறகு, ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து திருப்பணி செய்ய வேண்டும் என்று முனைப்புடன் செயல்படத் துவங்கினார்கள். அதையடுத்து, நித்தியப்படி பூஜைகள் மட்டும் இப்போது நடந்து வருகின்றன.  உழவாரப் பணி செய்யும் அன்பர்களும் இங்கு வந்து கோயிலை சுத்தம் செய்துவிட்டுச் சென்றார்கள்'' என்கிறார் கோயில் குருக்கள் ஜெயவீரன்.
வெளிப்பிராகாரத்தில், பரிவார மூர்த்தங்கள் இருக்கின்றன. அனைத்து மூர்த்தங்களும் பின்னம் அடைந்து, வழிபாடுகளும் இல்லாமல் இருக்கின்றன.
''கோயிலைப் புதுப்பிக்க வேண்டும். மெய்யன்பர்களின் உதவியால் திருப்பணிகள் விரைந்து முடிந்து, சீக்கிரமே கும்பாபிஷேகம் காணவேண்டும். இதுதான் எங்கள் கிராம மக்களின் ஆசை, கனவு, லட்சியம் எல்லாமே!'' என்கிறார் ஊர்ப்பெரியவர் ஒருவர்.
இந்தத் திருக்கோயிலில் பெருமாளையும் ஸேவிக்க முடியும்.  ஆமாம்! ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தனிச் சந்நிதியில் அருளும் ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாளைத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு  தீட்சண்யம்.
அதுமட்டுமா? கையில் சங்கு  சக்கரத்துடன்  நின்ற திருக்கோலம் காட்டும் ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள், சக்கரத்தை எடுத்துக் காட்டுவது போல் காட்சி தரும் அமைப்பு, வேறெங்கும் காண்பதற்கு அரிய விசேஷ அம்சம் என்கிறார்கள்.
சிவனாரும் பெருமாளும் குடி கொண்டு சைவ வைஷ்ணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இந்த ஆலயம், சீக்கிரமே புதுப்பொலிவு பெறவேண்டும். வியாக்ரபாதர் வழிபட்டு அருள் பெற்ற ஆலயத்தில், விரைவில் திருப்பணிகள் நடந்தேறி, கும்பாபி ஷேகமும் நடக்க வேண்டும்.
கோகிலாம்பாள் சமேத திருக்காமேஸ்வரர் ஆலயத் திருப்பணி களுக்கு... பணமாகவோ, பொரு ளாகவோ நம்மால் முடிந்ததைச் செய்வோம். அந்த ஈஸ்வரனின் திருவருள் நம்மையும் நம் சந்ததியை யும் வாழ்வாங்கு வாழவைக்கும்

எங்கே இருக்கிறது?
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் பௌஞ்சூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில்  அமைந்திருக்கிறது மடவிளாகம் கிராமம். மதுராந்தகத்தில் இருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.
 

Comments