விஸ்வகர்மா வழிபாடு!

நாம் நவராத்திரி கடைசி நாளில் சரஸ்வதி - ஆயுத பூஜை கொண்டாடுவதுபோல், வட இந்திய மாநிலங்களான, திரிபுரா, அஸ்ஸாம், பீகார், ஜார்கண்ட், மே.வங்கம், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் விநாயக சதுர்த்தி முடிந்த சில நாட்களுக்குப் பிறகு வெகு கோலாகலமாக வணங்கப்படும் ஆயுத பூஜை விழாவுக்கு ‘விஸ்வகர்மா பூஜை’ என்று பெயர்.
புராண கால தேவலோகச் சிற்பி, சிறந்த கட்டடக்கலை நிபுணர், பொறியியல் வல்லுநர், தொழில் படைப்பாற்றலுக்கானத் தெய்வம் என அழைக்கப்படுபவர் விஸ்வகர்மா. மனிதன் பொறியியல் கல்வி விஞ்ஞானத்தைப் பற்றி அறிந்து கொள்ள மூலகாரணமாக இருப்பவர் இவர்தான். தொழிலாளர்களுக்கும், கைவினைக் கலைஞர்களுக்கும் ஞானம் அளிப்பவர். அழகுப் பெட்டகமென, உள்ளம் கவரும் கலை ரசனைமிக்க, குறைபாடில்லாத சிற்பங்களை உள்ளடக்கிய கட்டடங்களை உருவாக்குவதில் வல்லமை மிக்கவர். பூமி, உலகம், தேவலோகம் ஆகிய அனைத்துக்கும் பிரம்ம தேவனின் ஆணைக்கிணங்க அழகான வடிவம் தந்தவர்.
சத்ய யுகத்தில் சொர்க்கத்தையும், திரேதாயுகத்தில் தங்கத்தில் ஜொலித்த இலங்கையையும், துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணனின் துவாரகையையும் நிர்மாணித்தவர். இவைதவிர, இந்திரன், யமன் அரண்மனை, கடலுக்குக் கீழ் வருணனுக்கு மாளிகை மற்றும் அஸ்தினாபுரம், இந்திரப்ரஸ்தம் நகர்களையும் உருவாக்கியவர். இவைமட்டுமின்றி, தேவர்கள், தேவியர் அணிந்திருந்த பல்வேறு ஆபரணங்களைத் தயாரித்தவரும் இவரே!
தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தன் உடல் எலும்புகளால் பலவிதமான ஆயுதங்களை விஸ்வகர்மாவைச் செய்யச் சொன்னார் ததீசி ரிஷி (தயிரை மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்ந்ததால் ‘ததீசி’ எனப் பெயர் உண்டாயிற்று). அவரின் முதுகுத் தண்டுவடத்தைக் கொண்டு உருவானதே இந்திரனின் ‘வஜ்ராயுதம்.’ சூரியனின் மனைவியான இவரது மகள் சஞ்சனா, கணவரின் உஷ்ணம் நிறைந்த கதிர்களின் தீவிரத்தைச் சற்றுக் குறைக்கும்படி தந்தையிடம் வேண்ட, இவரும் சூரியனிடமிருந்து எட்டில் ஒரு பங்கு பிரகாசத் தீவிரத்தைக் குறைத்தார்.
கீழே விழுந்த அந்தத் துகள்களிலிருந்து விஷ்ணுவுக்கு ‘சுதர்சனம்’ என்ற சக்ராயுதத்தையும், சிவனுக்குத் ‘திரிசூல’த்தையும், தேவர்களின் உபயோகத்துக்காகப் ‘புஷ்பக விமான’த்தையும் (மார்க்கண்டேயப் புராணத்தில் முருகனுக்குரிய ‘வேலாயுதம்’ எனக் குறிக்கப்படுகிறது) உருவாக்கினார். மேலும், தான் இயற்றிய ‘ஸ்தாபத்ய வேதம்’என்ற நூலில் 64-வகை இயந்திரவியல் நுணுக்கங்கள், சிற்பக்கலை அறிவாற்றல் பற்றிய விளக்கங்களையும் விவரித்திருக்கிறார்.
பொதுவாக, இவர் கனத்த உடல்வாகு கொண்டவராக, வயது முதிர்ந்த, மதிநுட்பம் நிறைந்தவராகச் சித்தரிக்கப்படுகிறார். ஐந்து முகங்கள் உடையவராக ‘ரிக் வேத’த்தில் கூறப்பட்டாலும், ஒரு முகம், நான்கு கரங்கள் கொண்டவராக உருவகப்படுத்தப்படுகிறார். உடலில் தங்க நகைகள் அணிந்து, ஒரு கையில் நீர் கலசம், ‘இரண்டாவதில் புத்தகம், மற்றொன்றில் சுருக்குக் கயிறு, பிறிதொன்றில் சிற்றுளியுடன் காட்சி தருகிறார். சுறுசுறுப்பான படைப்புத் திறனுக்கு அதிபதியாதலால் அதற்குரிய சிவப்பு வண்ணப் பின்புலத்திலேயே, யானை வாகனத்தில் (அன்னமும் உண்டு) அமர்ந்தவராகக் காணப்படுகிறார்.
எட்டு வஸுக்களில் கடைசி இளவல் பிரபாஸ வஸு (‘விடியலின் பிரகாசம்’ எனும் இவர், வசிஷ்ட முனிவரின் சாபத்தினால் மறுபிறவியில் கங்கை - மகாராஜா சந்தனுவின் எட்டாவது மகன் தேவவிரதன் என்ற பீஷ்மராகப் பிறந்தவர்) - யோகசித்தா தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். (இவருக்கு பிரஹஸ்தி என்ற ஒரு சகோதரியும் உண்டு) இவர் மனைவியின் பெயர் காயத்ரி.
இவர்களது ஐந்து மகன்களும் புகழ்மிக்க முனிவர்களாகவும், தந்தையைப் போன்று தங்கள் தங்கள் துறைகளில் தலைசிறந்த விற்பன்னர்களாகவும் விளங்கினர். அவர்கள் மனு (கருமான் என்கிற கொல்லன்), மயன் (தச்சர்), த்வஸ்தா (உலோக வேலைப்பாடு மற்றும் வார்ப்படத் துறை), சில்பி (கைவினைக் கலைஞர், கொத்தனார்) மற்றும் விஸ்வஞர் (தங்கம், வெள்ளி, இரத்தினம், வைர நகைகள் தயாரிக்கும் பொற்கொல்லன்) ஆவர்.
இப்படிப்பட்டப் புகழ் வாய்ந்தவருக்கு அவர் வழி வந்தவர்கள், அவர் பிறந்த தினமாகக் கருதப்படும் நாளில் விழா கொண்டாடுகிறார்கள். விஸ்வகர்மா ஜயந்தி நாளாகச் சொல்லப்படுவது ஒன்றல்ல; இரண்டு நாட்கள்.
ஒன்று, ரிஷி பஞ்சமி தினம். மனிதர்கள் போல் பிறந்த நாள் என்பது விஸ்வகர்மாவுக்குக் கிடையாது என்பது ஒரு சாராரின் கருத்து. கல்வி, கேள்விகளில் சிறந்த தங்கள் தகப்பனாரை நினைவு கூறும் வகையில் அவரது ஐந்து மகன்களும் சேர்ந்து அவர் காண்பித்த வழியை உறுதியுடன் பின்பற்றிச் செல்வதாக உறுதியேற்ற இந்நாளையே வெகுசிலர் பின்பற்றுகிறார்கள்.
மற்றொன்று, கன்னி சங்கராந்தி தினம் - இதுவே அனைவராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது, வட இந்தியப் பஞ்சாங் கப்படி பாத்ரபத் (புரட்டாசி) மாதம் முடியும் கடைசி நாளன்று, சூரியன் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு இடம் பெயரும் போது விஸ்வகர்மா பூஜை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. எப்போதும் செப்டம்பர் 17 - ஆம் தேதியே இந்நாளாக விளங்குகிறது.
அன்றைய தினம், கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் காரியாலயங்களில் தாங்கள் கையாளும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்களைச் சுத்தப்படுத்தி, புது வண்ணம் பூசி ஜோடிப்பார்கள். செய்யும் தொழில் வளமுடன் பெருகவும், விபத்துகளின்றி நாட்கள் நகரவும் தேவலோகச் சிற்பியின் அருள் வேண்டி கோலாகலமாக விழா நடத்தப்படும்.
புதிய பொருட்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தவும், உற்பத்தித் திறனைப் பெருக்கவும், தொழிலாளர்கள் விஸ்வகர்மா சிலை அல்லது படத்தின் முன் உறுதிமொழி எடுப்பார்கள். அன்றைய தினம் விடுமுறை விட்டு மறுநாள் வேலையைத் தொடர்வார்கள்.
கலைத்திறனுக்கும், அதன் மேம்பாட்டுக்கும் உதாரணமாய் விளங்கும் விஸ்வகர்மாவின் நினைவுக்கு ஒரு சான்றாக எல்லோராவின் பத்தாம் குகை அமைந்துள்ளது.

Comments