சத்ரு சம்ஹார வேல்!




திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமியையும், ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமியையும் தரிசிக்கலாம். அவர்கள் இருவரையும் ஒரே தலத்தில் தரிசித்து, அந்த இரு தலங்களுக்கும் சென்று வந்த புண்ணிய பலனை ஒருசேரப் பெற விரும்புகிறீர்களா?
அப்படியென்றால், நீங்கள் செல்ல வேண்டிய தலம் பெருவயல்.
ராமநாதபுரத்தில் பெரிய வயல்கள் சூழ்ந்த கிராமமாக இவ்வூர் திகழ்வதால் பெருவயல் என்றே அழைக்கப்படுகிற. ஒரு காலத்தில் இவ்வூரில் மிகப் பெரிய நெற்களஞ்சியம் இருந்துள்ளது.
இத்தலத்தில் மூலவராக வள்ள-தேவசேனா சமேதராக அருள்பாலிக்கிறார். ரணபலி முருகன் என்ற சிவ சுப்பிரமணியசுவாமி. பிராகாரத்தில் ராமநாதசுவாமியும், பர்வதவர்த்தினியும் எழுந்தருளியுள்ளார்கள்.
பெருவயல் தலத்தின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்ப்பது இங்குள்ள சத்ரு சம்ஹார வேல்.
நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதித்திருப்பதை பெருவயல் கோயிலில்தான் கண்டேன் என்று திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இதே அக்டோபர் மாதத்தில் இங்கு விஜயம் செய்தபோது குறிப்பிட்டிருக்கிறார். அதோடு தன சொற்பொழிவுகளில் எல்லாம் அந்த வேலின் சிறப்பையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அந்த அருள் வாசகத்தை கோயிலில் அவர் புகைப்படத்தோடு பிரேம் போட்டு மாட்டி வைத்திருப்பதை இன்றும் காணலாம்.
திருச்செந்தூர் முருகப் பெருமானின் அருளாலும், அவரது தீவிர பக்தர் ஒருவரின் முயற்சியாலும் கட்டப்பட்ட கோயில்.
ராமநாதபுரம் சமஸ்தானத்தை மன்னன் கிழவன் சேதுபதி ஆண்டு வந்த சமயம், அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக பவிளங்கியவர், சாத்தப்பன் என்கிற காத்த வீர தளவா வயிரவன் சேர்வை.
முருக பக்தரான அவர் அடிக்கடி திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வருவது வழக்கம். ஒருநாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிப்பட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணாமுனை என்ற இடத்தில் மேலே கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி-தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறினார்.
இதோபோன்ற கனவு திருஉத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால், இருவரும் மறுநாள் சந்தித்து, கந்தன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள்.
பலமணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்கள் கடும் ரணத்துடன் திரும்பினார்கள். கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலையையும் வேலையும் எடுத்து வந்தார்.
விஷயம் அறிந்த மன்னர், தன் அரண்மனையில் "ராமலிங்க விலாசம்' என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக்கரையில் முருகனுக்கு ஆலயம் அமைக்க நிலங்களையும் இறையிலியாகக் கொடுத்து உதவினார்.
அதன்பின்னர் ஆலயத்திருப்பணிகள் விரைவாக நடைபெற்று, கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டின் அடிப்படையில் பெருவயல் கோயிலிலும் பூஜைகளும், விழாக்களும் நடைபெறுகின்றன.
வயிரவன் சேர்வை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மீதும் அதிக பக்தி வைத்திருந்ததால், ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளும் பெருவயல் தலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
கடலுக்குள் இறங்கி சிலையை எடுக்க முயன்ற பலருக்கு உடல் முழுவதும் ரணம் ஏற்பட்டதால், மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி, ரணபலி முருகன் என்றே அழைக்கப்படுகிறார்.
பக்தர்களின் உள்ளத்தில் ரணத்தை ஏற்படுத்தும் கடன்,பிணி, சத்ரு ஆகிய துன்பங்களையெல்லாம் பலி செய்து, அவர்களுக்கு சகல நண்மைகளும் அருள்வதால், "ரணபலி முருகன்' என்ற பெயர் இவருக்கு மிகப் பொருத்தமே!
இக்கோயிலில் கி.பி. 1741-ம் ஆண்டு, ராமநாதபுரம் மன்னர் குமாரமுத்து விஜய ரெகுநாத சேதுபதி காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டும், செப்பேடகளும் உள்ளன. அவை இக்கிராமத்தின் பெயரை, பெருவல் கலையனூர் என்றும், மூலவரை, சிவசுப்பிரமணியசுவாமி என்ற ரணபலி முருகய்யா எனவும் குறிப்பிடுகிறது.
குருக்களையே கிரையத்திற்கு வாங்கி, நித்ய பூஜை செய்வதற்காக அவர்களுக்கு நிலங்கள் கொடுத்து, கொல்லர், தச்சர் போன்றவர்களுக்கும் நிலங்களை கொடுத்து, நிர்வாகம், கணக்கு, முத்திரைக் கணக்கு, தான கணக்கு சரி பார்த்து கோயில் கைங்கரியம் தொடர்ந்து நடந்து வர வேண்டும் என்பதை அந்த சாசனங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இன்றும் கைங்கரியம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஐந்து நிலை ராஜகோபுரம் தாங்கிய கிழக்கு நோக்கிய ஆலயம். கோயிலின் நுழைவுவாயிலில் இரண்டு குதிரை சிலைகளைக் காணலாம்.
ஒரு குதிரையில், பத்ரகாளி உபாசகரான ஆதி மங்களேஸ்வர குருக்களும், அதற்கு எதிரேயுள்ள இன்னொரு குதிரையில் பத்ரகாளி அம்மன் திருவுருவமும் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான காட்சி. காலசந்தி மற்றும் சாரட்சை பூஜையின்போது இவர்களுக்கு நைவேத்யம் செய்த பின்னரே பலிபீடத்திற்கு செய்யப்படுகிறது.
ஜெயங்கொண்ட விநாயகரை தரிசித்துவிட்டு பலிபீடம், கொடிமரம், மயில் வாகனம், அர்த்தமண்டபம் கடந்தால் கருவறை. உள்ளே வள்ளி-தேவசேனா சமேதராக ரணபலி முருகன் என்ற சிவசுப்பிரமணியசுவாமி கருணை என்ற சிவசுப்பிரமணியசுவாமி கருணை பொங்கும் முகத்துடன் காட்சி தருகிறார். திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இவரை வழிபட்டாலே கிடைக்கிறதாம்.
பிரகாரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி, சண்முக சக்கரம், நாகரை தரிசிக்கலாம். கோயிலுக்கு வடக்கே தளவா வயிரவர் சேர்வைக்காரரின் சமாதி கோயில் உள்ளது. அங்கு சுப்பிரமணிய யந்திரமும், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தினமும் கோயிலில் இருந்து நிவேதனம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள லிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது.
உற்சவர்களாக விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானை சமேத சண்முகர் அருள்கிறார்கள். இவர்களையும், முருகன் உருவம் பொறித்த அதிசய வேலையும் பிரம்மோற்சவ நாட்களிலும், சூரசம்ஹாரத்தன்றுமே பக்தர்களால் தரிசிக்கமுடியும். மற்ற நாட்களில், பாதுகாப்பாக வேறு இடத்தில் இருக்கும் சத்ரு சம்ஹார வேலை சிறப்பு அனுமதியின் பேரில் ஆலயத்திற்குக் கொண்டு வந்து, அதற்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்வதும் உண்டு. சத்ரு சம்ஹார வேலை வழிபடுவோருக்கு எதிரிகள் தொல்லை விலகி, சகல பேறுகளும் கிட்டும் என்பது நம்பிக்கை.
வெளி பிராகாரத்தில், யாகசாலையின் மேல் பகுதியில் கோயில் தலபுராணமும், கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.
தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இவ்வாலயத்தில் முருகனுக்குரிய முக்கிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மாசியில் நடைபெறும் பிரம்மோற்சவமும், கந்த சஷ்டி விழாவும் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
பதினொரு நாள் நடைபெறும் மாசிமாத பிரம்மோற்சவத்தில் 7ம் நாள் திருச்செந்தூரைப் போல் சண்முகர் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி மூன்று காலங்களில் எழுந்தருள்வார். இது இறைவனின் ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகிய செயல்களைக் குறிக்கும். 10ம் நாள் தேரோட்டமும், 11ம் நாள் ஆலய தீர்த்தமான சரவண பொய்கையில் தீர்த்தவாரியும் நடைபெறும்.
ஏழுநாள் உற்சவமாகக் கொண்டாடப்படும் கந்தசஷ்டி திருவிழாபவில் 6ம் நாள் பிரசித்தி பெற்ற சூரசம்ஹாரம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். அப்போது, கடலில் கண்டெடுக்கப்பட்ட அரிய சத்ரு சம்ஹார வேலைக் கொண்டு சூரனை முருகப் பெருமான் வதம் செய்யும் அற்புதக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமடைவார்கள்.
இந்த வருடம் நீங்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு அந்த பக்திப் பரவசமான அனுபவத்தைப் பெறுங்களேன்!

எங்கே இருக்கு: ராமநாதபுரம் பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில், தேவிபட்டினம் செல்லும் வழியில், பெருவயல் விலக்கு எனற இடத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். அங்கிருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் பெருவயல் கிராமத்தில் ரண பலி முருகன் ஆலயம் உள்ளது.

தரிசன நேரம்: காலை 8-12; மாலை 4-8

Comments