நுக்கேஹள்ளி லக்ஷ்மி நரசிம்மர்!





வைகுண்டத்தின் வாசலில் காவல் இருந்தார்கள் ஜயனும் விஜயனும். பகவானின் பக்கத்திலேயே இருப்பதால் கொஞ்சம் கர்வம் அவர்களுக்கு இருந்தது.
தூங்குபவர்போல் காட்சிதந்தாலும் அனைத்தும் அறிந்தவர் அல்லவா ஹரி! ஜய, விஜயர்களின் ஆணவமும், அவருக்குத் தெரிந்தே இருந்தது. பாடம் கற்றுக் கொடுப்பதற்கும் காலம் வேண்டுமே! காத்திருந்தார், காகுத்தன். அந்த நாளும் வந்தது.
அன்று, பிரம்மாவின் மானசபுத்திரர்களான சனத் குமாரர்கள், வைகுண்ட வாசனை தரிசிக்க, வந்தார்கள். எங்கும் எக்காலமும் செல்லும் வரம்பெற்ற அவர்களை இறுமாப்போடு இருந்த ஜய, விஜயர்கள் தடுத்தார்கள்.
அதனால் அவர்களால் சபிக்கப்பட்டு, பூலோகத்தில்பிறந்தார்கள். விஷ்ணு பக்தர்களாக ஏழு பிறவிகள் எடுத்து, பலகாலம் கடந்து மீண்டும்ப பரமபதம் செலவதைக் கடினமாக உணர்ந்தார்கள். எனவே மூன்றே பிறவிகள் விஷ்ணுவின் எதிரிகளாகப் பிறந்து, சீக்கிரமே வைகுந்தம் வந்திடத் தீர்மானித்தார்கள்.
அதன்படி, கிருத யுகத்தில் இரண்யகசிபு, இரண்யட்சகனாகவும்; திரேதா யுகத்தில் ராவணன், கும்பகர்ணனாகவும், துவாபர யுகத்தில் சிசுபாலன், தண்டவக்ரனாகவும் பிறந்து, பரந்தாமன் கரங்களாலேயே வதைக்கப்படும் வரம்பெற்று விரைவில் வைகுந்தம் திரும்பி, மீண்டும் அதன் வாயிற்காப்பாளர்களானார்கள் ஜய, விஜயர்கள்.
பகவானின் நரசிம்ம அவதாரம் பிரகலாதனுக்காக எடுக்கப்பட்டது என்றாலும், இரண்யகசிபுவாக இருந்த ஜயனின் வேண்டுதலும் அதில் அடங்கி இருந்தது என்பதுதான் உண்மை.
சாதாரண மனிதர்களும், தேவர்களும் மட்டுமன்றி சாட்சாத் சிவபெருமானேகூட நரசிம்மரின் சிறந்த பக்தர். அவர் இயற்றியதுதான் மந்த்ரராஜபத ஸ்தோத்ரம். ராமபிரான் அகோபிலத்தில் நரசிம்மரை வணங்கிப் பாடியது. நரசிம்ஹ பஞ்சாம்ருத ஸ்தோத்ரம். இரணிய வதம் செய்த ஆளரிநாதரின் ஆவேசத்தை தணிக்க, பிரம்மா ஆயிரம் நரசிம்ம நாமாக்களால் தொழுதார். உக்ரம் குறையாமல் இருந்த நரசிம்மரைக் குளிர வைக்க பிரகலாதன் பாடிய பாமாலை, நரசிம்ம கவசம்.
ஸ்ரீசைலம் ÷க்ஷத்ரத்தில், ஹடகேச வனத்தில் காபாலிகர்களிடமிருந்து தன்னைக் காத்த நரசிம்மரைத் துதித்து ஆதிசங்கரர் இயற்றிய துதி, நரசிம்ம கராவலம்பம்.
உடன் வந்து அவளும் உத்தமோத்தம அவதாரமாக அடியவர்களால் போற்றப்படும் நரசிம்மர் வழிபாடு, மிகவும் தொன்மையானது. சிந்து சமவெளி பகுதியில் நரசிம்மர் விக்ரகம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த நரசிம்ம வழிபாடு. பத்தாம் நூற்றாண்டிலிருந்து 14ஆம் நூற்றாண்டு வரை கர்நாடகாவில் உச்சத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள், ஹொய்சாள மன்னர்கள் கட்டிய நரசிம்மர் கோயில்கள்தான்.
அவற்றுள் ஒன்றுதான் நுக்கேஹள்ளி லட்சுமி நரசிம்மர் ஆலயம். செப்டம்பர் 16-30, இதழில் தரிசித்த நுக்கேஹள்ளி சதாசிவர் ஆலயம் நினைவிருக்கிறதா? அங்கு தரிசனம் பெற்றுக் கொண்டு அப்படியே ஐந்து நிமிடம் நடந்தால், அடுத்த தெருவில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை அடைந்து விடலாம். இதுவும் எளிய முகப்பு கொண்ட ஆலயம். ராமானுஜர் இங்கே வந்து எம்பிரானை தரிசித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நரசிம்மரைக் குறித்து இங்கே தவமிருந்த ருஷப முனிவருக்கு சேவை சாதித்த லட்சுமி நரசிம்மர், முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி இங்கேயே நிரந்தர வாசம் செய்கிறாராம்.
மன்னன் வீர சோமேஸ்வரர் கீழ் பணிபுரிந்தபொம்மண்ண தண்டநாயகா என்பவரால் கி.பி. 1246ம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயம். விஜயநகர மன்னர்களால் துவார மண்டபம் கட்டப்பட்டுள்ளது. த்ரிகூடாசாலா அமைப்பில் விளங்குகிறது. இரண்டு விமானங்கள் பிற்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பிரதான தெய்வம் கேசவ பெருமாள் என்றாலும், லட்சுமி நரசிம்மருக்கே முதலிடம்.
கருவறையின் வலதுபுறத்தில் வேணுகோபாலரின் தரிசனமும், இடதுபுறத்தில் லட்சுமி நரசிம்மரின் தரிசனமும் கிடைக்கிறது. உட்புற விதானத்தில் சிற்ப வேலைப்பாடுகள் கண்களைக் கவர்கின்றன.
பிராகாரச் சுற்றுப் பாதையில், வெளிப்புறச் சுவர்களில் விஷ்ணு அவதாரம் உள்ளிட்ட அழகிய சிற்பங்களைக் காணலாம். கண்ணன் வெண்ணெய் திருடுதல், மண்ணைத் தின்று யசோதயிடம் வாய் திறந்து காட்டுதல், யசோதை கண்ணனைக் கயிறால் கட்டுதல் போன்றவை தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
நவராத்திரி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ரதோத்சவம் விமரிசையாக நடைபெறுகிறது. பிரமோசவம் சிறப்பாக நிகழ்கிறது.
அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்று கீதையில் சொன்ன கண்ணபிரான், அதற்கு முன்பே பாலகன் பிரகலாதனுக்காக நொடியில் எடுத்த அவதாரம் இது. எனவே நரசிம்மரை நமஸ்கரித்தால் நல்லது உடனே கிட்டும் என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை!

எங்கே இருக்கு: பெங்களூருவிலிருந்து சென்னராயப்பட்டினம் செல்லவேண்டும். அங்கிருந்து திப்மூர் சாலையில் 20 கி.மீ. தொலைவில், ஹாசன் மாவட்டத்தில், நுக்கேஹள்ளி என்ற ஊரில் கோயில் அமைந்துள்ளது.

Comments