சென்னையில் நவகிரக தலங்கள்

நவகிரக தலங்கள் என்றதும், சூரியனார் கோயில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் ஆகிய தலங்கள் நம் நினைவுக்கு வரும்.
அங்கு சென்று பரிகாரம் செய்ய முடியாதவர்கள், சென்னையிலேயே உள்ள நவகிரக தலங்களுக்குச் சென்று, தங்கள் பரிகாரங்களைச் செய்து அதற்குரிய பலனைப் பெறலாம். அத்தகைய தலங்களை வரிசையாகப் பார்ப்போம்.
சென்னை, மௌலிவாக்கத்தை அடுத்துள்ள கொளப்பாக்கத்தில் அகத்தீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார் சிவபிரான். இங்குதான் தனிச் சன்னிதி கொண்டிருக்கிறார் சூரிய பகவான்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் கதிரவன் சன்னிதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. மாலை நேரத்தில் ராகுகாலத்தில் பைரவர் சன்னிதியில் கூட்டம்.
ஆலயத்துக்குள் நுழைவோம். பெரிய ராஜகோபுரம் கிடையாது. உள்ளே நுழைந்ததும் நாம் பிரமிக்கிறோம். அவ்வளவு பெரிய நிலப்பரப்பு.
தெற்குப் பார்த்த வாசல். பிரதான தெய்வங்கள் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. அவர்கள் அனைவரும் சூரியனை நேருக்கு நேர் நோக்குவது போல், ஆதவனின் சன்னிதி மேற்கு முகமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கதிரவனின் சன்னிதி முகப்பின் மேல் ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய ரதம். சுதை வண்ணத்தில் கவர்கிறது. சதுர வடிவ கருவறையில் அகத்தீஸ்வரர். முதலில் இவரை ஆராதித்தவர் அகத்தியர் என்பதால், உண்டான பெயர்.
அன்னை ஆனந்தவல்லி, நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். கோஷ்டத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை, பிராகாரத்தில் ராஜகணபதி, காசி விஸ்வநாதர், வாதாபி கணபதி, மயில் மீது அமர்ந்த முருகன், பைரவர், நாகர் முதலியவர்களைத் தரிசிக்கலாம்.
இத்திருக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது. பல்வேறு வேந்தர்களால் கட்டப்பட்டு புனருத்தாரணம் செய்திருக்கிறார்கள்.
சென்னை, போரூரிலிருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் மௌலிவாக்கம் பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கே சுமார் 1.5 கி.மீ செல்ல வேண்டும். பிராட்வேயிலிருந்து (பாரீஸ்) பேருந்துகள் செல்கின்றன.
தலபுராணம்:
ஒரு சமயம் சூரியனின் வெப்பம் தாளமுடியாமல் அவர் மனைவி உஷை பிரிந்தாள். மிகவும் கோபப்பட்ட கதிரவன், மாமனார் விஸ்வகர்மாவோடு சண்டையிட, அவர், உன் வெப்பத்தை குறைத்துக் கொள். உஷை வருவாள். சிவபெருமானைக் குறித்து தவமிரு. அவர் உன் மனைவி இருக்குமிடத்தைக் காண்பிப்பார்" என்று கூற, கதிரவன் தவம் செய்யத் தொடங்கினான்.
அவன் தவத்தை ஏற்று, உமாமகேஸ்வரர் தோன்றியதும், அவர் மனைவி இருக்குமிடம் கூறிய இடம் இதுதான். ஆனந்தவல்லியின் பார்வையால் மேலும் குளிர்ந்தான் சூரியன். அன்று முதல் அகத்தீஸ்வரர், ஆனந்தவல்லி இந்த கொளப்பாக்கத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்கள்.
சென்னையில்...
1. கொளப்பாக்கம் - அகத்தீஸ்வரர் - சூரியன்
2. சோமங்கலம் - சோமநாதீஸ்வரர் - சந்திரன்
3. பூவிருந்தவல்லி - ஸ்ரீவைத்தீஸ்வரர் - அங்காரகன்
4. கோவூர் - சௌந்தரேஸ்வரர் - புதன்
5. போரூர் - ராமநாதேஸ்வரர் - குரு
6. மாங்காடு - வெள்ளீஸ்வரர் - சுக்ரன்
7.பொழிச்சலூர் - ஸ்ரீஅகத்தீஸ்வரர் - சனி
8. குன்றத்தூர் - ஸ்ரீநாகேஸ்வரர் - ராகு
9. கெருகம்பாக்கம் - ஸ்ரீநீலகண்டேஸ்வரர் - கேது
தரிசன நேரம்:
காலை 7.30 முதல் 9 மணி வரை;
மாலை 4 முதல் 7 மணி வரை.
தொடர்புக்கு: 044-23820347; 9444820041.

 

Comments