தேர் பவனி!

ஸ்ரீ லலிதா, திரிபுரை, ராஜராஜேஸ்வரி, ஸ்ரீசக்கரநாயகி என்று பலப்பல நாமங்களைக் கொண்டவள் அன்னை காமாட்சி. இந்தப் பெயரைக் கேட்டதும், காஞ்சிபுரம், மாங்காடு, தஞ்சாவூர் என்று பல இடங்கள் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், நாம் தரிசிப்பது ஜெர்மனியில்!
ஜெர்மனி நாட்டின் ஹம் பகுதியில் கோயில்கொண்டு பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தந்து வருகிறாள் இந்த அம்பிகை. கைகளில் பாசம், அங்குசம், புஷ்ப வானம், கரும்பு வில் ஏந்தியிருக்கிறாள்.
1989ஆம் ஆண்டு, ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, மிகச் சிறியதாக அமைக்கப்பட்டது இத்திருக்கோயில். படிப்படியாக அப்பகுதியில் குடியிருந்த இந்து மக்களின் அர்ப்பணிப்பால், கோயிலாக கட்டப்பட்டு 2002ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தினசரி மூன்றுகால பூஜைகள் நடைபெறும் இக்கோயிலில், இந்தியாவின் நடத்தப்படும் அனைத்து விதமான பூஜைகளும் விசேஷமாக நடைபெறுகின்றன, அன்னதானம் உட்பட.
ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமான், விநாயகர், முருகர், சோமாஸ்கந்தர், ஐயப்பன், பைரவர், சண்டிகேஸ்வரர் மற்றும் நவகிரகங்கள் தனித்தனியாக சன்னிதி கொண்டுள்ளனர்.
இக்கோயிலில், வருடந்தோறும் நடைபெறும் மஹோற்சவத்தைக் காண, உள்நாடு மட்டுமின்றி, பிற நாடுகளிலிருந்தும் கூட, ஏராளமான பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். கவலைகள் அனைத்தையும் அவள் காலடியில் போட்டுவிட்டால், புது வாழ்வு பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது அன்னையின் திருமுக மண்டலம். தரிசனம் முடித்து வெளியே வரும்போது நம்முடைய மனமும் லேசாகிவிடுகிறது.
ஐரோப்பாவில் இதுபோன்ற இந்துக் கோயில்களை காண்பது அரிது. அந்த வகையில், இக்கோயில் ஐரோப்பிய வாழ் இந்துக்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
சென்னை, மாங்காட்டில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய அமைப்பைப் போன்றே அமையப் பெற்றிருக்கிறது இவ்வாலயமும்.
பக்தர்கள் வேண்டிக்கொள்ளும் அனைத்து வரங்ளையும் தந்தருளும் காமாட்சி அம்மனுக்கு, தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்த, பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
அனைத்து வசதிகளுடனும் கூடிய திருமண மண்டபம் ஒன்று, இக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. திருமண வரம் வேண்டி, கைகூடும் பக்தர்கள், இந்தத் திருமண மண்டபத்திலேயே திருமணத்தை நடத்துகின்றனர்.
திருவிழா: இத்தலத்தில், ஆண்டுதோறும் வேட்டைத் திருவிழா, சப்பறத் திருவிழா, தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா என பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன.
இருப்பிடம்: ஜெர்மனியில், North Rhine-Westphalia மாநிலத்தில் அமைந்துள்ளது ஹம் (டச்ட்ட்) நகர்.தரிசன நேரம்:
காலை 8 மணி முதல் 2 மணி வரை;
மாலை 5 மணி முதல் 8 மணி வரை.

Comments