ஸர்வஸ்யாத்யா மஹாலக்ஷ்மி

லக்ஷ்யாமி ஜகத் ஸர்வம் புண்யாபுண்ய
க்ருதா க்ருதே
மஹநீயா ச ஸர்வத்ர மஹாலக்ஷ்மீ :
ப்ரகீர்த்திதா
(லக்ஷ்மி தந்த்ரம்)
இந்த உலகில் உள்ள புண்ய, பாவங்களையும், சுப, அசுப செயல்களையும் நான் ஆதரித்தபடியும் விலக்கிய படியும் உள்ளேன். இதனால் அனைவராலும் பெரிதாக மதித்துப் போற்றப்படுகிறேன். இதன் காரணமாக உலகத்தினர் என்னை ‘மஹாலக்ஷ்மீ’ எனக் கூறுகிறார்கள்
உலகத்துக்கெல்லாம் ஆதார சக்தியாக, அனைத்துக்கும் ஆதி முதலாக விளங்குவது யார்?
இந்தக் கேள்விக்கு, சிதம்பர ரகசியத்தில் சாக்ஷாத் பரமசிவன், பார்வதிக்குக் கூறிய பதில் இது: ‘தேவியே! சின்மயமான அந்த அம்பிகை ஸர்வஸ்யாத்யா மஹாலக்ஷ்மி. அவளே, திரிபுரை என மூன்று வடிவு கொண்டாள். அசுரர்களை போக்கித் தேவர்களுக்கு அருள்புரியும் பொருட்டுப் பரதேவதை காளியுருக் கொண்டாள். அவளே காலாந்தரத்தில் லக்ஷ்மியாகவும் சரஸ்வதியாகவும் தோன்றினாள்’ - இது தான் மொத்த தேவீ மஹாத்மியத்தின் சாரம்.
தன் வாழ்வில் விரக்தியடைந்த ஸுரதன் எனும் மன்னனும், ஸமாதி எனும் வணிகனும் வாழ்வில் பிடிப்பு ஏதுமில்லாமல் ஒரு வனத்தை அடைகிறார்கள். அங்கு ஒரு முனிவரை சந்திக்கிறார்கள். அவர் வாயிலாக தேவியின் பெருமைகளைக் கேட்டறிந்து, அவர்கள் உயர்ந்த நிலையை அடைவதாக தேவீ மஹாத்மியம் அமைந்திருக்கும்.
தேவியின் பெருமையை முழுக்கக் கேட்டுணர்ந்த பின்னரும், திருப்தியுறாத ஸுரதன் என்ற அந்த மன்னன், முனிவரிடம் வேண்டுகிறான்:
ஐயனே! சண்டிகா தேவியின் அவதார வரலாறுகளை உங்கள் வாயிலாகக் கேட்டுணரும் பாக்கியம் கிட்டியது. குருவே! அனைத்துக்கும் ஆதாரமான அம்பிகையின் மூலஸ்வரூபத்தை தாங்கள் கூறியருளல் வேண்டும்."
இந்தக் கேள்வி மிக முக்கியமானது. அரசன் கேட்ட இந்தக் கேள்விக்கான பதில் பரம ரகசியமானது. இந்தக் கேள்விக்கு கிடைத்த பதிலே நமக்கான பதில்.
ஸர்வஸ்யாத்யா மஹாலக்ஷ்மீஸ் த்ரிகுணா
பரமேச்வரீ
லக்ஷ்யாலக்ஷ்ய ஸ்வரூபா ஸா வ்யாப்ய க்ருத்ஸ்னம்
வ்யவஸ்திதா
முக்குண வடிவினளும் பரமேசுவரியுமான மஹாலக்ஷ்மி எல்லாவற்றுக்கும் முதற்காரணமாகியவள். காணப்படுவதும், காணப்படாததுமான ஸ்வரூபமுடைய அவள் அனைத்தையும் வியாபித்து நிற்கிறாள்.
ஆக, அம்பிகையை வழிபடும் சாக்தர்களுக்கு அம்பிகையின் மூலஸ்வரூபம் ஸர்வஸ்யாத்யா மஹாலக்ஷ்மி எனும் அற்புத திருவடிவம்.
இவள் விஷ்ணுவின் மனைவியான மஹாலக்ஷ்மியல்ல; ஸர்வஸ்யாத்யா மஹாலக்ஷ்மி.
ஸர்வம் என்றால் ‘அனைத்துமாகிய’ என்றும் பொருள். ஆத்ய என்றால் ‘ஆதி முதல்’ என்று பொருள். அனைத்துக்கும் ஆதிமுதலாக விளங்குபவளே ஸர்வஸ்யாத்யா மஹாலக்ஷ்மி.
இவளிடமிருந்தே அணுவிலிருந்து அண்ட கோடிகள் வரை இந்தப் ப்ரபஞ்சம் முழுதும் உண்டானது என்பது சாக்த மதத்தின் துணிபு.
உருவம் ஏதுமற்ற, குணம், குறிகளற்ற பரம் பொருளே இவள். நாம ரூபங்களுக்கு அப்பாற்பட்டவள் நமக்காக நாம ரூபங்களை ஏற்கிறாள். பெண் வடிவு கொள்கிறாள். ஸர்வஸ்யாத்யா மஹாலக்ஷ்மி எனும் பெயர் ஏற்கிறாள். அதற்கான வடிவும் காட்டுகிறாள்.
மாதுலிங்கம் கதாம் கேடம் பான பாத்ரஞ்ச பிப்ரதீ
நாகம் லிங்கம் ச யோனிம் ச பிப்ரதீ ந்ருப
மூர்த்தனி
தப்த காஞ்சன வர்ணாபா தப்த காஞ்சன பூஷணா
சூன்யம் ததகிலம் ஸ்வேன பூரயாமாஸ தேஜஸா
அவள் நான்கு கைகளில் மாதுளம்பழம், கதை, கேடயம், பானபாத்திரம் ஆகியவற்றைத் தரிப்பவளாயும், நாகப்பாம்பு, லிங்கம்,யோனி இவற்றைத் தலையில் தரிப்பவளாயும் விளங்குகின்றாள்.
உருக்கிய பொன் நிறங்கொண்டவளும், உருக்கி வார்த்த பொன் ஆபரணம் பூண்டவளுமாகிய அவள் சூனியமான (உலகு) அனைத்தையும் தனது ஒளியால் நிரப்பினாள்.
இதுவே அம்பிகையின் ஆதி ஸ்வரூபம். பரம ரகசியமான ஸ்வரூபம், தத்துவங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்ட ஸ்வரூபம்.
மாதுளம் பழத்தை ஏந்தியதால் எல்லா செயல்களுக்கும் (நன்மை, தீமைகளான கர்மங்களுக்கும்) பலன் தருபவள் நானே என்று காட்டுகிறாள். கையில் உள்ள கதை காரியங்களை நடத்துவிக்கும் க்ரியா சக்தியைக் காட்டுகிறது. கேடயமோ அஞ்ஞானத்தை நெருங்கவே விடாமல் வென்ற ஞான சக்தியின் வடிவாக இருக்கிறது. மற்றொரு கையில் இருக்கும் பானபாத்ரமோ - எப்போதும் தன்மயமாக விளங்கி நிற்கும் ஸ்வாத்மானந்த அனுபவத்தின் ரஸத்தை பருகி ஆனந்த நிலையில் இருக்கும் தன்மையைக் காட்டுகிறது. தலையில் உள்ள நாகமும், லிங்கமும், யோனியும் ப்ரபஞ்ச ச்ருஷ்டி தத்துவத்தையும், புருஷனுக்கும் - ப்ரக்ருதிக்குமுள்ள கூட்டும், காலங்களையெல்லாம் கடந்து நிற்கும் தத்துவம் தானே என்று, இந்த ஸர்வஸ்யாத்யா மஹாலக்ஷ்மியாக அம்பிகை காட்டுகிறாள்.
குணங்களுக்கு அப்பாற்பட்டவள் பரப்ரம்ம வடிவினளான தேவி. ஆயினும், நமக்காக குணங்களை தன்னகத்தே கொண்டவள் போல் அவற்றை ஏற்றுக் காட்சி தருகிறாள்.
அனைத்துலகமும் பிரம்மத்தை முழு முதற்காரணமாகக் கொண்டது. அந்த ப்ரம்மமே இந்த மஹாலக்ஷ்மீ. உலகம் ஒரு பிரம்ம சக்கரம். ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் குணங்களைக் குறிக்கும் மூன்று பட்டைகளாலானது. சக்கரத்தை சுழற்றுவதும் பிரம்மத்தின் சக்திதான்.
இவளையே வேதங்கள் ‘பரப்ரம்ம மஹிஷி’ என்று போற்றுகிறது.
சதுர்புஜா விசாலாக்ஷீ தப்தகாஞ்சந ஸந்நிபா I
மாதுலிங்கம் கதாம் கேடம்
ஸுதாபாத்ரம் ச பிப்ரதி
என்கிறது லக்ஷ்மீ தந்த்ரம்.
பரம ரகசியமான தேவதையான இந்த ஸர்வஸ்யாத்யா மஹாலக்ஷ்மியை எங்கு காண முடியும்?
நமது பாரத தேசத்தில் விளங்கும் சக்தி பீடங்கள் 18 என்றும், 51 என்றும் 108 என்றும் கூறுவதுண்டு. இதையெல்லாம் கடந்து நான்கு பீடங்கள் குறிப்பிடத்தக்கவை. அதில் துரீய பீடம் என்று குறிப்பிடப்படுவது கோலாப்பூர் மஹாலக்ஷ்மி ஆலயம். பலரும் நினைப்பது போல இது விஷ்ணு பத்னியான லக்ஷ்மியின் ஆலயமல்ல! கோலாப்பூர் ஆலயத்தின் பண்டைய கல்வெட்டுக் குறிப்புகள் அவளை ‘பரப்ரம்ம மஹிஷி’ என்றும் ‘ருத்ரார்தாங் கோத்ஸங்க நிவாஸினி‘ என்றெல்லாம் குறிப்பதைப் பார்க்க முடியும்.
அம்பிகையின் வாகனமும் சிங்கமே!
தேவீ மஹாத்மியம் குறிப்பிடும் ஸர்வஸ்யாத்யா மஹாலக்ஷ்மியே இந்த கோலாப்பூர் அரசி!
இந்தத் திருத்தலத்தை மஹாலக்ஷ்மி தனது கைகளால் தூக்கி நிலப்பரப்பில் வைத்து கோயில் கொண்டதால் இவ்வூர் ‘கரவீர்’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் இந்த ஆலயம் உள்ள இடம் பள்ளமாகவே உள்ளது. மேலும் இந்த ஆலயம் 108 கல்ப காலத்துக்கும் முந்தையது எனப் புராண நூல்களில் காணப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நைமிசாரண்யத்தில் வசித்த காச்யபர், கௌதமர் உள்ளிட்ட 80,000 ரிஷிகள் சுதமுனியிடம் காசி, கங்கை, பிரயாகை, கோகுலம் இவை அனைத்தும் இணைந்த ஓரிடத்தைக் காட்டும்படி கூற, அவரும் ஸர்வஸ்யாத்யா மஹாலக்ஷ்மி வசிக்கும் கோலாப்பூரே அவற்றுக்கு இணையானதொரு புனித கே்ஷத்திரம் என்று உரைத்தார்.
ரத்ன கற்களால் ஆன அம்பிகையின் அழகு மிளிரும் சிற்பத்தைக் கண்டால் வாயடைத்துப் போய் மௌனமே நிலைக்கும். ஆம்! ப்ராதானிக ரஹஸ்யம் உரைக்கும் அதே திருவடிவம்.
அம்பிகையின் சிரத்தில் நாகம் குடையாக விளங்க, சிரத்தில் லிங்கமும் யோனியும் தெரிகிறது. சிம்ம வாகனத்தின் முன்பு தாமரையின் மீது நின்றபடி காட்சி தருகிறாள். சதுர்புஜதாரியாக கைகளில் கேடயமும், கதையும், மாதுளங்கனியும், பான பாத்திரமும் கொண்டு காட்சி தருகிறாள் - ரகசியத்தின் அதி தேவதையான, ஆதி தேவதையான ஆதி மஹாலக்ஷ்மி.
கோலாபுரேசியின் இருபுறத்திலும் இரு தேவியர்கள் காட்சி தருகிறார்கள். நடுவில் இருப்பவள் மஹாலக்ஷ்மி என்றால், மற்ற இருவரும் யார்?
ரகசியத்தின் ரகசியம் அது; உலகம் உண்டான அந்தத் தத்துவம்

Comments