வேதாரண்யம் விளக்கழகு..!

த்தியகிரி, வேதவனம், திருமறைக்காடு என்றெல்லாம் போற்றப்படுவதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றால் சிறப்பு பெற்றதுமான திருத்தலம் வேதாரண்யம். திருவாரூர் தேரழகு, ஸ்ரீரங்கம் மதில் அழகு என்று சொல்லுவதுபோல், 'வேதாரண்யம் விளக்கழகு’ என்றும் சொல்லுவது உண்டு. அந்த அளவுக்கு, இந்தக் கோயிலில் விளக்குகளை ஏற்றி வைக்கும் விதமே தனி அழகுதான். 
முற்காலத்தில் ஒரு சிவன் கோயிலில் அர்த்தஜாம பூஜைகள் முடிந்து, கருவறைக் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. யாரும் இல்லாத அந்த நேரத்தில், திரி தூண்டிவிடப்படாமல் விளக்கு அணைய இருந்தது. அப்போது, விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க வந்த எலியின் மூக்கு பட்டு, விளக்கின் திரி தூண்டப்பட, விளக்கு சுடர் விட்டுப் பிரகாசித்தது. அப்படி அந்த விளக்கைப் பிரகாசிக்கச் செய்ததன் பலனாக, அந்த எலி அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது.
கோயிலில் விளக்குகளைப் பிரகாசமாக எரிய வைப்பது அந்த அளவுக்கு சிறப்பான பலன்களைத் தரக்கூடியது.
''வேதாரண்யம் கோயிலில், மூலவர் சந்நிதியில் இறைவனை நோக்கிச் செல்லும் ஒவ்வொரு படி நிலையிலும் அடுக்கு அடுக்காக மாடங்கள் கட்டப்பட்டுள்ளன. முதல் மாடம் தொடங்கி இறுதி மாடம் வரை செல்லச் செல்ல அகலம் குறுகிக் குறுகி ஒவ்வொரு விளிம்பும் மற்றொன்றின் தொடக்கமாக அமைந்துள்ளது. இதில் தை அமாவாசை அன்று லட்ச தீபம் ஏற்றப்படும். அன்று கோயில் முழுவதும் ஒளி வெள்ளத்தில் பிரகாசமாக இருக்கும். கார்த்திகை, தீபாவளி திருநாட்களில் மாடம் முழுதும் ஏற்றும் விளக்குகளால் அழகுற விளங்குகிறார் எம்பெருமான்!'' என்று வேதாரண்யம் விளக்கழகு பற்றி விவரிக்கிறார்கள் ஊர்மக்கள்.
சப்த விடங்க தலங்களில் இது இரண்டாவது தலமாகும்.
ஸ்ரீராமரால் பூஜித்துப் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் ராமநாதராக உள்ளார்.
சரஸ்வதி தேவி வீணை இன்றி இருக்கும் சிவ தலம் இது.
ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் இறைவனை வழிபட்ட தலம்.
பதினாறு சபைகளில் 12வது தேவ பக்த சபை என்ற திருநாமம் உடைய தலம்.
தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம்.
இத்தனைச் சிறப்புமிக்க வேதாரண்யேஸ்வரரை, தீபங்களின் திருநாளான தீபாவளி அன்று விளக்கேற்றி வழிபட, எல்லா நன்மைகளும் நம்மை வந்தடையும்.

Comments