கண் நோய் தீர்க்கும் காளிகாம்பாள்!

நாகை மாவட்டம், ஸ்ரீ கண்டி நத்தம் கிராமத்தில் இருந்து அருள்பாலிக்கிறார் அன்னை ஸ்ரீ காளிகாம்பாள். சுமார் 400 ஆண்டுகள் பழமையான கோயில். முன்னர் இருந்த அம்மன், காலச் சூழலில் பூமிக்கு அடியில் புதையுண்டாள். பிற்காலத்தில் அந்த அம்மன் சிலை பூமிக்கு அடியில் இருப்பதாய் ஒரு நாகாத்தம்மன் பக்தரின் கனவில் வந்து சொல்ல, அவரும் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்ததில், ஒரு புற்றும் அதில் இரண்டு நாகங்களும் ஸ்ரீகாளிகாம்பாள் சிலைக்குப் பாதுகாப்பாய் இருந்திருக்கிறது. பின்னர் காளிகாம்பாள், நாகத்தம்மனாய் மிகுந்த சக்தியோடு வெளியேறி அவ்விடத்தில் அமர்ந்து மக்களைக் காத்து வருகிறாள்.
இந்த ஸ்ரீ கண்டிநத்தம் நாகாத்தம்மன் கலியுகத்து அதிசயம். அன்னையை மனத்தில் நினைத்தாலே, வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறுகிறது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து வணங்கினால் தோஷம் நீங்கப் பெற்று காரியம் கைகூடுகிறது. சரும நோய் உள்ளவர்கள் உப்பு, மிளகு, சமர்ப்பித்தால் நோய் தீருகிறது.
கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்களும் இங்கு வந்து வழிபட்டு நன்மை பெறுகிறார்கள். இந்த நாகாத்தம்மனிடம் செய்வினைக் கோளாறுகள் போன்ற பிரச்னை உள்ளவர்களும் வந்து பரிகாரங்கள் செய்து கொண்டால் நன்மைகள் நடக்கின்றன. இந்த நாகாத்தம்மனின் சக்தியைக் கேள்விப்பட்டு வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் வருகின்றன.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அருள்வாக்கு சொல்லப்படுகிறது. ஆடி, நவராத்திரி, தை மாத பூஜைகளும் அலங்காரங்களும் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றன.

கதவுக்குப் பூஜை!
பெரியக் குளம் தாலுகா தேவதானப் பட்டியிலிருந்து வடக்கே சுமார் 3 கி.மீ. தூரத்தில் மஞ்சளாறு நதிக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில். இத்திருத்தலத்தில் மூலஸ்தானம் கதவுக்கே மூன்று கால பூஜை நடைபெறுகிறது.
கோயிலில் பூஜை செய்து வந்த மன்னாடியாருக்கும், ஜமீன்தாருக்கும் தண்ணீர் பாச்சுவதில் தகராறு ஏற்பட்டது. அதனால் மன்னாடியார்கள் கோபித்துக் கொண்டு கோயில் பூஜை மண்டபத்து உட்கதவைப் பூட்டி விட்டு, தாம் அடைத்த கதவு என்றும் திறக்கக்கூடாது என்று சொல்லிச் சென்றதாகவும், அன்று முதல் பூட்டிய கதவு இன்றும் திறக்கப்பாடாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இக்கோயில் வரலாற்றில் ஒரு சமயம் மஞ்சள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது ஆற்று வெள்ளம் ஒரு பெட்டியைச் சுமந்து கொண்டு வந்தது. அதை ஒரு மூங்கில் புதர் அணையிட்டு நிறுத்தியது. அப்போது பார்வையற்ற ஒரு மாடு மேப்பனை அனுப்பி; பெட்டியை எடுக்கச் சொன்னார்கள். அவன் கையால் பெட்டியை எடுக்கவும் அவனுக்குப் பார்வை வந்தது. உடனே தேங்காய் உடைக்காமல், வாழைப்பழம் உரிக்காமல் பூஜை செய்தனர். அன்று முதல் அம்மனுக்குப் படைக்கும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை. பழம் உரிக்கப்படுவதில்லை. மூங்கில் அணையிட்டு நிறுத்தியதால் ‘மூங்கிலனைக் காமாட்சியம்மன்’ என பெயர் வந்தது.
அம்மனின் அருள்வாக்குபடியே பெட்டி எடுத்த இடத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் சாயரட்சை பூஜையில் சயன உத்தரவு கேட்பது இத்திருக்கோயிலில் விஷேசம்.

Comments