நலம் தரும் நாக சதுர்த்தி!

தென் மாநிலங்களில் குறிப்பாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நாக சதுர்த்தியை விமர்சையாக கொண்டாடுகின்றனர். சதுர்வாக சிந்தாமணி என்ற நூலில் நாக சதுர்த்தி விரதம் கடைபிடிக்க வேண்டிய முறை விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் பருகியதை நினைவு கூற இவ்விரதம் மேற்கொள்ளப்படுவதாக கூறுவர்.
பெண்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக மேற்கொள்ளும் விரதம் இது. கேதுவின் பெயரால் மேற்கொள்ளப்படும் விரதம் எனவே இன்று கேதுவின் அதிதேவதையான கணபதியை மஞ்சள் கலந்த அரிசி மற்றும் மஞ்சள் தடவிய பஞ்சால் ஆன கஜ வஸ்திரம் அணிவித்து பூஜை செய்வர்.
கர்நாடக மாநிலத்தில் நாக சதுர்த்தியன்று தம்பிட்டு எனப்படும் உணவு நைவேத்தியம் செய்யப்படும். அரிசியை ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து அத்துடன் துருவிய வெல்லம், ஏலக்காய் சேர்த்து இந்த தம்பிட்டு தயாரிக்கப்படும்.
பெண்கள் இத்தினத்தில் உப்பில்லாத உணவு உண்பர். எண்ணெயில் பொறித்த உணவு சாப்பிடுவதில்லை. அன்று தயாராகும் உணவுக்கு தாளிப்பு கூட சேர்க்கப்படுவதில்லை. சண்முக காயத்ரியை 108 முறை கூற நாகதோஷம் பரிகாரமாகும் என்பது நம்பிக்கை.
காலையில் வீட்டில் வெள்ளியில் செய்த நாக விக்ரகத்திற்கு காய்ச்சாத பாலால் அபிஷேகம் செய்து வாசனை மிக்க பூக்களால் அர்ச்சனை செய்து வஸ்திரம் அணிவித்து பால், பழம் உலர் பழங்களைப் படைப்பர். மாலை வால்மீகம் எனப்படும் புற்றுக்கு சென்று அங்கே நாகங்களுக்கு பால், முட்டையை நைவேத்தியம் செய்வர். புற்றுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, பூக்களால் பூஜிப்பர். இன்று வாசலில் நாகத்தை கோலமாக வரைவர்.
நம் உடல் புற்றையும், அதிலுள்ள குண்டலினி சக்தி புற்றிலுள்ள நாகத்தையும் குறிப்பதாகும். அன்றைய தினத்தில் மஹாபாரதம் படிப்பதும் உண்டு. இதை ஆந்திராவில் அலுவல சதுர்த்தி என்றும் குறிப்பிடுவர்.
இயற்கையோடு ஒன்றிய வாழ்வு வாழ நம் முன்னோர்கள் ஏற்படுத்திய விரதம் இது.
தற்காலத்தில் பாம்புகளை இம்சிக்காமல் நாக பிரதிமைகளை மட்டுமே பூஜிப்பது நல்லது. மழைக்காலம் ஆதலால், என்பதால் பாம்புகள் தங்கள் உறைவிடத்தில் இருந்து வெளியே வரும். அவ்வாறு வரும் நாகங்கள் தங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக இப்பருவத்தில் நாக வழிபாடு செய்யப்படுகிறது.

Comments