பூக்காரி அம்மன்

தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை பிடிமண் எடுத்துவரப்பட்டு உருவான சுடலை, இசக்கி அம்மன் கோயில்கள் அதிகளவில் உள்ளன. ஆனால், கோயிலில் அம்மனுக்கு வழிபாடு செய்யப்பட்ட பூவை எடுத்து வந்து, அப்பூவால் உருவாக்கப்பட்ட கோயில் தூத்துக்குடி மாவட்டம், கச்சனாவிளை அருகேயுள்ள இடையன்விளையில் அமைந்துள்ளது. அம்மன், ‘பூக்காரி அம்மன்’ என அழைக்கப்படுகிறார். கருவறையில் துர்க்கையின் அம்சத்துடன் எழுந்தருளியிருக்கிறாள் பூக்காரி அம்மன்.
சுமார் 350 வருடங்களுக்கு முன்பு கச்சனாவிளை அருகேயுள்ள வடலிவிளை என்னும் ஊரைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர், ஆன்மிகத்தில் மிகுந்த பற்று கொண்டிருந்தனர். அவர்கள், அடிக்கடி கோயில்களுக்குச் சென்று அம்மன் வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தங்கள் ஊரில் அம்மனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்ய முடிவு செய்தனர். இதன்படி, ஒருமுறை அம்மன் தரிசனத்துக்காக வெளியூர் சென்ற சகோதரர்கள், அக்கோயிலில் அம்மனுக்கு வழிபாடு செய்த மலர்(பூ)களை தங்கள் ஊருக்குக் கொண்டு வந்தனர்.
தங்களுக்குச் சொந்தமான இடத்தில் அப்பூக்களை படைத்தும், புதியதாக வாங்கப்பட்ட பிச்சி, மல்லிகை உள்ளிட்ட பூக்களைப் படைத்தும் முதன் முதலில் வழிபாடுகளைத் துவங்கினர். பின்னாளில் அதே இடத்தில் சிறிய அளவில் கோயிலைக் கட்டி, கருவறையில் தங்களின் இஷ்டதெய்வமான துர்க்கைக்கு சிலை அமைத்து வழிபாடு செய்தனர்.
பூவினைக் கொண்டு வந்து அம்மன் ஆலயம் உருவாக்கப்பட்டதால் வடலிவிளை மக்கள் அம்மனை, ‘பூக்காரி அம்மன்’ என்று பெயரிட்டு அழைத்தனர். வருடத்தில் ஒரு நாள் பூக்காரி அம்மனுக்கு கொடைவிழா நடத்தி படையல் இட்டு வணங்கி மகிழ்ந்தனர்.
நாளடைவில், வடலிவிளை ஊர்மக்கள் பிழைப்பு தேடி கொஞ்சம் கொஞ்சமாக ஊரை விட்டு வெளியேறினர். இதனால் பூக்காரி அம்மன் கோயிலுக்கு உரியவர்கள் வடலிவிளை ஊரில் இல்லாத நிலை உருவானது. இருந்தபோதும் ஆண்டுக்கு ஒருமுறை கொடைவிழா நாள் அன்று மட்டும் தவறாமல் ஆலயத்துக்கு வந்து அம்மனை படையல் இட்டு வழிபட்டு வந்தனர்.
காலங்கள் கடந்து, தலைமுறைகள் மாறிய நிலையில் அந்த வழிபாடுகளும் முற்றிலுமாக நின்று போனது. இப்படி சுமார் 70 வருடங்கள் எந்தவித வழிபாடும் மேற்கொள்ளப்படாமல் கோயில் புதர்மண்டிப் போனது. இந்நிலையில் வடலிவிளையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடையன் விளையில் அம்மனுக்கு புதிய கோயில் கட்ட முடிவு செய்தனர்.
இதற்கான உத்தரவும் கிடைக்க, பக்தர்கள் பலரும் கோயிலுக்கான இடத்தை தானமாக வழங்கினர். இதனையடுத்து கடந்த 2011ம் ஆண்டு வடலிவிளையில் இருந்த பூக்காரி அம்மன் சிலை இடையன்விளையில் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட புளியமரத்தின் அடியில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து பூக்காரி அம்மன் புதிய ஆலயத்தின் கருவறையில் குடிபெயர்ந்தாள் என்கிறது கோயில் வரலாறு.
மரங்களும், செடிகளும் சூழ்ந்த வனத்துக்குள் கோபுரத்துடன்கூடிய புதிய ஆலய கருவறையில் பூக்காரி அம்மன் துர்க்கை உருவில், சாய்ந்த சொரூபியாய், கையில் சூலாயுதம் ஏந்திய கோலத்தில் வடக்கு நோக்கிக் காட்சி அளிக்கிறாள்.
கருவறையை அடுத்துள்ள அர்த்தமண்டபத்தில் தேரடி மாடன், பட்டாணி சுவாமி, நாராயண சுவாமி, பரிவாரமூர்த்திகள், காலபைரவர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். சிற்பவேலைப்பாடுகளுடன் கூடிய வெளிப்பிராகார மண்டபம் மற்றும் கோபுர சிற்பங்களுடன் எழிலுற அமைக்கப்பட்டுள்ளது.
தட்சிணாமூர்த்தி தெற்குநோக்கி எழுந்தருளியுள்ளார். தவிர, கிழக்குதிசை நோக்கி விநாயகர், சிவபெருமான் - பார்வதி, நந்தி பகவான், வள்ளி - தெய்வானை சமேதரா சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இம்மண்டபத்தின் எதிரே நவக்கிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதிக்கு அருகே தெப்பக்குளம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
அம்பாளை ஏழு செவ்வாய்கிழமைகள் தொடர்ந்து வணங்கும் பக்தர்களுக்குத் திருமண வரம், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோன்று செவ்வாய்கிழமை தோறும் ராகுகால நேரத்தில் தீபம் ஏற்றி வணங்கும் பக்தர்களுக்கு கல்வி, தொழில், வேலைவாய்ப்புகள் அமைவதுடன், கடன் தொல்லை, தீராத நோய்கள், பகைவர்களின் அச்சுறுத்தல்கள் நீங்குகின்றன.
தை மாதம் வருஷாபிஷேக விழா நடத்தப்படுகிறது. தமிழ் மாதப் பிறப்புதோறும் திருவிளக்கு பூஜை நடக்கிறது. சித்திரை மாதப்பிறப்பு, தீபாவளி, பொங்கல், கார்த்திகை, பங்குனி உத்திரம் போன்ற பண்டிகை காலங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கின்றன.
புரட்டாசி முதல் நாள் அன்று இடித்த பச்சரிசி மாவுடன், கருப்பட்டி கலந்த ரொட்டி செய்து அம்மனுக்குப் படையல் இடுகிறார்கள்.
ஆலயத் துளிகள்
* பிச்சிப்பூ மிகவும் உகந்த மலராகும்.
* குழந்தை வரம் வேண்டுவோர் எலுமிச்சை தீபமிட்டு வழிபடுகின்றனர்.
செல்லும் வழி
திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் வழித்தடத்தில் கச்சனாவிளை ரயில் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரம். கார், பேருந்து மூலமாக வருபவர்கள் குரும்பூர் வந்து அங்கிருந்து வரவேண்டும்.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் இரவு 7 வரை. மாலை 4.30 மணிக்கு மட்டும்தான் பூஜையுடன் கூடிய வழிபாடு.
தொடர்புக்கு: 94424 66617

Comments