ஜெயமே தருவான் ஜெயந்திநாதன்

திருவும் சீரும் கொண்ட அலைகள் மோதும் கடல் தீரத்தை தன் நுழைவாயிலாகக் கொண்ட திருத்தலம் அது! அப்படி என்ன தனிச் சிறப்பு அந்தக் கடலுக்கும் கடலின் அலைகளுக்கும்? சதாசர்வ காலமும், 'முருகா! முருகா!’ என்று முழங்கியபடி கந்தக் கடவுளின் திருவடிகளைத் தொட்டுத் தழுவி நிற்கும் பாக்கியம் ஒன்று போதாதா என்ன... செந்தூர் கடலுக்கும் கடலின் அலைகளுக்கும் அப்படி ஒரு தனிச் சிறப்பு ஏற்பட!
அதனால்தான் நக்கீரர் தமது ஆற்றுப் படையில் இத்தலத்தை 'திருச்சீரலைவாய்’ என்று சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.
ஆதியில் அங்கே நிகழ்ந்தது ஓர் அற்புதக் காவியம்!
இறைவனின் தரிசனம் கண்டு ஞானம் கைவரப்பெற்ற ஒருவனை இறைவன் ஆட்கொண்ட அற்புதம்! அது பற்றி பிறகு பார்ப்போம். அதற்கு முன்...
பொதுவாக கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறைதான் பெருந்திருவிழா என்னும் பிரம்மோற்ஸவம் நடைபெறுவது வழக்கம். ஆனால் திருச்செந்தூரில் ஆண்டுக்கு இரண்டுமுறை திருவிழா நடைபெறுவது தனிச் சிறப்பு. அதன் காரணம் என்ன? அது நமக்கு உணர்த்தும் தத்துவம்தான் என்ன?
அது பற்றி பார்ப்பதற்கு முன்னர், ஒருநாள் அனுபவம் தேடி திருச்செந்தூரில் நடைபெற இருக்கும் ஆவணித் திருவிழாவின் தேரோட்டம் தரிசிக்க ஒருநாள் முன்னதாகவே வந்திருக்கும் நாம், அதற்கான ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கின்றன என்பதைப் பார்ப்பதற் காக தேர்கள் நிறுத்தப்பட்டிருந்த கிழக்கு ரத வீதிக்குச் சென்று பார்த்தோம்.
மறுநாள் நடைபெறப் போகும் தேர்த் திருவிழாவுக்காக, முந்தின நாளே தேர்கள் மூன்றும் அலங்கரிப்பதற்குத் தயாராக வெளியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தன. தேர்களை அலங்கரிக்கும் பணிகளில் ஆட்கள் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்து கோயிலுக்குச் சென்றோம். திருவிழா நடைபெறுவதாலும், மறுநாள் தேரோட்டம் நடைபெற இருப்பதாலும் கோயிலைச் சுற்றிலும் இருந்த இடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். அவர்களில் பெருமளவு பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் என்பதால், அங்கேயே தாங்கள் கொண்டு வந்திருந்த ஸ்டவ் அடுப்பு மற்றும் பாத்திரங்களின் உதவியுடன் சமைத்துக் கொண்டிருந்ததையும் காண முடிந்தது. அங்கிருந்தவர்களிடம் பேசியபோது, இரவு கோயிலிலேயே தங்கிவிட்டு மறுநாள் தேர்த் திருவிழாவை தரிசித்து விட்டுதான் ஊருக்குச் செல்லுவார்கள் என்பதைத் தெரிந்துக்கொள்ள முடிந்தது.
நாம் கோயிலுக்குள் செல்கிறோம். பக்தர்கள் நீண்ட வரிசையில், செந்தில் அழகனின் திவ்விய தரிசனம் பெறக் காத்திருந்தனர்.
நம் எதிரில் வந்த கோயில் அர்ச்சகர் ஒருவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, திருச்செந்தூர் கோயிலில் மட்டும் மாசி பிரம்மோற்ஸவத்துடன் ஆவணித் திருவிழா நடைபெறுவதற்கான காரணம் குறித்துக் கேட்டோம்.
என்.கிருஷ்ணன் என்ற அந்த அர்ச்சகர், ''திருச்செந்தூரில் காலம்காலமாக மாசி மாதம்தான் பிரம்மோற்ஸவம் நடந்து கொண்டு இருந்தது. சில நூறு வருடங்களுக்கு முன் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டுவந்த  உதயமார்த்தாண்ட வர்மா என்ற மன்னர் திருச்செந்தூர் முருகப் பெருமானிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். கோயிலில் நடைபெற்று வரும் மாசித் திருவிழாவைப் போலவே, அரச குடும்பத்தினர் பிரத்தியேகமாக தரிசிக்க வேண்டும் என்பதற்காக ஆவணி மாதம் பத்து நாள்கள் திருவிழா நடைபெறச் செய்தார். அப்போதிருந்து திருச்செந்தூர் செந்தில்நாதனுக்கு ஆண்டுக்கு இரண்டுமுறை திருவிழா நடைபெறுகின்றது.' என்று தெரிவித்தார்.
அரச குடும்பத்தினர் பிரத்தியேகமாக தரிசிக்க வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட ஆவணித் திருவிழாதான் இன்று பக்தர்களுக்கு எத்தனை வசதியாகி விட்டது என்பதை நம் பக்கத்தில் இருந்த ஒருவர் மற்றவரிடம் பேசியதில் இருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. ஆண்டுதோறும் திருச்செந்தூரில் மாசி மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவை தரிசிக்க குடும்பத்துடன் வருவது அவருடைய வழக்கம். கடந்த மாசி மாதம் அவருடைய பையனின் பள்ளி இறுதித் தேர்வு நடைபெற இருந்ததால், அவரால் குடும்பத்துடன் வந்து திருவிழாவை தரிசிக்க முடியவில்லை. அதனால், இப்போது நடைபெறப் போகும் தேர்த் திருவிழாவை தரிசிக்க வந்திருப்பதாகக் கூறினார். மாசித் திருவிழாவை தரிசிக்க முடியாவிட்டால்தான் என்ன, ஆவணித் திருவிழா இருக்கிறதே! இப்படித்தான் அரச குடும்பத்தினர்க்காக பிரத்தியேகமாகத் தொடங்கப்பட்ட ஆவணித் திருவிழா, இன்றைக்கு மாசித் திருவிழாவை தரிசிக்க இயலாத பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு வரப்பிரசாதமாகி விட்டது.
25.8.14 திங்கள் அன்று அதிகாலையிலேயே கோயிலுக்குச் சென்றோம். கோயிலை நெருங்கும்போதே,
வந்தே வந்தாரு மந்தாரமிந்து பூஷணநந்தனம்
அமந்தாநந்த ஸந்தோஹ பந்துரம் ஸிந்துரானனம்
ஷட்வக்த்ர க்ருத்திகா புத்ர ஷட்சக்ரஸ்த க்ருபாநிதே
உத்திஷ்டா பீஷ்டவரத கர்த்தவ்யம் லோகரக்ஷணம்
என்று ராக நயத்துடன் இனிய குரல் நம்மை ஈர்த்தது. கோயிலுக்குள் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, அது செந்தூர் முருகனுக்கான ஸுப்ரபாதம் என்பது. தினசரி ஆலயம் திறக்கும் போது ஸுப்ரபாதம் பாடி இறைவனை பள்ளியெழச் செய்வது வழக்கம். அதற்கென்றே விஸ்வரூப தரிசன சேவா உறுப்பினர்கள் ஆலயத்துக்கு வந்து இறைவனுக்கு ஸுப்ரபாதம் இசைக்கிறார்கள்.

மணி 5.30 ஆகிவிடவே இறைவனின் தேர்வலம் காண கிழக்கு ரத வீதிக்குச் சென்றோம். நாம் சென்றபோது ஒரு சிறிய தேரில் விநாயகர் புறப்படுவதற்குத் தயாராக இருந்தார். அவருக்கு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றதும் தேர் புறப்பட்டது. விநாயகரின் தேர் நான்கு ரத வீதிகளையும் வலம் வந்து நிலைக்கு வந்து சேர்ந்த பிறகுதான் முருகப் பெருமானின் தேர் புறப்படும்.
வாழை மரங்களாலும், மாவிலைத் தோரணங்களாலும் நன்றாக அலங்கரிக்கப் பட்டிருந்த தேரில், உற்ஸவ மூர்த்தி எழிலார்ந்த கோலத்தில் திருக்காட்சி தந்தார். தேர் புறப்படும்வரை அவருக்கு ஆராதனைகள் நடைபெற்றுக்கொண்டே இருந்தது. தேரில், வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் இருந்தார். அதுபற்றி அங்கே இருந்த அர்ச்சகர் வினோத் என்பவரிடம் கேட்டோம்.
அவர், ''இன்றைக்கு தேரில் நீங்கள் தரிசிப்பது குமாரவிடங்க மூர்த்தி ஆவார். பொதுவாக ஒரு கோயிலில் ஒரு உற்ஸவ மூர்த்திதான் இருப்பார். ஆனால் எங்கள் திருச்செந்தூர் கோயிலில் ஜெயந்திநாதர், குமாரவிடங்கர், ஷண்முகர், அலைவாய் உகந்த பெருமான் என்று நான்கு உற்ஸவ மூர்த்திகள் உள்ளனர். ஒவ்வொரு மூர்த்தியும் ஒவ்வொரு திருவிழாவில் அருள் புரிவர்.' என்று பெருமிதத்துடன் கூறியவர் தொடர்ந்து தமக்குப் பக்கத்தில் இருந்த ஒருவரை அறிமுகப்படுத்தினார்.
எஸ்.டி.பாலசுப்ரமணிய ஆதித்தன் என்னும் அந்த அன்பரின் முன்னோர்கள்தான் சுமார் 400 வருடங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயிலுக்கு, அன்று வலம் வர இருக்கும் தேரை காணிக்கையாகக் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் பேசியபோது திருச்செந்தூர் முருகனிடம் அவர் வைத்திருந்த அளவற்ற பக்தியை நம்மால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
அது மட்டும் இல்லாமல், ஓர் அறக் கட்டளையை ஏற்படுத்தி அதன்மூலமாக கோயில் குளங்களையும் தூர் வாரி சுத்தப்படுத்தி வருகிறார் என்பதையும், அந்த வகையில் சமீபத்தில் நெல்லையப்பர் திருக்கோயில் குளத்தை தூர் வாரி சுத்தப்படுத்தியதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.
''எங்கள் குடும்பத்தினர் அனைவருமே திருச்செந்தூர் முருகப் பெருமானை வணங்கி விட்டே எந்த வேலையையும் தொடங்குவோம். எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும், அத்தனை சோதனைகளில் இருந்தும் எங்களை இந்த செந்தூர் முருகப்பெருமான்தான் காப்பாற்றி வருகின்றார். அதற்கு எளிய காணிக்கையாகத்தான், எங்களின் முன்னோர்களால் இந்தத் தேர் முருகப் பெருமானுக்குக் அர்ப்பணிக்கப்பட்டது' என்றார்.  
தேர் வடம் பிடிக்க அந்த அதிகாலை வேளையிலேயே நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேருக்கு அருகில் நின்றிருக்க, தேரோட்டம் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு ரத வீதிகளிலும், வீட்டு மாடிகளிலும் திரண்டிருந் தனர். 6.30 மணிக்கெல்லாம் விநாயகப் பெருமானின் தேர் நிலைக்கு வந்து சேர்ந்துவிட, சுவாமியின் தேர் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. விநாயகர் தேர் வந்து சேர்ந்த சிறிது நேரத்துக்கெல்லாம், தேரின் மேல் இருந்த ஒருவர் வெள்ளைத் துணியை அசைத்து சைகை செய்ய, அதைக் கண்டதுதான் தாமதம், தேர் வடம் பிடிக்கக் கூடியிருந்த பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்க, மங்கல இசை முழங்க குமார விடங்கரின் தேர் மெள்ள மெள்ள அசைந்து அசைந்து கிழக்கு ரத வீதியில் இருந்து நகரத் தொடங்கியது.

தேரின் முன்னும் பின்னும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வர, தேர் கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதிகளைக் கடந்து வடக்கு ரத வீதியில் வருவதற்குள், நாம் வடக்கு ரத வீதிக்கு வந்துவிட்டோம்.
குமாரவிடங்கரின் திருத்தேர் வடக்கு ரத வீதிக்குள் வரவும், காலை இளம் கதிரவனின் கதிரொளி தேரின் மீதும் குமாரவிடங்கரின் திருவடிவின் மீதும் பட்ட காட்சியானது, அந்தக் கதிரவனே குறைகளைக்களையும் குமாரவிடங்கப் பெருமானை வணங்கிப் பணிவதுபோல் ஓர் எண்ணம் நம்முள் தோன்றி நம்மைப் பரவசப் படுத்தியது.
வடக்கு ரத வீதியில் இருந்து கிழக்கு ரத வீதிக்குள் திரும்பும்வரை நாமும் தேருக்கு முன்பாகச் சென்றபடி கதிரவனின் கிரணங்கள் பட்டு தகத்தகாயமாகப் பிரகாசித்த குமாரவிடங்கப் பெருமானின் எழில் கோலத்தை திரும்பத் திரும்ப தரிசித்து நெஞ்சம் பூரித்துப் போனோம். குமாரவிடங்கப் பெருமானின் திருத்தேர் கிழக்கு ரத வீதியில் நிலைக்கு வந்து சேர்ந்த சிறிது நேரத்துக்கெல்லாம் வள்ளி அம்மனின் தேர் புறப்படத் தயார் ஆனது. அப்படியானால் தெய்வயானை..? இங்கேதான் அந்த செந்தில் அழகனின் சமபாவம் நமக்குப் புரிய வருகிறது.
ஆம். இத் திருத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில், கந்த சஷ்டி திருக்கல்யாணத்தில் இருந்து பங்குனி உத்திரத்துக்கு முந்தின தினம் வரை நடைபெறும் திருவிழாக்களில் சுவாமியுடன் தெய்வயானையும், பங்குனி உத்திரம் வள்ளி திருக்கல்யாணத்தில் இருந்து கந்த சஷ்டிக்கு முந்தின தினம்வரை நடைபெறும் திருவிழாக்களில் சுவாமியுடன் வள்ளி அம்மையும் உடன் வருவார்களாம்!
என்ன ஒரு சமத்துவம்! அது மட்டும் அல்ல, அளவற்ற கருணையும் கொண்டவன் அந்த செந்தூரின் நாயகன்! அவனது திவ்விய தரிசனம் கிடைத்துவிட்டால், நம் கர்மவினைகள் யாவும் கரைந்து போவதுடன் உயர் ஞானமும் நமக்கு ஸித்திக்கும். உயர் ஞானம் நமக்கு வந்துவிட்ட பிறகு அந்தக் கந்தக் கடவுள் நம்மை ஆட்கொண்டுவிட மாட்டானா என்ன? அதற்குச் சாட்சியாய் அமைந்ததுதான் ஆதியில் அங்கே நிகழ்ந்த அந்த அற்புதக் காவியம்!
அது...
மிகுந்த தவப் பயனாகத் தான் பெற்ற வரத்தின் வல்லமை கொண்டு தேவாதிதேவர்களை எல்லாம் சூரபத்மன் துன்புறுத்தி வந்த காலம். தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட, முருகக்கடவுளின் திரு அவதாரம் நிகழ்ந்தது.
அன்னை சக்தியிடம் வேல் பெற்று சூரபத்மனுடன் போருக்குச் செல்கிறார். தவப் பயனாகத் தன்னுள் தான் பெற்றிருக்கும் ஞானத்தை ஆணவம் மறைத்திருந்த நிலையில் சூரபத்மன் உக்கிரமாகப் போரிடுகின்றான். அவனுள்ளே பொலிந்து தோன்றும் ஞானத்தின் பயனாக அவனை ஆட்கொள்ள நினைத்த முருகப்பெருமான், சூரபத்மனுக்கு தம் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அருளினார். அதன் பிறகே சக்திவேலை சூரபத்மனின்மீது பிரயோகம் செய்தார். அப்போது சூரபத்மன் மறைந்து, அவனுடைய அகந்தை மயிலாகவும், ஞானம் சேவலாகவும் மாறியது. கந்தக் கடவுள் மயிலைத் தன் வாகனமாகவும் சேவலைத் தன் கொடியாகவும் கொண்டார்.
இதிலும் ஒரு தத்துவத்தை முருகப் பெருமான் நமக்கு உணர்த்தி அருளி இருக்கிறார். என்னதான் மயில் அழகாக இருந்தாலும் அகந்தை என்பதால் அதை தன்னுடைய வாகனமாக அடக்கியும், மயிலைவிடவும் அழகில்லாவிட்டாலும், ஞானத்தின் காரணமாக சேவலை கொடியாக உயர்த்தியும் அருளினார் முருகப் பெருமான். நமது புறம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, அகத்தில் அகந்தை இல்லாமல் அடக்கம் இருந்தால் போதும் தன் திருவருள் கிடைக்கும் என்பதை சொல்லாமல் சொல்லுகிறது சூரபத்மனை முருகப் பெருமான் ஆட்கொண்ட அருள்திறம்.
வள்ளி அம்மையின் தேர் புறப்படத் தொடங்கிவிட்டது. சிறிய தேர் என்பதால், 9 மணி அளவில் புறப்பட்ட தேர், நான்கு ரத வீதிகளையும் வலம் வந்து 10.30 மணிக்கெல்லாம் நிலைக்கு வந்து சேர்ந்துவிட்டது.
தேர்த் திருவிழா நிறைவு பெற்றதுமே, திருவிழா காண வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரண்டுவிட்டனர்.  அத்தனை பேரும், 'எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சரி, எத்தனை நேரம் ஆனாலும் சரி, சூரனை ஆட்கொண்ட அந்த சுப்ரமண்யப் பெருமானை தரிசிக்காமல் போவதில்லை’ என்ற வைராக்கியத்துடன் இருந்்ததை அவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டதில் இருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.
நமக்குள்ளும் அப்படி ஒரு வைராக்கியம் இருக்கவே செய்தது. கூடவே ஒரு ஏக்கமும். சூரனை ஆட்கொண்ட சுப்ரமண்யரின் பிரதான உற்சவ மூர்த்தமான ஜெயந்திநாத மூர்த்தியை தரிசிக்க முடியுமா என்ற ஏக்கம்.
சுப்ரமண்யப் பெருமானை தரிசித்து வணங்கி, பிராகார வலம் வரும் வேளையில், ஓரிடத்தில் ஒரு சிறிய பல்லக்கில் ஓர் உற்ஸவ மூர்த்தம் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டோம். அங்கிருந்தவர்களிடம் விவரம் கேட்டோம். அவர்கள் சொன்னதைக் கேட்டு நாம் உண்மையிலேயே மெய்சிலிர்த்துப் போனோம்.
அவர்தான் நாம் தரிசிக்க ஏங்கிய ஜெயந்திநாத மூர்த்தியாம்! வீதி உலா வருவதற்காக ஜெயந்தி நாதரை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்களாம்! சற்று நேரம் அங்கேயே இருந்து ஜெயந்திநாதரை மனம் குளிர தரிசித்து திரும்பிய நம் மனதில், ஜெயந்திநாதன் நம் எல்லோருக்கும் நாளும் ஜெயமே அருள்வான் என்ற நம்பிக்கை நிலை பெற்றிருக்க, நிம்மதி நிறைந்த மனதுடன் திரும்புகிறோம்.

Comments