சிதைந்த நிலையில் சிவாலயம்

கோயில் என்றால், கோபுரம், கொடிமரம், பலிபீடம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், பிராகாரங்கள், பரிவார மூர்த்தங்களின் சந்நிதிகள், கோஷ்ட தெய்வங்கள், நவக்கிரக சந்நிதிகள், ஸ்தல விருட்சம், மடப்பள்ளி... என பலவும் சேர்ந்து கம்பீரமாக இருக்கும்தானே? மண்டபங்களில் எண்ணற்ற தூண்களும் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களும் இருக்கும்தானே?
இப்படி, அழகிய கோயில்களை உருவாக்க முற்கால மன்னர்கள் எப்படியெல்லாம் திட்டமிட்டிருப்பார்கள்? கட்டடக் கலை நிபுணர்களை தேர்வு செய்து, உலகின் எந்த மூலையில் இருந்தெல்லாமோ கல்லைக் கொண்டு வந்து, தேர்ந்த ஸ்தபதிகளின் மூலம் சிற்பங்களை உருவாக்கி, கருவறையில் குடியிருக்கப் போகும் தெய்வ மூர்த்தங்களை பார்த்துப் பார்த்து வடிவமைத்து, அந்தத் தெய்வங்களுக்கும் ஆலயத்துக்கும் திருநாமம் சூட்டி, கும்பாபிஷேகம் செய்து, அன்னதானம் வழங்கி, அடேங்கப்பா... ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்தும் கூட, சாந்நித்தியம் குறையாமல் இறைவன், கோயிலில் இருந்தபடி அருள்பாலிக்கிறான் எனில், மன்னர் பெருமக்கள் இந்தப் பணியை தவமாகவே மேற் கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்!
அப்படி, கடும் தவத்துடன் எழுப்பிய ஆலயம், இன்றைக்கு பரிதாபமான நிலையில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?
திருவாரூர் மாவட்டத்தின் பெரிய கொத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீசுயம்பு சுந்தரேஸ்வரர் ஆலயத்தைப் பார்த்தால், அழுதே விடுவீர்கள்.
கருங்கல் திருப்பணி; சுமார் 900 ஆண்டுகள் பழைமைமிக்க கோயில், மிக மோசமாக சிதிலம் அடைந்து கிடக்கிறது. இங்கே, கும்பாபிஷேகம் நடந்து, சுமார் 500 ஆண்டுகளாகியிருக்கும் என வருந்துகின்றனர் ஊர்ப் பெரியவர்கள்! மதில் சுற்று இருந்த சுவடு மட்டுமே காணக் கிடைக்கிறது. கால ஓட்டத்தில், கோபுரம் இல்லாத நுழைவாயிலாகிப் போனது இந்த ஆலயத் துக்கு! கொடிமரம், நந்தி, பலிபீடம் - மூன்றும் சேர்ந்த சிறிய மண்டபத்தை சுமார் 60 வருடங்களுக்கு முன்பு பார்த்த பக்தர்களும் உண்டு. ஆனால், இந்த மண்டபம் சின்னாபின்ன மாகிவிட்டது. கொடிமரம்- பலிபீடம்... காணவே காணோம்!
அதுமட்டுமா? மகா மண்டபம், அர்த்த மண்டபம் இருந்ததற் கான சாட்சிகளாக மண்டபத்தைத் தாங்கி நின்ற தூண்கள், 'எப்போது வேண்டுமானாலும் விழுவேன்' என எச்சரிக்கை வாசிக்கின்றன.
குலோத்துங்க சோழன் இந்த ஆலயத்தைக் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அதில், கோயிலுக்கு நிலங்களும் வரிப் பணங்களும் நிவந்தமாக அளித்த அறிவிப்பும் உள்ளது.
திருஞானசம்பந்தரும், சுந்தரரும் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசுந்தரேஸ்வரரை வழிபட்டிருக்க லாம் என்கின்றனர் திருப்பணிக் கமிட்டியினர். வந்தவர்கள் சும்மாவா சென்றிருப்பார்கள்? அப்படியெனில், இந்த ஆலயம், பாடல் பெற்ற ஸ்தல மாக இருக்குமோ? வைப்புத் தலமாக அமைந்துள்ளதோ? யாருக்குத் தெரியும்? புராதனமான ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயம், பாழடைந்து கிடக்கிறது; பராமரிப்புக்கு ஏங்குகிறது என்பது மட்டும் உண்மை!
கிழக்குப் பார்த்த ஆலயம். ஸ்வாமி சுந்தரேஸ்வரரும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஒரு விஷயம்... கோயில் சந்நிதிகள் அனைத்தும் சிதைந்து விட்டன. பிறகு?
ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மொத்தம் ஐந்து விநாயகர்கள் காட்சி தருகின்றனர். இவர்களில், ஸ்ரீநர்த்தன விநாயகர் கொள்ளை அழகு! வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமண்யரும் அழகுக்குப் பெயர் பெற்றவராயிற்றே? தேவியரும் மயிலுமாக அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீசுப்ரமண்யர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என மூவரின் விக்கிரகங்களும் உள்ளன. அது மட்டுமா? சூரிய- சந்திரர்கள், கால பைரவர், ஸ்ரீதட்சிணா மூர்த்தி ஆகியோரும் இங்கே உண்டு.
அம்பாள் ஸ்ரீசௌந்தரநாயகி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். தனிக்கோயில் கொண்டு, பெரும் சந்நிதியில் இருந்து அருளிய அம்பிகையும் மற்ற பரிவார மூர்த்தங்களும் இப்போது கோயிலையட்டி உள்ள ஓட்டுக் கொட்டகையில்... நைவேத்தியப் பணிகள் நடை பெற்று வந்த மடப்பள்ளியில் கூட்டமாக இருந்து அருளாற்றி வருகின்றனர்.
வேதனையாக இருக்கிறதா? பார்த்தால் இதயமே நொறுங்கிப் போகும்! மாலை வேளையில் சென்றால், ரத்தக் கண்ணீரே வடித்து விடுவீர்கள். மனிதர்களின் மன இருளை அகற்றி, வழிகாட்டும் சிவாலயம், இருள் சூழ, மின் வசதியின்றி உள்ளது!
கோயிலுக்கு விடிவுகாலம் ஏற்பட்டால்தான், கொத்தூர் கிராமம் செழிக்கும் என எண்ணிய ஊர் மக்கள், திருப்பணிக் கமிட்டியைத் துவக்கி, பாலாலயம் செய்து, பணியை துவக்கினர். ஆனாலும் நிதியின்மையால், பணிகள் மந்தமாகவே நடைபெறுவதாக தெரிவிக்கின்றனர்.
ஒரு காலத்தில் கொத்தூர் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமத்தையும் செழிக்கச் செய்தவராம் ஸ்ரீசுந்தரேஸ்வரர். 'இவர் சந்நிதியில் விதை நெல்லை வைத்து வேண்டிக் கொண்டு பயிரிட்டனர்; விளைச்சல் அமோகமாக இருந்தது' -என விளக்குகிறதாம் கல்வெட்டு! இப்போதும் பக்தர்கள், கல்வி, வேலை, வெளிநாட்டு வேலைக்கான அப்ளிகேஷன் ஆகியவற்றை சிவன் சந்நிதியில் வைத்து, ஓலைக் கூரையின் கீழ் இருந்தபடி வருவோரை பதிவு செய்து கொண்டிருக்கும் நந்தி தேவரையும் வணங்கிச் செல்கின்றனர்.
இருள்... இருள்... என்று சொல்வதை விட, ஒரேயரு தீபத்தை ஏற்றினால் போதும்; இருட்டு, இருந்த இடம் தெரியாமல் போய் விடும்!
'ஒரு விளக்கைக் கொண்டு ஓராயிரம் தீபங்களை ஏற்றலாம்' என்பது முன்னோர் வாக்கு.
தீப ஒளித் திருநாள் நெருங்கும் வேளையில்... இருளை அகற்ற முதல் தீபத்தை ஏற்றி விட்டோம். இதைக் கொண்டு ஓராயிரம் தீபத்தை ஏற்றுவார்கள் சிவ பக்தர்கள். அரும்பெரும் ஜோதியாம் அந்த சுந்தரேஸ்வரர் அதற்கு வழிவகுப்பார்!
மாய விளக்கது நின்று மறைந்திடும்
தூய விளக்கது நின்று சுடர் விடும்
காய விளக்கது நின்று கனன்றிடும்
சேய விளக்கினைத் தேடுகின்றேனே

Comments