அற்புதங்கள் பல புரிந்த ஸ்ரீமாக்கான் சுவாமிகள்!

காவிரி - நம் நாட்டின் புனிதமான நதியாகப் போற்றப்படுகிறது. 'கங்கையிற் புனிதமாய காவிரி' என்று ஆழ்வாரால் பாடப்பெற்ற புனித நதியாம் காவிரிக் கரையில்தான் எத்தனை எத்தனை மகான்கள் தோன்றியிருக்கிறார்கள்! சங்கீத வல்லுநர்கள், மகா தபஸ்விகள், நாயன்மார்- ஆழ்வார்கள் என்று பக்தியின் உன்னதத்தைக் காட்டிய மகான்களின் பூமி - இந்தக் காவிரி பாயும் பூமி.
காவிரி பாயும் நிலத்தில், சிறந்த நகரமாக விளங்குகிறது திருச்சிராப்பள்ளி. மலைக்கோட்டை தாயுமான சுவாமியும், தாயாக தந்தையாக அருள் பாலிக்கும் அரங்கனும், யானைக்கும் அருள்புரிந்த ஆனைக்கா ஈசனும் திகழும் இடம் அல்லவா? இப்படிப்பட்ட புனித பூமியில், தங்கள் தவ வேள்வியை வைத்துக்கொண்டனர் மகான்கள் பலர். அவர்களில் அண்மைக் காலத்தில் வாழ்ந்து, தன் சித்து விளையாடல்களால் உடனிருப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, ஆன்மிக சாதனையில் ஈடுபடுத்திய மகான் ஸ்ரீமாக்கான் சுவாமிகள்.
பெயரே ஆச்சரியப்படுத்துகிறதே! எதனால் இந்தப் பெயர் இவருக்கு? அறியும் ஆவல் நமக்கு. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கி, காவிரிப் பாலத்தை நோக்கிச் செல்கிறோம். ஈ.ஆர். மேல்நிலைப் பள்ளி தாண்டி, பழைய காவிரிப் பாலத்துக்கு முன்னதாக ஒரு சாலை, காவிரியை ஒட்டித் திரும்புகிறது. அதில் செல்கிறோம். சற்று தொலைவில், 'ரயில்வே கேட்'டினை ஒட்டி இடதுபுறத்தில் சிறிய சமாதிக் கோயில் ஒன்று... 'சற்குரு ஸ்ரீமாக்கான் பிரம்மம் ஆலயம்' என்று சேதி அறிவிக்கிறது
சிறிய ஆலயம். சற்று மேடான இடத்தில் சமாதி செய்யப்பட்டு, மேலே லிங்கப் பிரதிஷ்டை ஆகியுள்ளது. கருவறைக்கு இடப்புறத்தில் நீளமான அறை. தியானம் செய்ய ஏற்றதாக உள்ளது. சமாதிக் கோயிலை ஒட்டி காவிரி ஆறு சலசலத்து ஓடுகிறது. ஒருபுறம் மலைக்கோட்டையும், மறுபுறம் ஸ்ரீரங்கம் ஆலய விமானமும் நம் பார்வையில் படுகின்றன.
இந்த சுவாமிகளும் என்றென்றும் ஸ்ரீரங்கத்தை தரிசிக்க ஆவல் கொண்டவராய் இருந்திருக்கிறார். அதனால்தான் இந்த இடத்தில் சமாதி கொண்டாரோ?!
திருவையாறு... சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் மனம் உவந்து உடலை உதிர்த்த இடம். இங்கே உதித்தவர் ஸ்ரீகிருஷ்ணசாமி. பெற்றோர் ஸ்ரீரங்கம் வரதராஜ பிள்ளை- ரங்கநாயகி அம்மை. சுவாமிகளின் இளமைக்கால வளர்ப்பு பற்றிய விவரங்கள் சரிவரத் தெரியவில்லை. பல்வேறு தலங்களிலும் சுற்றிவிட்டு, இறுதியில் திருச்சிக்கு வந்து, மனம் உவந்து தங்கினாராம்.
ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் துறந்து கௌபீனம் மட்டுமே அணிந்து தெருக்களில் அலைந்திருக்கிறார். சிலரைப் பார்த்து ஏதேதோ சொல்லியிருக்கிறார். இவரைக் கண்ட பலரும் சித்த சுவாதீனம் இழந்தவர் என்றே நினைத்திருக்கிறார்கள். ஸ்ரீரங்க தரிசனம் அவருக்கு உவப்பளித்ததாகத் தெரிகிறது. ஒரு பிச்சைக்காரரைப் போன்று தெருக்களில் அலைந்து, பக்தர்கள் தரும் உணவை சாப்பிட்டிருக்கிறார்.
பல நேரங்களில் ஏதும் பேசாமல் மந்தமாக இருந்திருக்கிறார். சில நேரங்களில் இவருடைய செய்கைகள் பார்ப்பவர்களை முகம் சுழிக்கச் செய்யுமாம். இவர் பேசும் கொச்சைச் சொற்கள் இவர் மீது சிலருக்கு வெறுப்பை வளர்த்துள்ளது. இப்படி அசாதாரணமாக நடந்து கொள்பவர்களை 'மாக்கான்' என்று கேலி செய்வர். அதுபோல், இவர் இருந்த நிலையைப் பார்த்து இவருக்கும் அதே பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். இப்படியாக கிருஷ்ணசாமி எனும் பெயர் மறைந்து, மாக்கான் என்ற பெயர் ஒட்டிக்கொண்டது இவருக்கு!
திருச்சியில் எஸ்.ஆர்.சி காலேஜ் இருக்கும் சாலையில் உள்ள முடி திருத்துபவர்களிடையே இவருக்கு அதிகம் பழக்கம் இருந்திருக்கிறது. அவர்களிடம் அடிக்கடி முகச் சவரம் செய்து கொள்வாராம்...
இவர் வாய்திறந்து சொன்ன சொற்கள் பலவும் ஒருகட்டத்தில் அப்படியே நடக்கத் தொடங்க, இவரிடம் ஏதோ மகிமை இருக்கிறது என்று எண்ணி அடியார் கூட்டம் ஒன்று இவரை எப்போதும் கவனிக்கத் தொடங்கியது.
ஸ்ரீமாக்கான் சுவாமிகள் பற்றி யாரிடம் விசாரிக்க என்று யோசித்தபடி, ஸ்ரீரங்க தரிசனம் முடித்து, வந்த போது, சுவாமிகள் அருளால் அன்பர் ஒருவர் நம் தொடர்புக்கு வந்தார். பெயர்- குருமூர்த்தி சுவாமி (செல் 99651 56321). ஸ்ரீரங்கத்தில் இருக்கும் இவர், மாக்கான் சுவாமிகளின் சமாதிக் கோயிலுக்கு நிறைய பணிகளைச் செய்துள்ளார். இவரின் தந்தை, மாக்கான் சுவாமிகளின் கூடவே இருந்தவராம். இவரிடம் இருந்த ஒரு புகைப்படத்தில், மாக்கான் சுவாமிகள் படத்துக்குக் கீழே 'திருவையாற்று மாக்கான் சுவாமிகள் எனும் ஸ்ரீரங்கம் ஸ்ரீகிருஷ்ண பிர்ம்மம் (1943)' என்று அடிக்குறிப்பு காணப்படுகிறது. இவரும், ''சிறு வயதில் மாக்கான் சுவாமிகளை நேரில் பார்த்துள்ளேன்'' என்றார். அவரிடம் பேசியபோது, மாக்கான் சுவாமி கள் பற்றி சிலவற்றைச் சொன்னார்.
ஒருநாள் அன்பர் ஒருவர், சுவாமிகளுக்கு கால் பிடித்துவிட்டார். திடீரென, தாம் ஸ்ரீரங்கம் செல்லவிருப்பதாகவும், தனக்கு அனுமதி வேண்டும் எனவும் கேட்டார். அதற்கு அவர்... ''போடா போடா போ... ஏதோ வழி இருக்காம்... இவன் போறானாம்...'' என்றாராம். 'என்ன இப்படிச் சொல்கிறாரே...' என்ற சஞ்சலத்துடன் ஜட்கா வண்டியில் ஏறி திருச்சியின் இந்தக் கரையிலிருந்து ஸ்ரீரங்கம் சென்றார் அந்த அன்பர். ஆனால், அப்போது வந்த பெருவெள்ளத்தில் (1924-ல்) காவிரிப் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்து முற்றிலும் விட்டுப் போயிருந்தது. அப்போதுதான் அந்த அன்பருக்கு சுவாமிகள் சொன்னது நினைவுக்கு வந்ததாம்.
முடி திருத்துபவர் ஒருவரிடம் முகச் சவரம் செய்து கொண்டிருந்தாராம் சுவாமிகள். அந்த அன்பர், ஒரு பாதியை சவரம் செய்துவிட்டு, மறு பாதியை சவரம் செய்யத் திரும்பினாராம். அப்போது அவர்... ''டேய் நிறுத்து நிறுத்து... ஒரு பாதி போச்சேடா... மறுபாதிதான் இருக்கு!'' என்று ஏதோ சொல்லிவிட்டு, அப்படியே எழுந்து போய்விட்டாராம். சரியாக அப்போதுதான்... இந்திய மண்ணில் இருந்து பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்தது என்று செய்தி வந்ததாம்!
இன்னொரு அன்பரிடம், சுவாமிகள் தன்னை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துச் செல்லும்படி கோரியிருக்கிறார். ஜட்கா வண்டி கொண்டு வந்து, அதில் ஏறச் சொல்லியிருக்கிறார் அவர். ஆனால் சுவாமிகளோ அதில் ஏறாமல், ஏற முடியவில்லை என்றும், கைகளில் தூக்கிச் சென்று அமர வைக்குமாறும் சொல்லியிருக் கிறார். அதனால், 'தம்' பிடித்து இவரைத் தூக்க முயல, இவர் உடலோ பஞ்சினும் மெலிதாக, அலேக்காகத் தூக்க வந்ததாம். வண்டியில் சற்று தொலைவு சென்ற பின்னர், ''டேய் டேய் வண்டியை நிறுத்துடா... ஸ்ரீரங்கம் போகவேண்டாம். என்னை இறக்கி விடு'' என்று சொல்ல, சரி என்று, முன்பு போலவே உடல் லேசாகத்தானே இருக்கும் என்ற எண்ணத்தில் அவரைத் தூக்கியவருக்கு ஒரே ஆச்சரியம். உடல் கனத்துப் போய் இருந்ததாம். எவ்வளவு முயன்றும் இறக்கிவிட முடியவில்லையாம். இப்படி சுவாமிகள், தன் லஹிமா, மகிமா ஸித்திகளை வெளிப்படுத்தினாராம்.
சுமார் ஐம்பது ஆண்டுகள் திருச்சி பகுதியிலேயே தங்கியிருந்த சுவாமிகளுக்கு அன்பர் கூட்டம் பெருகியது. நாடி வந்தவர் களின் பிணிகளைத் தீர்த்திருக்கிறார். சிலருக்கு, வரவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே கோடிட்டுக் காட்டி, அவர்களை ஆபத்திலிருந்து காத்திருக்கிறார். ஊமைச் சிறுவன் ஒருவனை பேச வைத்திருக்கிறார். ஒருமுறை இவருக்குப் போடப்பட்ட பழைய சாதத்தை மிகவும் சூடானதாகச் செய்து, அதிலிருந்து ஆவி பறக்கச் செய்து வெளிக்காட்டியிருக்கிறார். உணவு கொண்டு வரும் அன்பர் ஒருவருக்கு, வானத்தில் மேகமே தோன்றாதபடி வறண்டு கிடந்த நிலையில், திடீரென மழை பொழியச் செய்து காட்டியிருக்கிறார். அதுபோல், மழை பொழிந்து வெள்ளம் கரைபுரண்ட நேரத்தில், திடீரென மழையை நிற்கச் செய்து, வானத்தை தெளிவாக்கிக் காட்டியிருக்கிறார். ஒரே நேரத்தில், வெவ்வேறு ஊர்களில் இருப்பதாகக் காட்டியுள்ளார். உடலுறுப்புகள் தனித் தனியே கிடக்கும்படி காட்டி, அன்பர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். சிலருக்கு புத்திரப் பேற்றுக்கு வரமளித்துள்ளார்.
இப்படி சித்து விளையாடல்கள் பல புரிந்த மாக்கான் சுவாமிகள், இறுதியாக ஜெயஸ்ரீ வருஷம் புரட்டாசி 12-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை (28.09.1954) அன்று தம் சரீரத்தை உதிர்த்து சமாதியில் ஆழ்ந்தார். அவருடைய சமாதி மேடைமடம் என்ற தற்போதைய இடத்தில் ஏற்படுத்தப்பட்டது. சுவாமிகளின் 55-வது குருபூஜை, கடந்த 21.09.09 அன்று அவருடைய சமாதிக் கோயிலில் நடைபெற்றது. இன்றும் அன்பர்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைக்கிறாராம் ஸ்ரீமாக்கான் சுவாமிகள். அன்பர்கள் சிலர், சுவாமிகள் தன் சரீரத்துடன் காட்சியளித்ததாகவும், சிலர் தங்களுடன் சுவாமிகள் பேசியதாகவும் தெரிவித்துள்ளனர்.
திருச்சிக்குச் செல்லும் அன்பர்கள், அற்புதங்கள் பல புரிந்த திருவையாறு கிருஷ்ண பிரம்மம் என்ற மாக்கான் சுவாமிகளின் சமாதிக் கோயிலுக்கும் சென்று வணங்கி, நலம் பல பெறலாமே!

Comments