மகாகாளேஸ்வரர்

சிப்ரா நதிக்கரையில் அமைந்திருக்கும் சிறிய நகரம் உஜ்ஜைன். நம் நாட்டின் புண்ணியத் தலங்களில் உஜ்ஜைனும் ஒன்று. மேலும், தென்திசை நோக்கி இருக்கும் ( தட்சிணமுகி) மகாகாளேஸ்வரர் கோயில் கொண்ட ஜோதிர்லிங்கம் இது ஒன்றுதான். இதை ‘முக்தி ஸ்தலம்’ என்றும் அழைப்பர்.
ஸ்கந்த புராணம் இதன் புகழைப் பாடுகிறது. முன் காலத்தில் அவந்தி மற்றும் அவந்திகா என்ற பெயருடன் விளங்கியது. மௌரியர்கள் மற்றும் குப்தர்கள் காலத்தில் இது முக்கிய அந்தஸ்தைப் பெற்றிருந்தது. மகாகவி காளிதாசர் ‘மேக தூதம்’ என்ற காவியத்தில் 12 செயுட்களில் உஜ்ஜயினி பற்றியும், அதன் மக்களைப் பற்றியும் உயர்த்திப் பேசுகிறார்: ‘சொர்க்கம் என்பது இந்த ஊரின் உருப்பெருக்கல்தான்’ என்று. இன்றைய உஜ்ஜைன் அப்படி இல்லையென்றாலும் சுவாரஸ்யமாகத்தான் உள்ளது.
மகாகாளர் அமர்ந்திருக்கும் இந்த இடத்தில்தான் பூமியின் முதல் தீர்க்கரேகை கடந்து செல்கிறது. அதனால், நேரம் இங்கு உலகளாவிய இணக்கமாகத் திகழ்கிறது. கடக ரேகை உஜ்ஜைன் வழியாகச் சென்று இந்து பஞ்சாங்கத்தின் கணக்கீடுகளுக்கு அடிப்படையாகத் திகழ்கிறது. கங்கைக்கு நிகராகக் கருதப்படும் இந்த சிப்ரா நதியின் கரையில்தான் கும்பமேளா 12 வருடத்துக்கு ஒருமுறை நடைபெறுகிறது. ‘சிம்ஹச்த மகாபர்வா’ என்றழைக்கப்படும் இந்த விழா சித்திரை மாதம் (April) பௌர்ணமி அன்று தொடங்கி, வைகாசி மாதம் (May)பௌர்ணமி வரை நடைபெறுகிறது.
இங்கு நாம் காணவேண்டிய முதல் இடம் மகாகாளேஸ்வரர் கோயில்தான். புராணங்களின்படி துஷாணன் என்ற அரக்கன் இந்தப் புனிதத் தலமான அவந்தியை சித்திரவதை செய்தான். சிவபெருமான் மண்ணிலிருந்து தோன்றி, அவனை வதம் செய்து, பின் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கேயே மகாகாளேஸ்வரராகக் கோயில் கொண்டார். அது ஜோதிர்லிங்கமாகவும் உருப்பெற்றது. ஆதலால், ஈஸ்வரன் இந்த ஊரைக் காப்பவராக மட்டுமல்லாமல்; ஆள்பவராகவும் இருக்கிறார். இந்தக் கோயில் ஒரு ஏரிக்கரையில் மிகப்பெரிய பிராகாரத்தில், பெரிய சுவர்கள் சூழ அமைந்துள்ளது. கோயிலின் ஐந்து நிலைகளில் ஒன்று பூமிக்கடியில் உள்ளது. கோபுரம் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் தென்திசை நோக்குவதால் தான்த்ரிகளுக்கு (tantriks) முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கோயிலுக்குச் செல்வோர் கூட்டத்தைத் தவிர்க்க வேண்டுமென்றால், மதிய வேளையில் செல்வது நல்லது.
இங்குள்ள கோடி தீர்த்தம் மிகவும் சிறப்பானது. கணேசர், பார்வதி மற்றும் கார்த்திகேயருடைய சிலைகள் கருவறையைச் சூழ்ந்துள்ளன. கருவறையில் உள்ள மத்திய கூரை வெள்ளியிலான 100 கிலோ எடையுள்ள ருத்ர யந்திரமாகும். லிங்கத்துக்கு மேலிருக்கும் ஜலதாரியும் வெள்ளியிலானது.
கோயிலுக்கு நடுவில் லிங்க அபிஷேகத்துக்காக குளம் வெட்டப்பட்டுள்ளது. விடியற்காலையில் (4 மணி) நடைபெறும் பஸ்ம ஆரத்தி மிகவும் விசேஷம். முன்பெல்லாம் சுடுகாட்டிலிருந்து கொண்டு வந்த சுடு சாம்பல் பூசப்பட்டது. ஆனால், இப்போது கோயில் விதிகள் மாறி, விபூதி பூசப்படுகிறது. இருந்தாலும் அதையும் காணும்போது பரவசமாகத்தான் இருக்கிறது.
நகரத்தின் சந்தடியிலிருந்து சற்றே விலகி இருக்கிறது மஹாகாளி கோயில். இங்குதான் காளிதாசருக்கு அம்மன் அருள் வழங்கினார். விக்கிரமாதித்தன் அருள் பெற்றதும் இங்குதான். இக்கோயில் மிக எளிமையாக உள்ளது.
சிப்ரா நதிக்கரையில் மற்றுமோர் அதிசயம் சித்த வட்மரம். பல்லாயிரம் வருடங்களாக இம்மரம் இங்குள்ளதாகச் சொல்லப்படுகிறது. பார்வதி தேவி இங்கேதான் தவம் இருந்ததாகவும் சொல்கிறார்கள். ஔரங்கசீப் இந்த மரத்தை வீழ்த்தும்படி ஆணையிட்டும், இந்த மரம் வளர்ந்து தழைத்தோங்கி புனிதத் தன்மையைப் பெற்றது. நகரத்தின் எல்லைகளுக்கு அப்பால் இருப்பது பத்ருஹரி குகைகள். விக்கிரமாதித்தனுடைய சகோதரனான இவனுடைய கதை விசித்திரமானது. இவனுடைய மனைவி வேறு ஒருவனை விரும்பினாள். அவன் ஓர் நடன மாதுவை விரும்பினான். அவளுடைய மனமோ பத்ருஹரியை நாடியது. மனித மனத்தின் ஸ்திரமின்மையையும், துரோகத் தன்மையையும் கண்டு வெறுப்புற்ற பத்ருஹரி துறவறம் மேற்கொண்டான். சிப்ரா நதிக்கரையில் இருக்கும் இக்குகைகள் ரம்மியமாகவும், அமைதியாகவும் உள்ளன.
காலபைரவர் கோயிலில் காணிக்கையாய் அளிக்கப்படுவது மதுபானம். மக்கள் இதை இறைவனுக்குச் செலுத்த பெரும் அளவில் கூடுகின்றனர். பூசாரி மதுவை, பைரவர் வாயில் ஊற்ற, அது உறிஞ்சும் சத்தத்துடன் உள்ளே சென்று மறைகிறது. வளாகத்தில் பாதாள பைரவிக்கும் சன்னிதி உண்டு. அடுத்தது, ஹரசித்தி கோவில். இது சக்தி பீடங்களில் ஒன்றாகும். இரண்டு உயர்ந்த தீப ஸ்தம்பங்கள் நம்மை வரவேற்கின்றன. இரவினில் தீபம் ஏற்றப்பட்டு இவை பிரகாசிக்கின்றன.
கிருஷ்ணரும் சுதாமரும் கல்வி கற்ற சந்தீபனி ஆஸ்ரமம் ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஆஸ்ரமத்தின் அருகில் இருக்கும் ‘அங்பதா’ என்னுமிடத்தில் கிருஷ்ணர் தன் குருவுக்காக வெட்டிய குளம், ‘கோமதி குண்ட்’ என்ற பெயரில் உள்ளது. இங்கு கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் 1-100 எண் குறியீடுகள் சந்தீபருடையது. இங்கே சந்தீபரின் 202வது வம்சத்தவர் அர்ச்சகராக உள்ளார்.
எவரையும் ஆத்மரீதியாகக் கவர வல்லது இங்கு நடைபெறும் மாலை வேளை ஆர்த்தி. ‘ராம் காட்’ என்னு மிடத்தில் சிப்ரா நதிக்கரையில் இந்தப் புண்ணியத் தீர்த்தத்துக்கு ஆராதனை நடக்கிறது. பொழுது சாய்ந்து இருள் கவிழ்கிறது. லய அதிர்வுகள் காற்றை நிரப்புகின்றன. படித்துறை, நித்ய சடங்குகளுக்காக சுத்தம் செய்யப்படுகிறது. பின் குருமார்கள் ஆரத்தி எடுக்கின்றனர்.
பக்தர்கள் ஏற்றிவிட்ட தீபங்கள் நதியைப் பிரகாசிக்கச் செய்கின்றன. எங்கும் வியாபித்திருக்கும் ஆன்மீக ஒளி மனதை நிரப்புகிறது. மந்திர கோஷங்கள் காற்றில் எதிரொலிக்கின்றன. சற்று நேரத்தில் ஜ்வாலைகள் வெளிச்சமாய் மாறுகின்றன. இந்தப் படித்துறைகளில் இருக்கும் மற்ற கோயில்களும் தங்கள் பூஜையைத் தொடங்குகின்றன.
இந்த ஆரத்தி ஹரித்வாரிலும், காசியிலும் நடைபெறுவது போல் இருந்தாலும், அந்த ஆடம்பரம் இல்லை; ஜன நெரிசலும் இல்லை.
உஜ்ஜைனில் இருக்கும் கோயில்கள் எல்லாமே பார்க்கத் தகுந்தவை. பக்திக்காக மட்டுமல்லாமல்; இந்த ஊரினூடே வளைந்து, நெளிந்து செல்லும் சிப்ராவின் அழகை ரசிப்பதற்கும்தான்.

Comments