பாபா கோரக்நாத்

உத்திரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் நகரில் ‘கோரக்நாத் மந்திர்’ அமைந்துள்ளது. வட இந்திய கட்டடக்கலைப் பாணியில் வெள்ளை சலவைக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் வலது புறத்தில் இரண்டு கோபுரமும், இடது புறத்தில் ஒரு கோபுரமும், நடுவில் ஒரு சிறிய கோபுரமும் உயர்ந்து காணப்படுகின்றன.
இக்கோபுரங்களின் உச்சியில் காவி வண்ணக் கொடிகள் பறக்கின்றன. அகண்ட நுழைவாயிலுடன் மண்டபம் அமைந்துள்ளது. கருவறையில் புகழ் பெற்ற இந்துமதத் துறவியும், கண்பத் யோகிகளின் குருவுமான பாபாகோரக்நாத் அவர்களின் திருவுருவச் சிலையும், அவரது சமாதியும் காணப்படுகிறது. இக்கோயிலை விஷ்ணுமந்திர் (விஷ்ணு கோவில்) என்றும் அழைக்கிறார்கள். இக்கோயில் இந்துக்களின் புண்ணிய யாத்திரை ஸ்தலமாகப் போற்றப்படுகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்கிறார்கள்.
இதேபோல் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான பெஷாவர் நகரில் ஒரு கோரக்நாத் கோயில் உள்ளது. 160 வருடங்களுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்த இந்துக்களால் இக்கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் சிறியதுதான். மூன்றடுக்கு கோபுரம் கொண்டது. சன்னிதி கருவறையில் கோரக்நாத் காட்சியளிக்கிறார்.
ஸ்ரீமத் ராமாயணம் இயற்றிய வால்மீகி முனிவரின் சமுதாயத்தினர்தான் இக்கோயிலை இன்றும் பராமரித்து வருகிறார்கள்.
60 ஆண்டுகளாக மூடிக்கிடந்த இக்கோயில் நீதிமன்றத் தீர்ப்பின் படி தற்போது திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் தற்போது இக்கோயில் வழிபாட்டுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

Comments