காவேரிப்பாக்கம் ஸ்ரீசுந்தர வரதர்

து பிரமாண்டமான ஒரு நிலப்பகுதி. அந்தப் பகுதியின் ஒரு மூலையில் தரை முழுக்க ஏகப்பட்ட வறட்டி தட்டி வைத்திருக்கிறார்கள். ‘கட்டுத்தறி’ எனப்படும் மாடு கட்டப் பயன்படுத்தப்படும் மரக் குச்சிகள் சுமார் அறுபதுக்கும் மேல் தரையில் ஏதோ ஒரு வரிசை முறையில் அடித்து இறக்கப்பட்டுள்ளன. பெரும் பாலான மாடுகள் மேய்ச்சலுக்குப் போயிருப்பதால், ஒரு சில மாடுகள் மட்டும் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தன. தினமும் விடியற்காலை நேரத்தில் இங்கு மாடுகளைக் கட்டி வைத்துப் பால் கறந்து, விற்பனை செய்வது மிகவும் ஜரூராக நடக்கிறதாம்!
இந்தப் பகுதியின் நுழைவாயில் அருகே மனிதர் ஒருவர் உட்கார்ந்து வெகு சுவாரஸ்யமாக பீடி புகைத்துக் கொண்டிருந்தார். அந்தப் பகுதியை ஒட்டியிருக்கும் வீடு ஒன்றில் வசிக்கும் நடுவயது மனிதர் ஒருவர், ‘அமைதியான இடம்... கொஞ்ச நேரம் படுத்து அக்கடாவென்று ஓய்வெடுக்கலாம்’ என்று பாய்- தலையணையுடன் இங்கு வந்து, கை-கால் களை நீட்டி ஹாயாகத் தூங்கத் தொடங்கினார். இவை தவிர, வெட்டிப் பேச்சு மற்றும் அரட்டை அடிப்பவர்களும் அவ்வப்போது இந்தப் பகுதியில் ஆங்காங்கே கூடி நின்று நாட்டு நடப்பு மற்றும் அரசியல் விஷயங்களை அலசுகிறார்கள்.
_ இது தமிழ்நாட்டின் எந்தப் பகுதி என்று தெரிந்து கொள்ள உங்களுக்குள் ஆர்வம் தோன்றியிருக்குமே? வாருங்கள்... வேலூர் மாவட்டத்தில், காஞ்சிபுரம்- வேலூர் நெடுஞ்சாலையில் இருக்கிறது காவேரிப்பாக்கம். இந்த ஊரில் அமைந்துள்ள ஸ்ரீசுந்தரவல்லி சமேத ஸ்ரீசுந்தர வரதர் ஆலயப் பகுதியில்தான் மேற்குறிப்பிட்ட அலங்கோலங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன (இதை ஸ்ரீஅழகியராமர் ஆலயம் என்றும் சொல்வார்கள்!). காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆன்மிக அன்பர் ஒருவர் நம்மை அழைத்துச் சென்று கலங்கிய கண்களுடன் இதையெல்லாம் காண்பித்தார்.
ஊர் மக்களும் பக்தர்களும் வந்து பக்திப் பெருக்கோடு குழுமி வழிபடும் இடம் ஆலயம். பக்தர்கள் இப்படி பக்திப் பெருக்குடன் வந்து வழிபடாவிட்டால், வழிபட வழியில்லாவிட்டால் மேற்சொன்ன நிலைதான் நமது ஆலயங்களுக்கு ஏற்படும் போலிருக்கிறது. எனவே, உலகைக் காக்கும் ஆண்டவன் உறை யும் ஆலயங்களைப் பராமரிப்பதில் நாம் கவனம் இன்றி இருக்கக் கூடாது. ‘இது நமது கோயில்... நம் சந்ததியினர் வாழ்வில் எல்லாவித வளங்களைப் பெறவும் வாழ்க்கையில் நிம்மதி பெறவும் நமது முன்னோர் நமக்காகக் கட்டி வைத்துச் சென்ற கோயில்!’ என்ற எண்ணமும் பயத்துடன் கூடிய பக்தியும் வரவேண்டும். நம் முன்னோர் நம்மிடம் தந்துள்ளதை பத்திரமாக நாம் நமது பிந்தைய தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பொறுப்பு உணர்வும் ஆன்மிகத்தில் நாட்டமுள்ள ஒவ்வொரு பக்தரிடமும் இருக்க வேண்டியது அவசியம்! ஆன்மிக பூமியான நமது ஞான மண்ணுக்கே உரித்தான தொன்மையையும் பாரம்பரியத்தையும் இழப்பது என்பது எப்பேர்ப்பட்ட நஷ்டம்?
இந்த ஸ்ரீசுந்தர வரதர் ஆலயம் அமைந்துள்ள காவேரிப்பாக்கத்துக்கு வரலாற்றுப் பெருமைகள் ஏராளமாக உண்டு. இங்குள்ள பிரமாண்டமான ஏரி மிகவும் பிர சித்தி பெற்றது. விரிந்து பரந்து பாசனத்துக்குப் பெருமளவில் பயனளிக்கிறது இந்த ஏரி. காவேரிப் பாக்கம் ஊர்ச் சிறப்புகள், இங்குள்ள கல்வெட்டுகள் போன் றவற்றை ஆராய்ந்து ஒருவர், டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறாராம்!
சரி... ஸ்ரீசுந்தர வரதர் என்று சொல்லப்படும் ஸ்ரீஅழகிய ராமர் ஆலயத்துக்கு வருவோம்.
அகிலம் முழுவதையும் ஆட்சி செய்யும் ஸ்ரீமந் நாராயணனுக்கு எண்ணிலடங்கா கோயில்கள் இன்றளவும் கம்பீரமாக விளங்குகின்றன. புரா ணத் தலங்கள், வரலாற்றுத் தலங்கள் என்று பல இடங்களில் ஸ்ரீமந் நாராயணன் குடிகொண்டு அருளாட்சி புரிந்தாலும், திவ்விய தேசங்கள் எனப்படும் 108 வைணவத் தலங்கள் பெருமை மிக்கவை. அவற்றுள் ஸ்ரீரங்கநாதர் சயன கோலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீரங்கம், ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள் மழை பொழியும் திருமலை, ஸ்ரீவரதராஜ பெருமாள் நின்ற கோலத்தில் ஆட்சி செலுத்தும் காஞ்சிபுரம் ஆகிய மூன்றும் முதல் மூன்று திவ்வியதேச க்ஷேத்திரங்கள் என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றன. இந்த மூன்றையும் தரிசிக்க திருச்சி, திருப்பதி, காஞ்சி என்று செல்ல வேண்டும்.
ஆனால், இந்த மூன்று திருத்தலங்களையும் தரிசித்த பலன் காவேரிப்பாக்கம் வந்தால் கிடைக் கும் என்கிறார்கள்! எப்படி என்கிறீர்களா? காஞ்சிபுரத்தில் இருந்து வேலூரை நோக்கிப் பயணிக்கும்போது காவேரிப்பாக்கம் வருகிறது. இந்த பிரதான சாலையில் இருந்து இடப் பக்கம் பயணித்தால் மூன்று கி.மீ. தொலைவில் இருக்கும் ஊர் திருப்பாற்கடல். இங்குள்ள இரட்டை ஆலயங்களில் ஸ்ரீரங்கநாதரையும், ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாளையும் தரிசிக்கலாம். அதாவது ஸ்ரீரங்கத்தையும், திருமலையையும் தரி சிப்பதாக ஐதீகம். அடுத்து, காவேரிப்பாக்கம் மெயின் சாலைக்கு வலப் பக்கம் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் வருகிறது, ஸ்ரீசுந்தர வரதர் ஆலயம். அதாவது காஞ்சி வரதரை தரிசிப்பதற்குச் சமம். ஆக, இந்த மூன்று பெருமாள்களையும் தரிசித்தால் முதல் மூன்று திவ்விய தேசங்களைத் தரிசித்ததாக ஐதீகம் என்கிறார்கள் வைணவப் பெரியோர்கள்!

சுமார் நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த ஸ்ரீசுந்தரவல்லி சமேத ஸ்ரீசுந்தர வரதர், கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு சக்ரவர்த்திக்காகத் தோன்றியவர் என்று சொல்லப்படுகிறது. காவேரிப்பாக்கத்தில் கோட்டை எனப்படும் பகுதியில் இந்த ஆலயம் ஆரம்பத்தில் இருந்ததாம். மூன்றாம் நந்திவர்மன் காலத்துக்குப் பிறகு மொகலாயர்களின் ஆட்சிக் காலத்தின்போது கோட்டைக்குள் இருந்த இந்த ஆலயம், போதிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இன்றி இருந்தது. மாலிக்காபூரின் படையெடுப்புக்கு அஞ்சி வழிபாட்டுக்குரிய விக்கிரகங் களை பல்வேறு இடங்களில் மறைத்து வைத்தனராம். அப்படி மறைத்து வைக்கப்பட்ட விக்கி ரகங்கள் எங்கெங்கு உள்ளன என்ற தகவலே எவராலும் அறியப் படாமல் பல ஆண்டுகள் இவை மண்ணுக்குள்ளேயே கிடந்தன.
வழிபாடு எதுவும் இல்லாமல் இருந்த ஸ்ரீசுந்தர வரதர் மற்றும் இதர விக்கிரகங்களை ஒரு கட்டத்தில் தேடிக் கண்டுபிடித்து ஊரின் நடுப் பகுதியில், அதாவது தற்போது இருக்கும் இடத்தில் கோயில் அமைக்கப்பட்டது. இங்கு ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு சுமார் 600 வருடங்கள் ஆகின்றன. கோட்டையில் அமைந்த பழைய கோயிலை மூலவர் கோயில் எனவும், ஊரின் நடுவே அமைக்கப்பட்ட புதிய கோயிலை உற்சவர் கோயில் எனவும் அப்போது அழைத்து வந்தனர். சரித்திரம் புகழும் இந்த ஆலயத்துக்கு சோழர்கள் மற்றும் பல்லவர்கள் பெருமளவில் தான தருமங்கள் செய்து வணங்கிச் சென்றிருப்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
ஸ்ரீசுந்தரவல்லி சமேத ஸ்ரீசுந்தர வரத பெருமாள் டிரஸ்ட்டின் பொருளாள ரான தேவநாதன் நம்மிடம் சொன் னார். ‘‘காவேரிப்பாக்கம்தான் என்னோட சொந்த ஊர். இருந்தாலும், ஊரை விட்டு சென்னைக்கு வந்து செட்டில் ஆகி பல வருடங்கள் ஆகின்றன. சுந்தர வரதர் ஆலயம், கவனிப்பார் இன்றியே இருந்தது. அவ்வப்போது ஊருக்குப் போவோம்; வருவோம். அப்போதெல்லாம் ஆலயக் கதவு பூட்டியே இருக்கும். சுமார் எட்டு வருஷத்துக்கு முன் ஒரு நாள் இரவு என் கனவில் இந்த சுந்தர வரதர் வந்தார். ‘ஏம்ப்பா... என்னை மறந்துட்டியே... கவனிக்க மாட்டியா?’னு ஏக்கமா கேட்டு மறைஞ்சுட்டார். கனவு கலைந்ததும், தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்து உட்கார்ந்தேன். ரொம்ப நேரம் எனக்குத் தூக்கமே வரலை. ‘இந்த பெருமாளை எப்படி நாம ஒருத்தர் கவனிக்கறது?’னு அப்பவே யோசனை வர ஆரம்பிச்சுது.
மறு நாள் என் சகோதரர்கள் தங்களுக்கும் இதே போன்ற கனவு வந்ததாகச் சொன்னார்கள். நாங்கள் மெய்சிலிர்த்துப் போனோம். பிறகு, என் குடும்பத்தார் கூடிப் பேசி இந்த டிரஸ்ட்டை ஆரம்பித்தோம். காவேரிப்பாக்கத்தில் இந்த சுந்தர வரதர் ஆலயத்தைத் தலைமுறை தலைமுறையாகக் கவனித்து வரும் ஆர். நரசிம்மன், நிர்வாக அறங்காவலராக இருக்கிறார். ஆலயத்தில் தினமும் விளக்குப் போட ஆரம்பித்தோம். பிறகு, முக்கியமான சில விசேஷங்களை முடிந்த மட்டும் விடாமல் செய்து வருகிறோம்.
எங்களுக்குத் தெரிந்து இந்த சுந்தர வரதருக்குச் சமீபத்திய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் ஆனதாகத் தெரியவில்லை. எனவே, ஆலயத்துக்குத் திருப்பணி வேலைகளைத் துவக்கலாம் என்று இறங்கினோம். நான்கு வருடங்களுக்கு முன்பு பாலாலயம் செய்தோம். ஆனால், பணிகள் முடிவுறாமல் பணப் பிரச்னையால் இழுத்துக் கொண்டே போனது. பாலாலயம் செய்துவிட்டு ரொம்ப நாட்களுக்குக் கோயிலை அப்படியே போடக் கூடாது என்று பெரியோர்கள் பலர் சொன்னார்கள். எனவே, ‘ஸ்ரீஅழகிய ராமர் மற்றும் ஆழ்வார்கள் சந்நிதிக்கு மட்டும் முதலில் கும்பாபிஷேகத்தை நடத்தி விடலாம். அதன் பிறகு, மொத்த ஆலயத்துக்கும் கும்பாபிஷேகம் செய்யலாம்’ என்று ஊரார் கூடி முடிவெடுத்தோம். வருகிற ஜூலை 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீஅழகிய ராமர், ஸ்ரீஆழ்வார்கள் மற்றும் ஸ்ரீஆச்சார்யார்கள் சந்நிதிகளுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதை அடுத்துப் பிற பணிகள் தொடரும்!’’ என்றார் தேவநாதன்.
இனி, காவேரிப்பாக்கம் ஸ்ரீசுந்தர வரதர் ஆலயத்தைத் தரிசிப்போமா?
கிழக்கு நோக்கிய ராஜ கோபுரம். இதில், அடிப் பீடம் மட்டும் கருங்கல் கட்டுமானம். மேலே செங்கல் கட்டுமானம். கோபுரத்தில் சுதை உருவங்களும் அமைப்பும் ஏகத்துக்கும் சிதிலமடைந்து காணப்படுகிறது. மூன்று நிலைகள். ஐந்து கலசங்கள். நுழைவாயிலில் இரண்டு தூண்களுடன் இரு பக்கமும் சிறு மண்டபம். ஒருவர் தாராளமாக உட்காரலாம்; இருவர் கஷ்டப்பட்டு உட்காரலாம்.
ஆலயத்துக்கென பிரதான நுழைவாயில் கதவுகளும் சுற்றுமதிலும் இல்லாததால் சமூக விரோத சக்திகள் அவ்வப்போது கோயிலுக்குள் நுழைந்து விடுகின்றனராம். இதனால் ஆலயத்தில் இருந்து விக்கிரகங்கள் சில காணாமல் போனதும் நிகழ்ந்திருக்கிறது.
உள்ளே நுழைகிறோம். இடப் பக்கம் சிதிலமடைந்த மடப்பள்ளி. ஒரு காலத்தில் பெருமாளுக்குப் பல வித அன்னங்களை நைவேத்தியம் செய்யப் பயன்படுத்தப்பட்ட மடப்பள்ளி, இன்று வெறும் கற்குவியலாகக் காணப்படுகிறது. வலப்பக்கம் ஓங்கி உயர்ந்த ஒரு வேப்ப மரம். இந்த வேப்ப மரத்திலேயே சுமார் இருபதடி உயரத்தில் சிறிய அரசங் கன்று. வேப்ப மரத்தில் அதுவும் இவ்வளவு உயரத்தில் அரசங் கன்று வளர்வது எப்படி? ‘இது பெருமாளின் விநோதம்’ என்கிறார்கள் ஊரார். இந்த மரத்தின் கீழே ஸ்ரீஅனுக்கிரக ஆஞ்சநேயர். வெண்ணெய் சாற்றி, நெய் விளக்கேற்றி வழிபடுகிறார்கள் குழந்தைகள்.
இதை அடுத்து திருக்குளம். கருங்கல் படிக்கட்டுகளுடன் கூடிய அழகான அமைப்பு. முன்னொரு காலத்தில் அற்புதமாக இருந் திருக்க வேண்டும். தற்போது புல் பூண்டுகளுடனும், குப்பை கூளங்களுடனும் தண்ணீர் இன்றி வெறுமை யாகக் காட்சி தருகிறது. இந்தக் குளத்துக்குள் இருந்து அவ்வப்போது சில கல் விக்கிரகங்களை எடுத்துள் ளார்கள். இதனால் முன் காலத்தில் ஆலயத்தில் புகழ் பெற்று விளங்கிய மேலும் சில விக்கிரகங்கள் குளத்தினுள் புதைந்திருக்கலாம் என்பது ஊரார் கருத்து.
நேராக நடந்தால் தீபஸ்தம்பம். பலிபீடம். கொடிமரம். இதைத் தாண்டி ஸ்ரீசுந்தர வரதரைப் பார்த்துக் கைகூப்பி இருக்கும் ஸ்ரீகருடாழ்வார். இவரை ‘காருண்ய கருடாழ்வார்’ என்கிறார்கள். நாச்சியார்கோவிலில் கல் கருடனுக்கு ஒரு சிறப்பு இருப்பதைப் போல இவருக்கு வேறு ஒரு சிறப்பு! தன் இடக் காலை மடித்து ஊன்றி, வலது முழங்காலை மடித்து முட்டி தரையில் பட... காட்சி தரும் இந்த கருடாழ்வார் எந்த நேரமும் பறக்கத் தயா ராக இருப்பது போன்ற தோற்றம், பக்தர்களைப் பரவசப்பட வைக்கும் ஒன்று. இவரது உடலில், ஏராளமான நாகங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சிலை சுமார் ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முற்பட்டது என்கிறார்கள்.
தன்னை நாடி வந்து, உள்ளார்ந்த பக்தியுடன் அன்பர்கள் வைக்கும் கோரிக்கைகளை கச்சிதமாக நிறைவேற்றுவாராம் இந்த கருடாழ்வார். நிரந்தர வேலை கிடைக்காமல் இருப்பது மற்றும் திருமணத் தடை ஆகியவற்றுக்குப் பரிகாரமாக இந்த கருடாழ்வாருக்கு வளர்பிறை பஞ்சமியில் தேனால் அபிஷேகம் செய்து, தயிர் அன்னம் நைவேத்தியம் செய்தால் குறைகள் நிவர்த்தி ஆகுமாம்.
இதை அடுத்து, வருவது பதினாறு கால் மண்டபம். இங்குள்ள கருங்கல் தூண்களில் ஏராளமான சிற்பங்கள் காணப்படுகின்றன. பிள்ளையார், சிவலிங்கம், ஆஞ்சநேயர், சங்கு, சிங்கம் மேல் அமர்ந்த துர்க்கை என்று பல உருவங்கள் அழகாகக் காட்சி அளிக்கின்றன. மூலவர் கருவறை நோக்கி முன்னே நடந்தால் ஒரு இரும்பு கேட். அடுத்து, ஆறு தூண்கள் தாங்கும் மகா மண்டபம். பிரமாதமான அமைப்பு. இந்த மகா மண்டபத்தில் அற்புத மான ஸ்ரீராமர் கல் விக்கிரகம் ஒன்று காணப் படுகிறது. அதில் ஸ்ரீராமர் கையில் வில்லை மட்டும் ஏந்தி இருக்கிறார். ஆனால், பின்புறம் அம்பறாத்தூணி காணப்படவில்லை. முகத்தில் புன்னகை அரும்பி உள்ளது. கண்களில் ஓர் அலட்சிய பாவம் தெரிகிறது. இப்படி ஒரு கோலத்தில் ஸ்ரீராமர் காட்சி அளிப்பது ஏன்?
சாந்தசொரூபியான ஸ்ரீராமரைப் பார்த்து ஒரு முறை அவரது வீரத்தைப் பற்றி ஏதோ கேலி செய்தாளாம் சீதாதேவி. பின்னாளில் கரன், தூஷணன் உள்ளிட்ட பதினாலாயிரம் ராட்சதர்களை தனியரு ஆளாக இருந்து எதிர்கொண்டு போரிட்டு அழித்தார் ஸ்ரீராமர். அந்த வதம் முடிந்து வெற்றிக் களிப்புடன் தனது இருப்பிடம் திரும்பினார் ஸ்ரீராமர். அப்போது குடிலின் வாயிலில் நின்றிருந்த சீதாதேவி, ஸ்ரீராமரின் வீர பராக்கிரமம் கேள்விப்பட்டு மிளிரும் புன்னகையுடன் அவரை எதிர் கொண்டாளாம். ‘என் கணவர் அற்புதமான வீரர்தான்!’ என்று சீதையின் அந்தப் பார்வை சொல்லாமல் சொல்லிற்று. அதற்கு பதிலாக ஸ்ரீராமர், சீதாதேவியைப் பார்த்த அலட்சிய பாவம்தான் இந்த ஸ்ரீராமர் கல் விக்கிரகத்தில் காணப்படுகிறதாம். மனமாரத் தொழ வேண்டிய அற்புத விக்கிரகம்.
இதை அடுத்து அர்த்த மண்டபம். நேரே மூலவர் - ஸ்ரீசுந்தர வரதர். சங்கு, சக்கரம், அபய-வரத ஹஸ்தம் தாங்கிய நான்கு கைகள். சுமார் ஏழடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறார் பெருமாள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சகல வளங்களையும் வழங்கி, காத்து ரட்சிப்பதற்காக நின்ற திருக்கோலத்தில் இருந்து அருள்பாலிக்கிறார். பெருமாளின் விமானம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தற்போது வெள்ளிக்கிழமை தோறும் திருமஞ்சனம் நடந்து வருகிறது.
வெளியே வருகிறோம். ஆலயத்துக் கென இருப்பது ஒரே ஒரு விஸ்தார மான பிராகாரம். முதலில் ஸ்ரீஅழகிய ராமர் சந்நிதி. வில்லேந்திய ராமர், லட்சு மணருடனும், சீதாபிராட்டியாருடனும், ஸ்ரீஆஞ்சநேயருடனும் காட்சி தருகிறார். இதற்கு வருகிற ஜூலை 2-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதை அடுத்து தாயார் சந்நிதி. எட்டுத் தூண்கள் தாங்கும் அழகிய மண்டபம். இங்குள்ள ஒரு தூண், சோழர் காலத்தைச் சேர்ந்தது என்கிறார்கள். தாயார் பெயர் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார். இரண்டு கைகளி லும் தாமரை மலர் ஏந்திக் காட்சி தருகிறார். இந்த சந்நிதிக்கு விமானம் கிடையாது.
மனமுருகிப் பிரார்த்தனை செய்வோருக்கு வேண்டும் வரம் அளிக்கும் தாயார் இவர். திருமணமாகாத பெண்கள், ஸ்ரீசுந்தரவல்லித் தாயாரிடம் வந்து பிரார்த்தித்தால், திரு மணம் கை கூடுவதாக ஆலய நிர்வாக அறங்காவலரும் பட்டாச்சார்யருமான ஆர். நரசிம்மன் சொன்னார். விசேஷ தினங்களில் உள் புறப்பாடு மட்டும் உண்டு. ஊஞ்சல் உற்சவம் உள்ளேயே நடைபெறுமாம்.
அடுத்து, ஆண்டாள் சந்நிதி. தனியாக அமைந்துள்ளது. தொடர்ந்து நடந்தால் ஆழ்வார்கள் சந்நிதி மற்றும் ஸ்ரீஆச்சார்யர்கள் சந்நிதி. இவற்றுக்கும் ஜூலை 2-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
பெருமாள் பாதம் என்கிற சிறு சந்நிதி. பெருமாளின் பாதத்துக்குப் பக்தர்கள் பூ வைத்து வணங்குகிறார்கள்.ஸ்தல விருட்சம்-மகிழ மரம். ஆலயத்துக்கென உற்சவர் விக்கிரகங்களும் உண்டு. ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீவரதர், சுந்தரவல்லித் தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள், ஸ்ரீராமர்-சீதையுடன் லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், தவழும் நவநீத கிருஷ்ணன் ஆகிய உற்சவர்களும் வழிபடப்படுகின்றனர். இந்த ஆலயத்துக்குப் பல மடாதிபதிகள் வந்து சென்றுள்ளனர். காஞ்சி மகா பெரியவர், ஸ்ரீஅஹோபில மடம் 42-ஆம் பட்டம் ஸ்ரீஇஞ்சிமேடு அழகிய சிங்கரும், 44-45-ஆம் பட்ட ஸ்ரீஅழகிய சிங்கர்களும், ஸ்ரீரங்கம் பெரியாஸ்ரமம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் உட்பட பலரும் வந்து வணங்கிச் சென்றுள்ளனர்.
சுற்றுச்சுவர், ராஜகோபுரம், திருக்குளம், கொடிமரம், மடப்பள்ளி, ஏனைய சந்நிதிகள் உட்பட ஆலயம் முழுமைக்கும் திருப்பணி வேலைகள் நடைபெற வேண்டி உள்ளது. அன்பான உள்ளங்களின் ஆதரவு, ஸ்ரீசுந்தர வரதரின் புதுப் பொலிவுக்குத் தேவை. இதற்கெல்லாம் முதல் கட்டமாக ஜூலை 2-ஆம் தேதி நடைபெற இருக்கும் ஸ்ரீஅழகிய ராமர்- ஆழ்வார்கள்- ஆச்சார்யர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு ஸ்ரீமந் நாராயணின் அருளைப் பெறுவோம்!
எப்படிப் போவது?
செ ன்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து சுமார் நூறு கி.மீ. தொலைவில் இருக்கிறது காவேரிப்பாக்கம். காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரம். வேலுரில் இருந்து சுமார் 40 கி.மீ. தூரம். இங்கு பிரதான சாலையில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் ஸ்ரீசுந்தர வரதர் ஆலயம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ஆற்காடு, வேலூர், சித்தூர் மற்றும் பெங்களூர் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் நின்று செல்லும். பஸ் நிலையத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் பஸ்ஸில் ஏறினால் அடுத்த நிறுத்தம். ஆட்டோவிலும் செல்லலாம்.
ஆலயத் தொடர்பு மற்றும் விவரங்களுக்கு:

ஆர். நரசிம்மன் நிர்வாக அறங்காவலர்,
ஸ்ரீசுந்தரவல்லி சமேத
ஸ்ரீசுந்தர வரத பெருமாள் டிரஸ்ட்,
புது எண்: 4 ஸ்ரீஅழகிய ராமர் கோயில் வீதி,
காவேரிப்பாக்கம் 632 508,
அரக்கோணம் வட்டம்,
வேலூர் மாவட்டம்.
போன்: 04177 - 254522
எல். தேவநாதன்
பொருளாளர்,
ஸ்ரீசுந்தரவல்லி சமேத
ஸ்ரீசுந்தர வரத பெருமாள் டிரஸ்ட்
4/8, கிழக்குக் குளக்கரைத் தெரு
திருவல்லிக்கேணி
சென்னை 600 005
போன்: 044 - 28442393
மொபைல்: 94447 05657
ஸ்ரீநிவாஸன்
செயலாளர்
ஸ்ரீசுந்தரவல்லி சமேத
ஸ்ரீசுந்தர வரத பெருமாள் டிரஸ்ட்
50/2, தேரடித் தெரு,
திருவல்லிக்கேணி
சென்னை 600 005
போன்: 044 2844 4858
மொபைல்: 94444 58179

Comments