மழலை இன்பம் தரும் மளூர் நவநீத கிருஷ்ணன்

ர்நாடக மாநிலத்தில் பெங்களூர்- மைசூர் நெடுஞ்சாலையில் உள்ளது தொட்டமளூர். இங்குள்ள திருக்கோயிலில் நவநீத கிருஷ் ணன் தவழும் நிலையில் குடிகொண்டிருக்கும் சந்நிதி தனியாக உள்ளது. இப்படிப்பட்ட அமைப்பில் வேறு எங்கும் விக்கிரகம் இல்லை என்கின்றனர். ‘குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டினால், குழந்தை பாக்கியம் நிச்சயம்!’ என்பது பக்தர்களது நம்பிக்கை.
இந்தத் திருக்கோயிலைப் பற்றி ஒரு நண்பர் மூலமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அமெரிக்கா வில் இருக்கும் என் சிறிய பெண்ணுக்குக் கல்யாண மாகி இரண்டரை வருடமாகியும் குழந்தைப் பேறு இல்லையே என்று கவலையாக இருந்தது. எனவே, தொட்டமளூர் நவநீத கிருஷ்ணனுக்கு வேண்டிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். அந்தக் கோயிலுக்கு உடனே செல்ல முடியாததால், என் வீட்டில் உள்ள கிருஷ்ணர் விக்கிரகத்துக்கு முன்பாக நின்று கொண்டு, ஐந்து ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து கிருஷ்ணர் பாதத்தில் வைத்து ஒரு காலைப் பொழுதில், ‘தொட்டமளூர் ஸ்ரீநவநீத கிருஷ்ணா... உனது அருள் என் மகளுக்கு வேண்டும்!’ என மனமுருக வேண்டிக் கொண்டேன்.
அதன் பின் நடந்ததுதான் ஆச்சரியம். அன்று இரவு சுமார் எட்டு மணிக்கு அமெரிக்காவில் உள்ள என் பெண்ணிடமிருந்து போன் வந்தது. ‘நாள் தள்ளிப் போனதால் செக்கப்புக்கு டாக்டரிடம் போயிருந்தேன். மருத்துவப் பரிசோதனையில் நான் கருவுற்றிருப்பதை டாக்டர் உறுதி செய்திருக்கிறார்’ என்று மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்தாள். இந்தச் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் சந்தோஷத்தில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
சட்டென்று, தொட்டமளூர் நவநீத கிருஷ்ணனுக்கு காலையில் நான் முடிந்து வைத்தது நினைவுக்கு வந்தது. பூஜையறைக்கு ஓடினேன். இவ்வளவு சீக்கிரமாக எனக்கு அருள் செய்த நவநீத கிருஷ்ணனின் கடாட்சத்தை நினைத்து நன்றி கூறினேன்.
என் மகளுக்கு நல்லபடியாக ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் மூன்றாம் வயதில் முடி இறக்குவதற்கு இந்தியா வந்திருந்தாள் என் மகள். அப்போது எல்லோரும் தொட்டமளூர் சென்று நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தி, அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்துவிட்டு வந்தோம்.
(சென்னை - மைசூர் ரயிலில் சென்று சென்னபட்னா ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆட்டோவில் பயணம் செய்தால், அரை மணி நேரத்தில் கோயில் வாசலில் இறங்கலாம்.)

Comments