வாலகுருசாமி கதை

நான் பாளையங்கோட்டையில் பிறந்து வளர்ந்து படித்தவன். சென்னையில்- ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவன். தற்போது அம்பத்தூரில் வசித்து வருகிறேன். எனக்கும் சீவலப்பேரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அங்குள்ள அருள்மிகு விஷ்ணு துர்க்கை ஆலயத்தில் சிவ பெருமானுக்குக் கோயில் ஒன்று கட்டினேன். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதி அதற்குக் கும்பாபிஷேகமும் நடந்தது. அந்த ஆலயம், ஸ்ரீதியானேஸ்வரர் ஆலயம் என்று வழங்கப்படுகிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் என் தந்தையார் ஆதிநாராயணப் பிள்ளை என்னிடம் கூறிய அனுபவம் ஒன்றை இங்கு குறிப் பிட விரும்புகிறேன். எங்கள் முன்னோரது குடும்பம் பாளையங்கோட்டை அருள் மிகு திரிபுராந்தீஸ்வரர் கோயில் தேரடிக் குக் கீழ்ப்புறம் உள்ள வீதியில் இருந்தது. என் தந்தைக்கு அப்போது பதினைந்து வயது (வருடம் 1908). ஒரு நாள் மாலை வேளையில் சாமியார் ஒருவர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டி னார். கதவைத் திறந்த என் தந்தையிடம், ‘எனக்குப் பசியாக இருக்கிறது. ஏதாவது உணவு தாருங்கள்!’ என்று கேட்டார். உடனே என் பாட்டி, ‘மாலையில் விளக்கு வைத்தபின் பிச்சை போட மாட்டேன்!’ என்று மறுத்து விட்டார்.
பசியோடு வந்த ஒரு சாமியாருக்கு ‘உணவு இல்லை’ என்று சொன்னதை என் தந்தையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகவே, அவர் தனக்கு உரிய சாப்பாட்டை சாமியாருக்கு அளித்தார். சாமியாரும் மகிழ்ச்சியோடு சாப்பிட்டார். அன்று இரவு அவர் எங்கள் வீட்டிலேயே தங்கினார். அந்த சாமியாரின் பெயர் வாலகுருநாதர்.
மறு நாள் பொழுது விடிந்ததும் சாமியார், என் தந்தையை நடுக்காடு உடையார் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். கிணற்றில் நீர் இறைத்துக் குளித்துவிட்டு, சாமியாரும் குளிக்க உதவினார். பின்பு இருவரும் ஈர வஸ்திரத்துடன் அந்தக் கோயிலுக்குச் சென்றார்கள்.
அங்கிருந்த அர்ச்சகர் அவர்களைக் கோயிலுக்குள் வரக் கூடாது என்று தடுத் தார். உடனே சாமியார் கோபத்தில், ‘நீ நாளைக்குக் கோயிலுக்குள் எப்படி நுழைகிறாய் என்று பார்க்கலாம்!’ என்று சொன்னார். பிறகு இருவரும் வீடு திரும்பினர். மறு நாள் காலையில் அந்த அர்ச்சகர் எங்கள் வீடு தேடி வந்து, ‘நான் சாமியாரைப் பார்க்க வேண்டும்’ என்றார். அப்போது தோட்டப் பகுதியில் நின்றிருந்த சாமியார், அர்ச்சகரைப் பார்த்து, ‘என்னடா, சங்கரன் இருக்கிறானா?’ என்று கேட்டார். சட்டென்று சாமியார் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட அர்ச்சகர், ‘கோயிலைத் திறக்க முடியவில்லை!’ என்றார்.
அந்தக் காலத்தில் நடுக்காடு உடையார் கோயிலைச் சுற்றி வனமாக இருந்ததால், அங்கு நாகங்கள் நிறைய உண்டு. அன்றைக்கு இரண்டு கருநாகங்கள் கோயில் வாசலில் படம் எடுத்து நின்று கொண்டு அர்ச்ச கரை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனவாம். நெல்லை மாவட்டத்தில் நாகங்களை ‘சங்கரன்’ என்று மரியாதையாகச் சொல்வார்கள்.
ஒரு விநாடி கண் களை மூடித் திறந்த சாமியார், ‘சங்கரன் போய்விட்டான். நீ போய் கோயிலைத் திற!’ என்றார். அதன்பின் அர்ச்சகர், என் தந்தையையும், சாமியாரையையும் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். வாலகுருசாமி என் தந்தையுடன் சில நாட்கள் தங்கி இருந்தார். அப்போது அவர் தனது அனுபவங்களை என் தந்தையிடம் விவரித்திருக் கிறார். தந்தையார் அதில் சிலவற்றை என்னிடம் கூறியிருக்கிறார்.
இந்த வாலகுருசாமி, நாகர்கோவில் அருகில் உள்ள களக்காடு கிராமத்தில் பிறந்தவர். கல்தச்சர் இனத்தவர். சிலை வடிப்பவர். சிறு வயதில் ஒரு முறை தன் வீட்டில் வாலகுருசாமி கல் உடைத்துக் கொண்டு இருந்தபோது, அவர் அண்ணன் எங்கோ கிளம்பினார். ஐந்து வயதுச் சிறுவனான வாலகுரு தன் தாயிடம், ‘அண்ணனை வெளியே போக வேண்டாம் என்று சொல்லு!’ என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் அண்ணன் புறப்பட்டார். அன்று மாலை நேரத்தில் அண்ணனின் உடல் தான் வீட்டுக்கு வந்தது. இதைப் பார்த்த தாய், ‘நீ சொன்னதால்தான் உன் அண்ணனுக்கு உயிர் பிரிந்தது!’ என்று கோபப்பட்டு வாலகுருவை வீட்டில் இருந்து விரட்டி விட்டார்.
வாலகுரு, களக்காட்டின் அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்முனையில் உள்ள மருத்துவா மலை சென்று மூலிகைகளைச் சாப்பிட்டு தியானம் செய்தவாறே வாழ்க்கை நடத்தினார். இப்படி சாமியாரான வாலகுரு ஒரு கட்டத்தில் மலையை விட்டு இறங்கி ஊர் ஊராக அலைந்து திரிந்தார். ஒரு தடவை எட்டயபுரம் ஜமீனில் உள்ள ஒரு முக்கியத் தெரு வழியாக நடந்து வந்தார். அப்போது எட்டயபுரம் ஜமீன்தார் குதிரை மீது அமர்ந்து பரிவாரங்கள் சூழ வந்து கொண்டிருந்தார். அதைக் கவனித்த சாமியார், ‘இந்தக் குதிரை நாளைக்குச் சாகப் போகிறது. இதற்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?’ என்று அருகில் இருந்தவரிடம் கூறினார். இதைக் கேட்ட ஜமீன் சேவகர், விஷயத்தை ஜமீன்தாரிடம் சொன்னார். ஆத்திரமடைந்த ஜமீன்தார், சாமியாரை நையப் புடைத்து, சிறையிலடைத்தார். ‘இந்தக் குதிரை எப்போது சாகும்?’ என்று அலட்சியமாகக் கேட்டார்.
‘நாளை மதியம் 12 மணிக்கு விஷம் தீண்டி குதிரை சாகும். பொறுத்திருந்து பார்’ என்று சொன்னார் சாமியார். இதைக் கேட்டுப் பதறிய ஜமீன்தார், சிறையை விட்டு வெளியே வந்தார். எப்பாடு பட்டாவது குதிரையைக் காப்பாற்ற முடி வெடுத்தார். மறு நாள் வெட்டவெளி மைதானத்தில் சுற்றிலும் வேலி அமைத்து பொதுமக்கள் பார்வையில் குதிரையை நிறுத்தினார் ஜமீன்தார். அவரும் குதிரைக்கு அருகிலேயே நின்றி ருந்தார்.
பொதுமக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கருடன் ஒன்று உயரே பறந்து வந்து, தன் வாயில் வைத்திருந்த நாகத்தைக் கீழே போட்டது. ஏற்கெனவே காயம் பட்டு வலியில் நொந்திருந்த நாகம், குதிரையை ஆக்ரோஷமாகத் தீண்டியது.
அடுத்த விநாடியே குதிரை இறந்து போனது. ஜமீன்தார் உடனே சிறைக்குச் சென்று சாமியார் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். அப்போது சாமியார், ‘குதிரை சாக வேண்டிய நேரத்தில் செத் தது. உன்னால் அடிபட வேண்டிய நேரத்தில் நான் அடிபட்டேன்! எல்லாம் விதிதான்’ என்று ஜமீன்தாரி டம் சொல்லிவிட்டு வெளியேறினார்.
அந்த சாமியாரின் பெயரான வாலகுருநாதர் என்பதுடன், என் சிறிய தாத்தாவின் பெயரான ரங்க சாமி என்பதையும் சேர்த்து எனக்கு ‘ரங்கநாதன்’ என்று பெயர் வைத்ததாக என் தந்தை சொல்லி இருக்கிறார்.
மேற்சொன்ன சாமியார் உணவில் உப்பு, புளி, மிளகாய் எதுவும் சேர்க்க மாட்டார். இவர் தனக் கென்று குற்றால மலை அருகில் ஒரு சமாதி கட்டி அங்கே சமாதியாக வேண்டும் என்று நினைத்தார். ஆனால், விதியின் வழி யாருக்குத் தெரியும்?
வயதான காலத்தில்- சமாதியில் அடங்குவதற்கு முன் தனது சொந்த ஊரான களக்காட்டுக்குச் சென்றார் வாலகுருநாதர். அவரது சொந்த வீட்டில் அவரின் மூத்த சகோதரி, ‘சிறு வயதில் வீட்டை விட்டுச் சென்ற தம்பி வந்திருக்கானே!’ என்கிற சந்தோஷத்தில் மோர் சாதத்தில் உப்பிட்டு உணவு அளித்தார்.
அவர் உப்பு சாப்பிட மாட்டார் என்பது மூத்த சகோதரிக்குத் தெரியாது. உணவில் உப்பு கலந்திருப்பதை சாமியாரும் உணரவில்லை.
அவர், தன் வாயில் முதல் உருண்டை மோர் சாதத்தைப் போட்டதும் வாயில் இருந்து மூன்று தீச்சுடர்கள் வெளிவந்தன. அவர் அப்படியே உட்கார்ந்து விட்டார். சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது.
பிறருக்கு வரும் பொருள் உரைக்கத் தெரிந்த அந்த சாமியாருக்கு தனது முடிவைப் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.
தங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த வாலகுரு சாமியும் நான் கூறும் சாமியாரும் ஒரே நபர்தானா என்று எனக்குத் தெரியவில்லை. எங்கள் குடும்பத்தில் வாலகுருநாதர் என்ற சாமியார் இடம் பெற்றிருந்ததால், இந்தத் தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

Comments