வீரபத்ரேஸ்வரர்

பஞ்ச கே்ஷத்ரம்’ எனப்படும் ஐந்து சிவாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுவது, ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பட்டிசீமாவில் உள்ள ஸ்ரீவீரபத்ரேஸ்வரர் திருக்கோயில். இங்கு, அகண்ட கோதாவரி நதிக்கு நடுவில் ஒரு சிறிய குன்றின் மேல், லிங்க ரூபத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் வீரபத்ர சுவாமி.
ஈசனுக்கு அழைப்பில்லாமல் தட்சன் செத யாகத்துக்குச் சென்ற பார்வதியையும் தட்சன் அவமதித்தான். அதனால் அக்னியில் வீழ்ந்தாள் பார்வதி. இதனால் கோபமுற்ற சிவன், தன் விரித்த சடையில் இருந்து ஒரு கேசத்தைப் பிடுங்கி தம் அம்சமாக வீரபத்ரரை உருவாக்கினார். வணங்கி நின்ற வீரபத்ரரிடம் ‘பட்டாயுதம்’ என்ற வாளைக் கொடுத்து, தட்சனின் யாகத்தையும், அவனையும் அழித்து வருமாறு ஆணையிட்டார்.
யாகத்தை அழித்து, தட்சனின் தலையையும் கொய்து விட்டார் வீரபத்ரர். ‘தொடங்கிய யாகத்தை முடிக்காமல் விடக் கூடாது’ என தேவர்கள் இவரிடம் வேண்ட, வெட்டுப்பட்ட ஆட்டின் தலையை தட்சனுக்குப் பொருத்தி யாகத்தை முடித்து வைத்து அவனுக்கு மோட்சம் கிடைக்கவும் செய்தார். தட்சனின் தலையைக் கொய்து அந்தப் பட்டாயுதம் விழுந்த இடமே ‘பட்டாசலகே்ஷத்ரம்’ என அழைக்கப்பட்டு, பின்பு மருவி ‘பட்டிசீமா’ ஆயிற்று.
தட்சனை அழித்தும், கோபம் குறையாமல் வீரபத்ரர் ஆடிய பிரளய தாண்டவத்தால் சப்த லோகங்களும் நடுங்கின. தேவர்கள் அகத்திய முனிவரிடம் வேண்ட, அவர் வீரபத்ரரை இறுக அணைத்து, கோபத்தைத் தணித்து, இங்குள்ள தேவகூடபர்வத மலையில் அருளும்படி வேண்ட, வீரபத்ரரும் சுயம்பு லிங்கமாக அமர்ந்தார்.
வீரபத்ரர் ஆலயம் செல்வதற்கு கோதாவரி நதியை படகில் கடந்துதான் செல்ல வேண்டும். படகுத் துறையில் இருந்து காண, ஆஞ்சநேயர் நெடிதுயர்ந்து காட்சி தருகிறார். வெண்ணிற கோபுரத்துடன் கூடிய ஆலயத்துக்குச் சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இது பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ராஜ மகேந்திரவர்மனால் நிர்மாணிக்கப்பட்ட கோயில். கர்ப்பக்கிரகத்தில் ஆவுடையுடன்கூடிய சிவலிங்கத்தைக் காணும்போதே வீரபத்ரரின் தாண்டவம் நம் நினைவுக்கு வருகிறது. நித்தமும் ஆறுகால பூஜை நடைபெறும் இவருக்கு ஸ்ரீருத்ரம் சொல்லி பக்தர்கள் அபிஷேகம் செய்கிறார்கள்.
இங்குள்ள அனைத்து சன்னிதிகளிலும் தரிசனத்துக்காக வருவோர் அனைவரின் கைகளிலும் பூவைக் கொடுத்து, அவர்களின் பெயர், கோத்திரம், நட்சத்திரம் கேட்டு, இறைவனின் பெயர் சொல்லி அர்ச்சனை செய்து விபூதி பிரசாதம் தருகிறார்கள். அர்ச்சனைத் தட்டு தருபவர்களுக்கு மட்டும் அவர்களின் பெயருக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இது இக் கோயிலின் வியக்கத்தக்க சிறப்பு.
சுற்றுப்பிராகாரத்தில் பத்ரகாளி தேவியின் சன்னிதி உள்ளது. இங்குள்ள அனிஸ்த்ரீ, புனிஸ்த்ரீ என்ற பெண் தெய்வங்களுக்கு குங்கும அர்ச்சனையும், புஷ்ப அலங்காரமும் செய்தால் புத்ரபேறு நிச்சம் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் நவராத்திரி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அலங்காரம் உண்டு. தரிசனம் செய்யும் பெண்களுக்கு அம்மனின் பிரசாதமாக கண்ணாடி வளையல்கள் தருகிறார்கள்.
லக்ஷ்மி கணபதி, குமாரசுவாமி, சுப்பிரமணிய சுவாமி, மஹிஷாசுரமர்த்தினி, கனகதுர்கா, தாண்டவ வீரபத்திரர், சரஸ்வதி ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. கோயிலின் சுற்றுச் சுவர்களில் பல அழகிய நடன வடிவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
மன்னன் ராஜ மகேந்திரவர்மனின் பெயராலேயே அன்று ‘ராஜமகேந்திரவரம்’ என்று அழைக்கப்பட்டு பின் அதுவே ‘ராஜமுந்திரி’ ஆயிற்றாம். ‘தட்சிண காசி’ என்றும் அழைக்கப்படும் இத்தலம் ஸ்கந்த புராணத்தில் கயிலாயமாகவும், வைகுண்டமாகவும் சிறப்பித்துப் போற்றப்படுகிறது.
வீரபத்ரர் ஆலயத்துடனே அமைந்துள்ளது ஸ்ரீபவ நாராயணர் ஆலயம். இக்கோயிலிலிருந்து சில மைல் தொலைவிலேயே கஜேந்திர மோட்சம் நடைபெற்றதாகவும், அந்நிகழ்வுக்குப் பிறகு பெருமாளே இங்கு காட்சி தருவதாகவும் கூறுகிறார்கள். பூதேவி, நீளாதேவி சமேதராகக் காட்சி தரும் இத்தல பெருமாளின் கைகளில் சங்கும் சக்கரமும் இடம் மாறி உள்ளன. கஜேந்திரனைக் காக்கும் அவசரத்தில் பெருமான் சென்றதால் அவை இடம் மாறி விட்டதாகக் கூறுகிறார்கள்.
செல்லும் வழி: ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி யிலிருந்து 40 கி.மீ.. பேருந்து, டாக்சி வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 1 வரை. மாலை 4 மணி முதல் 7 வரை.
தொடர்புக்கு: 088 5627 8424

 

Comments