கீதையின் பாதையில்...

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இல்லறத்தில் வாழ்கின்ற ஞானியைப் புகழ்ந்தார். பிறகு, துறவறத்தில் வாழ்கின்ற ஞானியைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:
‘ஆசையற்றவர், உடைமைப் பொருட்களை விட்டவர், உடலைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அளவு மட்டும் செயல்புரிபவர்’- என அவரது இலக்கணங்களைக் கூறி, இவ்வாறு எதனாலும் கவரப்படாத மெய்யறிவாளர் பாபத்தை அடைவதில்லை" என்றார்.
‘துறவறத்தில் வாழ்கின்ற ஞானி தேவைகள் அற்றவர், கிடைத்தவற்றில் மகிழ்பவர், இருமைகளைக் கடந்தவர், பொறாமையற்றவர், வெற்றி தோல்வியில் சமமாக இருப்பவர். அத்தகைய ஞானி சிறிதளவு செயல்புரிந்தாலும் அதில் கட்டுண்பதில்லை’ என்கிறார் பகவான். ஞானி எதற்கும் ஆசைப்படுவதில்லை. அவரைப் பொறுத்தவரை உடல் என்பது உடை போன்றது. அறியாமையுடையவரிடத்தில் ‘நான் உடல்’ என்ற எண்ணம் உறுதியாக இருக்கிறது. மெய்யறிவைப் பெற்ற ஞானியினிடத்திலோ ‘நான் உடல் அல்ல’ என்ற எண்ணம் உறுதியாக இருக்கிறது. அத்தகைய எண்ணம் உடையவரே ஜீவன்முக்தர்.
வினைப்பயன் முடியும்போதுதான், உயிரானது உடலை விட்டுச் செல்லும் என்பதை உணர்ந்த ஞானி வாழ்வதை விரும்புவதுமில்லை, வெறுப்பதுமில்லை. அதுபோன்று மரணத்தை விரும்புவதுமில்லை, வெறுப்பதுமில்லை. சாஸ்திரங்களில் துறவறம் விவிதிஷா ஸந்நியாஸம், வித்வத் ஸந்நியாஸம் என இரண்டு விதமாகக் கூறப்பட்டுள்ளது. மெய்ப்பொருளை அறியும்பொருட்டு துறவறம் மேற்கொள்ளுதல் ‘விவிதிஷா ஸந்நியாஸம்’ எனப்படும்.
வேதாந்தம் கற்பதற்காக கர்மங்களைத் துறந்து, குருவிடம் சென்று மெய்யறிவைப் பெறுவர். சில இல்லறத்தார் ஞானம் பெற்ற பிறகு, ஞானம் ஆழமான மனதுக்குச் சென்று பயன் உள்ளதாக ஆக வேண்டி துறவு வாழ்க்கையை மேற்கொள்வர். அடுத்து, மெய்யறிவைப் பெற்ற பிறகு, ஞான நிஷ்டைக்காக, பெற்ற ஞானத்தில் நிலைத்திருப்பதற்காக துறவு வாழ்க்கை மேற்கொள்ளுதல் ‘வித்வத் ஸந்நியாஸம்’ எனப்படும். இங்ஙனம் ஞானம் பெறுவதற்காக, ஞானத்தில் நிலைத்து நிற்பதற்காக என இரண்டு விதமான துறவு வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.
துறவிகள் ‘பார்வதிதேவியே அன்னை, சிவபெருமானே தந்தை, இறையடியார்கள் அனைவரும் உறவினர், மூவுலகும் நமக்குச் சொந்தம்’ என்ற பரந்த மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள். துறவற நெறிப்படி வாழ்கின்ற ஞானி, உடலையும் மனதையும் கட்டுப்படுத்தியிருக்கிறார்: ஆசையற்றிருக்கிறார்: உடலைக் காப்பாற்றுவதற்கு வேண்டிய செயல்களை மட்டும் செய்கிறார். அதிகமாகச் செயல்புரிவதில்லை. குளித்தல், பிகை்ஷ எடுத்து உண்ணுதல் தவிர, பிற நேரமெல்லாம் வேதாந்த சாஸ்திரத்தை தியானம் செய்கிறார். உறங்கச் செல்லும்வரை, அப்படியே இறக்கும்வரை வேதாந்தத்தை சிந்தனை செய்வது ஞானியின் இயல்பு. வேதபூர்வ விஷயங்களையோ உலகியல் விஷயங்களையோ அவர் நினைப்பதேயில்லை.
ஞானியானவர் கிடைத்த உணவில் மகிழ்கிறார். ஏழு வீட்டின் வாசல்களுக்குச் சென்று பிகை்ஷ கேட் கும் மரபு இருக்கிறது. அதற்கு ‘மதுகரீ பிக்ஷா’ என்று பெயர். ஏழு வீட்டிலும் கிடைக்கவில்லை என்றால் பட்டினிதான். ‘அஜகர பிக்ஷா’ என்பது இருக்குமிடம் தேடி வந்தால் புசித்தல். அவ்வாறும் சில ஞானிகள் இருப்பதுண்டு. ஞானி, தனக்கு ஆசைப்பட்டது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், அதனால் பாதிப்படைவதில்லை. ஞானத்தை அடைய விரும்புவோருக்கு உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம். உணவுக் கட்டுப்பாடு கூட இல்லாதவருக்கு மோக்ஷத்தில் தகுதியில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஞானி அனைத்து இருமைகளையும் கடந்தவர். உலகில் புகழ் - இகழ், குளிர்- வெப்பம், மானம் - அவமானம் முதலிய அனைத்து இருமைகளையும் ஏற்றுக்கொள்பவர். வயதான பிறகு, உடல் உறுப்புகள் வலித்தால்கூட, அது உடலின் இயல்பு என்று ஏற்றுக் கொள்வர். ‘இருமைவகை தெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு’ என்று துறவியின் பெருமையைக் கூறுகிறார் திருவள்ளுவர்.
வாழ்க்கை முழுவதும் இரவு - பகல், லாபம் - நஷ்டம், வெற்றி - தோல்வி என இருமை அனுபவங்கள்தான் நிறைந்திருக்கின்றன. ஞானி அவற்றை பொருட்படுத்துவதில்லை. ஞானியினிடத்தில் பொறாமையில்லை. அவர் தனக்கு மேல், கீழ் அல்லது சமமாக யாரையும் பார்ப்பதில்லை. அவரது உள்ளத்தில் எவரைக் குறித்தும் உயர்வு, தாழ்வு, சமம் போன்ற மதிப்பீடுகள் இல்லை. அவர் அனைத்தும் ஒன்று என்ற அத்வைத நிஷ்டையில் இருக்கிறார்.
எல்லோரும் வேறு, வேறு என்று எண்ணிக் கொண்டு, தன்னைக் காட்டிலும் உயர்ந்தவரைப் பார்க்கும் போதுதான் பொறாமை வரும். அவருக்குள் இருக்கின்ற தத்துவமும் தனக்குள் இருக்கின்ற தத்துவமும் ஒன்று என்று உணரும் ஞானியிடம் பொறாமைக்கு இட மில்லை. ஆக, பொறாமையற்றிருத்தல் ஞானத்தின் பலனாகும்.
ஞானத்தைப் பயிற்சி செய்யும் ஞானி வெற்றி தோல்விகளில் சமமாக இருக்கிறார். விருப்பு வெறுப்பில்லாத தன்மையோடு, மனதில் சஞ்சலமற்று இருக்கிறார். அவர் வெற்றியை விரும்புவதில்லை, தோல்வியை வெறுப்பதில்லை. உணர்ச்சிகள் அனைத்தும் நிலையற்றவை, மாறக்கூடியவை, உண்மையில்லாதவை என்ற அறிவோடு இருக்கிறார். ஞானி தனது உணர்ச்சிகளை வேறுபடுத்திப் பார்க்கிறார். அவற்றுக்கு முக்கியத்துவம் தராமல், உணர்ச்சி மயமாகாமல், உணர்ச்சிவசப்படாமல் அவற்றை வேடிக்கை பார்க்கிறார். அத்தகைய ஞானி சிறிதளவு செயல்புரிந்தாலும், அதில் கட்டுண்பதில்லை. செயலால் அவர் பாதிக்கப்படுவதில்லை" என்கிறார் பகவான்.

Comments