ஆதிசங்கரரும் சிவபெருமானும்

காசியில் இருந்த ஆதிசங்கரர் ஒரு நாள் சீடர்களு டன் கங்கைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு சண்டாளன் நான்கு நாய்களுடன் எதிரே வந்தான். அவனைப் பார்த்து சங்கரரின் சீடர்கள், ‘‘தள்ளிப் போ... தள்ளிப் போ!’’ என்றனர்.
அந்தச் சண்டாளன், ‘‘எதைத் தள்ளிப் போகச் சொல்கிறீர்கள்... என் சரீரத்தையா? அல்லது என் ஆன்மாவையா? என் சரீரமும் சரி, தங்கள் சரீரமும் சரி... அன்னத்திலிருந்து உண்டானது. அதனால் அதில் பேதம் கிடையாது. அதைத் தள்ளிப் போ என்று சொல்லத் தேவையில்லை. என் ஆத்மாவைத்தான் தள்ளிப் போகச் சொல்கிறீர்கள் என்றால், என்னுள்ளும் தங்கள் உள்ளும் ஒரே ஆத்மாதான் இருக்கிறது. அது சகல பிராணிகளிடமும் அந்தர்யாமியாக எங்கும் வியாபித்துள்ளது. அதனால் அதை எங்கே போகச் சொல்ல முடியும்?
சூரியன் பிரகாசிக்கிறான். அவன் புனிதமான கங்கை நீரிலும் சண்டாளத் தெருவில் உள்ள அழுக்கு நீரிலும் பிரதி பிம்பமாகத் தோன்றுகிறான். அதனால், சண்டாளத் தெருவில் தோன்றும் பிரதிபிம்பம் அசுத்தமாகி விடுமா? தங்கள் குடத்திலும் என் கையில் உள்ள கள்ளுக் குடத்திலும் ஆகாசம் இருக்கிறது. இந்த இரு ஆகாசங்களுக்குள்ளும் ஏதாவது வித்தியாசம் உண்டா?’’ என்றான்.
அவன் சொன்ன பதில்களில் அத்வைதக் கருத்துகள் நிரம்பி இருப்பதைக் கண்டு ஆதிசங்கரர் ஆச்சரியப்பட்டார். வந்தவன் சண்டாளன் அல்ல, தம்மைச் சோதிக்க வந்த பரமசிவன் என்று உணர்ந்தார். உடனே ஆத்ம தத்துவக் கருத்துகள் அடங்கிய ஐந்து சுலோகங்களைப் பதிலாகச் சொன்னார். அதற்கு ‘மனீஷா பஞ்சகம்’ என்று பெயர் (‘பஞ்சகம்’ என்றால் ஐந்து). உடனே சண்டாளன், பரமசிவனாக மாறி காட்சியளித்தார். நான்கு வேதங்கள்தாம் அந்த நாய்களின் உருவில் இருந்தன.

Comments