மலை பார்வதி அம்மன்

லிங்க வடிவில் சிவபிரான் காட்சி தருவதைத்தான் பொதுவாக எங்கும் நாம் பார்த்திருப்போம். மாறாக, அம்பிகையே சுயம்புவாக, லிங்க வடிவில் காட்சி தரும் தலம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணக்கரை. தென்னகத்தின் ஜீவநதியான தாமிரபரணியின் கரையோரம் அமைந்துள்ளது மணக்கரை கிராமம். இங்கு மலையின் உச்சியில் ‘மலைபார்வதி அம்மனாக’ எழுந்தருளி பக்தர்களைக் காத்து வருகிறாள் அம்பிகை.
மலையின் உச்சியில் ஒரு இடத்தில் மட்டும் பாறைகள் பளபளவென்று இருந்தன. இதன் அருகே மிகப்பெரிய அளவில் கள்ளிச்செடி ஒன்று வளர்ந்து நிழல் தந்துக் காட்சி அளித்தது. இதற்குச் சற்று தொலைவில் வற்றாத ஊருணியும், வால்முளைச்சான் மரம் ஒன்றும் இருந்தன. (கால மாற்றத்தில் தற்போது ஊருணியும், அந்த மரமும் காணாமல் போய்விட்டன.)
சுமார் 500 வருடங்களுக்கு முன்பு கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றவர்கள் மலையின் உச்சியில் இந்த இடத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் ஒரு நாள் அந்தக் கள்ளிச்செடியை அரிவாளால் வெட்டி விட்டு வந்து விட்டார்.
மறுநாள் அங்கு சென்றவர்கள் கள்ளிச்செடியில் இருந்து ரத்தம் ஓடை போல வழிந்தோடி இருந்ததைக் கண்டனர். நடந்ததை அறிந்த ஊர்ப் பெரியவர்கள், மலையின் உச்சிக்குச் சென்று பார்த்தனர்.
அப்போது கள்ளிச்செடியின் அடியில் லிங்க வடிவில் ஒரு கல் இருந்தது. இதனைக் கண்டதும், இந்த இடத்தில் ஏதோ ஒரு தெய்வ சக்தி இருக்கிறது. லிங்க வடிவிலுள்ள அந்தக் கல்தான் அந்த தெய்வமாக இருக்க வேண்டும்" என்று அந்தக் கல்லை மஞ்சள் பானை போட்டு அபிஷேகம் செய்து வணங்கினர்.
பின்பு பிரசன்னம் கேட்டபோது, ‘மலைபார்வதி அம்மன்’ என்பது தெரியவந்தது. பிறகு, பார்வதி அம்மனுக்கு ஆலயம் கட்டி வணங்கினர்.
தற்போது, மலைபார்வதி அம்மனுக்கு மெழுகினால் சிலை வைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. மண் தரையில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் மலையின் உச்சியில் அமைந்துள்ள ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் முருகப்பெருமான், விநாயகர், பைரவர், இசக்கியம்மன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். அம்மனுக்கு எதிரே பலிபீடம் அமைந்துள்ளது.
மலையின் அடிவாரத்தில் ‘மணமேடை’ எனப்படும் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மலையின் உச்சிக்கு ஏறிச் செல்ல முடியாதவர்கள் கீழிருக்கும் அம்மனை வணங்கிச் செல்கின்றனர். விழாக் கால நாட்களில் இங்கு வைத்துத்தான் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இங்கிருந்து தான் அம்மன் வீதி உலாவும் நடைபெறும்.
இந்த மண்டபத்தின் அருகே ஸ்தல விருட்சமான வேப்பமரம் உள்ளது. இவ்வளாகத்தில் விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு வழிபாபடுகள் நடத்தப்பட்டு பஞ்சாமிர்தம், சர்க்கரைப் பொங்கலுடன் கூடிய அன்னதானம் வழங்கப்படுகிறது. கடைசி செவ்வாய் அன்று மட்டும் மலை உச்சியிலுள்ள ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருந்திரளாக வந்து அம்பாளை வணங்கிச் செல்கின்றனர்.
ஆண்டுதோறும் தை மாதம் கடைசி செவ்வாய் அன்று அம்மனுக்கு திருவிழா நடக்கிறது. திருவிழாவின்போது தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம், பால் குடம், முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்து வரும் பக்தர்கள் மலை உச்சிக்கே சென்று அம்மனை வழிபடுவது சிறப்பானதாகும். அன்று அதிகாலை முதல், மாலை வரை மலையிலுள்ள பார்வதி அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார, ஆராதனைகளுடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
மாலை, மணமேடைக்கு அம்மன் எழுந்தருள்கிறாள். அங்கு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் கூடிய வழிபாடுகள் நடக்கின்றன. அதன் பின்னர் நடு இரவில் வாணவேடிக்கை, மேள தாளங்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், வேடம் அணிந்த பக்தர்கள் சூழ, அம்பிகையின் வீதி உலா நிகழ்கிறது.
உலா முடிந்து காலையில் பார்வதி அம்மன் ஆலயத்திற்குத் திரும்புகிறாள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைதோறும் மலையில் உள்ள அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல், சாம்பார் சாதம், பானகம், உளுந்து வடை, அப்பளம் படைத்து மதிய வழிபாடு நடக்கிறது.
நம்பிக்கையுடன் வணங்கும் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை வழங்கிக் காக்கும் மலைபார்வதி அம்மனை தரிசித்து நாமும் வாழ்வில் நற்பேறு பெறுவோம்.
தீராத நோய்களைத் தீர்க்கும் வேம்பு
வயிற்று வலி, தோல் நோய்கள் நீங்க வேண்டி பக்தர்களுக்கு ஆலயத்தின் ஸ்தல விருட்சமான வேப்ப மரத்தின் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இந்த இலைகளை அரைத்துக் குடிக்கும் பக்தர்கள் தீராத நோய்களில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெற்றுள்ளனர். அதேபோன்று வேப்பமரத்தின் கொழுந்தினை உண்டவர்கள் புத்ர பாக்யம் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆலயத்துளிகள்....
* மணப்பொருத்தம் இல்லாமல் திருமணம் முடித்தவர்கள் அம்மனுக்கு பொட்டுத்தாலி வைத்து வணங்கினால், அக்குறை நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள் என்பது ஐதீகம்.
* திருவிழாவின்போது மலையின் உச்சியில் மஞ்சள் பானை போட்டு அம்மனை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
* திருவிழாவின்போது இந்துக்கள் மட்டுமின்றி, கிறிஸ்தவர், முஸ்லிம்கள் என அனைவரும் அம்மனை வழிபடுகின்றனர்.
செல்லும் வழி
திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து வசதி உள்ளது.
தரிசன நேரம்: மலையின் மீதுள்ள ஆலயம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் 12.30 வரை. கீழுள்ள ஆலயம் காலை 8 மணி முதல் மாலை 6 வரை .
தொடர்புக்கு : 95244 83909

Comments