கல்விச் செல்வம் அள்ளித் தரும் ஹயக்ரீவர்!

லகத்தில் உள்ளவற்றில், நமக்குத் தெரிந்ததைவிடத் தெரியாதவையே அதிகம். தெரியாதவற்றுள் ஏதாவது ஒன் றைத் தெரிந்து கொண்டாலே போதும். அளவில்லாத சந்தோஷம் உண்டாகும். அந்த சந்தோஷமும், ‘நம்மைவிடத் திறமைசாலி வந்து விடுவானோ? நம்மைத் தோற்கடித்து விடுவானோ?’ என்ற பயத்தில் மூழ்கிப் போய் விடும்!
இந்த பயம் இல்லாவிட்டாலும், அரசனே ஆனாலும் அவனுக்கு அவனது நாட்டில் மட்டுமே மதிப்பு. ஆனால், கல்விமான்களுக்கோ, அவர்கள் எங்கு போனாலும் மதிப்புக் கிடைக்கும். ‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்னும் வாக்கு இதை மெய்ப்பிக்கிறது.
இதிலும் ஒரு பிரச்னை. வயிற்றுப் பாட்டுக்கான கல்வியாக இருந்தால், அதில் சந்தோஷம் இருக்கிறதே தவிர, ஆனந்தம் வருவது இல்லை. சந்தோஷம் என்பது அழியக் கூடியது. ஆனந்தமோ அழிவில்லாதது. சந்தோஷம் இருந்தால், துக்கமும் இருக்கும். ஆனால், ஆனந்தம் என்பதோ குறைவில்லாத பிரம்மத்தின் ஒரு திவலை. ஆனந்தத்திலேயே பல வகை உண்டு. அவற்றின் உச்சியில் இருப்பது பிரம்மானந்தம் என உபநிடதம் கூறுகிறது.
இந்த பிரம்மானந்த, ஞானானந்த மயமாக, தூய்மையான ஸ்படிகம் போலத் துல்லியமாகப் பிரகாசிப்பவர் ஸ்ரீஹயக்ரீவர். எல்லா விதமான வித்தைகளுக்கும் ஆதாரமாக இருப்பவர் இவரே. ஆய கலைகள் அறுபத்துநான்கையும் நமக்கு அருளும் சகலகலாவல்லியான சரஸ்வதிக்கும் குருவாக இருப்பவர் - ஹயக்ரீவர். ஸ்ரீவித்யா உபாசகர்கள் புகழும் லலிதா சஹஸ்ர நாமத்தை அகஸ்தியருக்கு வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவர்!
நமக்கு ஞானமும் கல்வியும் இரண்டு கண்கள். இதன்படி பார்த்தால், நாம் ஹயக்ரீவரை வழிபட வேண்டிய அவசியம் புரியும். நாம் கற்பது கல்வி. கற்றதை உள்ளத்தில் வைத்து நன்றாக உணர்ந்து, அதன்படி நடந்து, அனுபவத்தில் உண்மையைக் காண்பது ஞானம். இந்த ஞானம், கல்வி இரண்டும் இல்லாதவர்கள் பார்ப்பது, அறியாமை என்ற இருளை மட்டுமே.
இந்த இருள் விலகி ஒளி கிடைக்கவும், ஞானம் பிறக்கவும் நமக்கு ஒரு சிறந்த ஞான ஆசார்யர் தேவை. அவரும் ஈடு-இணை சொல்ல முடியாதவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒருவரை எங்கே தேடிப் பிடிப்பது?
இதற்கு உரிய வழியை நமது ஞான நூல்கள் விரிவாகச் சொல்கின்றன. அவற்றில் ஆழ்ந்து, அலையாழி அறிதுயிலும் மாயனின் அவதார மகிமைகளை நன்கு அனுபவித்த மகான்களும் ரிஷிகளும் நமக்குக் காட்டிய ஞான ஆசார்ய வடிவம் - ஹயக்ரீவர். கலைகளில் திறமை, கல்வியில் உயர்வு, தெளிந்த ஞானம் ஆகியவற்றை விரும்பி, ஹயக்ரீவரை வழிபட்டு பலன் அடைந்தவர்கள் பலர். பள்ளிக் கூடங்கள் திறந்து விட்ட இந்த நேரத்தில் நம் குழந்தைகள் கல்வியில் தேர்ச்சி பெற்று விளங்க வேண்டும் என்பது பெற்றோரின் ஆசை. இந்த சந்தர்ப்பத்தில், மகா விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒன்றான ஹயக்ரீவரைப் பற்றியும் அவரருள் பெற்ற மகான்களின் அருஞ்செயல்கள் சிலவற்றையும் பார்க்கலாம்.
அவதாரம்



உ லகம் ஞானம் பெறுவதற்காக மகாவிஷ்ணு, குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவராகத் திரு மேனி கொண்டிருக்கிறார். குதிரை முகமும், மனித உடலும் கொண்ட மகாவிஷ்ணுவை ‘ஹயமுகன்’ என மகாபாரதம் கூறுகிறது.
பழங்காலத்தில் இருந்தே நமது நாட்டில் ஹயக்ரீவ வழிபாடு இருந்து வருகிறது என்பதையும் அவரின் மகிமையையும் ஹயக்ரீவ உபநிடதம், தலபுராணங்கள், மகான்களது வரலாறு, சிற்ப ஆகம நூல்கள் போன்றவை வெளிப்படுத்துகின்றன.
அவற்றில் இருந்து சில:
நான்கு வேதங்களையும் மது-கைடபர் என்ற கொடிய அரக்கர்கள், குதிரை வடிவில் வந்து நான்முகனான பிரம்ம தேவரிடம் இருந்து, பறித்துச் சென்றனர்.
வேதங்களை இழந்த உலகெல்லாம் இருள் சூழ்ந்தது. என்ன செய்வதென்று தெரியா மல் திகைத்தார் பிரம்மன்.
எனவே, மகாவிஷ்ணுவிடம் போய், ‘‘ஸ்வாமி! அரும்பெரும் வேதங்களை அரக்கர்கள் கவர்ந்து கொண்டு போய் விட்டார்கள். அவற்றை மீட்டுக் காத்தருள வேண்டும்!’’ என வேண்டினார் பிரம் மன். அவருக்கு திருவருள் புரியத் தீர்மானித்த மகாவிஷ்ணு, ஹயக்ரீ வராக வடிவம் கொண்டார்.
குதிரை முகம். மனித உடம்பு. சூரியனை மிஞ்சக் கூடிய ஒளி. கண்களாக சந்திர - சூரியர்கள். கங்கையும் சரஸ்வதியும் கண் இமைகள். தெய்வ ஒளி வீசும் வடிவம் ஆகியவற்றுடன் திருவடிவம் கொண்ட மகாவிஷ்ணு வேதங் களை மீட்பதற்காக அரக்கர்களைத் தேடிப் புறப்பட்டார்.
வேதங்களுடன் மறைந்திருந்த மது- கைடபர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்தார். பின்பு அவர்களுடன் போரிட் டார். ஒளி வந்தால் இருள் தானாகவே மறைவதைப் போல, ஞானத்தின் முழு வடி வான ஹயக்ரீவரின் எதிரில் அகம்பாவத்தின் வடிவங்களான மது- கைடபர் அழிந்தனர். அவர் களிடம் இருந்து வேதங்களை மீட்டு பிரம்மதேவரிடம் ஒப்படைத்து வேதநெறி தழைத்தோங்க வழி வகுத்தார் ஹயக்ரீவர்.
(தேவி மகாத்மியம், தேவி பாகவ தம் ஆகிய நூல்களில் உள்ள மது, கைடப சம்ஹாரத்துக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. அதை எண்ணிக் குழம்ப வேண்டாம்!)
பரம்பொருளின் இந்தச் செயலை நாலாயிர திவ்யப் பிரபந்தம் அற்புதமாக வர்ணிக்கிறது.
முன்னிவ்வுலகேழும் இருள் மண்டியுண்ண முனிவரோடு தானவர்கள் திகைப்ப வந்து பன்னுகலை நூல் வேதப் பொருளை யெல்லாம் பரிமுக மாயருளிய வெம்பரமன் காண்மின் செந்நெல் மலி கதிர்க்கவரி வீசச் சங்கமவை முரலச் செங்கமல மலரையேறி அன்னமலி பெடையோடுமமரும் செல்வத்து அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே!
( நாலாயிர திவ்யப் பிரபந்தம் - இரண்டாயிரத்தில் ஏழாம் பத்து - எட்டாம் திருமொழி)
வசையில் நான்மறை கெடுத்த அம்மலரயற்கருளி முன் பரிமுகமாய் இசைகொள் வேத நூலென்றிவை பயந்தவனே! எனக்கருள் புரியே! உயர்கொள் மாதவிப் போதொடுலாவிய மாருதம் வீதியின் வாய் திசையெல்லாம் கமழும் பொழில் சூழ் திருவெள்ளறை நின்றானே.
(நாலாயிர திவ்யப் பிரபந்தம் - இரண்டாயிரத்தில் ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி)
ஹயக்ரீவரின் மகிமைகள்!
எ ல்லாக் கலைகளுக்கும் உறை விடமாகத் திகழ்பவர் ஹயக்ரீவர். ஹயக்ரீவரைப் பிரத்தியட்சமாக தரிசித்து, அவரது அருளைப் பரிபூரணமாகப் பெற்ற மகான்கள் சிலரது வாழ்வில் இருந்து சில நிகழ்ச்சிகள்.
சூட்சுமமான பதில்:
அந்திசாயும் நேரம். பசுக் குலம் அமைதியாக மேய்ந்து கொண்டிருந்தது. அழகும் கம்பீரமும் கொண்ட சிறுவன் ஒருவன் அவற்றைக் கண்காணித்தான்.
அந்த வழியாகப் பல்லக்கில் வந்தார் ஸ்வர்ண வர்ண பரசுராம தீர்த்தர் (மத்வ மடாதிபதி) என்ற மகான்.
சிறுவனைக் கண்டதும் பல் லக்கை நிறுத்திய மகான் அவனை அழைத்து, ‘‘அப்பூர் கிராமம் எவ்வ ளவு தூரத்தில் இருக்கிறது?’’ எனக் கேட்டார்.
சிறுவன் சூட்சுமமாக பதில் சொன்னான். ‘‘என்னைப் பாருங் கள்... மாட்டு மந்தையைப் பாருங் கள்... சூரியனைப் பாருங்கள்!’’ என் றான்.
ஏற்கெனவே, சிறுவனின் அழகி லும் கம்பீரத்திலும் லயித்திருந்த மகான், அவனது பதிலைக் கேட்டதும் ஆச்சரியத் தில் மூழ்கினார்.
‘சூரியன் மறையும் வேளையில், சிறுவன் ஒருவன் மாடுகளை மேய்க்கிறான் என்றால், பக்கத்தில்தானே ஊர் இருக்க வேண்டும்’ என்பதை நாசூக்காகச் சொன்ன சிறுவனின் சாதுரியம் மகானை வியப்பில் ஆழ்த்தியது.
அவர், ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவ ராகப் பயணத்தைத் தொடர்ந்தார். அப்பூரை அடைந்ததும் ஸ்ரீ மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து, ‘‘அந்த புத்திசாலிச் சிறுவனைப் பற்றிய தகவல்களை அறிந்து வாருங்கள்!’’ என்றார்.
அப்படியே வந்து சேர்ந்தன. ‘மைசூர்- சென்னப்பட்டினம் தாலூகாவில் இருக்கும் அப்பூரைச் சார்ந்தவன் அந்தச் சிறுவன். வீட்டுக்கு ஒரே பிள்ளை. பெயர் லட்சுமி நாராயணன்!’ என்றார் விசாரிக்கப் போனவர்.
‘‘அப்படியானால், நீங்களே போய் அவனையும் அவன் பெற்றோ ரையும் அழைத்து வாருங்கள்!’’ என்று மறுபடியும் அவரை அனுப்பி வைத்தார் மகான்.
பெற்றோருடன் வந்து சேர்ந்தான் சிறுவன். ‘உங்கள் மகனை ஸ்ரீ மடத்துக்குத் தந்து விடுங்கள்!’ என்று கேட்க நினைத்த மகான், பேச்சைத் தொடங்கினார்.
‘‘உங்கள் பிள்ளை உங்களுக்கு மட்டும் மகனாக இருந்தால் போதுமா? உலகமே அவனை மகானாகப் போற்றும் தகுதி அவனிடம் இருக்கிறது. திக்குத் தெரியாமல் துயரக் கடலில் தத்தளிக்கும் பலருக்கு, வழிகாட்டும் ஞானதீபமாக அவன் விளங்குவான். அந்த பாக்கியத்தை, ஸ்வாமி உங்க ளுக்குத் தந்திருக்கிறார். உங்களது அபிப்ராயம் என்னவோ?’’ என்று கேட்டார்.
‘யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம்?’ என்று நினைத்த பெற் றோர், மகனை ஸ்ரீ மடத்துக்குத் தந்து விடுவதாக ஆனந்தக் கண்ணீருடன் ஒப்புக் கொண்டார்கள்.


பிறகென்ன? சிறுவனுக்கு சந்நி யாச ஆசிரமம் வழங்கியதோடு, ‘லட்சுமி நாராயண தீர்த்தர்’ எனும் திருநாமம் சூட்டப்பட்டது.
அந்தச் சிறுவன்தான்... ஸ்ரீபாத ராஜர்.
மாடு மேய்த்த சிறுவன், பொறி - புலன்கள் போன வழியெல்லாம் போய்த் துயரத்தையே மேய்ந்து கொண்டிருந்த மனித குலத்துக்கு, பச்சை வண்ணனான ஸ்வாமியைக் காட்டி, ஊக்கம் உண்டாக்கி திசை திருப்பிய சம்பவங்கள் அதன்பின் ஏராளமாக நிகழ்ந்தன.
அதற்கு முன், அந்த ஞானக் குழந்தை, ‘ஸ்ரீபாதராஜர்’ எனும் திருநாமம் பெற்று புகழ் அடைந்ததைப் பார்க்கலாம்.
லட்சுமி நாராயண தீர்த்தரைச் சில காலம் தன்னுடன் தங்கச் செய்து, அவருக்கு சாஸ்திரங்களைக் கற்பித்து வந்தார் ஸ்வர்ண வர்ண பரசுராம தீர்த்தர்.
‘லட்சுமி நாராயண தீர்த்தர் இன்னும் நன்கு புலமை பெற வேண்டும்!’ என்று எண்ணிய மகான், அவரை ஸ்ரீவிபுதேந்திரர் என்பவரிடம் அனுப்பி வைத்தார். அங்குதான் லட்சுமி நாராயண தீர்த்தர், ‘ஸ்ரீபாதராஜர்’ எனும் திருநாமம் பெற்றார்.
ஸ்ரீவிபுதேந்திரரிடம் அவர் வேத - சாஸ்திரங்களைக் கற்று வந்த நேரத்தில் ஸ்ரீ உத்திராதி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீரகுநாதர் அங்கு வந்தார். பால சந்நியாசியான லட்சுமி நாராயண தீர்த்தரைக் கண்டதும் திகைப்பில் ஆழ்ந்தார் ஸ்ரீரகுநாதர். லட்சுமி நாராயண தீர்த்தரின் ஒளி சிந்தும் கண்கள், அழகும் கம்பீரமும் தவழும் முகம், திருமேனி, அடக்கம் ஆகியவற்றில் உள்ளம் பறிகொடுத்த ஸ்ரீரகுநாத தீர்த்தரிடம், லட்சுமி நாராயண தீர்த்தரைப் பற்றிய விவரங்களைச் சொன்னார் ஸ்ரீவிபு தேந்திரர்.
லட்சுமி நாராயண தீர்த்தரைப் பற்றி, அதுவரை நடந்ததை யெல்லாம் தெரிந்து கொண்ட ஸ்ரீரகுநாத தீர்த்தர், லட்சுமி நாராயண தீர்த்தரின் புலமையைப் பரிசோதிக்க எண்ணினார். ‘நியாயசுதா’ என்ற நூலில் இருந்து சில வார்த்தைகளைச் சொல்லி, அதற்கு விளக்கம் கேட்டார்.
ஆனால், அவரது கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய லட்சுமி நாராயண தீர்த்தர், நியாயசுதாவின் சாரம் முழுவதையும் கூறினார். அதைக் கேட்ட ஸ்ரீரகுநாத தீர்த்தர் பிரமித்தார். முழு மனதோடு பலவாறு பாராட்டினார்!
லட்சுமி நாராயண தீர்த்தரோ, ‘‘ஸ்வாமி! அடியேன் சிறியவன். தாங்களோ பெரியவர்... ஸ்ரீபாதர் கள். எனவே தாங்கள் அடியேனை இவ்வாறு புகழ்வது முறையல்ல!’’ என்று அடக்கத்துடன் சொன் னார்.
ஸ்ரீரகுநாத தீர்த்தர், ‘‘நாங்கள் வெறும் ஸ்ரீபாதர்கள்தான். ஆனால், தாங்களோ என்னைப் போன்றவர்களுக்கு எல்லாம் ராஜா. அதாவது ஸ்ரீபாதராஜர். நான் சொன்னது வெறும் புகழ்ச்சி இல்லை. முழுவதும் உண்மை!’’ என்றார்.
அன்று முதல் லட்சுமி நாராயண தீர்த்தர் ‘ஸ்ரீபாதராஜர்’ என்று அழைக்கப்பட்டார்.
ஸ்ரீபாதராஜரான இவரைத் தேடிப் பிரச்னை வந்தது; ஹயக்ரீவர் வந்து பிரச்னையைத் தீர்த்தார்.
நடமாடிய ஹயக்ரீவ விக்கிரகம்!
ப ணக்காரன் ஒருவன், இன்னொரு பணக்காரனைப் பார்த்துப் பொறாமைப்படுவது பணக் காய்ச்சலால். இது ஏதாவது ஒரு வழியில் முடிவுக்கு வரும்.
பலசாலி ஒருவன், இன்னொரு பல சாலியைப் பார்த்துப் பொறாமைப்படுவது பலக் காய்ச்சலால். உடல் நிலையை அனுசரித்தோ, வேறு ஏதாவது வழிகளிலோ இந்தக் காய்ச்சல் கூட ஒரு முடிவுக்கு வரும்.
ஆனால், இந்தப் படிப்புக் காய்ச்சல் இருக்கிறதே, இது சுலபத்தில் போகவே போகாது. பாயில் படுத்து நோயில் விழுந்தாலும் கல்விக் காய்ச்சல் விடவே விடாது. உள்ளூர பயம் இருந்தாலும், வெளிக் காட்டாமல் முட்டி மோதிப் பார்க்கும். தோல்வி அடைந்து விட்டாலோ, படிப்பு- பண்பாட்டை மறந்து பாதகங்கள் செய்யும். இதிகாச-புராணங்களில் இருந்து, இன்றைய காலம் வரை இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.
மறந்து போய்க்கூட அடுத்தவர்க் குத் தீங்கு நினைக்காத மகானான ஸ்ரீபாதராஜர் வாழ்விலும் இவ் வாறு ஒரு சம்பவம் நடந்தது. அதன் மூலம் ஹயக்ரீவர் அருளும் வெளிப்பட்டது. (நமக்காகவும்தான். எப்படி என்பது பின் னால் புரியும்.)
ஸ்ரீபாதராஜரின் புகழ் திசையெங்கும் பரவியது. இது பலரின் உள்ளங்களில் பொறாமையை விதைத்தது.
ஒரு முறை... ஸ்ரீ பாதராஜர் காசிக்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட காசி நகரப் பண்டிதர்கள் பொறாமையுடன் ஸ்ரீபாதராஜரை வாதத்துக்கு அழைத்தார் கள்.
ஸ்ரீபாதராஜர் அதற்கு ஒப்புக் கொண்டார். ‘‘இந்த வாத-பிரதிவாதம் அரசரின் முன்னால் நடந்தால் நன்றாக இருக்கும்!’’ என்று தன் எண்ணத்தையும் வெளி யிட்டார்.
பண்டிதர்கள் ஏற்க வில்லை. ‘‘அதற்கு அவசியம் இல்லை. நமக்குள்ளாகவே ஒரு நிபந்தனையின் பேரில் வாதம் செய்யலாம். அதாவது, வாதத்தில் நீங்கள் தோற்றுவிட்டால், எல்லோர் முன்னிலை யிலும் கங்கையில் விழுந்து உயிரை விட வேண்டும். நீங்கள் ஜெயித்து நாங்கள் தோற்று விட்டால், நாங்கள் சந்நியா சிகளாகி விடுகிறோம்!’’ என்றார் கள்.
நிபந்தனை என்றால், இரு பக்கமும் சரிசமமாக அல்லவா இருக்க வேண்டும்? அப்படியும் பண்டிதர்களின் இந்த நிபந்த னைக்கு ஸ்ரீபாதராஜர் ஒப்புக் கொண்டார்.
தகவல் அரசனையும் எட்டியது. வாதப் போர் தொடங்கியது. கடைசி யில் காசி நகரப் பண்டிதர்கள் எல்லோரும் ஸ்ரீபாதராஜரிடம் தோற்றுப் போனார்கள்.
அந்தப் பண்டிதர்களின் உள்ளங் களில் பயம் இடம் பிடித்துக் கொண்டது. ‘வாதப் போர் பற்றிய நிபந்தனைகள் எல்லாம் அரசனுக்குத் தெரியும். வேறு வழியில்லை. சந்நியாசம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், மன்னன் தண்டிப்பான்!’ என்ற எண்ணத்தில் அனைவரும் துறவு பூண்டார்கள். எனினும், அவர்களால் ஸ்ரீபாதராஜரின் மீதுள்ள கோபத்தைத் துறக்க முடிய வில்லை.
‘இனி, ஸ்ரீபாதராஜர் எங்கும் வாதம் செய்யக் கூடாது’ என்று தீர்மானித்து, மந்திரத்தின் மூலம் ஸ்ரீபாதராஜரை வாக்பந்தனம் எனப் படும் வாய்க்கட்டு (வாயிலிருந்து வார்த் தைகள் வெளி வராதபடி) செய்து விட்டனர்.
நடந்ததை உணர்ந்த ஸ்ரீபாதராஜர் இந்த இன்னல் நீங்க ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜபித்து அவரிடம் மன தார வேண்டினார். அதிசயம் நிகழ்ந்தது. அந்த இடத்தில் விக்கிரக வடிவமாக ஸ்ரீஹயக்ரீவர் எழுந் தருளி அங்கும் இங்குமாக நடை போட்டார். பின்பு ஸ்ரீபாதராஜரை வாக் பந்தனத்தில் இருந்து விடுவித்தார்.
இதனால் நெகிழ்ந்த ஸ்ரீபாதராஜர், ஹயக்ரீவரை ஓர் இடத்தில் நிலை நிறுத்தி, தோத்திரம் சொல்லித் துதித் தார். இந்த விக்கிரகம் இன்றும், ஸ்ரீபாதராஜ மடத்து பூஜையில் இருப்பதைக் காணலாம்.
ஸ்ரீபாதராஜர், பெங்களூருக்கு அருகில் உள்ள முளுபாகல் க்ஷேத்திரத்தில் நரசிம்ம தீர்த்தக் கரையில் கி.பி.1486-ல் தன் பூத உடலைத் துறந்தார். அங்கு ஸ்ரீபாத ராஜரின் பிருந்தாவனமும் நரசிம்ம தீர்த்தமும் உள்ளன. வாழ்நாளில் ஒரு முறையாவது அனைவரும் தரிசிக்க வேண்டிய இடங்கள் அவை.
பிறந்த குழந்தை யாருக்கு?
கா ரணம் இல்லா மல் எந்தவொரு காரியமும் இல்லை. ‘ஏன் இப்படி?’ என்று விவரம் அறியாமல் நாம் ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், சரியான பதில் கிடைக்காது!
காரணத்துக்குரிய காரியத்தையும், காரியத்துக்குரிய காரணத்தையும் அறிந்தவர் ஸ்வாமி மட்டுமே. கீழ்க்காணும் தகவல்கள் இதை நிரூபிக்கும்.

உத்தமமான தம்பதி அவர்கள். தெய்வ பக்தியும் கருத்து ஒருமித்த வாழ்க்கையும் அவர்களுக்குச் சகல செல்வங்களையும் தந்திருந்தது. அவர்களுக்குக் குழந்தை இல்லை. இந்தச் சூழ்நிலையில் அவர்கள் வசித்த பகுதிக்கு ஸ்ரீவாகீச தீர்த்தர் என்ற மடாதிபதி வருகை புரிந்தார்.
உடுப்பி நகரில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணரை பூஜை செய்யவும், மத்துவரின் மகத்தான வழியை மக்களிடையே பரப்பவும் ஸ்ரீ மத்துவாச்சார்யார் அஷ்ட (எட்டு) மடங்களை நிறுவி இருந்தார். அவற்றுள் ஸோதே மடமும் ஒன்று. அந்த மடத்தின் அதிபதிதான் ஸ்ரீவாகீச தீர்த்தர். தங்களுக்கு மகவு இல்லாத குறையை அந்த மகானிடம் போய் முறை யிட்டனர் தம்பதி.
இதையெல்லாம் செவிமடுத்த மகான், அவர் களிடம் ஒரு நிபந்தனை போட்டார்.
‘‘கவலைப் படாதீர்கள், உங்கள் குறை நீங்கும். உங்களுக்குக் குழந்தை பிறக்கும். ஆனால், அந்தக் குழந்தையை எங்களது ஸ்ரீ மடத் துக்குத் தந்து விட வேண்டும். சம்ம தமா?’’
தம்பதியின் உள்ளங்கள் தடு மாறின.
யோசித்தார் மகான். தனது நிபந்தனையைச் சற்றுத் தளர்த் தினார். ‘‘சரி... இன்னொரு யோசனை. பிறக்கும் குழந்தை வீட்டுக்குள் பிறந்தால், உங்களுக்கு. மாறாக வீட்டுக்கு வெளியே பிறந்தால், ஸ்ரீ மடத்துக்குத் தந்து விட வேண்டும். இதற்காவது ஒப்புக் கொள்கிறீர்களா?’’ என்றார்.
‘ஏதாவது ஒரு வழி பிறக்கட்டும். எப்படியும் நமக்குக் குழந்தை பிறக்கும். அது நம்மிடமே இருக்கும்!’ என்ற நம்பிக்கையில் தம்பதி ஒப்புக் கொண்டனர்.
அப்போது மகான், பலன் அளிக்கும் மந்திர அட்சதையை அவர்களிடம் தந்தார். அதைப் பெற்றுக் கொண்டு மன நிறை வோடு திரும்பினர் தம்பதி. அந்த தம்பதியின் பெயர்கள்: தேவரநாம பட்டர்- கௌரிபாய் (ராமாசார்யார் - சரஸ்வதி எனவும் கூறுவர்).
மகானின் வாக்கு பலித்தது. கௌரிபாய்க்கு மணி வயிறு வாய்த்தது. கருவுற்ற மனைவியை வெளியே எங்கும் அனுப்பாமல், தானே அவற்றைக் கவனித்து வந்தார் பட்டர். வீட்டின் பின்பக்கத்தில் இருக்கும் தோட்டத்துப் பக்கம்கூட மனைவியை அதிகமாகப் போக விடாமல் கட்டுப்படுத்தி வைத் தார்.
‘வீட்டின் உள்ளேயே குழந்தை பிறக்க வேண்டும். அது நம்மிடமே இருக்க வேண்டும்!’ என்ற எண்ணம் அவருக்கு. என்ன செய்து என்ன பலன்?
கௌரிபாய்க்குப் பிரசவ நேரம் நெருங்கியது. ஒரு நாள்... அவர்களது வீட்டுக்கு வந்த விருந்தினர் ஒருவ ருக்கும் கணவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார் நிறைமாத கர்ப்பிணியான கௌரிபாய்.
அந்த நேரத்தில் கொல்லைப் புறத்தில் மாடு ஒன்று நுழைந் தது. (தமிழில் ‘மாடு’ என்ற சொல்லுக்கு ‘செல்வம்’ என்றும் பொருள் உண்டு.) ‘உலகுக்கே செல்வமாக விளங்க வேண்டிய குழந்தையை, கௌரிபாய் தனக்கு மட்டுமான செல்வ மாக நினைக்கிறாளே! இந்தக் குழந்தைச் செல்வம் நம்முடையதல்லவா?’ என்ற எண்ணத்தில் குழந்தைச் செல்வத்தை வாங்க, இந்த (மாடு) செல்வத்தை ஸ்வாமி அனுப்பினாற் போலிருந்தது.
வீட்டை விட்டு வெளியே வந்த கௌரிபாய், மாட்டை விரட்டினார். அது மெள்...ள நகர்ந்தது. கௌரிபாயும் விரட்டிக் கொண்டு போனார். சற்றுத் தூரம் ஓடிய மாடு சட்டென்று மாயமாக மறைந்தது.
கௌரிபாய் வீட்டை நோக்கி திரும்பி நடக் கத் தொடங்கினார். அதற்குள் பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால், அவரால் வீட்டுக்குள் போக முடியவில்லை. சோர்ந்து போன கௌரிபாய், தோட் டத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்தார். சற்று நேரத்தில் ஒளிமயமான ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். (அனைத்தும் உணர்ந்த ஞானியான ஸ்ரீவாகீச தீர்த்தர், குழந்தை பிறக்கும் நேரத்தைத் தெரிந்து கொண்டு ஸ்ரீ மடத்தில் இருந்து, தங்கத் தாம்பாளம் ஒன்றைக் கொடுத்தனுப்பினார். குழந்தை பூமியில் படுவதற்கு முன்பாகவே, அதை தங்கத் தாம்பாளத்தில் ஏந்தினார்கள் என்றும் சொல்வதுண்டு.)
நிபந்தனைப்படி, வீட்டுக்கு வெளியே குழந்தை பிறந்ததால், அதை ஸ்ரீவாகீச தீர்த்தரிடம் ஒப்ப டைத்தனர்.
‘‘உலகுக்காக ஒரு குழந்தையைத் தந்த உங்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்கும். நிறைவான வாழ்வு வாழ்வீர்கள்!’’ என்று அந்த தம்பதியை ஆசீர்வதித்தார் ஸ்ரீ வாகீச தீர்த்தர்.
மடத்துக்காக ஒப்படைக்கப் பட்ட குழந்தைக்கு ஸ்வாமியின் அபிஷேகப் பாலுடன் ஞானத்தையும் ஊட்டி வளர்த்தார் அவர். அந்தக் குழந்தைதான் ஸ்ரீஹயக்ரீவரின் அருளைப் பூரணமாகப் பெற்ற ‘ஹயவதன’ என்னும் முத்திரையோடு பலப்பல கீர்த்தனைகள் எழுதிய ஸோதே மடத்தின் பீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீவாதிராஜ தீர்த்தர்.
மர்மமாக வந்த குதிரை!
 
    
                         
ஸ்ரீ வாதிராஜரின் ஸ்ரீ மடத்தை யட்டி தனியார் ஒருவருக்குச் சொந்தமான பரந்த நிலப்பரப்பு இருந்தது. அதன் உரிமையாளர் கடலையை விதைத்திருந்தார். அது செழிப்பாக வளர்ந்திருந்தது!
ஒரு நாள் காலையில், உரிமையாளர் நிலத்தைப் பார்வையிட வந்தபோது, ஒரு பகுதியில் வளர்ந்திருந்த பயிர்கள் சிதைவடைந்து அலங்கோலமாக இருந்தன. கவலையுடன் வீடு திரும்பிய உரிமையாளர், மறு நாள் காலையிலும் போய்ப் பார்த்தார். அன்றும் மேலும் சில பகுதிகள் சேதம் அடைந்திருந்தன.
‘எப்படியும் இன்று இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று நினைத்த உரிமையாளர், அன்று இரவு நேரத்தில் அங்கேயே ஒரு பக்கத்தில் மறைவாகக் காத்திருந்தார்.
சற்று நேரத்தில்... ஸ்ரீவாதிராஜரின் ஸ்ரீ மடத்தில் இருந்து, கண்ணைக் கவரும் வெள்ளை நிறக் குதிரை ஒன்று வெளிவந்தது. அது நேராக வயலை அடைந்தது. கடலைச் செடிகளைச் சேதப்படுத்தியது. இதைக் கவனித்த நிலத்தின் உரிமையாளர் குதிரையை விரட்டினார். அந்தக் குதிரை அவரிடமிருந்து தப்பித்து ஓடி ஸ்ரீ மடத்துக்குள் புகுந்தது.
வீடு திரும்பிய உரிமையாளர் மறு நாள் காலையில், ஸ்ரீவாதிராஜரிடம் போய் நடந்ததை விவரித்து, நியாயம் கேட்டார்.
‘‘மடத்தில் அப்படிப்பட்ட குதிரை எதுவும் கிடையாதே! நிஜ மாகத்தான் சொல்கிறாயா?’’ எனக் கேட்டார் ஸ்ரீவாதிராஜர்.
‘‘நானே, என் இரண்டு கண்களா லும் பார்த்தேன் ஸ்வாமி! எதற்கும், இன்று இரவு மறுபடியும் பார்த்து விட்டு, நாளை காலையில் வந்து சொல்கிறேன் ஸ்வாமி!’’ என்ற உரிமையாளர், ஸ்ரீவாதிராஜரை வணங்கி விடை பெற்றார்.
அன்று இரவும், அதே வெள்ளைக் குதிரை மடத்திலிருந்து வெளி வந்தது. வழக்கம்போல் நிலத்தில் புகுந்து கடலைச் செடிகளைத் தின்று சேதப்படுத்தியது. பிறகு முந்தைய நாள் போலவே ஸ்ரீ மடத்துக்குள் நுழைந் தது. ஸ்ரீ மடத்தின் வாயில் வரை அதைத் துரத்தி வந்த உரிமையா ளரால் அன்றும் பிடிக்க முடியவில்லை.எனவே, மறு நாள் பொழுது விடிந்ததும் ஸ்ரீவாதிராஜரின் முன் னால் வந்து நின்றார் உரிமையாளர்.
‘‘ஸ்வாமி! நேற்றிரவும் என் கண்ணாரக் கண்டேன். வெள்ளை வெளேர் என்ற குதிரை ஒன்று இந்த ஸ்ரீ மடத்தில் இருந்து வெளியே வந்தது. எனது நிலத்தில் புகுந்து செடிகளை நாசப்படுத்தியது. விடாமல் துரத்தி வந்த என் கைகளில் அகப்படாமல், அது மடத்துக்குள் நுழைந்து விட்டது!’’ என்றார் உரிமையாளர்.
ஸ்ரீவாதிராஜர், ‘‘நான் நேற்றே சொன்னேன். ஸ்ரீ மடத்தில் குதிரை கிடையாது. ஆனால் நீயோ, இப்படிச் சொல்கிறாய். இதற்கு என்ன பதில் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை!’’ என்றார்.
தான் சொன்னதையே மீண்டும் வலியுறுத்திய நில உரிமையாளர், ‘‘ஸ்வாமி! ஏற்கெனவே என் நிலத்தில் நிறையச் செடிகள் பாழாகிவிட்டன. இனிமேலும் இழப்பு வந்தால் என்னால் தாங்க முடியாது ஸ்வாமி!’’ என்று மன்றாடி னார்.
அவருக்கு ஆறுதல் சொன்ன ஸ்ரீவாதிராஜர், ‘‘சரி... உனது வார்த்தையை நான் நம்புகி றேன். நீ போய் உனக்கு எவ்வ ளவு சேதமாகியுள்ளது என்று மதிப்பிட்டுச் சொல். இங்கிருந்து குதிரை வருகிறது என்று நீ சொல்வ தால், அந்த இழப்பை நானே ஈடு செய்கிறேன். உண்மையில் என்ன நடக்கிறது என்பது ஸ்வாமிக்குத்தான் வெளிச்சம்!’’ என்றார்.
‘நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு வழி பிறந்தது!’ என்ற ஆறுதலுடன், நிலத்தை நோக்கிப் போனார் உரிமையாளர்.
ஆனால், போனதை விட வெகு வேகமாகத் திரும்பி ஓடி வந்தார் உரிமையாளர். ஸ்ரீ வாதிராஜரை வணங்கிய அவர், ‘‘ஸ்வாமி... ஸ்வாமி... என் கண்கள் கூசுகின்றன. எனது நிலத்தில் அற்புதம் விளைந்திருக்கிறது. சேதமாகியிருந்த பகுதியில் எல்லாம் இப்போது தங்கக் கடலைகள் இறைந்து கிடக்கின்றன. ஸ்வாமி! தங்கள் மடத்துக் குதிரை சாதாரணமானதல்ல, தெய்வீகமானது!’’ என்று ஆச்சரியத்துடன் கூறினார்.
எல்லாவற்றையும் பொறுமை யாகக் கேட்டுக் கொண்ட ஸ்ரீவாதிராஜர், பின்னர் தியானத்தில் அமர்ந்தார். வெள்ளைக் குதிரையாக வந்தது ஸ்ரீஹயக்ரீவரே என்பதைப் புரிந்து கொண்டார். அவரது தியானம் கலைந்தது.
‘‘ஸ்வாமி! தெரியாத்தனமாக வெள்ளைக் குதிரையை விரட்டி விட்டேன். அற்புதம் செய்த அந்தக் குதிரையை இன்று இரவில் மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறேன்!’’ என்றார் நில உரிமையாளர்.
‘‘இனிமேல் உன்னால் அந்தக் குதிரையைப் பார்க்க முடியாது. பார்க்க முயன்றால், உன் பார்வை போய் விடும்!’’ என்று எச்சரித்தார் ஸ்ரீவாதிராஜர்.
‘‘எனது பார்வை முற்றிலுமாகப் போனாலும் பரவாயில்லை. அந்தக் குதிரையை நான் பார்த்தே ஆக வேண்டும் ஸ்வாமி!’’ என்ற நில உரிமையாளர், ஸ்ரீவாதிராஜரிடம் விடைபெற்று வீடு திரும்பினார்.
இரவு நேரத்தில் தனது நிலத்துக் குப் போய், குதிரையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார் நில உரிமையாளர். வழக்கம் போல் குதிரை வந்தது. அதைப் பார்த்த சற்று நேரத்துக்குள் அவரது பார்வை பறிபோனது. அதற்காக அவர் கவலைப்படவில்லை. அதற்கு பதிலாக, ‘குதிரையாக தினமும் வந்தது தெய்வமே!’ என்பதை உணர்ந்து மெய்ம்மறந்து அப்படியே உட்கார்ந்திருந்தார்!
அவரது உன்னதமான பக்தியைக் கண்ட ஸ்ரீவாதிராஜர், நில உரிமையாளருக்கு மீண் டும் பார்வை தருமாறு ஹயக்ரீவரிடம் வேண்டிக் கொண்டார். ஸ்வாமியின் அருளால் உரிமையாளருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைத் தது.
‘‘ஸ்ரீ மடத்தில் இருந்து வெளிப் பட்ட தெய்வக் குதிரையின் திருப்பாதங்கள் பதிந்த எனது நிலம், இனிமேல் ஸ்ரீ மடத்துக்கே சொந்தம்!’’ என்று சொல்லி, தனது நிலத்தை ஸ்ரீ மடத்துக்கு தானமாகக் கொடுத்தார் அவர்.
அன்று முதல், அந்த நிலத்தில் இருந்து விளையும் கடலையை வேக வைத்து வெல்லம், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைக் கலந்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும் பழக்கத்தை உண்டாக்கி னார் ஸ்ரீவாதிராஜர். இது ஹயக்ரீவ பண்டி எனப்படும்.
ஸ்வாமிக்காகத் தயாரிக்கப்பட்ட அந்த நைவேத்தியத்தை ஒரு தட்டில் வைத்து, இரண்டு கைகளாலும் பிடித்துத் தன் தலைக்கு மேல் வைத்துக் கொள்வார் ஸ்ரீவாதி ராஜர்.
அவருக்குப் பின்புறமாக ஹயக்ரீவர், வெண்மையான குதிரை வடிவில் வந்து, தனது முன்னங் கால்கள் இரண்டையும் தூக்கி ஸ்ரீவாதிராஜரின் தோள்களின் மீது வைத்தபடி நைவேத் தியத்தை முழுவதுமாக உண்ணாமல் கொஞ்சம் மீதி வைப்பார். அந்த மீதியை ஸ்ரீவாதிராஜர் உண்பார். இது அன்றாட நிகழ்ச்சி.
ஸ்ரீவாதிராஜரிடம் பொறாமை கொண்ட ஒரு சிலர், ஒரு நாள் நைவேத்தியத்தில் விஷம் கலந்தனர். ‘வழக்கப்படி, மீதியை வாதிராஜர் உண்பார். அவர் கதை முடிந்து விடும்!’ என்று நம்பினர்.
ஸ்வாமி, அன்று முழுவதுமாக உண்டு விட்டார். ‘ஏதோ நடந்திருக்கிறது!’ என்று ஸ்ரீவாதிராஜர் நினைத் தார். அப்போது குதிரை (ஸ்வாமி)யும் மயங்கிக் கீழே விழுந்தது.
இறைவனை தியானித்த ஸ்ரீவாதிராஜர், வாதிராஜகுள்ளா எனும் ஒரு வகைக் கத்தரிக்காயை வேக வைத்துக் குதிரைக்குக் கொடுத்தார். விஷம் நீங்கித் துள்ளிக் குதித்து எழுந்தது குதிரை.
ஸ்ரீவாதிராஜர் செய்த ‘ஹயக்ரீவபண்டி’ எனும் அந்த நைவேத்தியத்தைத் தயாரித்து ஹயக்ரீவரின் அவதார நாளான ஆவணி மாதத் திருவோணத்தன்று ஹயக்ரீவருக்கு நைவேத்தியம் செய்து வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம், கல்வி, செல்வம் ஆகியவற்றைப் பெற்று மேன்மை அடையலாம். மாதந்தோறும் வரும் திருவோணத்தன்று ஹயக்ரீவ பண்டியைத் தயாரித்து அவருக்கு நைவேத்தியம் செய்து வழிபடுபவர்கள், எல்லா வளங்களையும் பெற்று மேன்மை அடைவார்கள். ஸ்ரீவாதிராஜர் கி.பி.1,600- ஆம் ஆண்டு ஸோதே யில் பிருந்தாவனப் பிரவேசம் செய்தார்

ஸ்ரீதேசிகனும் ஹயக்ரீவரும்!
ஸ்ரீ ரங்கநாதனால், ‘வேதாந்தாச்சார்யர்’ என்ற விருதும் ஸ்ரீரங்கநாச்சியாரால், ‘ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்’ எனும் விருதும் வழங் கப் பெற்றவர் ஸ்ரீ வேதாந்த தேசிகர். சகல கலைகளிலும் திறமை சாலி.
திருவஹீந்திரபுரத்தில் உள்ள ஒளஷதாத்ரி மலை மேல் ஸ்ரீநரசிம்ம சந்நிதியில் தியானித்து, கருட பகவானால் ஸ்ரீஹயக்ரீவ மந்திர உபதேசமும், ஸ்ரீஹயக்ரீவ விக்கிரகமும் பெற்றவர். ஹயக்ரீவரை நேரில் தரிசித்து அவரது அருளுக்கு முழுப் பாத்திரமானவர். எவராலும் வாதம் செய்து வெல்ல முடியாதவர். பொருள் மேல் பற்றற்றவர்.
மேலும் சரஸ்வதிதேவி யால் ஸ்ரீராமானுஜருக்கு அளிக்கப்பட்ட ஸ்ரீ ஹயக்ரீவ விக்கிரகத்தைப் பெறும் பேறு பெற்றவர். ‘ஸ்ரீராமானுஜருக்குக் கிடைத்த ஹயக்ரீவ விக்கிரகம், அப்புள்ளா ரின் சந்ததி வழியாக இப்போது நம்மிடம் வந்திருக்கிறது’ என்று மனமகிழ்ந்த ஸ்ரீதேசிகன், அந்த ஹயக்ரீவ விக்கிர கத்தை தனது தினசரி பூஜையில் சேர்த்து ஆராதித் துப் போற்றியவர்.
ஸ்ரீதேசிகன் காஞ்சியில் இருந்தபோது பெருந்தேவித் தாயாரையும் பேரருளாள னான ஸ்வாமியையும் தரிசித்து ‘ந்யாஸ தசகம்’ ‘வரதராஜ பஞ்சாசத்’ ஆகிய ஸ்தோத்திரங்களையும், ‘அடைக்கலப் பத்து’, ‘அர்த்த பஞ்சகம்’ ஆகிய பிரபந்தங் களையும் அருளினார்.
மேலும் ஸ்ரீவேதாந்த தேசிகர் எழுதிய ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 ஸ்லோகங்கள் கொண்டது. இதை பக்தியுடன் பாராயணம் செய்தால், தேர்ந்த அறி வும் வாக்கு வல்லமையை யும் பெறலாம் என்று ஸ்ரீ தேசிகனே அருளி இருக் கிறார்.
இதன் முதல் ஸ்லோகத்தையாவது நம் குழந்தைகளுக்குச் சொல்லித் தந்தால், அவர்கள் கல்விமான் களாவது நிச்சயம்.
ஜ்ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்ப்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யா
நாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே
கருத்து: ஞானம், ஆனந்தம் ஆகியவற்றின் வடிவமாக, மாசற்ற ஸ்படிக மணி போன்ற திருமேனியுடன், எல் லாக் கலைகளுக்கும் உறைவிடமாக, குதிரை போன்ற திருக்கழுத்தை உடைய எம்பெருமானை வழி படுகிறோம்.
ஸ்ரீதேசிகனின் வாழ்வில் நடந்த அபூர்வ நிகழ்ச்சிகளில் சில...
ம கான்கள் பலர் அவதரித்த பெருமை கொண்டது நமது புண்ணிய பூமி. இதனால், இதை ‘ஞான பூமி’ என்பர். இங்கு அவதரித்த மகான்கள் ஒவ்வொருவரும் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் நமக்காக அர்ப்பணித்தவர்கள்.
‘தெய்வம் மடி தற்றுத் தான் முந்துறும்’ எனும் திருவள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, இந்த மகான்களுக்காக தெய்வமே இறங்கி வந்து, பல செயல்களைச் செய்திருக்கிறது. இருந்தும் அடக்கத்தால் தங்களைத் தாங்களே மறைத்துக் கொண்டவர்கள் இவர்கள். அதாவது தம்பட்டம் அடிக்காதவர்கள். இவர்களின் வாழ்க்கையில் நடந்தவற்றை அறிந்து கொண்டால் மட்டுமே, அவர்களது பெருமை புரியும்.
அத்துடன், ‘ஆ! நமது மண் ணில் எவ்...வளவு பெரியவர் கள் வாழ்ந்திருக்கிறார்கள். கோயிலிலும் படங்களிலும் நாம் தரிசிக்கும் தெய்வங்கள், இவர்களுடன் நேரடியாகப் பேசி இருக்கின்றனவே!’ என்று உள்ளம் நெகிழும். தானாகவே தீயவற்றை விட்டு விலகி நல்லவற்றை நாடும்.
மகான்களுக்கு அருள் புரிந்த மாதவன் ஓடி வருவான்; நமக்கும் அருள் புரிவான். வாருங்கள்! ஸ்ரீதேசிகனிடம் போகலாம்.
கருடனும் ஹயக்ரீவரும்!
ஸ்ரீ தேசிகனுக்கு கருட மந்திரத்தை உபதேசம் செய்தவர் அப்புள்ளார் என்ற உத்தமர். பரம்பரைச் சொத்து போல கருட மந்திரம் கிடைக்கப் பெற்ற பாக்கியவான் அப்புள்ளார்.
ஒரு முறை ஸ்ரீ தேசிகன், திரு வஹீந்திரபுரம் ஸ்வாமியையும் தாயாரையும் தரிசித்தார். ஒளஷதாத்ரி மலை மேல் ஏறி, ஸ்ரீநரசிம்மரின் சந்நிதி எதிரில் இருந்த அரச மரத்தின் அடியில் அமர்ந்து கருட மந்திரம் ஜபித்தபடி தியானத்தில் ஆழ்ந்தார்.
உரு ஏற ஏற கருட மந்திரம் தனது சக்தியைக் காட்டியது. ஸ்ரீதேசிகனைத் தேடிவந்து கருட பகவான் காட்சி அளித்தார். மனோதிடத்துடன் மந்திரத்தை உச்சரித்த ஸ்ரீதேசிகனுக்குக் கருட பகவான் ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்ததுடன், ஹயக்ரீவ விக்கிரகம் ஒன்றையும் தந்து மறைந்தார்.
கருட பகவான் உபதேசித்த ஹயக்ரீவ மந்திரம் ஸ்ரீதேசிகனின் உள்ளத்தில் பதிந்தது. அந்த மந்திரத்தை உச்சரித்து, ஹயக்ரீவரை நோக்கி தியானத்தில் ஆழ்ந்தார்.
அதன் பலன்? ஹயக்ரீவர், ஸ்ரீ தேசிகனுக்கு முன்பாக எழுந்தருளி னார். ‘தேசிகனுக்கு ஞானமும், உண்மை யான தெய்வ தத்துவங்களை மக்களிடையே எடுத்துச் சொல்லும் ஆற்றலும் பெருக வேண்டும்’ என எண்ணி, பரிபூர்ண அருள் புரிந்தார்.
ஹயக்ரீவரின் அனுக்கிரகம் பெற்ற ஸ்ரீதேசிகன் திருவஹீந்திர புரத்திலேயே நெடுங் காலம் இருந்தார். ஹயக்ரீவ ஸ்தோத்திரம், கருட பஞ்சாசத், தேவ நாயக பஞ்சாசத், அச்யுத சதகம் போன்ற ஸ்தோத்திரங்களையும் மும்மணிக் கோவை, நவமணிமாலை போன்ற தமிழ்ப் பிரபந்தங்களை யும் அருளிய ஸ்ரீதேசிகன், மக்களுக்கு தெய்வ தத்து வங்களை எடுத்துச் சொல்லி, நல்வழி காட்டி னார்.
தூணில் இருந்து வெளிப்பட்ட குளம்!
தெ ய்வமே தேடி வந்து அருள் புரிந்த ஸ்ரீதேசிகனைத் தேடி வந்தார் துறவி ஒருவர். ஸ்ரீ தேசிகனின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாத அந்தத் துறவி ஒரு மந்திரவாதியும்கூட. அவர், ஸ்ரீதேசிகனிடம் வாதம் செய்ய வந்தார். ஆனால், ஸ்ரீ தேசிகனின் முன்னால் அந்தத் துறவியின் வாதம் எடுபடவில்லை. தோல்வியடைந்தார்.
அதனால் மந்திரவாதியான அவர் கோபமடைந்தார். ஸ்ரீதேசிகனுக்கு எப்படியாவது தீங்கிழைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். எனவே, அதற்காகத் தனது மந்திர சக்தியைப் பயன்படுத்தினார். ஆனால், ஹயக்ரீவரின் அருள் பெற்றவர்களை எந்தத் தீய மந்திர சக்திகளும் அண்டாது என்பது மந்திரவாதிக்குத் தெரியாது.
என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.மந்திர சக்தி வேலை செய்யத் தொடங்கியது. ‘விடுவிடு’ வென்று ஒரு குளத்துக்குள் இறங் கிய மந்திரவாதி, குளத்து நீர் முழுவதையும் குடித்தார். அதன் விளைவாக ஸ்ரீதேசிகனின் வயிறு பருக்கத் தொடங்கியது.
இந்தச் சூழ்ச்சியை அறிந்த ஸ்ரீதேசிகன் அணுவளவும் கவலைப் படவில்லை. தனக்கு அருகில் இருந்த தூண் ஒன்றை நகத்தால் கீறினார். என்ன ஆச்சரியம்! தூணில் இருந்து தண்ணீர் கொட்டத் தொடங்கியது. படிப்படியாக ஸ்ரீதேசிகனின் வயிறும் பழைய நிலைக்குத் திரும்பியது.
அப்போதுதான் ஸ்ரீதேசிகனின் மகிமை, மந்திரவாதிக்கு விளங் கியது. ‘இவரிடம் நமது மந்திர சக்தி எடுபடாது. இவரை தரிசித்ததே நமது புண்ணியம்!’ என்று எண்ணிய மந்திரவாதி, ஸ்ரீதேசிகனின் திருவடிகளில் விழுந்தார். தன்னை மன்னிக்கும் படி அவரிடம் வேண்டிக் கொண்டார். பெரும் தீமை செய்த அந்த மந்திரவாதியை மன்னித்து அருள் புரிந்தார் ஸ்ரீதேசிகன்.
அரசவை அழைப்பை உதறித் தள்ளினார்!
ஸ்ரீ தேசிகனின் ஞானமும் நடவடிக்கைகளும் அவரின் இளமைத் தோழரான வித்யாரண்யர் என்பவரின் செவிகளையும் எட்டின. வித்யாரண்யர் மீது அந்தப் பகுதி அரசருக்குப் பெருமதிப்பும் மரியாதையும் இருந்தன.
‘ஸ்ரீதேசிகனுக்கும் அரசனின் ஆதரவைப் பெற்றுத் தர வேண்டும். அவருடைய பொருளாதரத்தை மேம்படுத்த வேண்டும்’ என்று எண்ணினார் வித்யாரண்யர். எனவே, ஆளனுப்பி ஸ்ரீ தேசிகனை அரசவைக்கு வருமாறு வேண்டினார்.
அகில உலகத்துக்கும் அரசனான ஸ்வாமியின் அருள் பெற்ற ஸ்ரீ தேசிகன், ஒரு சிறு பகுதிக்கு தலைவனான அந்த அரசனின் அவைக்குப் போக நினைப்பாரா என்ன?
ஆகவே, அப்போது தன் உள்ளத்தில் இருந்ததை அப்படியே கடிதமாக எழுதி பதிலாக அனுப்பி வைத்தார்.
அதில், செல்வத்தின் இழிவையும் நிலை யாமையையும், ஒரு போதும் அழியாது நிலை பெற்றிருக்கும் பேரருளாளன் ஆன செல்வத்தைத் தவிர வேறு எதையும் நாடாத தனது மனநிலையையும் தெளிவாக விளக்கி இருந்தார்.
இன்றும் உள்ள அந்த பதில் ‘வைராக்ய பஞ்சகம்’ எனப்படுகிறது. அதைப் படித்தால் நமக்கே வைராக்கியம் வரும். உத்தமரான ஸ்ரீதேசிகனின் தெளிவான உள்ளமும் உயர்வும் புரியும். ஸ்ரீதேசிகனின் இந்த வைராக்கியம், வித்யாரண்யருக்கு வியப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதேசிகர்!
வை ணவ ராஜதானியான ஸ்ரீரங்கத்தில், பிற மதத்தவர்கள் சிலர் வந்து விவாதம் செய்ய முற்பட்டனர். ‘இந்த விவாதத்தில் ஸ்ரீதேசிகன் இருந்தால் நன்றாக இருக்கும்!’ என்று நினைத்த அங்கு இருந்த பெரியோர்கள், ஸ்ரீதேசிகனுக்கு அழைப்பு விடுத்தனர். ஸ்ரீதேசிகனுக்கும் சந்தோஷம்.
சாதாரணக் கல்விமான்களுக்கு வரும், ‘ஆஹா! விவாதமா, என்னுடனா? விட்டேனா பார்!’ என்ற எண்ணத்தில் விளையும் சந்தோ ஷம் அல்ல அது. ‘ஸ்ரீரங்கநாதனை சேவிக்கும் பாக்கி யம் கிடைத்ததே! அதற்காக ஸ்வா மியே செய்த ஏற்பாடு இது!’ என்ற எண்ணத்தால் விளைந்த சந்தோ ஷம் அது.
ஆகவே, ஸ்ரீரங்கத்துக்கு வந்தார் ஸ்ரீதேசிகன். அங்குள்ள எல்லா சந்நிதிகளிலும் முறைப்படி சேவித்த பின், வாதம் நிகழும் இடத்தை அடைந்தார்.
வாதம் புரிய வந்தவர்களும், மகான்கள் உட்பட மக்கள் பல ரும் அங்கு குழுமி இருந்தனர். ஸ்ரீதேசிகனைக் கண்டதும் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. வாதம் தொடங்கியது. வழக்கப்படி ஸ்ரீதேசிகனே வெற்றி பெற்றார்.
அவரது பெருமையையும் ஆத்ம குணங்களையும் உணர்ந்த ஏராள மானோர் அவரின் திரு வடிகளில் விழுந்து, வணங்கினார்கள். மேலும், அவர் வாயிலாக உபதேசம் பெற விரும்பினர். அந்த விருப்பத்தை நிறைவேற்றினார் ஸ்ரீதேசிகன்.
தான் சொல்வது, தனது காலத்துடன் நின்று விடாமல், எதிர்காலத்திலும் நிலைத்திருப்பதற் காகப் பலப்பல நூல்களை அருளி னார்.
இப்படியாக பகவத் த்யான ஸோபானம், தசாவதார ஸ்தோத்ரம் ஆகியவற்றுடன் தத்துவ முக்தா கலாபம், ஸர்வார்த்த ஸித்தி, ந்யாய பரிசுத்தி, ந்யாய ஸித்தாஞ்ஜநம், தத்துவபீகை, சத தூஷணி ஆகிய வேதாந்த நூல்களையும் அருளினார்.
இப்படி உலகத்தவர்க்குச் செய்யும் பெரும் உபகாரத்தைக் கண்டு மகிழ்வுற்ற ஸ்ரீரங்கநாதன், ‘வேதாந்தாச்சார்யார்’ என்ற விருதை ஸ்ரீதேசிகனுக்கு வழங்கினார்.
அவர், எல்லாக் கலைகளிலும் விசேஷத் திறமை படைத்தவராக இருந்ததால் ஸ்ரீரங்கநாச்சியாரும், ‘ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்’ என்ற விருதை வழங் கினாள்.
கோணல் கற்களால் ஆன கிணறு
ஸ்ரீ தேசிகன் திருவஹீந்திரபுரத்தில் இருந்தபோது, ஒரு முறை... எல்லாக் கலைகளிலும் தேர்ந்தவர் ஸ்ரீதேசிகன் என்பதைக் கேள்விப்பட்ட கொத்த னார் ஒருவர், அவரைச் சோதனை செய்ய வந்தார்.
அதற்கு ஸ்ரீதேசிகன் ஒப்புக் கொண்டார்.
‘‘நான் தரும் கற்களைக் கொண்டு நீங்கள் ஒரு கிணற்றை உருவாக்க வேண்டும்!’’ என்றார் கொத்தனார்.
வேலை ஆரம்பம் ஆனது. அதற்காக கோணல் கற்களை மட்டுமே எடுத்துக் கொடுத்தார் கொத்தனார்.
‘இதைக் கொண்டு இவரால் ஒன்றும் செய்ய முடியாது. தோற்றுப் போவார்!’ என்று எண்ணினார் கொத்தனார். ஆனால், அந்தக் கோணலான கற்களைக் கொண்டு தனது வல்லமையால் அழகான ஒரு கிணற்றை உருவாக்கினார் ஸ்ரீ தேசிகன்.
அகங்காரம் நீங்கி வியப்படைந் தார் கொத்தனார். பிறகு ஸ்ரீதேசி கனை வணங்கி மன்னிப்புக் கேட் டார். அன்று ஸ்ரீதேசிகன் கட்டிய கிணறும் அவரின் திருவடிகள் பதிந்த திருமாளிகையும் இன்றும் திருவஹீந்திரபுரத்தில் உள்ளன. அங்கு வரும் பக்தர்கள் இன்றும் அவற்றை சேவிக்கிறார்கள்.
குதிரையைக் கட்டுங்கள்!
கா ஞ்சியில் நீண்ட நாட்கள் இருந்த ஸ்ரீதேசிகன், ஒரு முறை ஸ்ரீரங்கநாதரை சேவிக்க வேண் டும் என்ற எண்ணத்தில் அங் கிருந்து புறப்பட்டார். அவர் திருக்கோவலூரை அடையும் போது இரவாகிவிட்டது.
எனவே, கடலை வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவரது வீட் டின் அருகில் தமது தினசரி பூஜை செய்யும் பெருமாளுடன் ஸ்ரீ தேசிகன் தங்க நேரிட்டது.
ஸ்ரீஹயக்ரீவருக்குச் சுத்த தீர்த்தத்தை நைவேத்தியம் செய்த ஸ்ரீதேசிகன், அன்று உபவாசம் இருந்தார். நள்ளிரவு நேரம். கடலை வியாபாரி அவசர அவச ரமாக ஸ்ரீதேசி கனிடம் ஓடி வந்தார்.
‘‘ஸ்வாமி! ஒரு வெள் ளைக் குதிரை எனது கடலை மொத்தத்தை யும் மேய் கிறது. என்னால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தாங்கள்தான் ஏதாவது செய்ய வேண்டும்’’ என வேண்டினார். ‘ஸ்ரீஹயக்ரீவரின் லீலையே அது!’ என்பதை உணர்ந்த ஸ்ரீதேசிகன், ‘‘கொஞ்சம் பால் கொண்டு வாருங் கள்!’’ என்றார்.
பால் வந்ததும் அதை, குதிரை வடிவ ஸ்ரீஹயக்ரீவருக்கு நைவேத்தி யம் செய்தார். அத்துடன் அந்தக் குதிரை மறைந்தது. ஸ்ரீ தேசிகனின் மகிமையைக் கண்ட வியாபாரி, அவருக்கு தாசானுதாசனாக மாறி னார். அவரிடம் செல்வம் குவிந்தது. வேத நூல் சொல்லும் முறைப்படி நூறு ஆண்டுகள் வாழ்ந்து வழி காட்டிய, ஸ்ரீஹயக்ரீவரின் அருளை முழுமை யாகப் பெற்ற ஸ்ரீதேசிகனது வாழ்வில் நடந்த அருட் செயல்கள் இன்னும் பல.
ஸ்ரீ தேசிகனும் ஹயக்ரீவரும் நமக்கு சர்வ மங்கலங்களையும் அளிக்க வேண்டுவோம்.
ஸ்ரீஹயக்ரீவர் திருத்தலங்கள்
திருவஹீந்திரபுரம்: சென்னையில் இருந்து கடலூர் சென்றால் அங்கிருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். இங்குள்ள அருள்மிகு தேவநாத ஸ்வாமி திருக்கோயில் எதிரில் உள்ள ஒளஷத கிரி மலையில் ஸ்ரீஹயக்ரீவர் காட்சி தருகிறார். ஒளஷத கிரி சிறிய குன்று என்றபோதிலும் மேலே விஸ்தாரமான சந்நிதி. மூலவர் லட்சுமி ஹயக்ரீவராக காட்சி தர, அருகே ஸ்ரீவேணுகோபாலன், கருடன் மற்றும் ஸ்ரீ நரசிம்மரும் இருக்கிறார்கள். ஹயக்ரீவர் உற்சவ மூர்த்தி மேலிரு கரங்களில் சங்கு-சக்கரம் தாங்கி கீழ் வலக்கை அபய ஹஸ்தமும் கீழ் இடக் கை ஸ்ரீ கோசத்துடன் திகழ்கிறது. ஆழ்வார்களால் பாடப்பெற்ற திவ்விய தேசங்களுள் இங்கு மட்டும் ஹயக்ரீவருக்கு பிரதானமான தனிச் சந்நிதி உள்ளது. மலையடிவாரத்தில் தேவநாதன் சந்நிதியில் ஸ்ரீ தேசிகனால் வழிபடப்பட்ட யோக ஹயக்ரீவர் காட்சி அளிக்கிறார்.
திருஇந்தளூர்: மாயவரம்- திருஇந்தளூர் பரிமளரங்கநாதன் திருக்கோயில் மாட வீதியில் மிகப் புராதனமான ஹயக்ரீவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஸ்வாமி தேசிகனும் லட்சுமி ஹயக்ரீவரும் காட்சி தருகிறார்கள்.
புன்னைநல்லூர்: தஞ்சை, புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள அருள்மிகு கோதண்டராம ஸ்வாமி கோயிலின் தேர் மண்டபத்தில் ஹயக்ரீவருக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது.
பாண்டிச்சேரி: திண்டிவனம்- பாண்டிச்சேரி செல்லும் சாலையில் உள்ள மொரட்டாண்டி கிராமத்தில் மகா பிரத்யங்கரா ஆலயத்தில் ஹயக்ரீவர் சந்நிதி உண்டு. திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து இந்த இடத்துக்கு அடிக்கடி பஸ் வசதி உண்டு. மேலும் பாண்டிச்சேரி அருகே ராமகிருஷ்ண நகர் எனும் இடத்திலும் ஹயக்ரீவர் சந்நிதியை தரிசிக்கலாம்.
சென்னை-மேடவாக்கம்: சைதாப் பேட்டையில் இருந்து தாம்பரம் செல்லும் வழியில் வேளச்சேரி, பள்ளிக்கரணையை அடுத்து உள்ளது மேடவாக்கம். இங்கு சிறிய குன்றின் மேல் உள்ள ஸ்ரீநிவாசர் கோயிலில் ஹயக்ரீவர் காட்சி தருகிறார்.
சென்னை- வில்லிவாக்கம்: இங்குள்ள சௌமிய தாமோதர பெருமாள் கோயில் அருகில் ஹயக்ரீவர் மணி மண்டபம் அமைந்துள்ளது. வைணவத்தில் ஸ்வாமி தேசிகன் மீது அளவில்லா பற்றுக் கொண்ட ‘ஸேவா ஸ்வாமி’ என்ற மஹனீயரால் கட்டப்பட்ட ஹயக்ரீவருக்கான தனிக் கோயில் இது.
சென்னை-திருமயிலை: சித்ர குளம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீநிவாஸர் திருக்கோயிலில் ஸ்வாமி தேசிகன் சந்நிதியில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் தரிசனம் தருகிறார்.
சென்னை- மேற்கு மாம்பலம்: அயோத்தியா மண்டபம் அருகே உள்ள அருள்மிகு சத்ய நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஹயக்ரீவரை தரிசிக்கலாம்.
மேற்கு மாம்பலத்திலேயே கோவிந்தன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிகேசவர் ஸ்ரீபாஷ்யகாரர் தேவஸ்தான கோயிலிலும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை தரிசிக்கலாம்.
சென்னை-நந்தம்பாக்கம்: அருள் மிகு கோதண்டராம ஸ்வாமி மற்றும் ஸ்ரீனிவாசர் திருக்கோயில்களில் ஸ்ரீஹயக்ரீவரை தரிசிக்கலாம்.
செட்டிப்புண்ணியம்: சென்னை- செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள சிங்கப்பெருமாள்கோயில் சென்று அங்கிருந்து 6 கி.மீ. பயணித்தால் செட்டிப்புண்ணியத்தை அடையலாம்.
இந்த ஊரில் உள்ள தேவநாத ஸ்வாமி திருக்கோயிலில் யோக ஹயக்ரீவர் தரிசனம் தருகிறார்.
இந்த ஹயக்ரீவர், தேசிகனால் ஆராதிக்கப்பட்டவர் என்றும் திருவஹீந்திபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டவர் என்றும் கூறுகிறார்கள். சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து இங்கு செல்ல ஆட்டோ வசதி உண்டு.
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், ஆடிசன்பேட்டை-ரங்கசாமி குளம் அருகில், தீபப்பிரகாசர் கோயிலில் ஸ்வாமி தேசிகன் சந்நிதியில், லட்சுமி ஹயக்ரீவர் காட்சி தருகிறார். அதே திருக்கோயிலில் உள்ள பரகால மடத்திலும் லட்சுமி ஹயக்ரீவரை தரிசிக்கலாம்.
காஞ்சி வரதராஜர் சந்நிதியில் அமைந்துள்ள அண்ணா கோயிலிலும் ஹயக்ரீவர் தரிசனம் கிடைக்கும்.

 

Comments

  1. Please Visit www.dhanvantripeedam.com லட்சுமி ஹயக்ரீவரை தரிசிக்கலாம்.

    ReplyDelete

Post a Comment