திருவாதிரை ஸ்பெஷல்!

தி ருவாதிரைக்கு ஒரு வாய் களி’ என்பது பழமொழி. அன்று ஒரு வாய் களி தின்று மகிழ்வார்கள். ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். கிருஷ்ணனுக்கு ரோகிணி. இவ்வாறு சிவனுக்கு ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. இந்த திருவாதிரை நாளன்று ஒரு வாய் களி தின்றால் அதன் பலன் அளவிடற்கரியது. திருவாதிரை விரதம் இருப்பவர்கள், களி செய்து படைக்கும் வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு, சிவாலயம் சென்று நடராஜரை தரிசித்து வருவது சிறப்பு.
ஸ்ரீ தாணுமாலயன்
தாணுமாலயன் தரிசனம்!
கு மரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் இருந்து தெற்கே ஆறு கி.மீ தொலைவில் கன்யாகுமரி செல்லும் பாதையில் உள்ளது சுசீந்திரம். சிவன்- பிரம்மா- விஷ்ணு ஆகிய மூவரும் ஒருசேர எழுந்தருளும் திருத்தலம் இது. திருவாதிரை தரிசனம் செய்ய உகந்த தலமும்கூட. இந்தத் தலம் அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயாதேவியின் கற்பின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
ஒரு முறை முப்பெரும் தேவியரின் வேண்டுகோளின்படி சிவன், பிரம்மன், விஷ்ணு ஆகிய மூவரும் அனுசூயாவின் கற்பின் மகிமையைச் சோதிக்க அத்திரி முனிவரின் குடிலுக்கு தவசிகளாக வந்து சேர்ந்தனர். அவர்களை உபசரித்து விருந்தளிக்க முற்பட்ட அனுசூயாவிடம், அவர்கள், ‘‘குழந்தை இல்லா வீட்டில் உணவு ஏற்க மாட்டோம்!’’ என்று கூறினர். சற்றுத் திகைத்த அனுசூயா, பின்னர் மனதில் தன் கணவரை தியானித்து மூவரையும் குழந்தைகளாக மாற்றி, அவர்களுக்கு ஒரு தாயாக அமுதூட்டினாள்.
அனுசூயாவின் கற்பின் மேன்மையை அறிந்த முப்பெருந்தேவியரும் தங்கள் கணவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டினர். அனுசூயா அவர்களிடம், ‘‘உங்கள் நாயகர்களை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்!’’ என்றாள். அதன்படியே அந்தக் குழந்தைகளை மூன்று தேவியரும் எடுத்து அணைத்துக் கொண்டனர். அப்போது ஒரு தவறு நிகழ்ந்தது. குழந்தைகளைச் சரியாக அடையாளம் தெரியாமல் தேவியர்கள் மாற்றி எடுத்தனர். இதனால் தேவதேவியரின் பெருமை குன்றிவிட்டது. தங்களின் தவறுக்குக் கிடைத்த தண்டனை இது என மூவரும் கலங்கினர்.
அனுசூயா தன் கணவரின் பாத தீர்த்தத்தை அந்த குழந்தைகளின் மேல் தெளிக்க... அந்த மூன்று குழந்தைகளும் தங்கள் பழைய உருவத்தை அடைந்தனர். இந்த மயக்க நிலையில் ஏற்பட்ட தூய்மைக் குறைவு நீங்க அந்தத் தலத்தில் உள்ள தீர்த்தம் அருகே ஹோம அக்னி வளர்த்து, மூன்று தேவியரும் நெருப்பில் இறங்கித் தம்மைப் புனிதப்படுத்திக் கொண்டனர். அது ஒரு திருவாதிரை நாளன்று நிகழ்ந்தது. தேவர்களும் முனிவர்களும் தேவியருடன் கூடிய மும்மூர்த்திகளை அங்கு ஒருங்கே தரிசித்து மகிழ்ந்தனர். தேவர்கள் மறைந்ததும் அவ்விடம் இருந்த கொன்றை மரத்தடியில் மூன்று லிங்கங்கள் எழும்பின. தாணு (சிவன்), மால் (விஷ்ணு), ஐயன் (பிரம்மா) இணைந்த தாணுமாலயனாக அந்தத் தலத்தில் எழுந்தருளினார்கள். இந்தச் சம்பவம் நிகழ்ந்த சுசீந்திரத்தில் திருவாதிரை தினம் சுமங்கலிப் பெண்களுக்கு உகந்த நாளாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
கோயிலின் திருவிழாக்களில் மார்கழித் திருவாதிரையும் ஒன்பதாம் நாள் தேரோட்டமும் மிகவும் பிரபலமானவை. பத்து நாட்கள் இங்கு நடைபெறும் விழாவில் ஒன்பதாம் நாளில் லட்சக்கணக்கானோர் ஒன்றுகூடித் தேர் இழுப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஆடல் வல்லானின் நடனம்!
பா ற்கடலில் ஒரு நாள், தன் மீது பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணு திடீரென மகிழ்ச்சியால் திளைப்பதைக் கவனித்த ஆதிசேஷன் அதற்குக் காரணம் கேட்டார்.
திருவாதிரை நாளான அன்று சிவபெருமான் நடேசனாக மாறி ஆடிய திருத்தாண்டவமே தனது மகிழ்ச்சிக்குக் காரணம் என்றார் திருமால். பரந்தாமனையே மெய்ம்மறக்கச் செய்த அந்த திருநாட்டியத்தைத் தானும் காண ஆவல் கொண்டார் ஆதிசேஷன். பெருமாளும் அதற்கு ஆசியளித்தார். ஆதிசேஷன் தன் உருவத்தில் பாதி முனிவராகவும், மீதியைப் பாம்பாகவும் மாற்றிக் கொண்டு பதஞ்சலி முனிவராக பூலோகம் வந்து தவம் செய்யத் தொடங்கினார்.
தவம் உக்கிரமடைந்தது. ‘‘பதஞ்சலி!’’ - திடீரெனக் கேட்ட குரலால் கண் விழித்தார் அவர். குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் குமிண் சிரிப்புமாக நின்றிருந்தார் தென்னாடுடைய சிவபெருமான். மெய்சிலிர்த்த பதஞ்சலி, ஈசனிடம் தாண்டவம் காட்ட வேண்டினார். ‘‘முனிவரே... உம்மைப் போலவே வியாக்ரபாதரும் எம் திருநடனத்துக்காகக் காத்திருக்கிறார். நீவிர் இருவரும் தில்லையில் எம் நடனத்தைக் கண்டு மகிழ்வீராக!’’ எனக் கூறி மறைந்தார் இறையனார். அதன்படி பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் சிதம்பரம் திருத்தலத்தில் ஈசனுக்குரிய திருவாதிரைத் திருநாளில் ஆண்டவனின் திருநடனத்தைக் காணும் பேறு பெற்றார்கள். எனவே, மார்கழி திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து சிவாலயம் சென்று நடராஜ தரிசனம் கண்டால் நமது பாவங்கள் விலகி புண்ணியங்கள் பெருகும்.

Comments