பகவானின் உபகாரம்

ஸ்ரீமன் நாராயணன் நமக்குச் செய்த உதவிகள் கணக்கிலடங்காதவை. சின்னச் சின்ன விஷயங்கள் துவங்கி பெரிய விஷயங்கள் வரை எத்தனை எத்தனையோ உதவிகளைச் செய்திருக்கிறார் பெருமாள்" என்றார் தம் சொற்பொழிவில், நாவல்பாக்கம் டாக்டர் வாசுதேவாச்சாரியார்.
இலையில் சாதத்தைப் போட்ட பிறகு இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, எம்பெருமானை நினைக்க வேண்டும் என்பது சாஸ்திரம். ஏனென்றால், அவனது அனுக்கிரகத்தால்தான் பிரசாதம் என்பது நமக்குக் கிடைத்திருக்கிறது. அந்த ஆகாரம் கூட கிடைக்கப்பெறாத எத்தனையோ பேர் இந்த பூமியில் இருக்கிறார்கள் அல்லவா? எல்லா ஜந்துக்களுக்குமே அததற்குத் தேவையான ஆகாரத்தை, உணவை பகவான் சிருஷ்டித்திருக்கிறார். ஒரு பசுமாடு இருந்தால், அதற்குத் தேவையான புல் என்பது இருக்கிறது. அதேபோல மனிதர்களாகிய நமக்கு ஆகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மழை பெய்யவைத்து, பயிர்களை வளரச்செய்து, அதிலிருந்து நமக்கு அரிசி கிடைக்கும்படி பகவான்தானே உருவாக்குகிறார்? அதற்கு, பகவானுக்கு முதலில் நன்றி சொல்லணும்.
அடுத்தது, நாம் சாப்பிட்ட சாப்பாடு சரியாக ஜீரணமாகிறது என்றால் அதற்கும் பகவானுக்கு நன்றியைச் சொல்லணும். ஏன்? சரியானபடி ஜீரணமாக வேண்டுமென்றால் நமக்குள் ஒரு உஷ்ணம் இருக்க வேண்டும். அந்த உஷ்ணத்தைக் கொடுத்து நாம் சாப்பிட்ட ஆகாரத்தை ஜீரணம் செய்ய வழி செய்கிறவன் பகவான்தானே! ‘நான்தான் உள்ளுக்குள் அக்னியாக இருக்கிறேன்’என்று பகவத்கீதையில் பகவான் சொல்லியிருக்கிறார்.
இது மட்டுமா? எம்பெருமான் செய்த மிகப்பெரிய உபகாரம்... அதாவது, உதவிகள் நான்கு இருக்கிறதாம். தேசிகருடைய குமாரர் அதை அழகாக வரிசைப்படுத்தி கொடுத்திருக்கிறார். முதல் உபகாரம், அன்று இவ்வுலகை உருவாக்கியது. ப்ரளய காலத்தில் ஒன்றுமே இல்லாத நமக்கு ஞானத்தைத் தந்து நம்மை சிருஷ்டித்தார் பகவான். ஏன் ப்ரளயத்தை உண்டுசெய்தார் என்றால், ஒரு தாயானவள் தன் குழந்தை காலையில் எழுந்தது முதல் ஓடி ஆடி விளையாடிக்கொண்டே இருந்தால் அதற்கு சிறிது நேரமாவது ஓய்வு கொடுக்க வேண்டும் என எண்ணி, அதை எப்படி தூங்கச் செய்வாளோ, அப்படி சம்சாரக் கடலில் சிக்கித் தவிக்கிற மானுடர்களுக்கு ஒரு ஓய்வு தரவேண்டும் என்பதற்காகவே ப்ரளயத்தை உண்டு செய்தார். இப்படி ஜடம் போல ஓண்ணுமே இல்லாமல் இருக்கிறார்களே என்ற கருணையால் நம்மை மீண்டும் சிருஷ்டித்தார். அதாவது, சம்சாரத்திலிருந்து நாம் மோட்சம் பெற வேண்டும் என்பதுதான் அவனது உத்தேசமே!
அடுத்த உதவி, பிரம்மாவுக்கு வேதத்தைக் கொடுத்ததுதான். ஏன்? ஞானம் வேண்டும் அல்லவா! வேதம் என்றாலே ஞானம் என்றுதான் அர்த்தம். அந்த வேதத்தை வைத்துக் கொண்டுதான் பிரம்மா உலகத்தையே உருவாக்கினார். இந்த ஞானம் என்பதுதான் விளக்கு. அது இல்லையென்றால் எது சரி, எது தவறு என்றே தெரியாமல் நாம் இருந்திருப்போம்.
மூன்றாவது உதவி, திருமலை திருப்பதியில் அர்ச்சாமூர்த்தியாக எழுந்தருளியது. ஏன்? வேதத்தைக் கொடுத்தால் மட்டும் போதாதே! அதன் அர்த்தங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டுமே! அத்தனை பேருமே வேதங்களைப் படிப்பது என்பதும் சாத்தியமில்லை. அதன் அர்த்தங்கள் புரிந்துவிடும் என்றும் சொல்லி விட முடியாது. அவை புரிய வேண்டும் என்பதற்காக - ஸ்ரீநிவாஸராக, அர்ச்சாமூர்த்தியாக திருமலையில் நின்று கொண்டிருக்கிறார். அவரைத் தரிசித்தால் வேதத்தால் புரியாத விஷயங்களை நேரில் பார்த்து புரிந்து கொள்ளலாம். நமக்கு வேண்டியதை எல்லாம் கொடுக்க பகவான் கோயிலில் இருக்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக நிற்கிறார்.
நான்காவது உதவி, எம்பெருமானே வேதாந்த தேசிகராக வந்து அவதாரம் செய்ததுதான். எப்படி? தேசிகர்தான் எம்பெருமான் திருவேங்கடமுடையானை நாம் சரணாகதி செய்ய வேண்டும் என்று சொல்லித் தந்தார். அதுவும் திருவேங்கடமுடையானே தேசிகராக, அதே புரட்டாசி திருவோணத்தில் அவதாரம் செய்திருக்கிறார்.
இப்படி நமக்காகப் பல உதவிகளைச் செய்து கொண்டிருக்கும் பகவானை சிந்தையில் இருத்தி அவனுக்கு நமது நன்றியை தினமும் கூறிக்கொண்டே இருப்போமாக!"

 

Comments