அவதார மகிமை

காத்தல் கடவுளான திருமாலை - மாயவன், மாதவன், பெருமாள் என்றெல்லாம் அழைக்கிறோம். அவன் ஒன்பது அவதாரங்கள் எடுத்துவிட்டு, பத்தாவதாக ‘கல்கி’ அவதாரம் எடுக்க இருக்கிறான் என்பர்! அவதாரத்தின் பெருமைகளை இரண்டு அடிகளில் வள்ளுவனின் குறள் போல வழங்க கண்ணதாசனால்தான் முடியும்!
டார்வினின் கூர்தலறக் கோட்பாடு (Theory of evolution), பெருமாளின் அவதாரங்களில் நாம் முன்னரே குறிப்பிட்டதுதான். நீரில் மட்டும் வாழும் மீன்; நிலம், நீர் இரண்டிலும் வசிக்கும் ஆமை; நிலத்தில் மட்டுமே உயிர் வாழும் வராகம்; பாதி மிருகம், பாதி மனிதனான நரசிம்மம்; வளர்ச்சியடையாத குட்டை வடிவ வாமனன், கோபக்காரப் பரசுராமன்; முழு மனிதனான ராமன்; போர்க் குணமிக்க பலராமன்; முழுக் கடவுளான கண்ணன் என்று ஒன்பது அவதாரங்கள்.
சோமுகன் என்ற காதக அரக்கன், நான்கு வேதங்களைக் கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டான். மறையைக் காணாது மறையவர், மாமுனிவர்கள் தவித்தனர். கடலுக்குள் புகுந்து எடுத்துவர மீனால்தானே முடியும்? மச்ச அவதாரம் எடுத்தார் திருமால். கடலிடையே ஒளித்த மறை நாலும் மேதினியிலே மீள, மாதவர் வாழ மீனானான் இறைவன்.
கடல்நடுவே வீழ்ந்த சதுர்வேதம் தன்னைக்
காப்பதற்கே எடுத்த அவதாரம் - மச்ச அவதாரம்
திருமால் பெருமைக்கு நிகரேது - உந்தன்
திருவடி நிழலுக்கு இணையேது?
பெருமானே உந்தன் திருநாமம், பத்துப் பெயர்களில் விளங்கும் அவதாரம் என்று பாடல் தொடங்குகிறது. அசுரன் ஏன் அப்படிச் செய்தான்? அசுரத்தனம், அரக்கத்தனம் என்பதே காரணமில்லாமல் யாரையாவது துன்புறுத்துவது, நோகடிப்பது, வருத்துவதுதானே!
நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் எரிந்து சாம்பலாக வேண்டும் என்று வரம் பெறுவான் ஒருவன். உலவாத யாக்கை, எங்கும் நினைத்தபடி செல்லும் இந்திர ஞாலத்தேர், ஆயிரத்தெட்டு எனும் அண்டமும் எனக்கு அடிமையாம், என வரம் பெறுவான் ஒருவன். இதெல்லாம் அசுர, அரக்க குணங்கள். மனிதர்களிலும் சில கொடூரர்கள் இப்படி அன்றும், இன்றும், என்றும் இருப்பார்கள் போலும்.
‘வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள்
கடல் வயிறு கலக்கினையே!’
என ஆய்ச்சியர் குரவையில் இளங்கோ பாடினார். ஏன்? எதற்கு? பாற்கடலின் உள்ளே அமுதம் உள்ளது. அமுதம் அருந்தியவர்கள் சாவாமல் வாழலாம் என்று தேவர், அசுரர் தெரிந்துகொண்டு போட்டியிட்டுத் தேடினர். (ம்ருத்யு - மரணம்; அம்ருத் - மரணமில்லாதது. அதுதான் அம்ருதம், அமிர்தம், அமுதம் என வந்தது.)
பாற்கடலை எப்படிக் கடைவது? மந்தரமலை மத்தாக, வாசுகி என்ற பாம்பு நாணாக, ஒருபுறம் தேவர், மறுபுறம் அசுரர் பிடித்துக் கடைய, நாகம் விஷம் கக்க, அதன் வெம்மை இவர்களை வெருட்ட ஓரே அமர்க்களம்! கயிறை விட்டு ஓடத் தொடங்கினர். மலை அமிழலாயிற்று. திருமால் வலிய ஓடு கொண்டு கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து அடியில் சென்று மந்தர மலையைத் தாங்கி நின்றார். ஆமை நீரிலும் இருக்கும், நிலத்திலும் வரும்! அதன் ஓடு வலியது. அது மலையைத் தாங்கியது.
சங்க நிதி, பதும நிதி வந்தன. குபேரன் ஏற்றான். ஐராவத யானை - இந்திரன் ஏற்றான். மகாலட்சுமி வந்தாள். பீதாம்பரதாரியான மாயவனிடம் சேர்ந்தாள். ஆலகால விஷம் வந்தது. பரமசிவன் ஏற்று உண்ட, அந்த நிமிடமே சக்தி தன் கையால் அவர் கழுத்தினைப் பற்றிட, விஷம் அங்கேயே நின்றது. நீலகண்டன் ஆனான் சிவன்.
வானவரும் தானவரும் ஆழி அமுதம் கடைய
மந்தர கிரிதன்னைத் தாங்கிடவே - ஒரு
கூனுடைய ஓடு கொண்ட கூர்மாவ தாரம் எனக்
கோல முற்றாய் புகழும் ஓங்கிடவே!
‘அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் எங்கள்
அச்சுதனே உந்தன் அவதாரம் - கூர்ம அவதாரம்’
மந்தர மலையை, அதன் வலிமையைத் தாங்க
வேறு யாரால் முடியும்? அச்சம் போக்கும் அச்சுதனால் தானே முடியும்?
இரண்யகசிபு, இரண்யாட்சன் இருவரும் அண்ணன் தம்பிகள்! இறைவனை நோக்கித் தவம் செய்து எல்லையற்ற வரங்கள் பெற்றிருந்தனர். தம்பி இரண்யாட்சன் பூமியைப் பாயாகச் சுருட்டி ஏழு கடலுக்கு அப்பால் மறைத்துவிட்டான். இதை ஒரு பௌராணிகர் சொன்னபோது, குறும்புக்காரப் பையன் ஒருவன், ‘ஐயா பூமியைப் பாயாகச் சுருட்டினான், சரிதான். எங்கே நின்று கொண்டிருந்தான்?’ என்றானாம். ‘அடே! அவுணர், அரக்கர், அசுரர் நம்மைப் போல் பூமியில் நிற்கத் தேவையில்லாதபடி அந்தரத்தில் சஞ்சரிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அப்படி அந்தரத் திலிருந்து பூமியைச் சுருட்டினான்!’ என்று அழகாகப் பதிலிறுத்தாராம். ஏழு கடலுக்கப்பால் துளைத்துச் சென்று பூமியைக் காக்க வல்லெயிற்றுக் கேழலாக (வராஹம் என்ற பன்றியாக) அவதரித்தான் திருமால்.
‘ஹீன இரண்யாட்சன் எனும் படுபாவி
பாயாய் எழுகடலுள் மறைத்த பூதேவி
அவள் தீனரட்சகா - சகல ஜீவரட்சகா எனவே
மாநிலத்தைத் தூக்கிய வராஹ வடிவானவனே!
‘பூமியைக் காத்திட ஒரு காலம் நீ
புனைந்தது மற்றொரு அவதாரம் - வராஹ அவதாரம்.’
பூமிப் பிராட்டியைத் தன் கூரிய கொம்புகளிடையே சுமந்து பூவராஹன் ஆனார். லட்சுமியைத் தன் அருகே சுமந்து லட்சுமி வராஹன் ஆனார். (ஸ்ரீ முஷ்ணத்தில் பூவராகனாக, கல்லிடைக்குறிச்சியில் லட்சுமி வராஹனாகக் கோயில் கொண்டுள்ளார்.)
இந்த உலகில் முதல் சத்தியாக்கிரகி பிரகலாதன் என்றார் ஆசார்ய விநோபா பாவே. கடவுளைத் தூணில் வரவழைப்பேன் என்ற உறுதி அவனுடையது. ‘நாராயண மந்திரத்தையே சொல்வேன்! நீ கொன்றாலும் கொன்று போடு’ எனத் தந்தையை எதிர்த்த தீரன். ‘இரணியன் வதைப்படலம்’ என்று மூல நூலான வால்மீகி ராமாயணத்தில் இல்லாத ஒரு படலத்தைக் கம்பன் பாடியது அவருக்கு நரசிம்மரிடமிருந்த பக்தி காரணமாகவே என்பர்.
‘பள்ளியில் ஓதிவந்த சிறுவன்தன் வாயில்
ஓராயிரம் நாமம் ஒள்ளிய ஆகி ஆங்கே போத
ஒன்றும் அதற்கோர் பொறுப்பிலனாகிப்
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப்
பிறை எயிற்று அனல்விழிப் பேழ்வாய்த்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத்
திருவல்லிக்கேணி கண்டேனே!"
என்றார் திருமங்கை மன்னர்.
இரண்யகசிபுவின் மகன் பிரகலாதன். அறிஞரில் அறிஞன். ஞான நாயகன். கருவிலேயே நாரதரால் ‘நாராயண’ மந்திரம் உபதேசிக்கப் பெற்றவன். அப்பனோ ‘கடவுள் இல்லை; நானே கடவுள். என் பெயரையே வேதம் கூடச் சொல்ல வேண்டும்’ என்று உத்தரவிட்டான்.
பிள்ளையோ, ‘நாராயண மந்திரம், அதுவே நாளும் பேரின்பம்’ என பஜனை செய்தான். பிள்ளைக்குப் பலவித கடும் தண்டனைகள் தந்தான் தகப்பன். நெருப்பில் போட்டான், நஞ்சு அருத்தினான். பாம்புகளை ஏவிக் கடிக்க வைத்தான். கல்லில் சங்கிலியால் பிணைத்துக் கடலில் எறிந்தான். (அப்பர் சுவாமிக்குப் பின்னால் இத்தனை தொல்லைகளும் தந்தான் பல்லவ மன்னன். அவரைக் காத்தது பஞ்சாட்சரம். குழந்தை பிரகலாதனைக் காத்தது அஷ்டாட்சரம்.) பிரகலாதன் உயிரை ஸ்ரீமந் நாராயணன் காத்து நின்றார். ‘குலத்துரோகியே! உனக்கு எது பலம்?’ என்றான் தகப்பன். ‘நாராயணான வைகுந்தபதியே, எனக்கும் உலகுக்கும் காப்பு’ என்றான் ஞானநாயகன். ‘அவன் எங்கேடா?’
‘தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்
தூயன் ஜோதி நாராயணன் - இங்கு
ஆணிலும் இருப்பான். பெண்ணிலும் இருப்பான்
ஆனந்த ஜோதி நாராயணன்’
என்றான் பிரகலாதன்.
‘தொட்ட தொட்ட இடம் தொறும்’ துலங்குவான் என அறிஞன் சொல்ல, நான் கட்டிவைத்த இந்தத் தூணில் இருப்பானா என அதட்டியவாறு, இசை திறத்துயர்ந்த கையால் தூணை எற்றினான்’ என்றார் கம்பர்.
அளந்திட்ட தூணை அவன்தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க உருவாய்
உளம்தொட்டு இரணியன் ஒண் மார்பகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி!
பேய்முலை உண்டானே சப்பாணி!’
(பெரியாழ்வார்)
‘பிளந்தது தூணும் ஆங்கே, திசை திறந்து
அண்டம் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்!’
(கம்பர்)
பாதி சிங்கம், பாதி மனிதன் - இதுதான் நரசிம்மம் எனும் நரமடங்கல்! ஏன் இப்படி வந்தான் திருமால்? இரணியன் கேட்ட வரங்கள்:-
உள்ளில், புறத்தில் சாகிலன். நள்ளில் பகலில் இறக்க மாட்டேன். பெண்ணில், ஆணில், அலியில், காணப்படும் எந்தப் பொருளாலும் மரணம் கூடாது. எந்த ஆயுதமும் கொல்லக் கூடாது. எந்த மிருகமும், மனிதனும் என்னை அழிக்கக் கூடாது. உயிர் உள்ளதும், உயிர் அற்றதும் எனைச் சாகடிக்கக் கூடாது.
போதுமா? வரம் கொடுத்த இறைவன் வாலறிவன் அல்லவா!
பகலுமில்லாது இரவுமில்லாத அந்திப் போதில் வந்தான். பெண், ஆண், அலி, பறவை எதிலும் சேராத நரசிங்கம் என உரு எடுத்தான். தரை, ஆகாயம் இரண்டிலுமில்லாது தொடையில் வைத்து உயிர் குடித்தான். வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் அல்லாது வாசற்படியில் இரணியனை மாய்த்தான். எந்த ஆயுதமுமில்லாது நகத்தாலே குடலைக் கிழித்தான்.
‘தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்
தனை நக நுதி கொடு’
என்றார் அருணகிரிநாதர். உயிருள்ளதோ உயிரற்றதோ எனை அழிக்காத வரம் தா என்ற இரணியனை நகத்தால் கொன்றது ஏன்?
நகம் தினம் வளருவதால் அது உயிருள்ளது. நகம் அதனில் ரத்தமில்லை. ஆகவே, அது உயிரற்றது. போதுமா? ‘நாளை என்பதே நரசிம்மரிடம் இல்லை. உடனே, அப்போதே அருளும் சிங்கப்பிரான், இரணியனைக் கொன்றாலும், பிரகலாதனை மடியில் அமர்த்தி, ‘நானே உனக்குத் தந்தை. என்னைத் துதித்து உலகம் பெறும் அருளை, உன்னைத் துதித்தே பெறும்’ என்றார். கலியுகத்தில் ஸ்ரீராகவேந்திரராகப் பிரகலாதன்தான் அவதரித்தான் என்பது நம்பிக்கை.
‘நாராயணா என்னும்
திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவ
தாரம் - நரசிம்ம அவதாரம்’ என்ற அடிகளில் இத்தனை பெரிய அரிய வரலாறுள்ளது.
‘மூவடி மண் கேட்டு வந்து
மண்ணளந்து விண்ணளந்து
மாவலி சிரம் அளந்த வாமனனே!’
நீ செய்தது பச்சையான அக்கிரமமாயிற்றே! உன்னை ஓங்கி உலகளந்த உத்தமன் என ஆண்டாள் வியந்து போற்றியது தகுமா? பிறர் வாழ, தான் பழிபட்டாலும் பரவாயில்லை என்பவன் உத்தமன். மாவலி என்ற மகாபலியின் கொட்டத்தை ஒடுக்க இப்படி வாமனனாக (குட்டையாக) வந்தான்.
யாசகம் வாங்குபவன் உடம்பு கூனிக் குறுகித்தான் போகும்! யாகம் செய்ய மூன்றடி தானே! ‘தந்தேன்!’ என்றான் வள்ளல் மகாபலி. குட்டையன்தானே என்று ஒரு ஏளனம் கலந்திருந்தது அவன் பார்வையில்! சுக்ராச்சாரியார் தடுக்கிறார். ‘வந்திருப்பவன் வஞ்சக் கள்வன். தராதே!’கம்பர் இந்த இடத்தில் குறளை அழகுறக் கையாள்வார்.
‘எடுத்தொருவர்க்கு ஈவதன் முன்னம்
தடுப்பது உனக்கு அழகிதோ தகவில் வெள்ளி
கொடுப்பது விலக்கு கொடியோய் உன் சுற்றம்
உடுப்பதும் உண்பதும் இன்றி ஒழியும் காண்
ஆசிரியரை, தகுதியற்றவனே எனத் திட்டிய முதல் மாணவன் மகாபலி. ‘கொடுப்பது அழுக்கறுப்பான்’ என்ற குறளை அப்படியே பொதிந்து வைத்தார் கம்பர். தாரை வார்க்கப் போனான் மாவலி. கெண்டியின் துவாரத்தில் ஈயாக அடைத்துப் பார்த்தார். மாயக் கண்ணனோ ஒரு துரும்பால் குத்தி ஈயின் (சுக்ரனின்) ஒரு கண்ணைக் குருடாக்கினான். கொடுப்பதைத் தடுத்தால் கண் போகும் என்று காட்டவோ? நீர்த்தாரை பட்டதும் ஓங்கி உயர்ந்து வளர்ந்தான் நெடுமால்! தகுதியுள்ளவன் கையில் தானம் வாங்கியதால் உயர்ந்துவிட்டானோ? ஓரடியால் மண், இரண்டாம் அடியால் விண். மூன்றாவது அடி? பணிந்து வணங்கிய மாவலி சிரத்தில் வைத்து பாதாளத்தில் தள்ளினான்.
‘மாவலி சிரம் தன்னில் பாதம் வைத்து இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம் -
வாமன அவதாரம்’ - கவியரசர் பாடலடிகள்
‘மூவுலகும் ஈரடியால் முறை திறம்பா வகை முடியத் தாவிய சேவடி’ என்றார் இளங்கோ அடிகள். இதே கருத்தை வைத்தது சிறுகூடற்பட்டிச் சிகரம், ‘கௌரவம்’ படத்தில்:
‘மூன்றடி மண் கேட்டான் வாமனன்
சபையிலே
மூன்றென வைத்ததோ மன்னவன்
தலையிலே -
வளர்த்த என் கண்ணனோ! தந்தையின்
நெஞ்சிலே!’
வாமனன் அடி வைத்து மிதித்தது மாவலி
சிரத்திலே. என் பிள்ளை அடி வைத்து மிதித்
ததோ தந்தை என் நெஞ்சிலே! என்று தகப்பனின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்த அடிகள், கவியரசரின் பரந்த இலக்கிய அறிவுக்குச் சான்றாகும்.
இதோடு முடியுமா என்ன? இன்னும் இருக்கிறது...

Comments