குழந்தை மீனாட்சி!

பிஞ்சுக் கரங்களில் பவுடரைக் கொட்டி முகமெங்கும் அப்பி நெற்றியில் குங்குமத்தை ஈஷி, அம்மாவை அலங்கரிப்பதாக நினைத்து ஆனந்தப்படுவது குழந்தைகளின் சுபாவம். ஆனால், அம்மாவை குழந்தையாகவே பாவித்து பாடியது இன்னொரு குழந்தை! அந்த அழகுதான் இந்தத் தொடர்...
உயர்ந்து கம்பீரமாக நின்று சிந்தையில் பக்தியையும் உள்ளத்தில் மகிழ்ச்சிப் பெருமிதத்தையும் எழுப்பும் அன்னை மீனாட்சியின் திருக்கோயில் கோபுரங்கள் காலைக் கதிரவனின் பொன்னொளியில் ‘தகதக’வென மின்னுகின்றன! மக்கள் கூட்டம் கூட்டமாக கோயிலை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏன் இவ்வளவு கூட்டம்? அங்கயற்கண்ணியின் திருக்கோயிலில் இன்று ஏதோ திருவிழா போல் இருக்கிறதே! கூட்டத்தில் முண்டியடித்து உள்ளே நுழைந்தும் விட்டோம். ஆங்காங்கே பேச்சுக்கள் காதில் விழுகின்றன: ‘சிறு பிராயத்தரான இந்தப் புலவர், ஐந்து வயது வரை ஊமையாக இருந்தவர். திருச்செந்தூர் முருகன் அருளால் பேச்சு வந்து, ‘கந்தர் கலிவெண்பா’ என்ற நூலை இயற்றினாராம். முருகன் அவர் கனவில் வந்து, ‘நீ குருபரனாகுக!’ என்றாராம். அதனால் அவர் பெயர் குமரகுருபரர்." யாரோ ஒருவர் யாருக்கோ சொல்லிக் கொண்டிருக்கிறார்.
திடீரென்று வீரர்கள் வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, எல்லோரையும் அமைதியாக அமருமாறு வேண்டுகிறார்கள். எள் போட்டால் எள் விழ இடமில்லாத நெருக்கடி! ‘மாமதுரைப் பேரரசர், நாயக்கர் குலச் செம்மல், திருமலை அரசர் எழுந்தருளுகிறார், பராக்!’என்ற குரலைத் தொடர்ந்து, அரசர் திருமலை நாயக்கர் அடக்கமே உருவாக, கரங்களைக் கூப்பிய வண்ணம் மந்திரிகளும் அரசவைப் புலவர்களும் புடைசூழ நடந்து வந்து தமக்கென இடப்பட்ட ஆசனத்தில் அமர்கின்றார். உடனே எங்கும் அமைதி நிலவுகிறது.
சபையின் இன்னொரு பக்கம் அரசருக்கு எதிராக, அன்னையின் சன்னிதியை நோக்கி இடப்பட்ட ஆசனத்தில் இளம்பிள்ளையான ஒரு புலவர் அமர்ந்திருக்கிறார்- இவர்தான் குமரகுருபரர் போலும்!- கனிவே உருவெடுத்தவரா, பிஞ்சிலேயே பெருஞானம் பெற்றவரா, அடக்கமே வடிவாய், அறிவின் சுடரொளியாய் காணப்படுகிறார்.
முதலமைச்சர் எழுந்து அரசருக்கும் புலவருக்கும் சபைக்கும் வணக்கம் செலுத்தி, ‘சபையோர்களே! செந்தில் ஆண்டவன் அருள்பெற்ற பெரும்புலவர் குமரகுருபரனார் நமது அன்னை அங்கயற்கண்ணி மீது, ‘மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,’ என்கிற ஒரு புதுவகை பிரபந்தத்தைப் பாடியிருக்கிறார். இன்று அன்னை மீனாட்சியின் சன்னிதியிலேயே இதை அரங்கேற்ற வேண்டுமென்பது நமது அரசர் பெருமானின் ஆவல். அனைவரும் அமைதியாக இருந்து கேட்டு அன்னையின் அருள்மழையில் நனைவீர்களாக!’ என்றார்.
‘ஆஹா, ஆஹா!’ என்னும் கூட்டத்தினரிடம், பரவசம் கலந்த ஒரு எதிர்பார்ப்பு! தடாதகைப் பிராட்டி, அங்கயற்கண்ணி எனப்படும் மீனாட்சி அம்மைக்குத் தீபாராதனை காட்டப்படுகிறது.
அரங்கேற்றம் துவங்குகிறது; கேட்கத் தொடங்கும் முன் ஒரு சிறிய விளக்கம்:
‘பிள்ளைத்தமிழ்’ என்பது தமிழில் உள்ள தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தெய்வம், அரசர் அல்லது வள்ளல் இவர்களுள் ஒருவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்படுவது. குழந்தையின் இரண்டாவது மாதம் தொடங்கி, ஒன்பது ஆண்டுகள் வரை நிகழும் நிகழ்ச்சிகளை, பத்துப் பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்தையும் குமரகுருபரர் பத்து விருத்தங்களால் அழகுறப் பாடியுள்ளார். கேட்போர் மனத்தையும், படிப்பவர்கள் கருத்தையும், இசைப்போர் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் கவி நலமும், தமிழ்ச் சொல்நயமும், வர்ணனைகளும், சந்த இனிமையும் வாய்ந்தவை இந்தப் பாடல்கள். ‘தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி’ யாகிய தடாதகைப் பிராட்டியின் பெருமைகளை இந்தப் பிள்ளைத்தமிழ் எடுத்துரைக்கும் நயம் படிக்கும்தோறும் சிலிர்க்க வைப்பது.
எண்ணத்துக்கும் சொற்களுக்கும் எட்டாத பரம்பொருளை, ஞானியர்களே சிந்தையில் உணர்ந்து போற்ற முடியும். உலக வாழ்வில் இருக்கும் நமக்கு, அந்தப் பரம்பொருளுக்கு ஒரு வடிவத்தைக் கொடுத்துப் போற்றுவதே மகிழ்ச்சியை அளிக்கும். அதிலும் தெய்வத்தைக் குழந்தையாகக் கருதிப் போற்றும்போது மழலை இன்பம், மெய்தீண்டும் இன்பம், குழந்தையின் வளர்ச்சி, விளையாட்டு, குறும்புகள் ஆகியவற்றில் மனம் மகிழும் தாயின் நிலையை நாமும் அடையலாம்.
அன்னை மீனாட்சியை குழந்தை மீனாட்சியாகக் கொஞ்சிக் கொண்டாடும் பேரானந்தத்தை நாமும் அனுபவிப்போமா?
அயிராவணத்துலவு போர்க்களிற்றைத் துதிப்பாம்.
எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன் விநாயகப் பெருமானை வேண்டித் தொடங்குவது நமது மரபு. அவ்வாறே குமரகுருபரரும் பிள்ளைத் தமிழ் என்ற நூல் சிறப்பதற்காக களிற்றுக் கடவுளின் திருவடிகளைத் துதிக்கின்றார்.
கருநிறம் பொருந்திய கன்னத்திலிருந்து பெருகி வழிகின்ற மதநீர், கண்களிலிருந்து பிறக்கின்ற ஊழிக் காலத் தீ - இவை இரண்டும் தம் வரம்பைத் தாண்டாத படி, விசாலமான குழைகள் அணிந்த முறம் போன்ற செவிகளால் ஊழிக்காற்று போலக் காற்றை வீசித் தடுத்து நிறுத்தும் களிறு! நம் தலைவனாகிய சிவபெருமான் தமது எட்டுத் தோள்களிலும் வெண்மையான திருநீற்றைப் பூசியுள்ளார். இந்த விநாயக யானைக் கன்றுக்குத்தான் புழுதியில் விளையாட மிகவும் விருப்பமாயிற்றே! தந்தையின் தோள்களில் தன் திருவடிகளால் மிதித்து விளையாடி மகிழ்ந்து, வெண்ணீற்றை அப்பிக்கொண்டு தானும் வெண்ணிறம் பெற்று தந்தையின் அயிராவணம் என்ற இரண்டாயிரம் கொம்புகளைக் கொண்ட வெள்ளையானை போலக் காட்சியளிக்கிறார்! (இந்திரனின் யானையான அயிராவதம், நான்கு கொம்புகள் கொண்டது. அது வேறு!)
அங்கயற்கண்ணி அம்மை மீது பாடப்படுகின்ற ‘பிள்ளைத்தமிழ்’ என்ற நூல் தழைத்துச் சிறக்கும்படி காப்பதற்காக இத்தகைய பெருமை வாய்ந்த ‘போர்க் களிற்றைத் துதிப்பாம்!’ என்கிறார் குமரகுருபரர்.
தார் கொண்ட மதிமுடி ஒருத்தனும்---வார் கொண்டு அணிந்த முலை மலைவல்லியும்!
 
பிறையைத் தன் சடைமுடியில் கொண்டுள்ள சிவபெருமான் தன் திருக்கண் பார்வையைச் சார்த்துகிறான்; அதனால் (பொங்கியெழுந்து தவழ்கின்ற இளவெயிலும், இளமையான நிலவொளியும் கலப்பது போல்) குளிர்ச்சியையும் வெப்பத்தையும் ஒருங்கே கொண்டதாகக் காணப்படும் அழகிய கச்சணிந்த கொங்கைகளை உடையவள் இந்த மலை மகள். இவள் பெருமைகள்தான் என்னென்னவோ?
இந்த மலைமகள், இமவான் என்ற மலையரசனின் மகளாகத் தோன்றியதால் மலைவல்லி; அபிடேக பாண்டிய மன்னன் பச்சைக் கர்ப்பூர நீரினால் முழுக்காட்டுச் செய்ததால் கர்ப்பூரவல்லி; பேரழகுடையவளாதலால் அபிராமவல்லி; சிவந்த மாணிக்க நிறமும் பச்சை மரகத நிறமும் கொண்டதால் மாணிக்கவல்லி, மரகதவல்லி; திருமுடியைத் தரித்திருப்பதால் அபிடேகவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவாள். இவ்வளவு பெருமை பொருந்திய அங்கயற்கண்ணி அம்மை மீது பாடப்படுகின்ற பிள்ளைத்தமிழ் என்ற நூல் சிறக்கும்படி காப்பதற்காக ‘போர்க்களிற்றைத் துதிப்பாம்’ என்று பாடி ஆரம்பிக்கிறார் இளம்புலவர் பெருமான்.
உட்பொருள்
மீனாட்சி அம்மையை ‘மும்முலையா’ என்ற சொல்லால் போற்றுவார் குமரகுருபரர்.
‘முக்கட்சுடர்க்கு விருந்திடும் மும்முலையா,’ ‘தசைந்திடு கொங்கை இரண்டல,’ ‘மும்முலைத்திரு,’ என்பன இவற்றில் சிலவாகும். ‘தடாதகைப் பிராட்டி மூன்று முலைகளுடன் அவதரித்தது ஒரு மகத்தான தத்துவத்தை உலகிற்கு விளக்கவே’ என்பார் புலவர் கீரன்.
நாம் பிறக்கும்பொழுது அபரஞானம், பரஞானம் எனும் இருவகை ஞானத்துடன் பிறக்கிறோம். மூன்றாவதாக உடன் பிறப்பது ஆணவம் என்னும் அகந்தை; ‘நான்,’ ‘எனது’ எனும் அகந்தை மறைந்தால்தான் மெய்ஞானம் உண்டாகும். ஆணவம் எப்போது மறையும்? இறைவனைப் பார்க்கும்போது, அவனை உணரும்போதுதான் ஆணவம் மறையும். பின்னரே மெய்ஞானம் சித்திக்கும். இதுவே மீனாட்சியின் மூன்றாவது முலைத்தடம் உணர்த்தும் உட்பொருள். அவளுடைய மூன்றாவது முலைத்தடம் தனக்குரிய தலைவனான இறைவனைக் கண்டதும் மறைந்தது இந்தத் தத்துவத்தை விளக்கத்தான்!

Comments