தோஷம் போக்கும் அதிசய லிங்கம்

மாதம் முழுவதும் சூரிய பூஜை!
சி வனருள் புரியும் அருள்மிகு திருத்தலங்களுள் ஒன்று உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில். திருச்செந்தூரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உவரி. அழகான கடற்கரை. அமைதியான சூழல். இந்தத் தலத்தில் இறைவன், இருபத்தைந்து மூர்த்தங்களுள் ஒன்றான லிங்கோத்பவராக அருள் பாலிக்கிறார். சுமார் 600 வருடங்களுக்கு முன் சிற்றூரான உவரியில் மக்களின் நலம் கருதி சுயம்புவாக (தானாக) தோன்றி எழுந்தருளியவர் இந்த ஈசன்.
ஸ்ரீசுயம்புலிங்க சுவாமியின் தலபுராணம் மெய்சிலிர்க்க வைக்கிறது. பன்னெடுங்காலத்துக்கு முன் நடந்த சம்பவம் இது. கூட்டப்பனை எனும் ஊரில் இருந்து பெண் ஒருத்தி, உவரி வழியாக தினமும் பால் கொண்டு போவது வழக்கம். அவள் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் கால் இடறி பால் முழுவதும் கொட்டி விடும். தினமும் இது தொடர்ந்தது. இதை அவள் தன் கணவனிடம் சொன்னாள். அவன் ஒரு கோடரியுடன் மனைவி குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றான். அங்கு கால் இடறக் காரணமான கடம்ப மர வேரை வெட்டத் தொடங்கினான்.
வெட்டுப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் பீரிட்டது. செய்வதறியாமல் திகைத்தான் அவன். அப்போது ஓர் அசரீரி, ‘‘உலக மக்களின் நன்மைக்காக சிவலிங்கமாக நான் இங்கு எழுந்தருளி உள்ளேன். வெட்டுப் பட்ட இடத்தில் கடம்ப மர இலைகளைச் சுற்றிக் கட்டு. ரத்தம் நிற்கும். இந்த இடத்தில் சிறு ஆலயம் ஒன்றை எழுப்பி வழிபடு. உன் குலம் தழைக்கும்!’’ என்று ஒலித்தது. அதன்படி அவன் அங்கு பனை ஓலைகளால் ஒரு கொட்டகை அமைத்தான். தினமும் பால் அபிஷேகம் செய்தான்.
 
நாளடைவில் பக்தர்கள் அங்கு குவிந்தனர். மனிதர்கள் நன்றிக் கடன் தீர்க்க இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்வது போல, சூரியனும் மார்கழி மாதம் முப்பது நாட்களும் தனது ஒளிக் கிரணங்களால் உவரி சுயம்பு நாதரை அபிஷேகித்து பூஜிக்கிறான். உலகத்திலேயே இங்கு மட்டுமே இது நிகழ்கிறது என்று சொல்லப்படுகிறது.
சுயம்புலிங்க சுவாமிக்கு இடப்புறத்தில் அம்பாள் பிரம்ம சக்தியாகத் தனி ஆலயம் கொண்டு விளங்குகிறாள். சக்திக்கு ஆலயம் எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டபோது, கடலில் நீராடிக் கொண்டிருந்த ஒரு சுமங்கலிப் பெண் திடீரென்று கூச்சலிட்டபடி ஓடி வந்தாள்.
‘‘நான் பிரம்ம சக்தி. இதோ, இந்த இடத்தைத் தோண்டுங்கள். இங்கு நான் பல்லாண்டுகளாக தவம் செய்து வருகிறேன். என்னை வெளியில் கொணர்ந்து, கோயில் எடுத்து வழிபடுங்கள்!’’ என்று சொல்லிவிட்டு, மூர்ச்சையாகிக் கீழே விழுந்தாள். குறிப்பிட்ட அந்த இடத்தைத் தோண்டியபோது சக்தியின் விக்கிரகம் ஒன்று கிடைத்தது. அது பழைய பிரம்ம சக்தி என்னும் பெயரில் வழிபடப் படுகிறது. அருகிலேயே புதிய பிரம்ம சக்தி விக்கிரகமும் உண்டு. காலப்போக்கில் இசக்கியம்மன், பேச்சியம்மன், மாடசாமி, கணபதி, சாஸ்தா போன்ற சந்நிதிகளும் தனித்தனியே எழுப்பப்பட்டன.
ஸ்தல விருட்சம்: கடம்ப மரம். தமிழ் மாதத்தின் ஒவ்வொரு கடைசி வெள்ளிக்கிழமையன்றும் சுயம்புலிங்க நாதருக்கு விழா எடுக்கிறார்கள். அன்று அபிஷேகம், சப்பர உற்சவம் போன்றவை நடைபெறுகின்றன. சப்பரத்தில் உற்சவ மூர்த்தியாக முருகன், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.
ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி சிறந்த பரிகார தெய்வமாக உவரி மக்களால் போற்றப்படுகிறார். வறுமை, நோயால் பீடிக்கப்பட்டு அவதியுறுபவர்கள் ஆகியோர் தங்கள் குறை தீர்க்க சுவாமியை வேண்டிக் கொள்கிறார்கள். குறைகள் நீங்கியதும், மீண்டும் கோயிலுக்கு வந்து இறைவனை தரிசித்து நன்றி தெரிவிக்கின்றனர்.
நாகதோஷம், ராகு-கேது தோஷங்கள் உட்பட எத்தகைய தோஷங்கள் இருப்பினும் சுயம்புலிங்க சுவாமியை தரிசித்தால், அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். திருமணமாகாத பெண்கள் மார்கழி நோன்பிருந்து, அங்குள்ள கடலில் நீராடி சுயம்புலிங்கநாதரை தொழுது வந்தால், 42 நாட்களுக்குள் கல்யாணம் நிச்சயமாகி விடும். வீட்டில் விரதம் தொடங்குபவர்கள், கோயிலில் போய் விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.
உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலுக்கு நாமும் ஒரு முறை சென்று, இறைவனை தரிசித்துப் புண்ணியம் பெறுவோம்!

Comments