பூவரசங்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர்

பூவரச இலையில் அருளிய பெருமாள்!
கூடா இரணியனைக் கூர் உகிரால் மார்விடந்த ஓடா அடலரியை உம்பரார் கோமானை தோடார் நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால் பாடாதார் பாட்டென்றும் பாட்டல்ல கேட்டாமே
திருமங்கை ஆழ்வார்
ந ரசிம்மன் புகழை நினைக்க நெஞ்சினிக்கும். நவில நா மணக்கும். உக்கிரமூர்த்தியாக உலகில் அவன் அவதரித்தது, அடியவர் உற்ற குறை தீர்க்கவே. அவர்களுக்கு ஓயாத் துயர் கொடுக்கும் தீயோரைச் செற்றுத் திறலழிக்கவே.
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதுமே
_ என்று பெரியாழ்வாருடன் சேர்ந்து, நாமும் பிரியத்துடன் அவன் புகழைப் பாடினால், பெறற் கரும் பெரும்பேறு பெறுவது உறுதி.
 இசை பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும், நாடி, நாடி நரசிங்கா...’ என்று அவனது தரிசனத் துக்காக வாடி இருந்தால், அவன் நம்மைத் தேடி ஓடி வருவான்.
அவன் வானுயர் சிங்க உருவாக ஓங்கி வளர்ந்து, இரணியன் மார்பைப் பிளந்திட்ட திருத்தலம்- ‘சிங்கவேள் குன்றம்’ என்று ஆழ்வார்கள் செப்பும் அகோபிலம் ஆகும்.
அந்த நரசிம்ம மூர்த்தியே அன்புருவாக, அருள் வடிவாக, ஆனந்தம் அளிக்கும் குறுநகை பூத்த திருமுகத்துடன் சாந்த நரசிம்மராக, மடி மீது மகாலட்சுமியைத் தாங்கிய மகிமை உடைய வராகக் காட்சி அளிக்கும் திருத்தலம்- ‘தென் அகோபிலம்’ என்று சிறப்பித்துக் கூறப்படும் பூவரசங்குப்பமாகும்.
விழுப்புரத்தில் இருந்து தென்கிழக்கில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பூவரசங் குப்பம், அஷ்ட நரசிம்மர் திருத்தலங்களின் மையமாக, மனம் கவரும் மாட்சியுடன் திகழ்கிறது. அகோபிலத்தில், ஆணவமே உருவான அரக்கன் இரணியனை அழிக்க நரசிம்ம அவதாரம் எடுத்தார் திருமால். பின்னர், பிரகலாதனின் வேண்டுதலுக்கு இணங்க சினம் தணிந்து, சாந்த மூர்த்தியாக- லட்சுமி நரசிம்மராக பிரகலாதனுக்கும், தேவர்களுக்கும் காட்சி அளித்தார்
‘‘அது போன்றதொரு காட்சியை எங்களுக்கும் காட்டித் திருவருள் புரிய வேண்டும்!’’ என்று சப்தரிஷிகளான அத்திரி, வசிஷ்டர், ஜமதக்னி, பரத்வாசர், கௌதமர், காசியபர், கௌசிகர் ஆகி யோர் தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் கடும் தவம் புரிந்தனர்.
மனம் மகிழ்ந்த மாலவன், ஸ்ரீ லட்சுமி நரசிம்மராக அவர்களுக்குக் காட்சி கொடுத்து அருளினான். ‘உலக மாந்தர் உய்யும் பொருட்டு பூவரசங்குப்பத்தில் உறைதல் வேண்டும்’ என்று அவர்கள் தமது உள்ளத்தில் உள்ள விருப்பத்தை வெளிப்படுத்தினர்.
அந்த வேண்டு கோளை உவகையுடன் ஏற்று, சிங்கர்குடியில் சீற்றம் மிகு சிங்கமாக ஆற்றலுடன் தோற்றம் தரும் பெருமாள், பூவரசங்குப்பத்தில், நாடி வருபவர்க்கு நாளும் நல்லருள் புரிய, புன்னகை பூத்த வடிவில் பொலிவுடன் கோயில் கொண்டு அருள் புரிகிறார்.
ஆண்டவன் வந்தமர்ந்தபின் ஆங்கோர் ஆலயம் எழுப்பப்பட்டு, அதற்குக் குடமுழுக் கும் நடைபெற்றதற்குச் சிந்தையை நெகிழ வைக்கும் சீரியதொரு வரலாறு உள்ளது.
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு. சைவ- வைணவ மதங்களுக்கு இருண்ட காலம். அந்தக் கால கட்டத்தில் சமண மதம் செல்வாக்குடன் திகழ்ந்தது. வேத மதங்களை வேரறுத்து வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடன் செயல் பட்டு வந்த சமண மதத்தைச் சார்ந்த பல்லவ மன்னன் ஒருவன், சைவ-வைணவக் கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கி வந்தான். அவனது அடாத செயலை எதிர்த்து அறிவுரை கூறிய அன்பர்களையும், அடியவர்களையும் அடித்தும், சிறையில் அடைத்தும் ஆற்றொணாத் துன்பம் அளித்தான்
 .
நாராயணனின் பக்தரான நரஹரி என்னும் முனிவர் துணிவுடன் சென்று குறைகளைச் சுட்டிக் காட்டினார். தவறுகளைத் தட்டிக் கேட்டார். வெகுண்ட வேந்தன், நரஹரியைக் கழுவில் ஏற்றிக் கொல்லுமாறு ஆணை பிறப்பித்தான். மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாகட்டும் என்று சாபம் கொடுத்து விட்டு மாமுனிவர் நரஹரி அந்த இடத்தைவிட்டு சட்டென அகன்றார்.
சாபத்தின் வேகத்தால் வேந்தன், கடும் காற்றில் சிக்கிய சருகு போலானான்.
அவனது ஆடைகளில் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. உண்ணும் உணவில் ஓராயிரம் புழுக்கள் நெளிந்தன. வண்டுகளும் வாசம் செய்தன. மஞ்சங்கள் மனிதத் தோலாகவும், சதையாகவும் மாறித் தோற்றம் தந்து மனம் பதைக்க வைத்தன.
சிந்தை நொந்த மன்னன், செய்த பாவத்தை உணர்ந்து கொண்டான். சாப விமோசனம் பெறுவதற்காக நரஹரி முனிவரைத் தேடி அனைத்து இடங்களிலும் அலைந்து, திரிந்து அல்லலுற்று ஆறாத் துயரம் அடைந்தான்!
ஒரு நாள் பூவரச மரம் ஒன்றின் கீழ் உறங்கும்போது அவனது கனவில் அசரீரி யின் குரல் ஒலித்தது. சாப விமோசனம் தருவதற்காக, நரஹரி அங்கே வருவார் என்ற நற்செய்தியை அந்த அசரீரி அறிவித்தது.
நெஞ்சம் நெகிழ்ந்த வேந்தன் மேல் ஒரு பூவரச இலை விழுந்தது. அதை எடுத்துப் பார்த்த அரசன் அதிசயமும் ஆச்சரியமும் பரவசமும் அடைந்தான். இலையில் இருந்தது, லட்சுமி நரசிம்மரின் எழில் மிகு தோற்றம்.
அந்த வேளையில் அவன் முன் நரஹரி தோன்றினார். மனம் வருந்தி மன்னிப்பு வேண்டிய மன்னனுக்கு, ‘‘மங்களம் உண்டா கும்!’’ என்று முனிவர் ஆசி கூறினார். மேலும், பூவரசமங்கலம் என்ற அந்த இடத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்குக் கோயில் கட்டிப் புண்ணியம் தேடிக் கொள்ளுமாறு புகன்றார்.
நரஹரியின் நல்லாசியுடன் நரசிம்மர் ஆலயத்தைக் கட்டி முடித்த பல்லவ மன்னன், குட முழுக்கும் செய்து குறை நீங்கப் பெற்றான். பூவரச மரங்கள் நிறைந்த பூவரசமங்கலம் என்ற திருத்தலமே இன்று பூவரசங் குப்பம் என்ற பெயரில் வழங்கப் படுகிறது.
இதே தலத்தில் லட்சுமி நரசிம்மரின் இன்னருள் பெற்றான் இன்னோர் அரசன். அவன் பூவரசன் என்று பெயர் கொண்ட விஜய நகரச் சிற்றரசன். பகைவர் படையெடுப்பால் பலவாறு பாதிக்கப்பட்ட அவன் நாடு, நகரம், மற்றும் நலம் யாவற்றையும் பறி கொடுத்தான். பூவரசங்குப்பம் லட்சுமிநரசிம்மரை வேண்டி கோயிலில் தங்கி இருந்து நாற்பத்தெட்டு நாட்கள் விரதம் மேற்கொண்டான்.
நரசிம்மரின் நல்லருளால் நலிவு நீங்கப் பெற்று நாடும், நல்லாட்சியும் பெற்றான். வினை தீர்த்து வெற்றி தந்த வைகுந்த வாசன் நரசிம்ம மூர்த்தி யின் கோயிலைப் புதுப்பித்துக் கும்பாபிஷேகமும் செய்வித்தான். இது ஓலைச் சுவடிகள் உரைக்கும் உன்னத வரலாறு ஆகும்.
அன்று அரசர்களின் குறை தீர்த்த பூவரசங்குப்பத்து லட்சுமி நரசிம்மர் இன்று அன்புடன் வரும் அனைவரது அல்லல்களையும் அழித்து, அழியா ஆனந்தம் அளித்து வருகிறார்.
பூவரசங்குப்பம் கோயில் தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் கிழக்கு திசை நோக்கிக் கம்பீரச் சிறப்புடன் திகழ்கிறது.
கருவறையில் லட்சுமி நரசிம்மர்! புன்முறுவலால் பொலியும் திருமுகத்தைப் பார்த் துக் கொண்டே இருக்கலாம் _ அத்தனை அழகு!
பின்புறக் கைகள் சங்கும், சக்கரமும் தாங்கித் தண்ணருள் புரிகின்றன. முன்புற இடக் கையால் அன்னை அமிர்தவல்லி என்று அழைக்கப்படும் மகாலட்சு மியை அழகுற அணைத்தவாறே, வலக் கையால் அருள் வாரி வழங்குகிறார் பெருமாள்.
இடக் காலை மடக்கி மடி மீது மகாலட்சுமியை அமர்த்திக் கொண்டுள்ளார். தாமரை மலரொன்று கீழே தொங்க விடப் பட்டிருக்கும் வலக் காலைத் தாங் கிய வண்ணம் உள்ளது.
மணாளனின் மடியில் மகிழ்ச்சியுடன் அமர்ந்துள்ள அமிர்தவல்லித் தாயார், வலக் கரத்தால் அவரை அன்புடன் அணைத்துக் கொண்டிருக்கும் அழகே அழகு! இடக் கரம் தாமரையை எழிலுடன் ஏந்தியுள்ளது.
அன்னை அமிர்தவல்லி ஒரு கண்ணால் கணவர் நரசிம்மரையும், மற்றொரு கண்ணால் பிரியத்துக்குரிய பிள்ளைகளாம் பக்தர்களையும் பார்த்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்! சந்நிதியின் எதிரே கருடாழ்வாரும், தென்புறம் நோக்கும் பக்த ஆஞ்சநேயரும் வணங்கிய நிலையில் காணப்படு கின்றனர். மகா மண்டபத்தின் மேற்புறம் மேற்கில் அவதாரச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிந்தை கவரும் சீரிய கலை நுணுக்கங்கள் கொண்ட பல சிற்பங்களும் உள்ளன.
ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள உன்னதச் சிற்பங்கள் விஜயநகரப் பேரரசின் உயர்ந்த கலைத் திறனுக்குக் கட்டியம் உரைக்கின்றன. கோயிலின் இடப்புறம் ஆண்டாள் சந்நிதியும், வலப் புறம் தாயார் சந்நிதியும் உள்ளன.
ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரம் அன்று சுதர்சன ஹோமமும், தன்வந்திரி ஹோமமும் நடைபெறுவது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பாகும். இதில் பங்கு பெறும் அன்பர்களுக்குப் பகைவர் பயம் நீங்கும். பிணிகள் யாவும் விலகும்.
பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மரின் கடைக்கண் பார்வை பட்டால் போதும், தோஷங்கள் தொலைந்து போகும். துன்பம் தரும் நோய்கள் தீர்ந்து நலம் உண்டாகும்.
சிங்கர்குடியில் உக்கிர நரசிம்மரையும், பூவரசங் குப்பத்தில் சாந்த நரசிம்மரையும் தரிசனம் செய்த பிறகும் நமது புனித யாத்திரை முற்றுப் பெறுவ தில்லை. பரிக்கல் தலத்தில் அருள்பாலிக்கும் நர சிம்மரையும் சேவித்த பின்னரே, அது முழுமை அடையும்.
தூணைப் பிளந்து தோன்றி, இரணியனை அழித்த புராணம் அனைவரும் அறிந்தது.
பக்தன் ஒருவனின் தலையில் இருந்து வெளிப் பட்டு பகைவனாம் அசுரனை நரசிங்கப் பெருமாள் அழித்த அரிய சம்பவத்தின் நிலைக்களம் பரிக்கல் திருத்தலம்.
பக்திப் பெருக்கோடு பரிக்கல் நோக்கிப் பயணம் செய்வோமா?
தகவல் பலகை
தலத்தின் பெயர் : பூவரசங்குப்பம்.
பெருமாள் திருநாமம் : ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்.
தாயார் திருநாமம் : அமிர்தவல்லித் தாயார்.
அமைந்திருக்கும் இடம் : விழுப்புரம் - பண்ருட்டி சாலையில் 20 கி.மீ. தொலைவில் கள்ளிப்பட்டி. அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் பூவரசங்குப்பம்.
எப்படிப் போவது? : சென்னையிலிருந்து விழுப்புரம் வரை ரயில், பேருந்து, கார் மூலம். விழுப்புரத்தில் இருந்து பேருந்து மற்றும் கார், ஆட்டோ மூலம்.
எங்கே தங்குவது? : விழுப்புரத்தில்.
உணவு : விழுப்புரத்தில்.
தரிசன நேரம் : காலை 8:30 மணி முதல் பகல் 12:30 வரை. மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 வரை.
வேறு சிறப்புகள் : உடற்பிணி, தோஷங்கள் ஆகியவற்றைப் போக்கும் திருத்தலம்.
ஸ்ரீவரதராஜப் பெருமாள்
கு டந்தையில் 6.3.2004 சனிக்கிழமை அன்று மகா மக உற்சவம் நடந்தது. அதே நாளில் பூவரசங்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் ஆண்டாள் சந்நிதி நிர்மாணிக்க நிலத்தைத் தோண்டும் வேலை தொடங்கி யது. திருப்பணி நடந்து கொண்டிருந்தபோது பூமிக் கடியில் இருந்து ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் உற்சவத் திருமேனி ஒன்று அபூர்வமாகக் கண்டெடுக்கப் பட்டது.
பௌர்ணமி தினமான அன்று ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் உற்சவத் திருமேனி கிடைக்கப் பெற்ற அதே நேரத்தில் கும்பகோணத்தில் உள்ள ஒரு பெருமாள் ஆலயத்தில் இருந்து தீர்த்தவாரிக்காக சங்கு, சக்கரத்துடன் புறப்பட்டு எழுந்தருளினார் ஸ்ரீவரதராஜப் பெருமாள். இந்த அற்புத நிகழ்வின் காரணமாக பூவரசங்குப்பத்து வரதராஜப் பெருமாள்(உற்சவர்) மிகச் சக்தி வாய்ந்த திருவுருவமாகக் கருதப்பட்டு ஆராதனை செய்யப்படுகிறார். பெருமாளின் இந்தத் திருமேனி பேரழகு வாய்ந்ததாகும்.

Comments