நந்தியின் காதில் வேண்டுதலைச் சொல்லலாமா?

ஆலயத்துக்குள் அமைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு சிலையையும் பக்தர்கள் தொடக்கூடாது. அதற்கென (சிவ) தீகை்ஷ பெற்ற அர்ச்சகர்கள் மட்டுமே தூய்மையுடன் தெய்வச் சிலைகளைத் தொட அனுமதி பெற்றவர்கள்.
நமக்கு சம்பந்தமில்லாத யாரோ ஒருவர் நமது உடலைத் தொடுவதற்கு நாம் அனுமதிப்போமா? அது நமக்கே கூச்சமாக இருக்குமல்லவா? அதைப்போல் தான் தெய்வங்களுக்கும். எப்போதும் தொடுபவர்களைத் தவிர, சம்பந்தமில்லாத மற்றவர்கள் தொட்டால் ஒருவித கூச்சம் ஏற்படும். ஆகவே, தெய்வச் சிலைகளை பக்தர்கள் தொட்டு வணங்குவது என்பது சரியில்லை. (வட தேசத்தில் பூஜை வழிபாட்டு முறைகளே வேறானவை என்பதால் இது அனுமதிக்கப்படுகிறது).
சிவ பக்தரான நந்திகேஸ்வரர் என்பவரும் நமது பார்வையில் ஓர் தெய்வம்தான். ஆகவே, ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிவனுக்கு எதிரில் இருக்கும் நந்திகேஸ்வரரை கையால் தொடுவது சரியல்ல. தொடாமலேயே நாம் பிரார்த்தித்துக் கொள்ளலாம், நந்தியின் காதில் மந்திரம் சொல்வது என்பது ஆகமத்தில் இல்லை. ஆனாலும், பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை சிவனிடமே நேரிடையாகச் சொல்வதாகப் பாவித்து நந்தியின் காதில் தங்கள் கோரிக்கைகளைச் சொல்வது பல ஆலயங்களிலும் காணப்படுகிறது. இதை சாஸ்திரம் தடுக்கவில்லை. ஆகவே, நந்தியைக் கையால் தொடாமல் நந்தியின் காதில் விருப்பத்தைச் சொல்வதில் தவறேதுமில்லை.
ஆனால், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே உள்ள இடைவெளி வழியாக கர்ப்பக் கிருகத்திலுள்ள சிவனை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பானது. அப்போது நந்தியின் வால் பகுதியைப் பிடித்துக் கொண்டு சில மந்திர சுலோகம் சொல்ல வேண்டும் என்று மட்டும் ஆகமத்தில் காணப்படுகிறது.
மா விளக்கு ஏற்றுவதன் நற்பலன்கள் என்ன?

தெய்வ சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச் (வேண்டுதலாக) செய்வது வழக்கத்தில் இருக்கிறது.
பச்சரிசி மாவையும், வெல்லச் சர்க்கரையும், ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் சிறிது நெய் விட்டு மாவாகப் பிசைந்து, அந்த மாவை வாழை இலையின் நடுவில் பரப்பி, அந்த மாவின் நடுப்பகுதியில் குழி போல் செய்து அதில் நெய் விட்டுத் திரி போட்டு தீபம் ஏற்றி தெய்வ சன்னிதியில் குறிப்பாக (மாரி)அம்மன் சன்னிதியில் வைத்து, பிரதட்சணம் செய்து, நமஸ்காரம் செய்து வேண்டிக் கொள்வதே மாவிளக்கு போடுதல் என்று கூறப்படுகிறது. இது ஒரு சிறப்பான வழிபாடு.
குடும்பத்தில் திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும் முன்னர் இவ்வாறு குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டுப் பிரார்த்தித்துக் கொள்வதால், நிகழ்ச்சிகள் தடங்கலின்றி நடக்கக் காரணமாக அமையும்.
மேலும், ஒவ்வொரு குடும்பத்திலும் வருடத்துக்கு ஒருமுறை குலதெய்வ சன்னிதியில் அல்லது தனது வீட்டில் நல்ல நாள் பார்த்து உரல், உலக்கை கொண்டு தன் வீட்டிலேயே பச்சரிசி மாவை இடித்துத் தயார் செய்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அம்பாள் சன்னிதியில் மாவிளக்கு தீபம் ஏற்றுவது குடும்பத்தில் மென்மேலும் நன்மைகள் அதிகரிக்கக் காரணமாக அமையும். இது பலகாலமாக முன்னோர்களால் செய்யப்படும் சம்பிரதாயமான வழிபாடு.
சிராத்த, தர்ப்பண தினங்களில் சாப்பிட்ட பின்பு தாம்பூலம் தரிக்கலாமா?

மறைந்த முன்னோர்களுக்காகத் தர்ப்பணம், சிராத்தம் செய்பவர்களுக்கு சிற்சில கட்டுப்பாடுகள் உண்டு. அவைகளில் கீழ்கண்டவைகளும் அடங்கும்.
தந்ததாவன தாம்பூல க்ஷௌராப்யண்ங மபோஜனம்
ரத்யௌஷத பரான்னாநி ச்ராத்தகர்த்தா அஷ்ட
வர்ஜயேத்
அதாவது சிராத்தம் செய்பவர், சிராத்தம் தர்ப்பணம் செய்யும் நாளன்று தாம்பூலம் போட்டுக்கொள்ளுதல், சவரம் (ஷேவ்) செய்து கொள்ளுதல், எண்ணெய் தேய்த்துக் குளித்தல்,(தலைக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல்), சாப்பிடாமல் உபவாசம் இருத்தல் அதாவது சிராத்தம், தர்ப்பணம் முடிந்த பின்னர் கட்டாயம் சிராத்த சேஷத்தை (சிராத்தத்தின் மிகுதியை)சாப்பிட வேண்டும் என்பதால் சாப்பிடாது இருத்தல், மனைவியுடன் ஒன்று சேருதல் , தன் வீட்டைத் தவிர மற்ற இடத்தில் (பரான்னம்) சாப்பிடுதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.
மேற்கூறிய கட்டுப்பாடுகள் சிராத்தம் முடியும் வரையில்தானே! ஆனால், மதியமே சிராத்தம் முடிந்துவிட்டதே! ஆகவே, சிராத்தத்தன்று மாலையில் தாம்பூலம் போட்டுக் கொள்ளலாமே என்று தோன்றலாம். ஆனாலும், சிராத்தம் மற்றும் சிராத்தக் கட்டுப்பாடுகள் என்பது சிராத்தத்துக்கு அடுத்த (மறு) நாள் சூரியன் உதயமாகும்வரை (சிராத்தத்துக்கு அங்கமான தர்ப்பணம் செய்ய வேண்டிய காலம்வரை)இருக்கிறது என்பதால், சிராத்தம் நடைபெறும் நாள் முழுவதும் சிராத்தம் செய்பவர் சிராத்த சாப்பாட்டைத் தவிர (தாம்பூலம் உட்பட ) மற்ற எதுவும் சாப்பிடாமல் இருப்பதே சிறந்தது.

Comments