தீர்த்தப் பிரசாதம்

திருக்கோயில்கள் அனைத்திலும் வழிபாட்டுக்குப் பிறகு பிரசாதம் தருவது வழக்கம். அவை, சிவாலயமாக இருந்தால் திருநீறாகவும், விஷ்ணு கோயிலாக இருந்தால், அம்பாள் சன்னிதியில் மஞ்சள், குங்குமமும், பெருமாள் சன்னிதியில் துளசி தீர்த்தம் தருவதை நாம் அனுபவித்திருப்போம்.
அம்பாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தையே பிரசாதமாகத் தரும் திருத்தலம், திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் கங்கையம்மன் திருக்கோயில். நீர் வடிவ தெய்வமான கங்கா தேவிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தமென்பதால் இது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இத்தீர்த்தத்தை சிறிது வாங்கிச் சென்று, வீட்டில் வைத்துக்கொள்ள ஐஸ்வர்யம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தட்ச யாகத்துக்குப் பின், அம்பிகையைப் பிரிந்த சிவனின் வெம்மையை, கங்கா தேவியால் தாங்க முடியவில்லை. சிவபெருமானை சாந்தப்படுத்தும்படி அவள் மகாவிஷ்ணுவை வேண்ட, அவரும் அவ்வாறே செய்தார். மேலும், சிவனாரின் உக்கிரமான பார்வையால் எரிந்த பகுதிகளைச் சுற்றிலும் ஏழு நீர் நிலைகளை உண்டாக்கி தீயை அணைத்தார். பின்பு இப்பகுதியை ஆண்ட மன்னன் இங்கு திருமாலுக்கும், கங்கா தேவிக்கும் கோயில் கட்டினான்.
பிற்காலத்தில் அவை மறைந்துபோக, அன்னியர் படையெடுப்பினால் தென்னாட்டுக் கோயில்கள் அழிக்கப்பட்டன. குமாரகம்பணர் படை திரட்டி வந்து கோயில்களை மீட்டார். அப்படி அவர் கோயில்களை மீட்டுக்கொண்டு தென்னாடு வரும் வழியில் சந்தவாசல் திருத்தலத்தில் தங்க நேர்ந்தது. அச்சமயம், இப்பகுதியை ஆண்ட ராஜநாராயண சம்புவராயர், குமாரகம்பணனோடு போரிட்டுத் தோற்றார். குமார கம்பணனின் மனைவி இத்தல கங்காதேவியின் மகிமையறிந்து அவளுக்கு அங்கு கோயில் எழுப்பினாள் என்பது தல வரலாறு.
இக்கோயிலில் கங்காதேவி, இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்டபடி, சிம்ம வாகனத்துடன், ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள். கைகளில் தண்டம், உடுக்கை மற்றும் அமுத கலசத்தை ஏந்தியுள்ளாள். மூலவர் அம்பிகைக்குப் பின் புறம் இவ்வன்னையின் சுதை வடிவமும் உள்ளது. முற்காலத்தில் இங்கு பெருமாள் கோயில் இருந்ததற்கான அடையாளமாக கோயில் முகப்பிலுள்ள தீபஸ்தம்பத்தில் சங்கு, சக்கரம், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மூலவர் கங்கையம்மன், உற்சவர் கங்காதேவி, தல விருட்சம் வில்வம், தீர்த்தம் பெருமாள் தீர்த்தம்.
தீபாவளி, மாசி மகம், ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, பௌர்ணமி, பங்குனி உத்தரம் போன்ற நாட்கள் விசேஷ தினங்கள். சித்திரை முதல் நாள் நடக்கும் 108 குட பால் அபிஷேகத்தை பக்தர்களே அன்னையின் கருவறைக்குள் சென்று நடத்தலாம். ஆடிப்பூரத்தன்று இங்கு நடக்கும் சுமங்கலி பூஜையில் பெண்களுக்கு ஒன்பதுவித மங்கலப் பொருட்களை பிரசாதமாகத் தருவர். பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாண உத்சவம்.
இக்கோயிலுக்குப் பின்புறம் ராஜகம்பீர மலை உள்ளது. பூலோகம் வந்த சிவன், முதலில் இம்மலையிலும், பின்பு திருவண்ணாமலையிலும் பாதம் பதித்தார் என்பது நம்பிக்கை. அதன் அடையாளமாக அங்கு சிவபாதம் உள்ளது. இதற்கு ‘மிதிமலை’ என்று பெயர். திருக்கார்த்திகைக்கு மறுநாள் விஷ்ணு கார்த்திகையன்று இந்த மலையில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம்.
திருமணத்தடை, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு அம்பிகைக்கு ‘துணி முடிதல்’ என்ற வழிபாட்டைச் செய்கின்றனர். பக்தர்கள் மஞ்சள் துணியில் காணிக்கை கட்டி, அம்பாள் பாதத்தில் வைத்து பூஜித்து, பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். பின், அதை கோயிலிலேயே கொடுத்துவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்களது பிரார்த்தனை நிறைவேறியதும், மீண்டும் அத்துணி முடிப்பை வாங்கி அம்பாளுக்குக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். மேலும் கண வருக்குத் தீர்க்க ஆயுள் வேண்டி, அம்பிகைக்குத் தாலி அணிவிப்பதாகவும் வேண்டிக்கொள்கிறார்கள். இவையன்றி, குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சிகளின் போது, இங்குள்ள நவக்கிரக சன்னிதியில் விசேஷ ஹோமத்துடன் பரிகார பூஜைகளும் நடைபெறுகின்றன.
பொதுவாக, தீர்த்தம் என்றாலே புனிதப்படுத்துவது என்றுதானே பொருள். அதுவும் அன்னையின் திருமேனியில் பட்டு கிடைக்கும் அந்த தீர்த்தப் பிரசாதம், நமது அனைத்துப் பாபங்களையும் போக்கி, விமோசனம் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடை யாதுதானே.
செல்லும்வழி: திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 50 கி.மீ.. பஸ் நிலையத்திலிருந்து 1 கி.மீ. ஆட்டோ வசதி உண்டு.
தரிசன நேரம்: காலை 6 முதல் 10.30 மணி வரை. மாலை 4.30 முதல் 8.30 மணிவரை. வெள்ளிக் கிழமைகளில் பகல் 1 மணி வரை நடை திறந்திருக்கும்.
தொடர்புக்கு: +91 4181 243 207, 96773 41227

Comments