ஸ்ரீரேணுகாம்பாள்

குழந்தைப் பேறு வேண்டி, பரசுராமரின் சிலாரூபத்தை தம் தலையில் சுமந்தபடி, ஆலயத்தை வலம் வந்து வழிபடுவது இங்கு காணும் நடைமுறை
திருவண்ணாமலை மாவட்டம், படவேடு சித்தர்களும் ஞானிகளும் தவமிருந்து சித்தி பெற்ற திருத்தலம். இங்கு அன்னை ரேணுகாம்பாள் சுயம்புவாய் அருளாட்சி புரிகின்றாள். ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாண லிங்கமும், ஜனாகர்ஷண சக்கரமும் இத்தலத்தின் அருட்பெருமைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
ஜவ்வாது மலைத்தொடரின் நடுவே, நான்கு மாட வீதியுடன் அமைந்துள்ளது ஸ்ரீரேணுகாம்பாள் திருக்கோயில். விநாயகர், முருகர் சன்னிதிகள், வட கிழக்கில் திருக்குளம், நேர் எதிரே சோமநாதீஸ்வரர், ஸ்ரீஉமாமகேஸ்வரி சன்னிதிகள் உள்ளன. தல விருட்சம் வில்வம். பிராகாரம் வலம் வந்த பின்பே, கருவறை மண்டபத்துக்குள் செல்ல வேண்டும். வசந்த மண்டபத்தின் வடக்கே உற்சவ அம்பாள் அருள்புரிகின்றாள்.
கருவறை நோக்கி பரசுராமரும், நந்தி தேவரும் காட்சி தருகின்றார்கள் அகில உலகையும் காத்தருளும் அன்னை ஸ்ரீரேணுகாம்பாள் இங்கே காருண்யம் மிக்கவளாய், தீர்க்கமான கண்களுடன், புன்னகை தவழும் அதரங்களுடன் அமர்ந்த கோலத்தில், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றாள்.
ரேணுகாதேவியின் சரிதம் பலரும் அறிந்ததுதான். ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி, பரசுராமன் உள்ளிட்ட நன்மக்களைப் பெற்ற மாதரசி. பச்சை மண்ணால் ஆன, சுடாத குடத்தில் தினசரி தன் கணவரின் பூஜைக்கு நீர் கொண்டு வரும் கற்புக்கரசி. ஒருநாள் நதியில் நீர் எடுக்கும்போது வானில் பறந்து சென்ற கந்தர்வன் ஒருவனைக் கண்டு, ‘மானிடர்களால் பறக்கவும் முடியுமோ’ என அவனது நிழல் ரூபம் கண்டு வியந்தாள்.
இதனால் அவள் பங்கப்பட, சுடாத மண்குடம் அன்று நதியில் கரைந்தது. ஞான திருஷ்டியில் இதை அறிந்த ஜமதக்னி, பரசுராமரை அழைத்து ரேணுகாதேவியை சிரச்சேதம் செய்ய ஆணையிட்டார். தந்தை சொல்லை ஏற்று, தாயாரின் தலையைக் கொய்த பரசுராமன், மீண்டும் தாயாரை உயிர்ப்பிக்க தந்தையிடமே வரம் கேட்டான். தந்தை தந்த மந்திர நீரைக் கொண்டு சென்றவன், பதற்றத்தில் தாயாரின் தலையை வேறு பெண்ணின் உடலில் பொருத்தித் தெளிக்க, ரேணுகா தேவி உயிர்ப்பெற்று எழுந்தார்.
கார்த்தவீர்யார்ஜுனன் என்ற க்ஷத்ரியன் ஜமதக்னி முனிவரிடம் இருந்த காமதேனுவை விரும்பி, முனிவரைக் கொன்றுவிட்டு காமதேனுவை கவர்ந்து சென்றான். கணவருடன் உடன்கட்டை ஏறிய ரேணுகா தேவி, மழை பொழிந்து தீ அணைந்ததால் வேப்பிலை ஆடை அணிந்து எழுந்தாள். அன்று முதல் பரசுராமர் க்ஷத்ரியர்களை எல்லாம் அழித்தார்.
பின் சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு மூவரும் தோன்றி பரசுராமரின் கோபத்தைத் தணித்தனர். அன்று முதல் பூவுலகில் அன்னையின் சிரசு மட்டும் பூமியில் அருள்பாலிக்கிறது. உடல் கணவருடன் சொர்க்கலோகம் செல்ல அருளினார் சிவபெருமான்.
இந்த ஆலயத்தில் 27 நெய் தீபம் ஏற்றி, 27 முறை ஆலயத்தை வலம் வந்து அன்னையை தரிசித்து வேண்டினால், வாழ்வில் சகல நலன்களையும், தருவாள்.
குழந்தைப் பேறு வேண்டி, பரசுராமரின் சிலா ரூபத்தை தம் தலையில் சுமந்தபடி, ஆலயத்தை வலம் வந்து வழிபடுவது இங்கு காணும் நடைமுறை. குழந்தை பிறந்தபின், பரசுராமர் சிலா ரூபம் ஒன்றை காணிக்கையாகவும் செலுத்துகின்றனர். இது இங்கு காணும் சிறப்பம்சம்.
செல்லும் வழி: திருவண்ணாமலை - ஆரணியிலிருந்து 23 கி.மீ.. பஸ் வசதி உண்டு. தொடர்புக்கு: 04181 - 248 224

Comments