வாரித் தரும் வள்ளல்களின் மாதம் வைகாசி!



நா ம் செய்யும் பாவங்கள் எல்லாவற்றையும் போக்குவது வைகாசி மாதம். ‘ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ எனும் சான்றோர் வாக்குக்கு இணங்க, ஏழைகளுக்குக் கல்வி கற்பிப்பதால் ஏற்படும் புண்ணியத்தைத் தரும் மாதம். செல்வத்தைவிட அதி உயர்ந்த ஞானத்தை வாரித் தரும் வள்ளல்களின் மாதம்தான் வைகாசி!
வாழ்வுக்கு உகந்த நல்வழியைக் காட்டி, மரணம் உட்பட பல ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் மகானான வியாச ராஜர், தங்கத் தட்டில் அவதரித்த மாதம். உலகுக்கே அஹிம்சையை போதித்த அன்பின் வடிவமான புத்தர் (அழகு வடிவமும்கூட)அவ தரித்த மாதம். அனைத்து மதத்தவராலும் போற்றிப் பாராட்டப் பெற்ற ஆசார்ய புருஷர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவதரித்த மாதம். தமிழ்க் கடவுளான முருகப் பெருமான் அவதரித்த மாதம். நள்ளாற்று நாயகன் - ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரருக்கு விழா நடக்கும் மாதம். இவ்வாறு பல பெருமைகளைக் கொண்டது வைகாசி மாதம்.
வரூதினி ஏகாதசி!
வை காசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘வரூதினி ஏகாதசி’. அறிந்தோ அறியாமலோ செய் யும் பாவங்களைப் போக்கி, சகல செல்வங்களையும் அருளக் கூடியது இது. பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் இந்த வரூதினி ஏகாதசியைக் கடைப்பிடித்து மாந்தாதா, துந்துமாரன் ஆகிய அரசர்கள் மேன்மை அடைந்தார்கள். பிரம்ம தேவனின் ஐந்தாவது தலையைக் கிள்ளியதால் ஏற்பட்ட பாவம் நீங்க, சிவபெருமான் இந்த ஏகாதசி விரதமிருந்து பலன் பெற்றதாக ஏகாதசி மஹாத்மியம் கூறுகிறது.
தானங்களில் சிறந்தவை அன்னதானமும் கல்வி தானமும். இதில் வித்யா (கல்வி) தான பலனை அளிக்கக் கூடியது வரூதினி ஏகாதசி. இந்த நாளில் செய்யப்படும் எந்த ஒரு தானமும் ஆயிரம் மடங்கு பலனைப் பெற்றுத் தரும்.
வரூதினி ஏகாதசி நியதிகளைக் குறித்து விரிவாகச் சொல்கிறது ஏகாதசி மஹாத்மியம். அவை: உணவு மற்றும் தாம்பூலம் கூடாது; சந்தனம் மற்றும் பூக்கள் போன்றவற்றை அணியக் கூடாது. தூக்கமோ, எண்ணெய் தேய்ப்பதோ, உடற் பயிற்சியோ கூடாது!
வசிஷ்டர் சொன்ன ஏகாதசி!
வை காசி மாதம் வளர்பிறையில் வரும் மோகினி ஏகாதசியின் பெருமையை வசிஷ்ட முனிவர் கூறியிருக்கிறார்.
ஒரு நாள் வசிஷ்டரை வணங்கிய ஸ்ரீராமர், ‘‘சத்குருவே... அனைத்துப் பாவங்களையும் போக்கக் கூடிய ஒரு விரதத்தைச் சொல்லுங்கள்!’’ எனக் கேட்டார்.
அதற்கு வசிஷ்டர், ‘‘ராமா... வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் மோகினி ஏகாதசி, அறியாமையையும் பாவத்தையும் அடியோடு போக்கக் கூடியது. இதைப் போன்று வேறொரு விரதம் இல்லை. அதன் மகிமையைக் கூறுகிறேன், கேள்!’’ என்று கூறி விவரித்தார்:
சரஸ்வதி நதிக்கரையில் இருந்த பத்ராவதி நகரத்தை, சந்திர வம்சத்தைச் சார்ந்த த்ருதிமான் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அந்த நகரில் தனபாலன் என்றொரு வியாபாரி இருந்தான். அவன் ஈடு இணையற்ற விஷ்ணு பக்தன். மனதாலும் பிறருக்குத் தீங்கு நினைக்காதவன். அவனுக்கு சுமனஸ், த்யுதிமான், மேதாவி, சுக்ருதன், த்ருஷ்டபுத்தி என்று ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள்.
இவர்களில் த்ருஷ்டபுத்தி என்பவன், துஷ்ட புத்தி கொண்டவன். எப்போதும் குடிபோதையில் இருப்பது, மாற்றான் மனைவியிடம் முறைகேடாக நடப்பது, ‘தெய்வமே கிடையாது!’ என்று வாதாடுவது, பக்தர்கள் மற்றும் பெரியவர்களை அவமானப்படுத்துவது- இவையே அவனது இயல்புகள். மகனது செயல்கள் தனபாலனை வாட்டி வதைத்தன. எனவே, அவனை வீட்டை விட்டு விரட்டினார்.
‘அப்பாடா... இனிமேல் நம்மைக் கேள்வி கேட்க யாரும் இல்லை. இஷ்டம்போல இருக்கலாம்!’ என்று மனம் போனபடி வாழ ஆரம்பித்தான் த்ருஷ்டபுத்தி. ஆனால், செலவுக்குப் பணம் வேண்டுமே! திருடத் தொடங்கினான். களவாடிய செல்வத்தை காமத்துக்கே செலவழித் தான். அவ்வப்போது காவலர்களிடம் சிக்கிக் கடும் தண்டனையும் அனுபவித்தான். இருந்தாலும் திருந்துவதாக இல்லை. அதற்காகக் காலம் கவலைப் படவில்லை. அது, அவன் உடம்பில் பலவித நோய்களை உண்டாக்கித் தன் கைவரிசையைக் காட்டியது.
வியாதிகளால் துடித்த த்ருஷ்ட புத்தி, ‘விடுதலை கிடைக்காதா?’ என்று சுற்றித் திரிந்தான். போன பிறவியில் அவன் செய்த புண்ணியமோ என்னவோ? கங்கைக் கரையில் இருந்த கௌண்டின்ய முனிவரது ஆசிரமத்தைக் கண்டான்.
கௌண்டின்ய முனிவர் கங்கையில் குளித்து விட்டு வந்து கொண்டிருந்தார். அவர் உடம்பில் இருந்து ஒரு துளி கங்கை நீர், த்ருஷ்ட புத்தியின் மேல் விழுந்தது. அதன் பலனாக அவன் திருந்தினான். முனிவரின் கால்களில் விழுந்து, ‘‘மாமுனியே... பிறருக்கு நல்லது நினைக்காமல், தீமைகள் செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவன் நான். நினைத்தால் உள்ளம் நடுங்குகிறது. உங்களைத் தவிர வேறு கதி இல்லை. ஆகவே, எனக்கு நற்கதி கிடைக்க வழி சொல் லுங்கள்!’’ எனக் கண்ணீர் சிந்தினான்.
கௌண்டின்யர், ‘‘த்ருஷ்டபுத்தி... பாவம் செய்ய பல வழிகள் இருப்பது போல், அதில் இருந்து விடுபட்டு நற்கதி அடையவும் பல வழிகள் இருக்கின்றன. அவற் றுள் தலை சிறந்தது மோகினி ஏகாதசியன்று நீ விரதம் இருந்து மனம், மொழி, உடம்பு- மூன்றாலும், மாதவனான மஹாவிஷ்ணுவை வழிபடு. உனது பாவங்கள் எல்லாம் நீங்கும். நற்கதி கிடைக்கும்!’’ என்று சொல்லி, அந்த விரதம் இருக்க வேண்டிய வழிமுறைகளையும் அவனுக்குக் கூறினார். அதன்படி செய்த த்ருஷ்டபுத்தி, பாவங்கள் நீங்கி வைகுண்டம் அடைந்தான்.
ஏகாதசி விரத மகிமையை விளக்குவதே இந்தக் கதை. ஆகவே, ‘என்ன வேண்டுமானா லும் செய்யலாம். மோகினி ஏகா தசி விரதம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்!’ என்ற கோணத்தில் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது.
கிராமங்களில் வைகாசி!
கோ டை கால மான வைகாசி மாதத் தில் ‘வேட்டுவர் விழா’ என்று கொண்டா டுவர். கிராமங்களில் காளி, துர்க்கை, கங்கை போன்ற தெய்வங்களுக்கு விசேஷமான வழிபாடு கள் நடக்கும். இந்தக் கிராம தேவதைகளை வழிபடும் விதமாக பொங்கல் வைத்தும் கொண்டாடுவார்கள்.
தமிழகக் கிராமங்களில் இருக் கும் கோயில்களில் இந்தக் காலத் தில்தான் கூழ் ஊற்றும் விழா, கஞ்சி ஊற்றும் விழா போன்றவை நடைபெறும். ‘கங்கையம்மன் கூத்து’ என்ற பெயரில் தெருக்கூத்தும் நடக்கும்.
தொலைக்காட்சி, வானொலி ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்திலும் கிராமியத் தெருக்கூத்துகள் நம் கண்ணையும் கருத்தையும் கவரும்! தெருக்கூத்தில் ஆடுபவர்கள், பல வகையான வேடங்கள் புனைந்து (பெண் வேடம் உட்பட) தெருக்கள் தோறும் விளையாடும் காட்சி, உள்ளம் மகிழச் செய்யும். ‘கண்ணன் கோபி கைகளுடன் விளையாடுவது’ போன்ற தெருக்கூத்துக் காட்சியை ஊரே மெய்ம்மறந்து பார்க்கும்.
தெருக்கூத்தில் ஆடுபவர்கள் வீடு வீடாகச் சென்று தானியங்களைச் சேகரிப்பார்கள். அதை மாவாக்கிக் கூழ் காய்ச்சி, விசாக நாளன்று பொதுமக்களுக்கு ஊற்றுவார்கள். ‘அடுத்தவர் வாழ்வதற்காகவே நமது வாழ்க்கை!’ என்ற குறிக்கோளில் செய்யப்படுவது இது.
காளி, கங்கையம்மன், கன்னி, ஐயை (எல்லா ஜீவராசிகளுக்கும் தாயான கிராம தேவதை) என கிராமங்களில் கொண்டாடப் படும் எந்த தெய்வமாக இருந்தாலும் அது, மரங் களும் செடி, கொடி களும் அடர்ந்த சோலையின் நடுவேதான் இருக்கும். வெயில் உச்சத்தில் இருக்கும் வைகாசியில், ஊர் மக்கள் அனைவரும் கூடி, வேனலின் (வெயிலின்) கொடுமை தெரியாதவாறு, சோலை நடுவில் இருக்கும் தெய்வத்தை எண்ணி ஆடிப் பாடி, கூழ் காய்ச்சி அதை அடுத்தவர்க்கும் ஊற்றி மகிழ்வோடு இருப்பார்கள். வேனில் காலத்தில் கொண்டாடப்படும் இத்தகைய கொண்டாட்டங்கள் ‘வேனில் விழா’ என்று சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படுகின்றன.
கோவலன், கண்ணகி, கவுந்தி யடிகள் - மூவரும் மதுரைக்குச் செல்லும் வழியில் ஐயை கோட்டத்தில் தங்கினார்கள். அப்போது அங்கே வேடர்கள் வேனில் விழா கொண்டாடியதை இளங்கோவடிகள், தான் எழுதிய சிலப்பதிகாரத்தில் விவரிக்கிறார். அதில், வேடர்கள் பாடுவதாக உள்ள இரு பாடல்கள், சிவபெரு மான் திருமேனியில் பாதியாக இடம் பெற்ற அம்பிகையை வேண்டுவதாக அமைந்துள்ளன:
சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச் செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால் கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை உருவமாய் மறையேத்தவே நிற்பாய்! சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் இடர்கெட அருளும் நின் இணையடி தொழுதேம் அடல்வலி எயினர் நின் அடிதொழு கடனிது மிடனுகு குருதிகொள் விறல் தரு விலையே
அம்பிகையைப் பற்றி விவரிப்பதுடன், ‘இடர்களைக் கெடுத்து, அருள் புரியும் உன் திருவடிகளைத் தொழுகிறோம்’ எனச் சொல்லும் பாடல்களின் விளக்கம் மிக அழகு!
தமிழ் வேதம் தந்தவர்!
‘உ லகத்தையே நாம் அடைய லாம். அதற்கு காலம், இடம் பார்த்துக் காரியம் ஆற்ற வேண்டும்’ என்கிறார் திருவள்ளுவர்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்
இதில், வள்ளுவர் இடத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.
சோழ மன்னரது பட்டத்து யானை பவனி வந்தது. ஊர் கூடி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அமர்க்களமாக ஆடி அசைந்து வந்த யானையை, அதன் துதிக்கையில் கொத்தி எதிர்த்தது ஒரு கோழி.
அதைப் பார்த்த சோழ மன்னர் ஆச்சரியப்பட்டார். ‘‘இந்த இடத்து மண், ஒரு சாதாரண கோழிக்குக்கூட இவ்வளவு வீரத்தை உண்டாக்குகிறதே?!’’ என்றார்.
விளைவு? அந்த ஊர், ‘கோழியூர்’ என்ற பெயரில், சோழ மன்னர்களுக்கு முடிசூட்டு விழா நடக்கும் ஊர்களில் ஒன்றாக மாறியது. திருச்சியில் உள்ள உறையூரே அந்தக் கோழியூர். இடத்தின் முக்கியத்துவம் பற்றி வரலாறு கூறும் தகவல் இது.
வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவர் ஒரு முறை வேட்டையாடச் சென்றார். நன்கு உயர்ந்து, வளர்ந்திருந்த அவரது வேட்டை நாய்கள் காட்டுக்குள் கண்ணில் பட்ட விலங்குகளைத் துரத்திக் கொண்டிருந்தன. ஓசை கேட்டு, புதரில் மறைந்திருந்த சில முயல்கள் வெளிப்பட்டு ஓடின. அவற்றையும் நாய்கள் துரத்தின.
குறிப்பிட்ட ஓர் இடம் வந்ததும் முயல்கள் அனைத்தும் திரும்பி, வேட்டை நாய்களை வேகத்துடன் எதிர்த்தன. ‘‘ஆச்சரியம்! ஆச்சரியம்! வீரத்தை விளைவிக்கக் கூடிய மண் இது. கட்டுங்கள் கோட்டையை இங்கு!’’ எனக் கர்ஜித்தார் வீர பாண்டிய கட்டபொம்மன். பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை கட்டப் பட்ட இடம் அதுவே.
சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்பட்ட ஆதிசங்கரர் நடந்து கொண்டிருந்தார். வழியில், கொதிக்கும் மணலில் தத்தளித்த நிறைமாத கர்ப்பிணியான தவளை ஒன்று அவர் கண்களில் பட்டது. அப்போது அங்கு வந்த பெரிய பாம்பு ஒன்று, இயற்கையாக தவளை யிடம் தனக்கு உள்ள பகையை மறந்து, படம் விரித்து தவளைக்கு நிழல் தந்தது. அது கண்டு வியந்த ஆதிசங்கரர், ‘‘கருணை நிறைந்த பூமி இது!’’ என்று கூறி, அங்கே ஒரு பீடத்தை நிறுவியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இப்படி, இடத்தின் மகிமை களை விளக்கும் தகவல்கள் பல உண்டு. இது மட்டுமின்றி மகான்கள் அவதரித்ததால் மகிமை கொண்ட இடங்களும் உண்டு. ஒரு வைகாசி விசாகத் திருநாளில் அவதரித்த ஞான ஆசார்ய புருஷரான நம்மாழ் வாரால் மகிமை பெற்ற தலம் குருகூர்.
பொருநை ஆற்றின் வடகரையில் வசித்து வந்த ஒரு யோகி, நாய் ஒன்றை வளர்த்தார். தினந்தோறும் அந்த நாய் நதியைத் தாண்டிச் சென்று எதிர்க் கரையில் உள்ள நம்மாழ்வார் அவதாரம் செய்த குருகூர் செல்லும். அங்கு பக்தர்கள் சாப்பிட்டு மீதமிருக்கும் உணவைச் சாப்பிட்டு விட்டுத் திரும்பும்.
ஒரு நாள்... குருகூர் சென்ற நாய், குறிப்பிட்ட நேரம் கடந்தும் திரும்பவில்லை. யோகியாருக்கு இருப்புக் கொள்ளவில்லை. ‘நாய்க்கு என்ன ஆயிற்றோ?’ என வருந்திய அவர், அதை எதிர்பார்த்து ஆற்றங்கரையில் காத் திருந்தார். சற்று நேரத்தில், நாய் ஆற்றில் நீந்தி வருவது தெரிந்தது. அது, ஆற்றின் நடுவே வரும்போது, திடீரென வெள்ளம் பெருகியது. நீந்தித் தப்பிக்க முயற்சி செய்த நாய் ஓய்ந்து போனது.
வெள்ளப் பெருக்கில் மூழ்கித் தவித்தது. செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தார் யோகி.
நதியில் தத்தளித்த நாயின் மண்டை வெடித்தது. அதன் வழியாக ஓர் ஒளி வடிவம் வெளி வந்து மேல் நோக்கிப் போனது. அந்த ஒளி வடிவம், அமாவாசை இருட்டில் தோன்றும் சூரிய ஒளி போல இருந்ததாம்!
இந்தக் காட்சியைக் கண்ட யோகியார் ஆச்சரியம் அடைந்தார். ‘‘கிடைத்தற்கரிய பாக்கியத்தை நாய் பெற்று விட்டதே! இதைப் பெறுவதற்கு அந்த நாய் எந்த ஞான சாதனம் அல்லது யோக சாதனத்தைச் செய்தது? ஒன்றுமே இல்லை. எனினும், நம்மாழ்வாரின் அவதாரத் தலத்தில் இருக்கும் பாகவதர்களின் எச்சி லைத் தின்றதால் அல்லவா, நாய்க் குக் கூட வீடு பேறு கிடைத்தது. தவசிகள், யோகிகள், ஞானிகளுக் குக்கூட, சுலபத்தில் கிடைக்காத சிறப்பு இது!’’ என்று நெஞ்சு உருகிக் கண்ணீர் விட்டார் யோகி. குருகூர் நோக்கிக் கைகளைக் கூப் பித் தொழுதார். அவருடைய அழு கையும் தொழுகையும் பாட்டாக வெளிப்பட்டது. நம்மாழ்வாரை நோக்கி,
வாய்க்கும் குருகைத் திருவீதி எச்சிலை வாரியுண்ட நாய்க்கும் பரமபதம் அளித்தாய்! அந்த நாயோடு இந்தப் பேய்க்கும் இடம் அளித்தால் பழுதோ? பெருமான் மகுடம் சாய்க்கும் படிக்குக் கவிசொல்லும் ஞானத் தமிழ்க் கடலே!
என்று கேட்டுப் பாடினார். நம்மாழ்வார் அவதரித்த திருத் தலத்துக்கே இவ்வளவு பெருமை என்றால், அவரது மகிமையைச் சொல்லவும் வேண்டுமோ! அவரது அவதாரமே பெருமை நிறைந்ததுதான்.
வைணவ உலகின் ஞான ராஜதானி, திருக்குருகூர் எனும் ஆழ்வார்திருநகரி. வைகாசி விசாகத் தன்று நம்மாழ்வார் அவதரித்த ஞானபூமி; புண்ணிய பூமி!
வேளாளர் குலத்தில் அவதரித்த நம்மாழ்வாரின் முன்னோர் ஏழு தலைமுறையாகக் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். அந்த வம்சாவளி: திருவழுதி வளநாடர், அறம்தாங்கியார் (தர்மதரர்), சக்ரபாணியார், செந்தாமரைக் கண்ணர், செங் கண்ணர், போர்க்காரி, காரி.
காரியின் புதல்வர்தான் காரிமாறன் என்னும் நம்மாழ்வார். காரி மற்றும் அவர் மனைவி உடையநங்கை இருவரிடமும், ‘‘நாமே உங்களுக்குக் குழந்தை யாகப் பிறப்போம்!’’ என்று ஸ்வாமியே தன் மலர்வாய் திறந்து சொன் னார். அதன்படி அவரே நம்மாழ்வாராக அவதாரம் செய்தார். அதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
காரியும் உடையநங்கை யும் உன்னதமான இல்லற வாழ்க்கை நடத்தி வந்தனர். அன்பும் கருணையும் நிறைந்த வாழ்வு வாழ்ந்தும் அவர்களுக்கு அமைதி இல்லை. என்ன குறை?
குழந்தை இல்லாக் குறைதான். இருவரும் தமக்குள் வெதும்பிக் கொண் டிருந்தார்களே தவிர, ஒருவருக்கொருவர் தங்களது குறையை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு நாள்... உடையநங்கையிடம் காரி, ‘‘ஒரு வார்த்தை சொல்கிறேன், கேள்!’’ என்று பேசத் தொடங்கினார்.
உடைய நங்கை, கணவர் சொல் வதைக் கேட்க ஆயத்தமானாள். காரி தொடர்ந்தார்:
‘‘நாடு, நகரம், வளமான வாழ்க்கை போன்றவையே நிலை யானவை என்று இருந்தோம். ஆனால், சதங்கை அணிந்த கால், செந்தாமரையைப் போலச் சிவந்த வாய், மழலை மொழி - இவை யெல்லாம் கொண்ட குழந்தைகள் இல்லாத, முதுகைக் கட்டிக் கொண்டு கூத்தாடும் குழந்தைகள் முகத்தைப் பார்க்காத வாழ்வு ஒரு வாழ்வா? பொறி புலன்களை அடக்கி, கோடிக்கணக்கான தர்மங்களைச் செய்தாலும் குழந்தைகளைப் பெறாத வாழ்வு வாழ்வே அல்ல!’’ என்று கூறி வாய் மூடி னார்.
இருவர் உள்ளங்களும் வாடின. அவர்கள் தங்க ளின் குலதெய்வமான திருக் குருகூர்ப் பெருமாளை வழி பட்டார்கள். அப்போது, ‘‘நீங்கள் திருக்குறுங்குடி சென்று வழிபட்டால், உங் களுக்குப் பிள்ளைப் பேறு வாய்க்கும்!’’ என்றொரு வாக்கு அசரீரியாக, அவர்கள் காதுகளில் விழுந்தது.
அதன்படி இருவரும் திருக்குறுங்குடி சென்று அங்கே கோயில் கொண் டிருக்கும் பெரு மாளை மனதார வழி பட்டனர். வாயாரத் துதித்தனர். பெருமாளும் திருமகளும், இவர்கள் குறை தீர்க்க நேரில் வந்தது போன்ற திருக்கோலத்தில் இருந்தார்கள்.
காரி, உடையநங்கை இருவரும் தங்கள் விண்ணப்பத்தை வெளி யிட்டனர்.
ஏழு தலை முறையாய் 
யாங்கள் தொண்டராகி நிற்க 
வாழும் அடியோங்களுக்கு 
மக்கட் பேறு இல்லையென்றால் 
ஊழ்வினையோ? தெய்வம்! 
உனதருளும் பொய்யாமோ? 
வாழ்வினையே நல்கும் 
மகவளிக்கலாகாதோ?
‘‘குழந்தைச் செல்வம் இல்லாமல் தவிக்க, நாங்கள் என்ன பாவம் செய்தோம்? பசுவையும் அதன் கன்றையும் பிரித்தோமா? குழந்தை பெற்றவர்களைப் பார்த்துப் பொறாமை கொண்டோமா? குழந் தைகள் உண்பதைத் தடுத்தோமா? அடுத்தவர் குழந்தையிடம் அன்பு காட்டாது பேதம் பாராட்டினோமா? செங்கோல் செலுத்துவதற்குப் பதிலாகக் கொடுங்கோல் செலுத்தினோமா? சாதுக்களை வேதனைப் படுத்தினோமா? நன்றி மறந்தோமா? அடுத்தவர் செய்த உதவியை மறந்தோமா? மலடாகவே பிறந்து விட்டோமா?’’ என்று கேட்டார்கள்.
பல விதமான பாவங்களைச் சொல்லி, ‘அதையெல்லாம் நாங்கள் செய்தோமா?’ என்று கேட்கும் உத்தமர்களான காரி - உடையநங்கை ஆகியோரின் உள்ளம் புரிவதுடன், ‘இவையெல்லாம் பாவங்கள், இவற்றை நாம் செய்யக் கூடாது!’ என்று அடுத்த தலைமுறையினருக்கு நாம் தெரிய வைக்க வேண்டியதும் புரிகிறது!
பரிதவித்த அந்த தம்பதிக்கு அருள் சுரந்த பகவான், ‘‘நீதி மைந்தன் நாம் உமக்கு. நீர் ஏகுவீர்!’’ என்றார். அது மட்டுமா? காரியும் உடையநங்கையும் கண்களில் நீர்வழிய விடை பெற்றபோது, ‘‘நில்லுங்கள்!’’ என்று அவர்களை நிறுத்திய தெய்வம், நெருங்கி வந்து கண்ணீரைத் துடைத்து அருள் புரிந்தது. திருமாமகள், உடையநங்கையை நெருங்கித் தன் மலர்க் கையால் அவளது கண்ணீரைத் துடைத்து அருள் புரிந்தாள்.
காரியும் உடைய நங்கையும் குருகூர் திரும்பினார் கள். உள்ளத்தில் மகிழ்ச்சி பெருக் கெடுத்தது. ‘வெள்ளை ஆழித்துயி லும் வேதாந்த மூர்த்தியையே பிள்ளையாகப் பெறப் போகிறோம்!’ என்று குதூகலம் கொண்டார்கள். அவர்களது அந்தக் குதூகலம்- வைணவத்துக்கு, ஆன்மிக உல கத்துக்கு, தமிழுக்கு, வேதங்களுக்குக் குதூகலம் ஆயிற்று!
உடையநங்கைக்கு மணிவயிறு வாய்த்தது. வைகாசி விசாகம் - பௌர்ணமியுடன் கூடிய வெள் ளிக்கிழமையன்று ஒரு ஞான சூரி யனைப் பெற்றெடுத்தாள் அவள்.
குழந்தை கருவிலிருந்து வெளிவந்தவுடன், சடம் என்னும் அறியாமை நிலை இயல்பாக வந்து படரும். அது, உடையநங்கையின் குழந்தையிடமும் படர வந்தது. ஆனால்,
ஸ்ரீஆண்டாள்
அந்தத் தெய்வத் திருக்குழந்தை, கோபித்து அந்தச் ‘சடம்’ என்னும் அறி யாமை நிலையை விலகச் செய்தது. அதனால், அந்தக் குழந்தை சடகோபன் என்னும் பெயரைப் பெற்றது.
மாறன் என்ற திருநாமமும் உண்டு. அனைவர் உள்ளங்களிலும் நம்மாழ்வார் எனும் திருநாமத்தில் கொலு வீற்றிருப்பதும் அந்த தெய் வக் குழந்தைதான்!
நம்மாழ்வார், ரிக் வேத சாரத்தை திருவிருத்தமாகவும் யஜுர் வேத சாரத்தை திருவாசிரியம் ஆகவும், அதர்வண வேத சாரத்தை பெரிய திருவந்தாதி ஆகவும் சாம வேத சாரத்தை திருவாய்மொழியாகவும் செய்து அருளினார். அனைத்தும் அற்புதமான பாடல்களால் ஆனவை.
கௌரங்கர் எனும் ஸ்ரீ கிருஷ்ணசைதன்யர், ஆழ்வார் திருநகரி (திருக்குருகூர்) வந்து, நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் பிரதி ஒன்றை எடுத்துச் சென்றதாக, டி.என்.கங்குலி எனும் வங்காள சரித்திர அறிஞர் தனது ‘சைதன்யர் சரித்திரம்’ என்னும் நூலில் தெரிவிக்கிறார்.
இதன் மூலம், வட இந்தியாவில் வைஷ்ணவக் கொள்கைகள் பரவுவதற்கு நம்மாழ்வாரின் திருவாய்மொழி பயன்பட்டது எனத் தெரிய வருகிறது. திருவாய்மொழியை ‘திராவிட ப்ரம்ம சம்ஹிதை’ என்று குறிப்பிடுகிறார் டி.என்.கங்குலி.
வையகத்து மனிதர்களின் வாழ்வில் வளம் சேர்க்க வந்த ஞான தீபமான நம்மாழ்வார் அவதரித்த பெருமை கொண்டது - வைகாசி மாதம்.
¬ வகாசியில் வந்த வியாசராஜர்!
ஸ்ரீரங்கம் திருக்கோயில் விமானம்
எ ல்லைப் பிரச்னை என்பது வீட்டுக்கு வீடு, நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் இருக்கும் ஒன்று. இதன் காரணமாக பெரும் கலவரங் கள் நிகழ்ந்ததும் உண்டு. மகான்கள் சிலரது முயற்சியால் இத்தகைய பிரச்னைகள் தீர்க்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்ததுண்டு.
ஒரு முறை ஸ்ரீரங்கம்- திரு வானைக்கோவிலுக்கு இடையே எல்லைப் பிரச்னை உண்டானது. அனைவரின் உள்ளங்களிலும் அபிப்பிராய பேதம்! சாளுவ நரசிம்மன் என்ற மன்னனுடன் அங்கு வந்த வியாசதீர்த்தர் எனும் ஆசார்ய புருஷர், பிரச்னை தீர ஒரு வழி சொன்னார்.
‘‘குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஒருவர், மூச்சு விடாமல் ஓடத் துவங்க வேண்டும். அவர் எங்கு மூச்சு விடுகிறாரோ, அதுவே எல்லை!’’ என்றார்.
இதை மன்னன் சாளுவ நரசிம்மன் உட்பட அனைவரும் ஒப்புக் கொண்டனர். ஆனால், மற்றொரு பிரச்னை தலை யெடுத்தது. ‘யார் ஓடுவது?’ என்பதில் கருத்து வேறுபாடு எழுந்தது. முடிவில், ‘‘நானே ஓடுகிறேன்!’’ என்றார் வியாச தீர்த்தர். இரு தரப்பாரும் ஒப்புக் கொண்டார்கள்.
ஸ்ரீரங்கநாதர் கோயிலில் இருந்து வியாச தீர்த்தர் ஓடத் துவங்கினார். ஒரு குறிப்பிட்ட எல்லை வந்ததும் நின்றார். அதுவே ஸ்ரீரங்கத்தின் எல்லையாக தீர்மானிக்கப் பட்டது. அந்த இடத்தில் ஓர் ஆஞ்சநேயர் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தார் வியாசதீர்த்தர். இந்த ஆசார்ய புருஷரே புகழ் பெற்ற ஸ்ரீவியாசராஜர் ஆவார். வியாசதீர்த்தராக இருந்தவர், வியாசராஜர் ஆனதற்கும் ஒரு வரலாறு உண்டு. அது:
கலிங்கப் போரில் வெற்றி பெற்ற அரசர் கிருஷ்ண தேவராயர் தலைநகர் திரும்பினார். அவரை அணுகிய அரண்மனை ஜோதிடர்கள், ‘‘ஒரு சில நட்சத்திரங் களின் சேர்க்கையால் மன்னருக்கு ஆபத்து வரும். குறிப்பிட்ட நாளில் மரணம் நேரும்!’’ என்றார்கள்.
கிருஷ்ண தேவராயர், வியாச தீர்த்தரின் கால்களில் விழுந்தார். நடந்ததைக் கூறி ‘‘தப்பிக்க வழி என்ன?’’ எனக் கேட்டார். ஆலோசனை நடந்தது. அதன்படி, ஆபத்து நேர்வதாக இருந்த அந்தக் குறிப்பிட்ட நேரத்தில், வியாச தீர்த்தர் அரசராக இருப்பது என முடிவெடுக்கப்பட்டது. அரசாட்சியை வியாச தீர்த்தரிடம் ஒப்படைத்தார் கிருஷ்ண தேவராயர்.
குறிப்பிட்ட நேரம் நெருங்கியது. சிம்மாசனம் காலியாக இருந்தது. வியாச தீர்த்தர் சிம்மாசனத்துக்கு பூஜை செய்தார். தன் மேல் இருந்த காவி மேலாடையை எடுத்துச் சிம்மாசனத்தின் மீது எறிந்தார். பேரிரைச் சலுடன் அந்த ஆடை ‘பளிச்’சென்று தீப்பிடித்து எரிந்தது. அதன் சாம்பல் மட்டுமே எஞ்சியது. வரவிருந்த ஆபத்து நீங்கியது.
அதன் பின், தான் வழிபட்டு வந்த தெய்வ வடிவத்தைச் சிம்மாசனத்தில் அமர்த்திய வியாச தீர்த்தர், தானும் சிம்மாசனத்தில் அமர்ந்தார். ஆபத்தை நீக்கிய ஆசார்ய புருஷர், கிருஷ்ண தேவ ராயரிடமே மீண்டும் பதவியைத் தந்து, அவரையே அரசராக்கினார். அன்று தொடங்கி வியாச தீர்த்தர், வியாசராஜர் எனப்பட்டார்.
வியாசராஜரின் மகிமைகள் கணக்கில் அடங்காதவை. இறந்து போய்ப் புதைக்கப்பட்ட, சுல்தான் ஒருவரின் மகனை உயிர்ப்பித்தவர் இவர். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி இது.
டெல்லியில் வியாசராஜர், ஒரு மேடான பகுதியில் தங்கி இருந்தார். அந்த மேடு, சுல்தான் பலுல்லோடியின் மகன் சமாதி என்பது தெரிய வந்தது. ‘‘தோண்டுங்கள் இதை!’’ என்றார் மகான். சமாதி தோண்டப்பட்டது. அதனுள் இருந்த சடலத்தின் மேல், கமண்டல நீரைத் தெளித்தார் வியாசராஜர். சுல்தான் மகன் உயிர் பெற்றான். மாண்டவன் மீண்டதைக் கண்ட சுல்தான் பலுல்லோடி மகிழ்ந்தான். யானை, ஒட்டகம், ஏராளமான சன்மானங்கள் ஆகியவற்றுடன் வாத்தியங்கள் முழங்க வந்து, வியாசராஜருக்கு சமர்ப்பணம் செய்து வணங்கினான்.
இப்படி வியப்பில் ஆழ்த்தும் மகிமைகள் பல கொண்ட வியாசராஜரின் அவதாரமும் வியக்கத் தக்கது! அதையும் அனுபவிப்போம் வாருங்கள்.
காவிரி நதியும் கபினி நதியும் கலக்கும் இடத்துக்கு அருகே உள்ள தலைக்காடு எனும் தலத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த பன்னூரை ஆண்டு வந்தவர் வேங்கடகிரி நாயக். அவரிடம் அமைச்சராகப் பணி புரிந்தவர் ராமதேவர். உயர்ந்த கல்வியறிவு, தெளிந்த சிந்தனை, நிர்வாகத் திறமை ஆகியவற்றில் தலைசிறந்து விளங்கியவர் ராமதேவர். பல்லண்ண சுமதி, ராமாசார்யர் என்றெல்லாம் மக்கள் அவரை அன்பொழுக அழைத்துப் போற்றினர்.
ராமதேவரின் மனைவி சீதம்மா (லக்ஷ்மம்மா என்றும் சொல்வார்கள்). இந்த தம்பதிக்கு பீமக்கா எனும் பெண் குழந்தை ஒன்று இருந்தது. எனினும், அந்த தம்பதி ஆண் குழந்தை ஒன்றும் வேண்டுமென விரும்பினர்.
அதற்காக தவம் இருந்தார்கள். அவர்களின் கனவில், வேதவியாசர் தோன்றி, ‘‘காவிரிக் கரைக்கு அருகில் ஒரு துறவி வருவார். அவரை சரண் அடையுங்கள்!’’ என்று சொல்லி மறைந்தார். வியாசர் சொன்னது வியாசராஜனின் திரு அவதாரத்துக்காகத்தான் என்பது யாருக்கும் தெரியவில்லை.
நாட்கள் கடந்தன. ஒரு நாள் ராமதேவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மயக்கம் அடைந்தார். அவர் இறந்து விட்டதாக அனைவரும் நினைத்தார்கள். சீதம்மா உடன்கட்டை ஏறத் தீர்மானித்தார். அந்தக் காலத்தில், உடன்கட்டை ஏறி உயிர் துறக்கத் தீர்மானிக்கும் பெண், யாராவது ஒரு பெரியவரிடம் ஆசி வாங்க வேண்டும் என்பது வழக்கத்தில் இருந்தது.
அதன்படி, அப்போது அங்கு விஜயம் செய்திருந்த மகான் ஸ்ரீபிரம்மண்ய தீர்த்தர் என்பவரிடம் ஆசி பெறும்படி சீதம்மாவை மற்றவர்கள் அறிவுறுத்தினார்கள். சீதம்மா தாங்க முடியாத வேதனை யுடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள அப்பூர் மடம் சென்று ஸ்ரீ பிரம்மண்ய தீர்த்தரை வணங்கினார்.
‘‘தீர்க்க சுமங்கலீ பவ... புத்ரவதீ பவ!’’ என்று ஆசீர் வாதம் செய்தார் மகான்.
சீதம்மாவைச் சுற்றி இருந்தவர்கள் திடுக்கிட்டார்கள். நடந்ததை மகானிடம் விவரித்து, ‘‘ஸ்வாமி, கணவருடன் சேர்ந்து தானும் உயிர் துறக்க வேண்டும் என்பதற்காகவே இவள் தங்களிடம் ஆசி பெற வந்தாள்!’’ எனக் கூறினார்கள். அவர்களை நிமிர்ந்து பார்த்த மகான், சீதம்மாவின் வீட்டுக்குச் சென்றார். தன் கையில் இருந்த கமண்டல நீரை, ராமதேவர் உடம்பின் மீது தெளித்தார்.
அதே விநாடியில் தூக்கத்தில் இருந்து எழுந்திருப்பதைப் போல, ராமதேவர் எழுந்தார். மனைவியுடன் சேர்ந்து பல முறை ஸ்வாமிகளை வணங்கினார்.
அவர்களுக்கு ஆசி கூறிய மகான், ‘‘உங்களுக்கு இனி பிறக்கும் முதல் குழந்தையை மடத்துக்குத் தந்து விடுங்கள்! அதன் பிறகு உங்களுக்கு மற்றோர் ஆண் குழந்தை பிறக்கும்!’’ என்றார்.
மகான் வாக்கு பொய்க்குமா என்ன? சீதம்மாவுக்கு மணி வயிறு வாய்த்தது. குழந்தை பிறக்கப் போகும் நாளை அறிந்த ஸ்ரீபிரம்மண்ய தீர்த்தர், மடத்தில் இருந்து ஒரு தங்கத் தட்டைக் கொடுத்தனுப்பி குழந்தை பூஸ்பரிசம் இல்லாமல் (பூமியில் படாமல்) பிறக்க வழி செய்தார். அதன்படி, பிறந்த குழந்தை, பூமியைத் தொடாமல் தங்கத் தட்டில் ஏந்தப்பட்டது. ஏற்கெனவே வாக்களித்தபடி குழந்தையை மடத்துக்கு அனுப்பினார்கள். (பிரபவ வருடம், வைகாசி மாதம் அவதரித்தது அந்தக் குழந்தை.)
அங்கே, ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்த பாலை உண்டு வளர்ந்தது குழந்தை. யதிராஜன் என்று பெயரிட்டார்கள். ஸ்ரீஸ்வாமிகளின் நேரடிப் பார்வையில் வளர்ந்த யதிராஜனுக்கு ஐந்து வயதில் உபநயனம் செய்தார்கள். ஏழாவது வயதில், யதிராஜனுக்கு சந்நியாச தீட்சை தந்து ‘வியாச தீர்த்தர்’ என்று திருநாமம் சூட்டினார் ஸ்ரீபிரம்மண்ய தீர்த்தர். இந்த வியாச தீர்த்தர்தான் கிருஷ்ண தேவராயரைக் காப்பாற்றியதன் காரணமாக ‘வியாசராஜர்’ என அழைக்கப்பட்டார். வியாசராஜ வைபவம் எனும் நூலில் உள்ள அந்தத் தகவலை இந்தக் கட்டுரையில் முன்பே பார்த்தோம். இவரே அடுத்த அவதாரத்தில் ராகவேந்திர ஸ்வாமிகளாக திருஅவதாரம் செய்தார்.
அகிம்சை அவதரித்த அற்புத மாதம்!
கருணை ததும்பும் முகம், தாழ்ந்து நீண்ட காதுகள், முழங்காலைத் தொடும் நீண்ட கைகள், தரிசித்த மாத்திரத்திலேயே அமைதியைத் தரும் வடிவம் - புத்தர்.
உலகம் முழு வதையும் வாழ வைக்க வந்த ஞான வள்ளல் புத்தர். சகல செல்வங்கள், சுகபோகங்கள் தரும் அரச வாழ்வு, அன்பு நிறைந்த அழகான மனைவி, பாசம் காட்டி
புத்தர்
மயக்கும் குழந்தை என அனைத்தையும் துறந்தவர் புத்தர். மக்கள் வாழ்வே தமது வாழ்வு; மற்ற உயிர்களின் வாழ்வே தமது வாழ்வு என வாழ்ந்து உலகுக்கு வழிகாட்டிய உத்தமர்.
புத்தர் அவதாரம் செய்தது- வைகாசி விசாகம். அவர் ஞானம் அடைந்தது- வைகாசி விசாகம். அவர் முக்தி பெற்றது- வைகாசி விசாகம்! இந்த அபூர்வ ஒற்றுமை புத்தரின் வாழ்வில் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
புத்தர் பற்றிய இந்தத் தகவல்கள், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில், அமுதசுரபியைப் பற்றிச் சொல்லும் பகுதியில் காணப் படுகின்றன.
மணிமேகலை யிடம், ஆபுத்திரன் பற்றியும், அவனு டைய வற்றாத அமுதசுரபியைப் பற்றியும் தீவதிலகை கூறினாள். அத்துடன், ‘‘அந்த அமுதசுரபி வைகாசி விசாக நாளன்று உன்னை வந்து அடையும்!’’ என்று சொல்லி, அந்த நாள் புத்தர் பிரானின் புனித நன்னாள் என்றும் சொல்கிறாள். அதைச் சொல்லும் மணிமேகலை வரிகள்:
இருது இளவேனில் எறிகதிர் இடபத்து ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின் மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் அபுத்திரன் கை அமுதசுரபி
இதில் இளவேனில் காலத்தைக் காட்டி, இடபமாகிய வைகாசி மாதத்தைக் காட்டி, பதின்மூன்று நட்சத்திரங்களைக் கடந்து (நடுவில்) இருக்கும் விசாக நட்சத்திரமும் பௌர்ணமியும் பொருந்திய நன்னாளைக் காட்டி, அந்நன்னாளில் ஞான மடைந்த புத்தரைக் காட்டி, அமுதசுரபியையும் காட்டுகிறது மணிமேகலை.
வருடத்தை ஆறு காலங்களாகப் பிரித்த நம் முன்னோர் சித்திரை - வைகாசி என்னும் இரண்டு மாதங் களையும் இளவேனில் காலமாகப் பிரித்தார்கள். ‘இடபம்’ என்பது வைகாசி மாதத்தைக் குறிக்கும். முற்காலத்தில் நட்சத்திரங்களைக் கணக்கிடும்போது, கார்த்திகையை முதலாவதாகக் கொண்டு கணக்கிட்டார்கள். அதன்படி கணக்கிட்டால் ‘விசாகம்’ பதினான் காவது நட்சத்திரமாகும். அதாவது இருபத்தேழு நட்சத்திரங்களில் நடுவில் இருக்கும் நட்சத்திரம் விசாகம். இதைத்தான், ‘ஒரு பதின்மேலும் ஒரு மூன்று சென்றபின்’ என்றும், ‘மீனத்து (நட்சத்திரங்களின்) இடைநிலை’ என்றும் மணிமேகலை சொல்கிறது. இன்று மட்டுமல்லாது முற்காலத்திலும் வைகாசி விசாகம், சிறந்த விழாவாகக் கொண்டாடப் பட்டு வந்ததை இதன் மூலம் நாம் அறியலாம்.
அனைவருக்கும் அன்பை வாரி வழங்கிய புத்தர் சொன்ன ஞானத் தகவல்கள் பல. அவற்றில் ஒன்று;
ஓர் ஊரில் பெரும் பணக்காரன் ஒருவன் இருந்தான். பணம் இருந்தும் மனம் இல்லை அவனுக்கு. மகா கருமி. ‘ஐயா, தர்மம்!’ என்ற குரல் கேட்டால் போதும். அவ்வளவுதான்! கரடி போலப் பாய்ந்து, நாய் போலக் கத்தி, அடித்து விரட்டி விடுவான். அவனுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்தது. அவன் மனைவியும் உறவினர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை.
கருமியின் தந்தை உத்தமராக வாழ்ந்து மறைந்தவர். ஏராளமான தர்மங்கள் செய்து அதன் பயனாக, அவர் சொர்க்கத்தில் வாழ்ந்து வந்தார். மகனின் கருமித்தனம் அவர் மனதை வாட்டியது. ‘மகன் மனதை மாற்ற வேண்டும். ஏழை, எளியவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அவன் வழங்க வேண்டும். இதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும்!’ என்று தீர்மானித்தார் தந்தை.
சில விநாடிகளிலேயே அவரது தீர்மானம் நடைமுறைக்கு வந்தது. யாராலும் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாதபடி, மகனைப் போலவே உருவம் கொண்டார்.
நேரே அரண்மனைக்குச் சென்று மன்னனைச் சந்தித்து வணங்கினார். ‘‘மன்னா! தீய புத்தி கொண்டவனான நான், இவ்வளவு நாட்கள் கருமியாக இருந்து விட்டேன். இப்போது திருந்தி நல்லவனாக உங்களிடம் வந்து இருக்கிறேன். எனது சொத்துகள் அனைத்தையும் அரசாங்கத்திடமே ஒப்படைக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்!’’ என்றார்.
அரசருக்கும் அவையில் கூடியிருந்த மற்றவர்களுக்கும் தங்கள் காதுகளையே நம்ப முடியவில்லை!
‘கஞ்சப் பயல் இவன். எப்போதும் போதையில் ஆழ்ந்திருப்பவன். ஒருவேளை மது மயக்கத்தில் இவ்வாறு பேசுகிறானோ? முகத்தைப் பார்த்தால் அப்படி இல்லை. தெளிவாகத்தானே இருக்கிறது. எப்படி இருந்தாலும் சரி! இவனைக் கையாளுவோம்’ என்று தீர்மானித்தார் அரசர்.
‘‘என்னிடம் கொடுக்க வேண்டாம். உனது சொத்துகளை நீயே ஏழைகளுக்கு தர்மம் செய்துவிடு!’’ என்றார்.
‘‘சரி மன்னா, அப்படியே செய்கிறேன்!’’ என்ற கருமி வடிவத்தில் இருந்த தந்தை, (மகனின்) வீட்டை அடைந்தார். அப்போது கருமி (மகன்) வீட்டில் இல்லை. அவன் மதுக்கடையில் இருந்தான்.
வீட்டில் இருந்த யாருக்கும் வேறுபாடு தெரியவில்லை. ஆனால், கருமியின் மனைவி உட்பட அனைவரும், ‘என்ன இது? தினந்தோறும் மதுக்கடையில் இருந்து வரும்போது, தள்ளாடிய படிதானே வருவார்? இன்று தெளிவான நடை, தெளிந்த முகத்துடன் வருகிறாரே?’ என்று நினைத்தார்கள். கருமியின் வேலைக்காரர்களுக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை.
ஓர் அடையாளத்துக்காக இனி கருமி வடிவத்தில் இருக்கும் தந்தையை, ‘தந்தைக் கருமி’ என்றே பார்ப்போம்.
தந்தைக் கருமி வேலைக்காரர் களை அழைத்தார். ‘‘பணியாளர் களே! பாதுகாவல் ஜாக்கிரதையாக இருக்கட்டும். ஊர் மிகவும் கெட்டுப் போய் விட்டது. எவனாவது என் வடிவத்தில்கூட வந்து, ‘இது எனது வீடு, இதெல்லாம் எனது சொத்து!’ என்று சொல்லலாம். அப்படி எவனாவது வந்தால், விசாரணையே வேண்டாம். அடித்து விரட்டுங்கள்!’’ என்றார்.
அதன் பிறகு மகனின் மனைவியி டம், ‘‘எனது கருமித்தனம் எல்லாம் இன்றோடு போய்விட்டது. இனிமேல் நான் தான- தர்மங்கள் எல்லாம் செய்யப் போகிறேன்!’’ என்றார். மனைவி, ‘இவ்வளவு நாளாக என்ன சொல்லியும் கேட்காதவர், இப்போ தாவது திருந்தினாரே!’ என எண்ணி மகிழ்ந்தாள்.
அவள் பார்த்துக் கொண்டிருக் கும்போதே அறைக்குள் சென்ற தந்தைக் கருமி பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தார். பிறகு வேலைக் காரர்களிடம், ‘‘தானியக் கிடங்கில் இருந்து எல்லா தானியங்களையும், தொழுவத்தில் இருந்து மாடு- கன்றுகளையும் கொண்டு வாருங்கள்!’’ என்றார்.
ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து உள்ளம் மகிழ வாரி வாரிக் கொடுத்தார். அரிசி, பருப்பு, பணம், ஆடை, மாடு எனப் பலவாறாக கொடுக்கப்பட்டன. இந்தத் தகவல் ஊரெங்கும் பரவியது. ‘கருமியா இப்படிச் செய்கிறான்?’ என்ற ஆச்சரியத்தோடு மிச்சம், மீதி இருந்தவர்களும் கருமி வீட்டின் முன் கூடி விட்டார்கள். பொருட்கள், தொடர்ந்து கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
அந்த நேரத்தில்... மது அருந்திவிட்டு முழு போதையில் வீடு திரும்பிய கருமி, தனது வீட்டின் முன் பெருங்கூட்டம் நிற்பதையும், ஏராளமானோர் கைகளில் பொருட்களுடன் வந்து கொண்டிருப்பதையும் பார்த்தான். தன் வீட்டுப் பொருட்களை எல்லாம் யாரோ திருடிக் கொண்டு போகிறார்கள் என்ற எண்ணத்தில் அவர்களைத் தடுத்தான்.
அவர்களோ, லட்சியம் செய்யா மல் போய்க் கொண்டிருந்தார்கள். அவசர அவசரமாக வீட்டின் வாயிலை நெருங்கிய கருமி ஆச் சரியம் அடைந்தான். அங்கே வீட்டின் உள் வாயிற்படி அருகில், தன்னைப் போலவே வடிவம் கொண்ட ஒருவன் பொருட்களைக் கொடுத்துக் கொண்டிருப்பதையும், தன் மனைவியும் வேலைக்காரர்களும் அவனுக்கு உதவி செய்வதையும் பார்த்தான்.
பதற்றம் சூழ்ந்தது கருமிக்கு. ‘‘ஐயோ! ஐயோ! இவையெல்லாம் எனது பொருட்கள். யார் இப்படிச் செய்வது?’’ என்று கத்தியபடியே உள்ளே நுழைந்து தடுக்க முயன்றான்.
அவனை மடக்கினார்கள் வேலைக்காரர்கள். ‘‘ஆஹா... இவன் யாரோ? நம் எஜமானரைப் போலவே வேஷம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறான். இதற்காகத்தான் எஜமானர், முன்பே இவ்வாறு நடந்தாலும் நடக்கும் என்று சொன்னார் போலிருக்கிறது!’’ என்று சொல்லியபடியே அவனை அடித்தார்கள்.
கருமி கலங்கினான். ‘‘இவர்கள் நம்மைப் போட்டு அடிக்கிறார்கள். உள்ளே நம்மைப் போலவே ஒருவன் அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறான். இதையெல்லாம் நம் மனைவி யும் பார்த்துக் கொண்டு இருக்கிறாள். இனிமேல் நாம் என்ன சொன்னாலும், அது இங்கே எடுபடாது!’’ என்று முணுமுணுத்தபடியே, வேகமாக சென்று மன்னர் முன்னால் நின்றான்.
‘‘மன்னா... என்னைப் போலவே இருக்கும் ஒருவன், எனது வீட்டில் உட்கார்ந்து கொண்டு, எனது உடைமைகளை எல்லாம் வாரி வாரிக் கொடுக்கிறான். அதைத் தடுத்து நிறுத்துங்கள்!’’ என்று பதறினான்.
‘‘சற்று முன்பு நீதானே வந்து இவ்வாறெல்லாம் தான- தர்மம் செய்யப் போவதாகச் சொன்னாய்? திருந்தி விட்டதாகக்கூடக் கூறினாயே?’’ என்றார் மன்னர்.
‘‘மன்னா! நான் இங்கு வரவும் இல்லை. அவ்வாறெல்லாம் சொல்லவும் இல்லை. என்னைப் போலவே வேஷம் போட்டுக் கொண்டு எனது வீட்டில் இப்போது இருக்கிறானே, அவன்தான் செய்திருக்க வேண்டும்!’’ என மறுத்தான் கருமி.
கருமியின் வீட்டில் இருந்து அவன் மனைவியும் தந்தைக் கருமியும் அரசவைக்கு வரவழைக்கப்பட்டார்கள். ‘‘ஒரே உருவத்தில் இரண்டு பேரா!’’ என அங்கிருந்தவர்கள் எல்லாம் ஆச் சரியப்பட்டனர்.
கருமியின் மனைவியிடம் மன் னர், ‘‘அம்மா! ஒரே வடிவத்தில் இருக்கும் இந்த இருவரில், உன் கணவர் யார்? சொல்!’’ என்றார்.
அவள் தந்தைக் கருமியைக் காட்டி, ‘‘இவர்தான் என் கணவர்!’’ என்றாள். கருமி அதிர்ந்தான். இருந்தாலும் சில நொடிகளில் சமாளித்துக் கொண்டு, ‘‘மன்னா... என் நடுத் தலையில் ஒரு மச்சம் இருக்கும். அது, எனக்கு முடி வெட்டுபவருக்குத் தெரியும். அந்த மச்சம் இந்தப் புதியவனுக்கு இருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள்!’’ என வேண்டினான்.
மன்னர் முடிவெட்டு பவரை அழைத்துக் கேட்டார். அவரும், ‘‘ஆமாம் மன்னா! அவன் சொல்வது சரிதான். அவனுக்குத் தலையில் மச்சம் உண்டு. நான் பார்த்திருக்கிறேன்!’’ என ஆமோதித்தார்.
‘‘சரி! இந்த இருவருக் குமே தலையில் மச்சம் இருக்கிறதா என்று இப் போதே பார்த்துச் சொல்!’’ எனக் கட்டளையிட்டார் மன்னர்.
முடிவெட்டுபவர், கருமியையும் தந்தைக் கருமியையும் சோதித்து, இருவருக்குமே தலையில் மச்சம் இருப்பதாகக் கூறினார். கருமிக்கு ஒன்றுமே புரியவில்லை.
‘‘ஐயோ! சரியாகச் சாப்பிடாமல் நல்ல துணி அணியாமல், வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி ஏராளமாகச் சேர்த்து வைத்தேன். அதையெல்லாம் யார் யாரோ அனுபவிக்கப் போகிறார்கள். கருமியாக இருந்த எனக்கு நல்ல தண்டனை கிடைத்தது. தெய்வம் கொடுத்த தண்டனை இது. புத்தி வந்தது. அடுத்தவருக்குக் கொடுக்காமல் அடுக்கி வைத்த எனக்கு இது தேவைதான்!’’ என்று புலம்பி அழுதான்.
மகன் திருந்தியதைக் கண்ட தந்தை வாய் திறந்தார். ‘‘மன்னா, நான் இவனுடைய தந்தை. யாருக்கும் உபயோகம் இல்லாமல் கருமியாக வாழ்ந்த இவனைத் திருத்தி அவனுக்கு நல்லறிவு புகட்டுவதற்காகவே அவன் வடிவத்தில் வந்து இவ்வாறெல்லாம் செய் தேன்!’’ என விவரித்தார்.
‘‘அனைவரும் என்னை மன்னியுங்கள். நான் திருந்தி விட்டேன். இனி எல்லோருக்கும் கொடுத்து வாழ்வேன். தான- தர்மம் செய்வேன்!’’ என உறுதி கூறினான் கருமி. மகிழ்ச்சி அடைந்த தந்தை, மீண்டும் புண்ணியலோகம் சென்றார்.
காஞ்சிப் பெரியவர்
இ வ்வளவு ஏன்? நம் காலத்திலேயே நடமாடும் தெய்வமாக பாராட்டப் பெற்று, அனைத்து மதத்தவராலும் அன்பு செலுத்தப் பட்ட மகா சுவாமிகளான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருஅவதாரம் செய்த தும் இந்த மாதத்தில்தான்.
விழுப்புரத்தில் ஜய ஆண்டு வைகாசி அனுஷத்தில் இந்த திரு அவதாரம் நிகழ்ந்தது.
திருச்செந்தூரில்..!
பி ள்ளைத் தமிழ் நூல்களில் அதிகமாக உள்ளது முருகன் பிள்ளைத் தமிழ் நூல்கள் என்பது அறிஞர்களின் கூற்று. அந்த அளவுக்கு அனைவர் உள் ளங்களிலும் இடம் பெற்றிருக்கிறார் கந்தக் கடவுள்.
கந்தக் கடவுளுக்கு உண்டான ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் தனி இடத்தைப் பெற்றுள்ளது. திருச்செந்தூருக்கு அலைவாய், சீரலைவாய் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. அலைகள் வீசும் கடற்கரை ஓரம் கோயில் கொண்டு அருள் புரியும் கந்தக் கடவுளை மிகப் பழைமையான தமிழ் நூல்கள் பலவாறு பாராட்டுகின்றன.
முருகன் தீம்புனல் அலைவாய்
(தொல்காப்பியம்-களவு -சூத்திரம்:23)
வெண்டலைப் புணரி அலைக்குஞ் செந்தில் நெடுவேல் நிலை இய காமர்வியன்துறை
(புற-55)
திருமணி விளக்கின் அலைவாய்ச்செருமிகு சேஎய்
(அக-266)
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச் சீர் அலைவாய்
(திருமுருகாற்றுப்படை)
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
(சிலப்பதிகாரம்)
நஞ் செந்தில் மேய வள்ளி மணாளர்க்கு
(அப்பர் ஸ்வாமிகள்)
நோய்வாய்ப்பட்ட ஆதிசங்கரர் திருச்செந்தூர் வந்து முருகப் பெரு மானை தரிசித்து சுப்ரமண்ய புஜங்கம் என்ற துதிநூலைப் பாடி நோய் நீங்கப் பெற்றதாகப் பல நூல்கள் சொல்கின் றன.
இவ்வாறு பெருமை பெற்ற திருச்செந்தூரில் வைகாசி விசாகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படும். வைகாசி விசாகத்தில் அவதரித்த வள்ளி மணாளனின் பெருமையை வேதம், இதிகாசம், புராணங்கள் மட்டுமல்லாமல் பாம்பன் ஸ்வாமிகள், வள்ளிமலை ஸ்வாமிகள், வாரியார் ஸ்வாமிகள் எனப் பல மகான்களும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
வாருங்கள்! ஆறுமுகனின் அவதார வைபவத்தைச் சுருக்கமாகப் பார்க் கலாம்.
வேதங்களில் கரை கண்டவன்; காசியப முனிவரின் மகன் எனும் பெருமை பெற்றவன்; கற்புக்கரசியான பதுமகோமளையின் கணவன்; சூரியனையே சிறையிட்ட வீரனான பானுகோபனின் தந்தை; தலைசிறந்த ஞானியான சிங்கமுகா சுரனின் சகோதரன்;
‘எம் சக்தியைத் தவிர மற்றெந்த சக்தியாலும் உனக்கு மரணம் கிடையாது!’ என்று கயிலாய நாதனிடம் வரம் பெற்றவன்; இவ்வளவு பெருமைகளும் ஒருங்கே கொண்டவன் சூரபத்மன். இப்படி சிவனிடமே வரம் வாங்கிய ஆணவத்தால், ‘வான் சுமந்த தேவர்களை மீன் சுமக்க வைத்தான்’ என்பார் வாரியார் ஸ்வாமிகள். தேவர்களை வென்று, அவர்களைத் தனக்கு அடிமையாக்கினான் சூரபத்மன். துயரம் தாங்காத தேவர்கள், சூரபத்மனுக்கு வரம் தந்த அரனிடமே போய் அழுதார்கள். தேவர்களைக் காப்பதற்காக ஐந்து முக சிவமான சிவபெருமான் தந்ததுதான், ஆறு முக சிவமான முருகப் பெருமான்.
மன்மதனே வெட்கப்படும் படியான அழகு கொண்ட குமரக் கடவுளின் திருஅவதாரம், வைகாசி விசாகத்தன்று நிகழ்ந்தது. விசாகன் என்றால், பறவையில் சஞ்சரிப்பவன் என ஒரு பொருள் உண்டு.
அதற்கேற்ப- சூரியன் தந்த மயில், வேத மயில், இந்திர மயில் என மூன்று மயில்களின் மீது ஏறி வலம் வந்து வாட்டம் போக்கிய முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்து அவனைத் தனக்கு (நான்காவது) மயில் வாகனமாகவும், கோழிக் கொடியாகவும் அமைத்துக் கொண்டார். அல்லல்பட்ட அமரர் கள் ஆனந்தத்தில் ஆழ்ந்தார்கள்.
சூரசம்ஹாரமும், வைகாசி விசாகத் திருநாளும் திருச்செந்தூரில் மிகவும் விமரிசையாக நடை பெறும்.
திருச்செந்தூர் _ தேவர் களாலும் மறக்க முடியாத திருத்தலம்.
வாட்டமுற்ற தேவர்களின் மனத் துயரத்தை ஆதியோடு அந்தம் (முழுவதும்) விண்ணப்பித்து, அவர்களின் துயர் நீக்கும்படி தேவகுருவான வியாழ பகவான் முருகப் பெருமானை பிரார்த்தித்த திருத்தலம்.
மிகுந்த பரிவோடு தேவர் களின் குறையைக் கேட்டு சூரசம்ஹாரம் செய்த முருகப்பெருமான், தானே தன் திருக்கரங்களால் ஐந்து சிவலிங்கங்களை வைத்துப் பூஜை செய்த திருத்தலம். அந்தச் சிவலிங்கங்களை, இன்றும் நாம் திருச்செந்தூரில் முருகனுக்கு வலப்புறம் தரிசிக்கலாம். (முருகனுக்கு இடப்புறம் ஒரு சிறிய குகை போன்ற வழியின் மூலம் போய் தரிசிக்க வேண்டும்).
வள்ளி-தெய்வானையுடன் ஸ்ரீ ஷண்முகர்
இவையெல்லாம் ஏதோ அந்தக் கால நிகழ்ச்சிகள் என ஒதுக்கிவிட முடியாது. நமது காலத்திலும் திருச்செந்தூரில் முருகன் வெளிப்படுத்திய மகிமைகள் ஏராளம்! உதாரணத்துக்காக அவற்றில் ஒன்று. அயல் நாட்டுக்காரர்களால் விவரிக்கப்பட்டது இது.
பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதி. மதுரை, நாயக்க மன்னர்கள் ஆட்சிக்கு உட்பட்ட காலம். அப்போது டச்சுக்கார வியாபாரிகள் திருச்செந்தூர் கோயிலில் புகுந்தார்கள். அங்கிருந்த பஞ்சலோகங்களால் செய்யப்பட்ட முருகப்பெருமானின் விக்கிரகத்தைப் பார்த்தார்கள். (இந்த விக்கிரகத்தை ‘ஆறுமுகநயி னார்’ என்பர். நாமும் அப் படியே அழைப்போம்).
‘பளபள’ என ஒளி விட்டுப் பிரகாசித்த அதை, தங்கம் என எண்ணிக் கொள்ளை அடித்துக் கொண்டு போனார்கள். பலம் வாய்ந்த கடற்படை இல்லாததால் நாயக்க மன்னர்க ளால் ஏதும் செய்ய முடியவில்லை. பக்தர்களோ துயரத் தில் தவித்தார்கள். கொள்ளையடிக்கப் பட்ட ஆறுமுக நயினார் விக்கிர கத்துடன் டச்சுக் காரர்கள் கப்பலில் கிளம்பினார்கள்.
சற்று தூரம் போவதற்குள் ளாக ஆறுமுக நயினார் ஆவே சத்தைக் காட் டத் தொடங்கி விட்டார். கடல் கொந்தளித்தது; கப்பல் தத்தளித்தது.
‘வைக்கக் கூடாத இடத்தில் கை வைத்து விட்டோம்!’ என்று பயந்த டச்சுக்காரர்கள், ஆறுமுக நயினார் விக்கிரகத்தை எடுத்துக் கடலில் எறிந்தார்கள். கடல் அடங்கி அமைதியானது. கப்பல் பிழைத்தது.
(இந்த அற்புத நிகழ்ச்சி கி.பி. 1648-ல் நடந்தது. இதைச் சொன்னவர் ஒரு டச்சுக்கார மாலுமியே. எம்.ரென்னல் என்ற பிரெஞ்சு ஆசிரியர் எழுதி, ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் இருந்து 1785-ல் வெளியான ‘சரித்திர இந்தியா’ என்ற நூலில் இந்தத் தகவல் உள்ளது.)
ஐந்து ஆண்டுகள் ஆயின. திருச்செந்தூர் கோயிலில் ஆறுமுக நயினார் விக்கிரகம் இல்லாதது, திருமலை நாயக்கரின் காரியஸ்தரான வட மலையப்ப பிள்ளைக்கு வருத்தம் அளித்தது. அவர் வேறு விக்கிரகம் செய்ய முயன்றார்.
அவரது கனவில் ஆறுமுகக் கடவுள் தோன்றினார். ‘‘அன்பனே! நான் கடலுக்குள் இருக்கி றேன். நீ கடலில் சிறிது தூரம் பயணித்தால், ஓர் இடத்தில் எலுமிச்சம் பழம் மிதக்கும். அதற்கு மேலே ஆகாயத்தில் ஒரு கருடன் வட்டம் இடும். அந்த இடத்தில் நீ தண்ணீரில் இறங்கு! நான் கடலின் அடியில் இருந்து எழுந்து மேலெழும்பி உன் கையில் அகப்படுவேன்!’’ என்றார்.
கனவு கலைந்தது. ஆறுமுகக் கடவுள் ஆணையிட்டபடியே, வட மலையப்ப பிள்ளை, சிலருடன் படகில் போய்க் குறிப்பிட்ட இடத்தில் கடலில் மூழ்கினார்.
ஆச்சரியப்படும்படியாக முதலில் ஒரு நடராஜ விக்கிரகம் கிடைத்தது. அதன்பிறகே ஆறுமுக நயினாரின் விக்கிரகம் அகப் பட்டது. ஆறுமுக நயினாரின் அந்த அருள் வடிவம் 1653-ஆம் ஆண்டில், மறுபடியும் கோயிலில் சேர்க்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. திருச்செந்தூரில் உள்ள அந்த ஸ்வாமி விக்கிரகத்தில், கடல் மீன்கள் கொத்திய தடயங்களை இன்றும் காணலாம்.
இதன் பிறகு 1803-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒருவருக்கு ஆறு முகப் பெருமான் அறிவூட்டிய அதிசயமும் நடந்தது.
அப்போது திருநெல்வேலியில் கலெக்டராக இருந்தார் லூஷிங்டன் துரை. அவர் திருச்செந்தூரில் முகாமிட்டிருந்த நேரம். வசந்த மண்டபத்தில் ஆறுமுகக் கடவுளை எழுந்தருளச் செய்து, பக்தர்கள் விசிறிக் கொண்டிருந் தார்கள். லூஷிங்டன் துரைக்கு இகழ்ச்சி பிறந்தது. ‘‘என்ன? உங்கள் ஸ்வாமிக்கு வியர்க்கிறதோ?’’ என்று கிண்டலாகக் கேட்டார்.
திருச்செந்தூர் கடற்கரை
‘‘ஆம்!’’ என பதில் வந்தது.
‘‘நிரூபித்துக் காட்டுங்கள்!’’ எனக் கர்ஜித்தார் லூஷிங்டன் துரை. இறைவன் மேல் இருந்த மலர் மாலைகளையெல்லாம் எடுத்து விட்டு, ஒரு துணியை ஸ்வாமி மீது போர்த்தினார்கள் அர்ச்சகர்கள். கொஞ்ச நேரத்தில் துணி முழுவதும் நனைந்தது. வியர்வை வழிந்தோட ஆரம்பித்தது.
திகைப்படைந்த லூஷிங்டன் துரை, திருச்செந்தூர் இறைவனுக்கு ஏராளமான வெள்ளிப் பாத்திரங் களைக் காணிக்கையாகச் செலுத்தி னார்.
இப்படிப்பட்ட திருச்செந்தூரில் ஆறுமுகனின் அவதார நாளான வைகாசி விசாகத்தன்று திருவிழாக் கொண்டாட்டங்கள் மிகவும் விமரிசையாக நடக்கும். கடற்கரையெங்கும் மணல் வெளியே தெரியாதபடி, மக்கள் வெள்ளமாகக் குவிவார்கள். பக்திமயம்தான்!

Comments