காலம் தோறும் தர்மம்!

பனிரெண்டு ஆண்டுகள், பனிரெண்டு வெவ்வேறு வனங்களில் சஞ்சரித்துக்கொண்டு காய் கனி கிழங்கு வகைகளைப் புசித்துக்கொண்டு வாழ்ந்த பாண்டவர்களுக்குப் பதிமூன்றாவது ஆண்டு மிகப்பெரிய நெருக்கடிகளைக் கொண்டு வரும் என்று அவர்கள் அஞ்சினார்கள். இந்த ஓராண்டும், கௌரவர்கள் கண்களில் படாமல் அவர்கள் வாழ வேண்டும். அவர்கள் பாண்டவர்கள் என்று அடையாளம் காணப்பட்டால், மீண்டும் பனிரெண்டு ஆண்டுகள் காட்டில் வனவாசம் செய்ய வேண்டும். ஐந்து சகோதரர்களும் வெவ்வேறு தேசங்களில் சஞ்சாரம் செய்து பிழைக்கலாம். ஆனால், யாரும் யாரையும் பிரிய மனம் ஒப்பவில்லை அவர்களுக்கு. கடைசியில் தருமன்தான் தீர்வு செய்தார். மத்ஸ்ய அரசன் விராடனின் தேசத்தில் கரந்து வாழலாம் என்று முடிவாயிற்று.

தருமன், ‘கங்கன் என்ற பெயரில் வாழப் போகிறேன். விராடன், தர்மத்தில் செல்லும் மனமும், அண்டியோரை ஆதரிக்கும் பண்பும் கொண்டவன். அவனிடம், ஜோதிஷம், பட்சி சகுனம், வேத சாஸ்திர நீதிகள் உரைத்தும், மன்னர்களின் விளையாட்டான சூதாட்டத்தை விராடனுடன் ஆடி அவனைக் களிப்பித்தும் வாழப் போகிறேன்’ என்றார். ‘கங்கனாகிய நான் தருமரின் அரண்மனைப் பணியில் இருந்தேன். தருமர், நாடிழந்து வனம் சென்றதால் உன்னிடம் வந்தேன் என்று சொல்லி வேலையில் சேர்வேன்’ என்றார். பீமனைப் பார்த்து, ‘காற்றின் புதல்வனை நான் எவ்வாறு ஒளிப்பேன்’ என்று கேட்டார்.

பீமன், ‘வல்லன் என்ற பெயர் கொண்ட சமையல்காரனாக விராடன் அரண்மனையில் சேர்வேன். நீ யார் என்று மன்னன் கேட்டால், தருமராசன் அரண்மனையில் மடைப்பள்ளித் தலைவனாயிருந்தேன் என்பேன்’ என்றான். ‘அநேகவிதமான ரசங்களையும், பருப்பு வகைகளையும் நான் நன்கு சமைக்கத் தெரிந்தவன். தருமர், அவனைக் கவலையோடு பார்த்தார். அஞ்ஞாதவாசம் வெளிப்பட்டு விடும் என்றால் அது பீமன் என்கிற கோபக்காரனால் தான் ஆகும் என்று அவர் நினைத்துக்கொண்டார்.

இந்திரனை வென்றவனும், ஏழுலகங்களிலும் நிகரற்ற வில்லாளியுமான அர்ச்சுனனைப் பார்த்தார். அவர் உள்ளம், குற்றவுணர்வில் கசிந்தது. தன்னால் அல்லவோ, இந்த மாபெரும் வீரர்களுக்கு, சக்ரவர்த்தி புத்ரர்களுக்கு இச்சோதனை என்று நினைத்துக் கொண்டார். அவன் சொன்னான்.

‘இந்திரலோகத்தில் ஒருமுறை தேவ நடிகை ஊர்வசி என்னை விரும்பி அணுகினாள். நீ, என் அன்னை போன்றவள். தேவேந்திரன் என் தந்தை அல்லவோ? என்று அவளை மறுத்தேன். அந்தப் பெண், என்னை நபும்சகன் ஆகும்படிச் சபித்தாள். அந்த நபும்சகத் தன்மை நான் விரும்பும்போது, ஓராண்டு காலம் இருந்து நீங்கும். நான் பிருகன்னளை என்ற பெயரில் அந்தப்புரப் பெண்களுக்கு நடனமும் பாட்டும் கற்றுத் தருவேன்.’

நகுலன், ‘தான் தாமக்ரந்தி என்ற பெயரில் குதிரை லாயத்தில் தலைவனாவேன்,’ என்றான்.

சகதேவன், ‘தான் விராடனின் பசு மந்தையைப் பராமரிப்பேன்’ என்றான். என் பெயர் தந்த்ரீபாலன்.

துருபதன் மகள் திரௌபதி ‘தான் சைரந்த்ரி என்ற பெயருடன், விராடன் அரண்மனைப் பெண்களுக்கு வண்ண அலங்காரமும் வாசனைத் திரவியம் தயாரிப்பாளியாகவும் இருப்பேன். திரௌபதியின் சேடியாக இருந்தேன் என்பேன்’ என்றாள். அனைவரும், இப்படிச் சொல்லியே, அவரவர் விரும்பிய பணிகளில் விராடனிடம் சேர்ந்தார்கள்.

பாண்டவர் ஐவரும் மற்றும் திரௌபதியும் எவைகளில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்களோ அந்த விருப்பங்களை அழகாக எடுத்துச் சொல்லிவிடுகிறார் வியாசர். தருமரின் சூதாட்ட விருப்பம் விராடனிடம் நிறைவேறுகிறது. உணவில் பெரும் ஈடுபாடு கொண்டவனும், வகை வகையான உணவுத் தயாரிப்பில் இச்சை கொண்டவனுமான பீமனுக்கு உகந்த மடைப்பள்ளி உத்தியோகம் கிடைத்தது மட்டும் இன்றி விராடனிடம் தம் திறமையைக் காட்டிப் பரிசில் பெற வரும் மல்லர்களிடம் மல்யுத்தம் செய்யும் வாய்ப்பும் கிடைத்துவிடுகிறது. ஆகவே பீமனின் தேவை இப்படியாக நிறைவேறி விடுகிறது.

அர்ச்சுனன் என்கிற மாபெரும் வீரன், தமக்குள் போற்றி வளர்ந்த பெண்மையைத் தம் நபும்சகத் தன்மையில் நிறைவு காண்கிறான். அந்தப்புரப் பெண்களோடு அவனது இருப்பு அவன் ஆசையைப் பூர்த்தி செய்துவிடுகிறது. தவிரவும் கலைகளோடும் இசை நாட்டியத்தோடும் அவனது ஈடுபாட்டுக்கு ஒரு வடிகால் கிடைத்து விடுகிறது. நிகரற்ற ஆண் தன்மையன் என்று உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிற ஒரு ஆணின் ஒரு பாதி பெண் என்கிற உடற்கூற்றுண்மை மிக நுட்பமாகப் பதிவு செய்யப்படுகிறது. இன்னுமொரு முக்கிய செய்தி, அர்ச்சுனன் உடம்பால் பெண்தானே தவிர அவன் மனத்துக்குள் ஆண் தன்மையே பரவி இருந்தது.

இன்னுமொரு தகவல், பொதுவாகப் பெண் ஈடுபாட்டாளர்கள் என்று கிருஷ்ணனையும், அர்ச்சுனனையும் சொல்வது வழக்கம். இதில் கிருஷ்ணன் யோகி. அவன் மோகி அல்லன். அவன் மோதிக்கப்படுபவன். அர்ச்சுனன் விஷயம் அதுவல்ல. செல்லும் பயணம்தோறும் ஒரு துணையைத் தேடிக்கொள்வது அவனது இயல்புதான் எனினும், அந்தப்புரத்துக்குள்ளேயே புழங்கும் வாய்ப்பை அவன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் உடன் சேர்ந்து எண்ண வேண்டும். அரண்மனையில் விராடன் செல்ல மகள் உத்தரைக்கு அவன் ஆசிரியையாக அமைந்தபோதும், விராடனே தம் மகளை அவனுக்குத் தர நிச்சயித்த போதும், தாம் ஆசிரியன் என்பதால் உத்தரை தம் சிஷ்யை மாணவி என்பவள் மகளே ஆவாள் என்று மறுத்து தம் மகன் அபிமன்யுவுக்கு உத்தரையை மணம் செய்து வைத்தவன் அர்ச்சுனன்.

வியாசரின் பாத்திரங்கள், பொது அம்சங்களில், பொது குணம் கொண்டவை. அதேசமயம் அவர்கள் தனி மனிதர்கள் என்பதால், தனி குணாம்சங்கள் கொண்டவர்களும்கூட. அதாவது அவர்கள் இரண்டு பக்கம் கொண்டவர்கள் அல்லர். பல பரிமாணங்கள் உள்ளவர்கள்.

நகுலனும் சகதேவனும், இந்திரப் பிரஸ்தத்துக்கு தருமன் அரசனாக இருந்தபோது என்ன என்ன பணிகள் ஒப்படைக்கப்பட்டதோ, அந்தப் பணிகளில் தேர்ச்சி பெற்று குதிரைகள் மற்றும் பசுக்களைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டார்கள்.

திரௌபதியின் நிலை வேறுவகையானது. அவள் கலை உணர்வு கூடுதலாகக் கொண்டவள். வண்ணப் பொடித் தயாரிப்பு, மணப் பொருள்கள் உருவாக்கல், சந்தனம் முதலான வாசனைப் பொருட்களைக் கொண்டு தைலம் வடித்தல் முதலான நுண் கலைகளைத் தன் பிறந்தகத்திலேயே கற்றுத் தேர்ந்தவள். இந்தக் கலை உணர்வே, அவளை அர்ச்சுனன்பால் கூடுதல் அன்பு கொள்ளச் செய்திருக்க வேண்டும். அந்த அரசி, பனிரெண்டு ஆண்டுகளில் காடுகளில் சஞ்சரித்தபோது, இந்தக் கலைகளில் ஈடுபட வாய்க்கவில்லை. அரண்மனைச் சேவகம் அதுவும் மகாராணியிடம் சேவகம் என்றதும், தம் கலை உணர்வை விஸ்தரித்துக் கொண்டாள்.

ஆக, ஆறு பேரும் ஏதோ ஒரு வகையில் விராட தேசத்தில் நிம்மதி அடைந்தார்கள். நாட்கள் செல்லச் செல்ல, அறுவர் மனத்திலும் லேசான நம்பிக்கையும் நிம்மதியும் தோன்றத் தொடங்கி இருந்தன. பத்து மாதங்கள் பூர்த்தி ஆகி இருந்தன. கையெட்டும் தூரத்தில் இழந்த இந்திரபிரஸ்த நாடு தெரியத் தொடங்கியது. அதிகாரத்தின், ஆட்சியின் வைகறை, விடியத் தொடங்கி இருந்தது.

விராடன், பெரிய வீரன் என்று சொல்வதற்கு இல்லை. தருமன், அவரை நல்லவன் என்று அறிந்திருந்தார். தேசம் செழிப்படைந்திருந்தது. வளம் கொழிக்கும் வயல்களும், பொற்சுரங்கங்களும் நாட்டில் இருந்தன. பாண்டவர்கள் பதவியில் இருந்தபோது அவர்களைப் பற்றி நல்லெண்ணம் கொண்டவனாக அவன் இருந்ததை தருமன் அறிந்திருந்தார். அவனுக்கும் அவன் மனைவி சுதேஷ்ணைக்கும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. அந்தப் பணியாளர் ஆறு பேரும், வேலைக்காரர்கள் இல்லை என்பதைத் தொடக்கம் முதலே அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்களின் சுபாவம், பேச்சு, பழகுமுறை, தங்களை ஒரு வரம்புக்குள் நிறுத்திக்கொண்டது, அரண்மனைக் காரர்கள் தின்று முடித்த மிச்ச உணவைத் தின்னாமல் இருப்பது, தங்களையும் தங்கள் வசிப்பிடத்தையும் தூய்மையாக வைத்திருத்தல், தேவையான சொற்களை தேவையான நேரத்தில், அதுவும் பேசச் சொன்னால் மட்டுமே பேசுதல் ஆகிய ஒழுக்கங்கள் அவர்கள் வேறு மாதிரியானவர்கள் என்று நினைக்க வைத்தன.

திரௌபதியை முதன்முறை பார்த்த சுதேஷ்ணை, திடுக்கிட்டுப் போய், உன்னைச் சைரந்தரியாக (பணிப்பெண்ணாக) வைக்க முடியாது என்றாள். காரணமும் அவளே சொன்னாள்:

கல்யாணி... நான் உன்னைப் போஷிக்க மாட்டேன். எனக்கு உன்னிடம் அன்பு தோன்றுகிறது. ஆயினும் என் கணவர் (விராடன்) உன்னைப் பார்த்தால், உன்னிடத்தில் கெட்ட எண்ணம் கொள்வார். ஆதலால், நீ இந்த அரண்மனையில் வசிப்பதற்குத் தகாதவள்..."(தன் கணவன் பற்றி இவ்வளவு துல்லியமாக எடை போட்டிருக்கும் மனைவியும் அதை வெளிப்படுத்தியவளும், இதிகாச வரலாற்றில் சுதேஷ்ணையே போலும்.)

விராட தேசத்தில் பத்து மாதங்கள், அஞ்ஞாத வாசத்தைப் பூர்த்தி செய்தார்கள் பாண்டவர்கள். ‘கர்ப்பத்தில் இருக்கிற குழந்தையை யாரும் காணாத மாதிரி’ என்று அழகாக உவமை சொல்கிறார் வியாசகவி. பிரச்னை, கீசகனின் உருவில் வந்தது.


கீசகன் ஓர் அரசன். அசுரர்கள் என்பவர்கள், அடுத்தவர்களைப் பகைத்து, துன்பம் தந்து, அகாரணமாகக் கோபம் கொண்டு நாசங்களை ஏற்படுத் துபவர்கள்.

அரசி சுதேஷ்ணையின் சகோதரன். அதோடு, விராட தேசத்து படைகளுக்குத் தளபதியாகவும் இருந்தான். அரசன் விராடனை மதியாமல், தம் பலத்திலும், படை பலத்திலும் செருக்குற்றுத் திரிந்தவன். விராடன், அவனுக்கு அஞ்சி அவன் செய்யும் அநீதிகளுக்குக் கண் கொடுக்காமலும் செவி கொடுக்காமலும் வாழ்ந்தவன். இந்தச் சூழலில், திரௌபதியைச் சகோதரியின் அந்தப்புரத்தில் பார்த்தவன், அவன் மேல் காமம் கரும்புனலாகி, உன்மத்தம் கொண்டு திரௌபதியிடம் ஆசை வார்த்தைகள் பேசுகிறான். அவனைத் துச்சம் செய்கிறாள் திரௌபதி. ஒரு கட்டத்தில், சினத்தின் மீதேறிய கீசகன், சபை நடுவே, அரசன் முன் அடித்தும், காலால் உதைத்தும் அவமானம் செய்கிறான். ஐந்து கணவர்களுக்கும் முன்பும் அது நடக்கிறது. பீமன் மட்டுமே கொதித்துக் கீசகனைக் கொல்ல எழுகிறான். தருமர் அவனைத் தடுத்து விடுகிறார். அஞ் ஞாதவாச காலம் இன்னும் ஒரு மாதம் மீதம் இருக்கிறது.

தருமனின் மனம் எதுவோ, அதையே அர்ச்சுனன், நகுலன், சகதேவன் ஆகிய இளைய சகோதரர்கள் அநுசரிப்பவர்கள். பீமன் தருமனை முழுதாக ஏற்றுக் கொள்ளாதவன். அவனுக்கென்று தனியாக நியாயங்கள் இருந்தன. துரியோதனன் சபையில் திரௌபதி அவமானப்படுத்தப்பட்டபோது பீமனே, ‘தம்பி, எரிதழல் கொண்டு வா, அண்ணன் கையை எரித்திடுவோம்’ என்றவன். அப்போது தடுத்தவன் அர்ச்சுனன்.

இரண்டாம் முறை பாஞ்சாலத்தின் இளவரசி, இந்திரப்பிரஸ்தத்தின் பட்டத்தரசி, ஐந்து மாவீரர்களின் மனைவி, ஒரு அசுரனால் காலால் உதைக்கப்பட்ட போது, பீமன் மட்டுமே துடித்தெழுந்தான். திரௌபதி, அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். அதனால்தான் அவள் ஒருமுறை சொல்ல நேர்ந்தது.

இரண்டாவது, முதலாவதாக இருந்திருக்கக் கூடாதா..." அன்று இரவே பீமனே, அதை மெய்ப்பித்தான். கீசகனின் அரண்மனைக்குத் திரௌபதி, பீமனின் ஏற்பாட்டில் செல்கிறாள். கீசகன், அவள் முன்னால் பீமனால் கொல்லப்படுகிறான். அதோடு, அவனது சகோதரர்களையும் கொன்றான்.

விராட தேசமாகிய மத்ஸ்ய தேசம் பற்றிய ஒரு குறிப்பை இங்கு அறிவது நல்லது. பராசரர் மற்றும் சாந்தனு மகாராஜாவின் மனைவியாகிய சத்தியவதிக்கும் மத்ஸிய தேசத்துக்கும் ஒரு தொடர்பை, இந்தோனிசிய தேசத்து மகாபாரதப் பிரதிகள் கற்பிப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். சில வரிகளில் அக்கதை.

உபரிசரன் என்ற அரசன் காட்டுக்கு வேட்டையாடச் சென்று, களைத்து ஒரு மரத்தடியில் அமர்ந்தான். அப்போது அவனுக்கு மனைவி நினைவு ஏற்பட ஸ்கலிதம் வெளிப்பட்டது. அந்த ஸ்கலிதத்தை ஒரு இலையில் சுருட்டி, அங்கு தென்பட்ட ஒரு பச்சைக் கிளியை அழைத்து அதைத் தன் மனைவியிடம் சேர்ப்பிக்கக் கேட்டுக்கொண்டான். கிளி அந்த இலையைக் கவ்விக் கொண்டு பறக்கையில், பருந்தொன்று அவ்விலையை, உணவுப் பொருள் என்று நினைத்து அக்கிளியைத் தாக்கியது. இலை நழுவிக் கடலில் விழுந்தது. அதை கடல் மீன் விழுங்கியது. சில நாட்களுக்குப் பிறகு, மீனவன் வலையில் சிக்கிய அந்த மீனின் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருக்கக் கண்டான். அதை மன்னன் உபரிசரனிடம் கொண்டு போய்க் கொடுத்தான். அது அவனது விந்தில் பிறந்த குழந்தைகள். அந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை ஆண். அந்தக் குழந்தையை அரசன் எடுத்துக் கொண்டான். மற்றது பெண் குழந்தை. அந்தக் குழந்தை, மீனவர் தலைவரிடம் வளர்ந்தது. அவளே சத்தியவதி. முதலில் பராசரர் மூலம் வியாசரைப் பெற்றவள். அதன்பிறகு சாந்தனு மன்னனை மணந்தாள். அவள் குழந்தைகளில் இரண்டாமவன் விசித்திரவிரியன். அவன் மரபு பாண்டு. பாண்டுவின் மரபினர் பாண்டவர்கள். அந்த இன்னொரு ஆண் குழந்தை, உபரிசரனால் வளர்க்கப்பட்டு, அவனால் உருவாக்கப்பட்டதே மிரஸ்ய தேசமாயிற்று. மதிஸ்யம் - மச்சம் - மீன். அந்த மத்ஸய மன்னன் மரபிலேயே விராடன் வருகிறான். விராட தேசம், மத்ஸ்ய தேசமாயிற்று. இது ஒரு கருதுகோள்.

துரியோதனன் அஞ்ஞாதவாசத்திலேயே பாண்டவர்களைக் கண்டுபிடிக்க முயன்றான். கீசகன் கொலை, நிச்சயம் பீமனால் என்று அவன் உணர்ந்தான். அக்கால போர்முறைப்படி, விராட தேசத்துப் பசுமந்தைகளைக் கவர்ந்து போரைத் தொடர படையெடுத்து வந்தான். நபும்சகனாக இருந்த அர்ச்சுனன் வெளிப்பட்டு விராட தேசத்தைக் காப்பாற்றினான் என்பது எல்லோரும் அறிந்த கதை. அர்ச்சுனன் வெளிப்பட்ட அந்தக்கணம் சரியாக அஞ்ஞாதவாசம் முடிந்த சமயம். பீஷ்மர் அதை உறுதிப்படுத்தினார். தம் மாணவி உத்தரையை அபிமன்யுவுக்கு மண முடித்து, நன்றிக்கடன் தீர்த்தான் அர்ச்சுனன்.

ஓராண்டு காலம் உண்ண உணவும், சம்பளமும், இருக்க இடமும் தந்து காப்பாற்றிய விராடனுக்கு இப்படியான நன்றியைச் செலுத்தினார்கள் பாண்டவர்கள். பாஞ்சாலியை மணம் கொண்டதன் காரணமாகப் பாஞ்சாலனின் படை பலமும், விராடன் மகளை மணமுடித்தால் விராடன் படையும் மூலதனமாகக் கொண்டே பாண்டவர்கள் தம் நாட்டுரிமையைக் கோரினார்கள்.

மகாபாரதத்தில் விராட பருவம் முக்கியமானது என்பது ஒரு கொள்கை. அடைக்கலத்தின் மகிமை திருமணத்தில் முடிந்த மங்களம் என்பவை அதன் காரணங்கள். செய்த நன்மைகள் ஒருபோதும் வீண் போகாது என்பதே இதன் தத்துவம்.

Comments