குரங்கணில்முட்டம்

தொ ண்டை நாட்டுத் திருத்தலங்களுள் ஒன்று குரங்கணில்முட்டம். அழகு தமிழ்ப்பெயர் சிதையாமல் இன்னமும் அப்படியே நடைமுறையில் இருக்கிறது. காஞ்சிபுரம் - வந்தவாசி பாதையில், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து பயணப்படும்போது, பாலாற்றைக் கடந்தால் சுமார் 4 கி.மீ தொலைவில் தூசி என்றொரு கிராமம். அங்கிருந்து பாதை பிரிகிறது. ‘குரங்கணில்முட்டம் 2 கி.மீ.’ என்று பலகை அறிவிக்கிறது. பிரியும் பாதையில் சென்றால், உட்புறமாக வளைந்து, கிராமத்தின் கோடியில் _ பாலாற்றின் கரைக்கு அருகில் அமைந்துள்ளது கோயில். பாதை சற்றே கரடுமுரடாக இருந்தாலும், கோயில் முகப்பு வரை வாகனங்கள் செல்லக் கூடும்.
அது சரி, அதென்ன பெயர் குரங்கணில்முட்டம்? குரங்கு, அணில், முட்டம் (காகம்) _ இந்த மூன்றும் இங்கு ஈசனை வழிபட்டதால் இந்தப் பெயர் வந்தது.
- முச்சகமும் ஆயும் குரங்கணில் முட்டப்பெயர் கொண்டு ஓங்கு புகழ் ஏயும் தலம் வாழ் இயன் மொழியே என்று பாடுவார் ராமலிங்க வள்ளலார்.
வாலி வழிபட்ட தலம் (குரங்கு). பின்னொரு முறை, தேவேந்திரன், அணில் வடிவம் எடுத்து வந்து வழிபட்டான். எமன், காக உருவம் எடுத்து வணங்கினான்.
‘எந்த உயிர் எந்த வடிவத்தில் இருந்தாலும் இறையனாரை வணங்க முடியும். ஓர் உயிரின் வடிவமும் பிறப்பும் இறை வழிபாட்டைத் தடை செய்ய முடியாது!’ என்பதற்கு ஆதாரமாக விளங்குகிறது இந்த ஊர்.
மிகச் சிறிய கிராமம் குரங்கணில்முட்டம். பள்ளிக் கூடத்தைத் தாண்டிப் போகும்போது வழி வளைந்து வளைந்து, இரு மருங்கும் புதர்கள் மண்டிக் காணப்படுகிறது. கண்ணுக்கெட்டிய தொலைவில் புதர்கள் மட்டுமே தெரிய... ‘கோயில் இங்கே இருக்கிறதா?’ என்று தேடுகிறோம். ஓடி வந்து எட்டிப் பார்க்கும் ஊர்ச் சிறுமியர்களிடம், ‘‘ஈஸ்வரன் கோயில் எங்கே?’’ என்று கேட்டவுடன், சிரித்துக் கொண்டே வந்து நமக்கு வழிகாட்டுகின்றனர்.
மிகச் சிறிய கோயில். கோபுரம் இல்லை. மேற்கு நோக்கியது. பிரதான வாயிலில் நுழைந்தால், நடுவில் ஒரு நந்தி மண்டபம். வெளிப் பிராகாரத்தில் நிற்கிறோம். வலம் வருகிறோம். வடக்குச் சுற்றில் ஒரு சிறிய இலந்தை மரம் (செடி என்றே சொல்லலாம்). ஆலயத் தல விருட்சம் _ இலந்தை. முன்னர் பெரிதாக இருந் ததாம் மரம். இப்போது செடி நட்டு வைத்திருக்கிறார்கள்.
கிழக்குச் சுற்றில் பெரிய வில்வ மரம். தெற்குச் சுற்றில் தரைக்கு பதிலாக, ஓரிடத்தில் பெரிய பாறையின் பரப்பு விரிந்து கிடக்கிறது. அப்படியே அதன் மீது ஏறி நடந்து வரு மாறு வைத்திருப்பது இயற்கையின் அழகைக் கூடுதலாக இனிமைப்படுத்துகிறது.
வலம் வந்து முடித்து, உள் நுழைகிறோம். மண்டபம் போன்று தோற்றமளிக்கும் ஓரிடத்தில் நிற்கிறோம். நேரே நோக்கினால், மூலவர் சந்நிதி. (நமக்கு) இடப்புறமாக, தெற்கு நோக்கியவாறு அம்பாள் சந்நிதி. இரண்டு சந்நிதிகளையும் சேர்த்து வலம் வருவதற்கான வசதி உள்ளது.
வலம் வரத் தொடங்குகிறோம். நாம் நிற்பது மேற்குத் திருச்சுற்றுப் பகுதியில். முதலில் வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமணியர், மயில் மீது அமர்ந்தபடி, நான்கு திருக் கரங்களுடன் காட்சி தருகிறார். தொடர்ந்து வடக்குச் சுற்றில் திரும்ப, அம்பாள் சந்நிதியின் பின்புறம் நடந்து, சுவாமி சந்நிதியின் பிராகாரப் பகுதிக்குள் நுழைந்து விட்டோம். சிறிய லிங்கம் ஒன்று, கிழக்கு முகமாகக் காட்சி தர, எதிரில் சிறிய நந்தி. லிங்கத்துக்கு இடப்புறம் சிறிய அம்பாள், காசி விசுவநாதரும் விசாலாட்சியும்.
வடக்கு கோஷ்டத்தில் துர்க்கையும் பிரம்மாவும் காட்சி தருகின்றனர். சண்டிகேஸ்வரரும் உள்ளார். சற்றே தள்ளி சிறிதாக நவக்கிரகச் சந்நிதி. வடகிழக்கு மூலையில் பைரவர். கிழக்குச் சுற்றில் திரும்பினால், சூரியன் நிற்கிறார். கிழக்குக் கோஷ்டத்தில் மகாவிஷ்ணு.
தெற்குச் சுற்றில் திரும்புகிறோம். கோஷ்டத் தில் தட்சிணாமூர்த்தி. தெற்குச் சுற்று நிறை வடையும் இடத்தில், சப்தமாதர்கள். அடுத்து திருஞானசம்பந்தர். தொடர்ந்து சேக்கிழார். அதற்கப்புறமாக சைவ நால்வர்.
திருஞானசம்பந்தரை இரண்டு முறை (தனி யாக ஒரு முறையும், சைவ நால்வரில் ஒரு முறையும்) தரிசிப்பதற்குக் காரணம் உண்டு. இந்தத் திருத்தலத்துக்கான பதிகம் பாடியவர் அவர்தாம்!
மையார் நிறமேனி அரக்கர் தம் கோனை உய்யாவகையால் அடர்த்து இன்னருள் செய்த கொய்யார் மலர் சூடி குரங்கணில் முட்டம் கையால் தொழுவார் வினை காண்டல் அரிதே!
இப்போதே இந்த ஊர் இவ் வளவு சிறியதாக உள்ளதே - ஞான சம்பந்தர் வந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும்?! காலாற நடந்து பற்பல திருத்தலங்களை நமக்காகப் பாடி வைத்த மகான்களை நன்றி யுடன் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம் அல்லவா!
ஞானசம்பந்தருக்கு, வாலியின் சிவபக்தி மீது ஒரு மதிப்பு இருந்திருக்க வேண்டும். பல இடங்களில் அதைப் பாடுவார்.
ரிக்ஷரஜசுவுக்கும் இந்திரனுக்கும் பிறந்த மகனான வாலி குரங்கு வடிவினன். (ரிக்ஷரஜசு என்னும் குரங்கு, ஆணாக இருந்து பின்னர் பெண்ணாக மாறிவிட்டது). தினந்தோறும் எட்டுதிசைக் கடல்களிலும் அனுஷ் டானம் செய்துவிட்டு, சிவன் கோயில்களை நாடி வழிபடுவானாம் வாலி. அப்படி அவன் வந்து வழிபட்ட தலம்தான் இது. இந்திரனுக்கும் இங்கு வந்து வழிபட வேண்டும் என்ற ஆசை தோன்ற, அவனும் அணிலாக வந்து வழிபட்டானாம்.
இந்திரனும் வாலியும் வழிபட்ட பின்னர், எமதர்மனுக்கும் இங்கு வந்து வழிபட வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அவன் காகமாக வடிவமெடுத்து வந்து வழிபட, இந்த மூன்று உயிரினங்களின் பெயரே ஊருக்கும் பெயரானது.
மீண்டும் மேற்குத் திருச்சுற்றில் திரும்பினால், மூஞ்சுறு மேல் ஆரோகணித்த விநாயகர்.
உள் பிராகாரத்தில் வலம் வரும்போது, சில அமைப்புகள் நம் கண்களையும் கருத்தையும் கவர்கின்றன. கருவறையைச் சுற்றி அகழி. அகழிக்கு மேலே கம்பிகளால் ஆன ஆழிச்சட்டம். வெளிச்சம் வருவதற்காக எடுத்துக் கட்டிய சுவர். கருவறைச் சுவரெங்கும் கல்வெட்டுகள்- இவை கோயிலின் பழைமைக்குச் சான்று பகர்கின்றன.
பிராகார வலம் முடிந்து விட் டது. மீண்டும் அம்பாள் - மூலவர் சந்நிதிகளின் எதிரில் நிற்கிறோம்.
அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. அம்பாள் அழகோ அழகு! நின்ற திருக்கோலமும் நான்கு திருக்கரங்களும் கண்களைக் கசிய வைக்கின்றன. இளையார் வளையம்மை என்று திருநாமம்.
இறையார் வளையாளை ஓர் பாகத்து அடக்கிக்
கறையார் மிடற்றான் கரிகீறிய கையான்
குறையார் மதிசூடி குரங்கணில் முட்டத்(து)
உறைவான் எமை ஆளுடை ஒண் சுடரானே
என்று சம்பந்தர் பாடிய இறை யார் வளையம்மை. ஊர் மக்கள் பேச்சு வழக்கில் ‘இளையாளம்மன்’ என்று வழங்கும் திருநாமம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை, அம் பாள் சந்நிதி, தனிக்கோயிலாக, சுவாமி கோயிலுக்கு வெளியில் இருந்ததாம். திருப்பணி சமயத்தில், அம்பாள் சந்நிதியையும் உள்ளே கொண்டுவந்து விட்டார்களாம்.
மூலவர் சந்நிதி. சிவலிங்கத் திருமேனி. மேற்கு நோக்கியவர். ஆனால், உருவத்தில் மிகச் சிறியவர். (வாலி வழிபட்டதால்) வாலீஸ்வரர் என்றும், கொய்யாமலை நாதர் என்றும் திருநாமங்கள்.
கல்வெட்டுகளில் இந்த ஊர் இறைவருக்கு ‘கொய்யாமலர் ஈசுவரதேவர்’ என்று ஒரு பெயர் காணப்படுகிறது. ‘காலியூர்க் கோட்டத்து இருகழி நாட்டு மாமண்டூர்ப் பற்றத்துப் பல்லவபுரமான குரங்கணில்முட்டம்’ என்று ஊர்ப்பெயரும், ‘திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார், கொய்யாமலர் ஈசுவரதேவர்’ என்று இறையனார்ப் பெயரும் உள்ளன.
இங்கு நிறைய மலர்கள் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம். இன்னமும்கூட இந்த ஊர் மக்கள் நிறைய பேருக்கு, கொய்யாமலை என்று (கொய்யா மலர், கொய்யாமலை ஆயிற்றோ என்னவோ- இல்லை, கொய்யா மலர்கள் உள்ள மலை, கொய்யா மலை ஆயிற்றோ) பெயர் உள்ளது.
எல்லாம் சரிதான். பல்லவபுரத்துக் குரங் கணில்முட்டம் எப்படி? என்ன தொடர்பு? கிருஷ்ண தேவராயர், பல்லவபுரத்தை இந்தக் கோயிலுக்கு மானியம் கொடுத்ததாகக் குறிப்புகள் உள்ளன.
மூலவரை மீண்டும் தரிசிக்கிறோம். உருவத்தில் சிறியவராக இருந்தாலும், உள்ளே இருந்து பேரருள் பிரகாசத்துடன் காட்சி தருகிறார்.
‘‘வாலீஸ்வரா! உருவம் மனிதராக இருந்தாலும், மனம் குரங்குதானே? எங்கள் மனக் குரங்கை மட்டுப்படுத்து வாலீஸ்வரா!’’ என்று உள்ளம் நெக்குருகிப் பிரார்த்தித்துக் கொண்டே வருகிறோம்.
கோயில் முகப்புக்குத் திரும்புகிறோம். வெளிப் பிராகாரத்தில் இருந்து உள் மண்டபம் நுழையும் வாயிலில், சுவர்ச் சிற்பங்கள். பிரம்மா செய்யும் சிவ பூஜை, ரிஷப வாகனர் என்னும் சிற்பங்களுக்கு இடையில், ஒரு பக்கத்தில் குரங்கு வழிபடுவதும், இன்னொரு பக்கத்தில் அணிலும் காக்கையும் வழிபடுவதும் சித்திரிக்கப்பட்டுள்ளன.
அருள்மிகு இளையார் வளையம்மன் உடனாய அருள்மிகு வாலீஸ்வரரை மீண்டும் வணங்கித் திரும்புகிறோம்.
 

Comments