அழகிய கூத்தர்!

திருநெல்வேலியில் இருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது ராஜவல்லிபுரம். இங்கே தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ளது செப்பறை அழகிய கூத்தர் கோயில். ஸ்ரீநெல்லையப்பர்- ஸ்ரீகாந்திமதியம்மை மற்றும் ஸ்ரீநடராஜர் அருளும் இந்தத் தலத்தை தென்சிதம்பரம் எனப் போற்றுவர்.

இறையருளால் தனது தோல் நோய் நீங்கப் பெற்றதாலும், புலிக்கால் முனிவர் மற்றும் பதஞ்சலி முனிவர் அருளால் இறைவனின் ஆனந்த தாண்டவத்தை தரிசிக்கப் பெற்றதாலும் மகிழ்ந்தான் மன்னன் சிங்கவர்மன்; ஸ்ரீநடராஜருக்கு ஆலயம் கட்ட விரும்பினான். வடநாட்டு சிற்பிகள் மூலம் ஸ்ரீநடராஜரின் செப்புத் திருமேனி உருவானது. இதன் அழகில் லயித்தவன், தங்கத்திலும் விக்கிரகம் செய்ய விரும்பினான்.



சிலை செய்யும் பணி ஆரம்பமானது; சிவனாரின் திருவிளையாடலும்தான்! முதியவராக வந்த இறைவன், சிற்பிகளிடம் சில செப்புக் காசுகளைக் கொடுத்துச் சென்றார். தங்கக் கலவையுடன் செப்புக் காசுகளும் சேர... மீண்டும் செப்புத் திருமேனியே உருவானது. கோபம் கொண்ட மன்னன், சிற்பிகளை சிறையில் அடைத்தான். இரவு அவன் கனவில் தோன்றினார் இறைவன். நடந்ததை விவரித்தவர், ''உனக்கு மட்டும் பொன்மேனியனாகக்

காட்சி தருவேன்!'' என்றார். மேலும், ''முதலில் வடித்த செப்புத் திருமேனியுடன் சிற்பிகளை தென்திசை நோக்கி போகச் சொல்; எங்கு பாரம் அதிகமாகிறதோ அங்கே இறக்கி வைக்கச் சொல்!'' என்றும் அருளினார்.

அதன்படி, தென்திசையில் பயணித்த சிற்பிகள், தாமிரபரணிக் கரையை அடைந்தபோது சிலை கனத்தது. அங்கேயே இறக்கிவைத்துவிட்டு களைப்பாறினர். அசதியில் தூங்கியவர்கள், விழித்துப் பார்த்தபோது சிலையைக் காணாமல் அதிர்ந்தனர்.



இதே காலத்தில்... 'வெள்ளப் பெருக்கால் நெல்லையப்பரை தரிசிக்க முடியவில்லையே' என்று வருத்தத்தில் இருந்தான் முழுதுங்கண்ட ராமபாண்டி யன் என்ற மன்னன். அவன் கனவில் தோன்றிய இறைவன், ''வனத்துக்குப் போ. அங்கே சிலம்பொலி கேட்கும் இடத்தில், எறும்புகள் சாரை சாரையாக செல்வதைக் காண்பாய். அவற்றைப் பின்தொடர்ந்தால் எனது திருமேனியை தரிசிப்பாய். அங்கேயே எனக்கு கோயில் எழுப்பி வழிபடு'' என்று அருளியிருந்தார்.

இங்கே, சிலையைக் காணாத சிற்பிகள், இவன் நாடு என்பதால், இந்த மன்னனிடம் முறையிட, காட்டுக்குச் சென்ற மன்னன், இறைவன்

அருளியபடியே நடராஜ விக்கிரகத்தைக் கண்டெடுத்து கோயில் எழுப்பினான். அதுவே செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில். கருவறையில் முக்கண், நான்கு திருக்கரங்களு டன், பிறைசூடிய பெருமானாகக் காட்சி தருகிறார் அழகிய கூத்தர். திருவாதிரையில் இவரை தரிசித்து வழிபட, பெரும்பேறு கிடைக்கப் பெறலாம்!

மேலும், தோஷம் மற்றும் நோய்களால் அவதியுறும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, தவிடு மற்றும் கருப் பட்டியை இறைவனிடம் வைத்துவிட்டு, 'இனி இது உன் குழந்தை' என்று சொல்லி பிரார்த்தித்து, குழந்தையை அழைத்துச் செல்கின்றனர். இதனால், குழந்தைகள் பூரண குணம் அடைகின்றனர் என்பது நம்பிக்கை!

கோயில் தொடர்புக்கு 94866 47493





சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் ரயில் பாதையில், பட்டாபிராம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது சித்துக்காடு. ஜடைமுடி பிராண தீபிகா சித்தர், கருடக்கொடி சித்தர், படுக்கைச் சித்தர் ஆகியோர் தவம் செய்து அருள்வதால் இந்த ஊருக்கு 'சித்தர்காடு' என்று பெயர். இதுவே சித்துக்காடு என மருவியது! மணம் பொருந்திய புஷ்பக்

காடுகள் நிறைந்த இடம் என்பதாலும் இந்தப் பெயர் வந்ததாம்.

இங்கே கோயில் கொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் ஸ்ரீநெல்லீஸ்வரர்; அம்பிகை- ஸ்ரீபூங்குழலி. திருமணம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரின் சிறப்பம்சம்... ஸ்ரீநடராஜர் திருக்கல்யாணம்.



மார்கழி திருவாதிரைக்கு முதல் நாள் இரவு 10 மணிக்கு... நடராஜர், சிவகாமி அம்மை மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோருக்கு அபிஷேக -ஆராதனை நடைபெறுகிறது. மறுநாள் அதிகாலையில் ஸ்ரீநடராஜருக்கும் சிவகாமி அம்மைக்கும் மாணிக்கவாசகர் முன்னிலையில், திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. பிறகு மூவரும் வீதியுலா வருவர். காலை 10 மணிக்கு, ராஜகோபுரம் முன்பாக திருவெம்பாவை பாடல்கள் பாடப்பெற்று, மூன்று முறை பார்வேட்டை நடைபெறும். இந்தத் திருக்கல்யாண வைபவத்தை தரிசிக்கும் அன்பர்களது இல்லங் களிலும் விரைவில் சுபகாரியம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

வைப்புத் தலமாகத் திகழும் இந்த ஆலயம், சுவாதி நட்சத்திரக் காரர்கள் வழிபட வேண்டிய தலமாம்! இங்கே வந்து, அம்பாளுக்கு குங்குமம், மஞ்சள், வளையல் சார்த்தி வழிபட திருமண வரம் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

கோயில் தொடர்புக்கு 93826 84485

Comments