திருப்பணிக்கு காத்திருக்கும் தெங்கால் சிவாலயம்!

ஓங்கி உயர்ந்து நிற்கும் அந்த மலை, கொள்ளை அழகு! அதன் பிரமாண்டத்தையும் அழகையும் ரசிக்க வேண்டிய மக்கள், பயந்து நடுங்கினர்; மிரண்டு தவித்தனர்; கலங்கிக் கதறினர்! காரணம்... அந்த மலை அல்ல; காஞ்சனகிரி என்ற அந்த மலையில் வசிக்கும் ஓர் அரக்கன்! மலைபோன்ற உருவம் கொண்டு உலகையே ஆட்டிப்படைத்த அந்த அரக்கனின் பெயர்- காஞ்சனன்!

இவனால் மலைக்குப் பெயர் அமைந்ததா அல்லது மலையின் பெயரே அரக்கனுக்கு அமைந்துவிட்டதா... தெரியவில்லை. ஆனால் தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் என ஒருவரையும் விடவில்லை காஞ்சனன். அனைவரது நிம்மதியையும் குலைத்தான்; சிலரது உயிரையே பறித்து, மலையே அதிரும்படி சிரித்தான்!

கலங்கிய மக்கள், முனிவர்களை நாடினர்; அரக்கனிடம் இருந்து தப்பிக்க வழியேதும் உண்டா? என பரிதாபமாகக் கேட்டனர். முனிவர்கள் இதுகுறித்து தேவர்களிடம் தெரிவிக்க... அனைவரும் ஒன்று சேர்ந்து சிவபெருமானைச் சரணடைந்தனர்; அரக்கன் காஞ்சனின் அட்டூழியம் குறித்து புலம்பினர்.

சிவனார் கடும்கோபம் கொண்டார். யுத்தத்துக்கு தயாரானார். ஆவேசத்துடன் வந்தவர், அசுரனின் உடலை அக்குவேறு ஆணிவேறாக தனித்தனியே பிய்த்தெறிந்தார். அசுரனை அழித்ததுடன், உலக மக்களுக்கு அபயம் அளிக்க ஸ்ரீவில்வநாதீஸ்வரராக திருக்கோயிலும் கொண்டார். இந்தத் திருத்தலமே திருவலம். வேலூர் மாவட்ட புண்ணிய தலங்களில் இதுவும் ஒன்று.

காஞ்சனின் உடலை ஈசன் பிய்த்தெறிந்தார் அல்லவா? அப்போது அசுரனின் ஒரு கால் விழுந்த வடக்குப்பகுதி, 'வடகால்' என்றும் இன்னொரு கால் தெற்கில் விழ... அது 'தெங்கால்' என்றும் ஆனதாகச் சொல்கிறது தல வரலாறு.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தெங்கால் கிராமத்திலும் புராதனப் பெருமை கொண்ட சிவாலயம் ஒன்று உண்டு. இங்கே குடியிருக்கும் இறைவன்... திருகண்டேஸ்வரர்! 'திரு' என்றால் மகாலட்சுமி. ஒருவேளை, மகாலட்சுமி தேவிக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த தலங்களில் இதுவும் ஒன்றோ?! எனில் இந்த இறைவனை மனமுருகி வழிபட, சிவனாரின் திருவருளுடன் மகாலட்சுமியின் அருட்கடாட்சமும் கிடைக்குமே? இருக்கலாம்... ஒருகாலத்தில் சீரும் சிறப்புமாக இருந்த தலம்தான் இது. சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன், சோழ தேசத்தை ஆட்சி செய்த பராந்தக மன்னன், திருப்பணிகள் செய்து புனரமைத்த பெருமைக்கு உரிய ஆலயம் இது!

புராண- புராதன பெருமைகள் கொண்ட இந்த ஆலயத்துக்கு, இன்னொரு சிறப்பும் உண்டு.

திருக்கயிலாயத்தில் சிவ- பார்வதி திருக்கல்யாணம்! இந்த வைபவத்தைக் காண ஆவல் கொண்டனர் சப்தரிஷிகள். தங்களது விருப்பத்தை ராஜரிஷியிடம் தெரிவித்தனர். அவர்களின் ஆசையை நிறைவேற்ற... இரண்டு நதிகள் சங்க மிக்கும் இடத்தில் தவம் செய்யத் தீர்மானித்த ராஜரிஷி, இதற்கான அற்புத இடத்தைத் தேடினார்.



ஏற்கெனவே, சிவபெருமானுக்கு அபிஷேகிக்க தண்ணீர் வேண்டுமே என்பதற்காக நீவா நதியை உருவாக்கி வைத்திருந்தனர் முனிவர் பெருமக்கள். இந்த நதியுடன் பாலாறு சங்கமிக்கும் இடத்தை அறிந்த ராஜரிஷி, மகிழ்ந்தார்; சப்த ரிஷிகளுடன் அங்கே வந்தார்; கரையில் அமர்ந்து சிவனாரைக் குறித்து கடும் தவத்தில் ஆழ்ந்தார்.

இதில் மகிழ்ந்த சிவபெருமான், ராஜரிஷி மற்றும் சப்த ரிஷிகளுக்கு திருக்கல்யாண கோலத்துடன் தரிசனம் தந்தார். மெய்சிலிர்த்த ரிஷிகள், இறைவனைத் தொழுதனர். பரமனாரின் திருக்காட்சி கிடைத்த திருப்தியுடன் காஞ்சிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அந்த ராஜரிஷி... விஸ்வாமித்திரர். ராஜா கௌசிகனாக இருந்து, விஸ்வாமித்திரராக புகழ்பெற்ற மகரிஷி அல்லவா? ஆகவே, தெங்காலில் குடிகொண்டிருக்கும் திருகண்டேஸ்வரருக்கு, ஸ்ரீகௌசி கேஸ்வரர் என்றும் சப்த ரிஷிகள் வழிபட்டதால், ஸ்ரீசப்த ரிஷீஸ்வரர் என்றும் திருநாமம் உண்டாம்!

எனவே, திருகண்டேஸ்வரரை வணங்கினால், சகல ஐஸ்வர் யங்களும் அடைவோம்; கல்வி- கேள்வியில் சிறந்து விளங்கும் குழந்தைகளைப் பெறுவோம்; திருமணக் காட்சி தந்ததால், பக்தர் களது தடைப்பட்ட திருமணமும் விரைவில் நடந்தேறும் என்று உள்ளம் பூரிக்கத் தெரிவிக்கின்றனர் ஊர்க்காரர்கள்!

இவ்வளவு பெருமைகளைத் தாங்கி நிற்கும் திருகண்டேஸ்வரர் ஆலயம் இன்று சிதிலம் அடைந்து கிடக்கிறது என்பதுதான் வேதனை. பராந்தக சோழனால் திருப்பணிகள் கண்ட ஆலயம், அழகைத் தொலைத்துவிட்டு சீர்குலைந்து நிற்பதுதான் கொடுமை!

அந்நியர் படையெடுப்பின் போது, வேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கைப் பற்று வதற்காக, தெங்கால் பகுதியில்தான் குதிரைப்படை தங்கியிருந்ததாம். அப்படி இங்கே தங்கியிருந்த அந்நியப் படை, சுமார் 108 சிவாலயங்களை சின்னாபின்னமாக்கியதாம்! இதில் சிதிலம் அடைந்த ஆலயங்கள் பல, காலப்போக்கில் மண்ணோடு மண்ணாகிப் போக, எஞ்சியுள்ள ஆலயங்களுக்கு அதற்கு அடுத்தடுத்த காலகட்டங்களில் திருப்பணிகளும் நடைபெற்றதாம்! ஆனால், சிதிலம் அடைந்த நிலையில், அதேநேரம் திருப்பணிகளும் இன்றி தத்தளிக்கிறது திருகண்டேஸ்வரர் ஆலயம்!

தெற்குப் பார்த்த கோயில்; கோபுரத்தையும் காணோம்; சுற்றுச் சுவரும் இல்லை! பக்தர்களுக்கு விடிவுகாலத்தை அருளும் திருகண்டேஸ்வரர், கிழக்குப் பார்த்தபடி அருள்பாலிக்கிறார். சிறிய ஆவுடையாருடன் கூடிய அழகிய சிவலிங்க ரூபம்; ஆனால் கீர்த்தி பெரிது! அம்பாளின் திருநாமம் - ஸ்ரீதிரிபுரசுந்தரி. இங்கே... இந்த ஆலயத்துக்கு வந்து, ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீதிருகண்டேஸ்வரரை வணங்கினால், திருமண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!



தவிர, பிள்ளை பாக்கியம் கேட்டு சிவபெருமானை பிரார்த்தித்து வரம் பெற்ற ஊர்க்காரர்கள் பலரும், தங்களின் குழந்தைகளுக்கு கண்டேஸ்வரன், கண்டேசன் என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்கின்றனர்! தெற்கு நோக்கியபடி அருள்கிறாள் ஸ்ரீதிரிபுரசுந்தரி. ஒரு காலத்தில் பிரமாண்டமாக இருந்த ஆலயம், இப்போது, ரொம்பவே சுருங்கி விட்டது. பதினாறு கால் மண்டபம் மட்டுமே எஞ்சியுள்ளது. பழைய கற்களை அப்படியே எடுத்து வைத்து திருப்பணி செய்துள்ளனர் திருப்பணிக் குழுவினர். வள்ளி- தெய்வானை சமேதராகக் காட்சி தருகிறார் முருகன். கொள்ளை அழகுடன் திகழும் இவருக்கு ஸ்ரீசுந்தர சுப்ரமணியர் என்று பெயராம். இந்த திருநாமத்துக்கு காரணம் சொல்கின்றனர் பக்தர்கள்!

தெங்காலின் ஒருபக்கம்... காஞ்சனகிரி; இன்னொரு பக்கம், வள்ளிமலை! இந்த மலையில் தான் வள்ளியை மணந்து அழகு ததும்ப திருக்காட்சி தந்தாராம் சுப்ரமணியர். சுந்தரம் என்றால் அழகு; ஆகவே, இங்கே அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு, ஸ்ரீசுந்தர சுப்ரமணியர் எனும் திருநாமம் அமைந்ததாம்!

தெங்கால் திருக்கண்டேஸ்வரர் ஆலயத்தின் சாந்நித்தியத்தை அறிந்த, மௌனகுரு சுவாமிகள் பல வருடங்கள் இங்கே தங்கி, சிவனாரின் சந்நிதிக்கு எதிரே யோக நிலையில் இருந்தாராம்! வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள், திருவலம் ஸ்ரீமௌனகுரு சிவானந்த சுவாமிகள், தீர்த்தகிரி ஸ்ரீநாராயண யோகி, ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகனடிமை சுவாமிகள், வள்ளிமலை ஸ்ரீபாலானந்தா சுவாமிகள் முதலான எண்ணற்ற மகான்கள் தெங்காலுக்கு வந்து, திருகண்டேஸ்வரரை வணங்கியுள்ளனர்.

இத்தகு பெருமை வாய்ந்த தெங்கால் திருத்தலம் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்; திருகண்டேஸ்வரர் கோயில் பொலிவுற்று, பக்தர்களுக்கு அருட்கடாட்சம் கிடைக்க வேண்டும்; திருப்பணிகள் நடந்தேறி கும்பாபிஷேகம் காண வேண்டும் என்பதே தெங்கால் மக்களின் விருப்பம்!

திருகண்டேஸ்வரரின் திருவருளும் எண்ணற்ற மகான்களின் குருவருளும் இருக்க, அத்துடன் அன்பர்களின் பொருளுதவியும் சேர... விரைவில் திருப்பணிகள் நடந்தேறும் என்பது உறுதி!

கல்வியில் சிறக்க வைக்கும் சிவ சொரூப ஆஞ்சநேயர்!

திருமால் ஸ்ரீராமனாக அவதரித்தபோது, தேவர்கள்- வானரர்களாகப் பிறந்தனர். வாயு புத்திரனாக ருத்ராம்சத்துடன் பிறந்த அனுமன், ஸ்ரீராமனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்கின்றன புராணங்கள்.

இதற்கேற்ப, தெங்கால் சிவாலயத்தில்... நான்கு திருக்கரங்களுடன் மான்- மழு ஏந்தியவாறு சிவசொரூபமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீஆஞ்சநேயர். கழுத்திலும் ருத்ராட்ச ஆரம்! இப்படி சிவாம்சத்துடன் திகழும் ஆஞ்சநேயரை வேறெங்கும் தரிசிப்பது அரிது என்கிறார்கள்.

சிவனாருக்கு உரிய சோமவார (திங்கட்கிழமை) நாட்களில், இந்த அனுமனுக்கு வில்வமாலை சார்த்தி, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கல்வி- கேள்விகளில் சிறக்கலாம்; ஞானம் கைகூடும்; எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை!


எங்கே இருக்கிறது?

வேலூரில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது ராணிப்பேட்டை. இங்கிருந்து காரை எனும் கிராமம் வழியாகச் சென்றால், சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது தெங்கால். பொன்னை நதியும் பாலாறும் சங்கமிக்கும் இடத்தில்... ஆற்றங்கரையில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீதிருகண்டேஸ்வரர் ஆலயம்.

ராணிப்பேட்டை சிப்காட்டில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவு. சிப்காட்டில் இருந்து ஆட்டோவிலும் செல்லலாம். ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் இருந்து 7 வி, எம்.பி.டி 3 ஆகிய பேருந்துகள் தெங்காலுக்கு நேரடியாகச் செல்லும்.

ஆலயத் தொடர்புக்கு:

டி. எஸ். சண்முகம் (திருப்பணிக்குழுத் தலைவர்)
04172 - 247484

டி.சி. பத்மநாபன் (திருப்பணிக்குழு செயலாளர்)
04172 - 246937
செல்: 93617 28052

Comments