நடராஜர் கோலத்தில் மாணிக்கவாசகர்

''பொருள் கூறவா? வாக்கியம் காட்டவா?'' புருவம் உயர்த்தி, கம்பீரமாகக் கேட்டார் அவர்.

அதிர்ந்த சிதம்பரம் பண்டிதர்கள், 'கேட்டு அறிவதைவிட, பார்த்து உணரலாம்' என்று எண்ணி, 'பொருளைக் காட்டுக' என்றனர். புன்னகைத்த அடியவர், ''இதோ! இவர்தான் திருவாசகத்தின் பொருள்!'' என பொன்னம்பலக் கூத்தனைக் காட்டியபடி, சந்நிதிக்குள் சென்றார்; அப்படியே இறைவனுடன் இரண்டறக் கலந்தார்!



பெரும்பேறு பெற்ற இந்த அடியவர்- மாணிக்கவாசகர். இவருக்கு, சிவனாரே குருவாக இருந்து உபதேசித்த தலம் திருப் பெருந்துறை (ஆவுடையார் கோவில்). இங்கே, மாணிக்கவாசகருக்கு சந்நிதி மட் டுமே உண்டு. ஆனால், தேனி அருகிலுள்ள சின்னமனூரில், கோயிலே இருக்கிறது!

எண்ணமும் வாழ்வும் சிவனைப் பற்றியே இருந்ததால் மாணிக்கவாசகரை, 'அறிவாற் சிவமாகிய மாணிக்கவாசகர்' என்பர். இந்தப் பெயரில் சின்னமனூர் கோயிலில் அருள்கிறார் மாணிக்க வாசகர். இவரது திருவாசகம், திருவெம் பாவையின் பெருமையை உலகுக்கு உணர்த்த, அண்ணாமலைப்பிள்ளை என் பவரால் எழுப்பப்பட்ட ஆலயம் இது.

முல்லைப் பெரியாற்றின் கரையில், மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் அமைந் திருக்கிறது ஆலயம். மாணிக்கவாசகரின் வாழ்க்கை மற்றும் திருவாசகத்தில் கூறப் பட்டுள்ள நிகழ்வுகளைச் சித்திரிக்கும் கோபுரச் சிற்பங்கள் மிக அழகு. கருவறையில்... புன்னகையுடன், வலது கையில்- ருத்ராட்ச மாலை, சின்முத்திரை காட்டி, இடது கரத்தில்- ஏட்டுச் சுவடியுடன் தரிசனம் தருகிறார் மாணிக்கவாசகர். குரு அம்சத்துடன் திகழும் இவர் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கே மாணிக்கவாசகருக்கு இரண்டு உற்ஸவ விக்கிரகங்கள்.



ஸ்ரீநடராஜ பெருமானின் உற்ஸவர் விக்கிரகம் மிக அழகு. விரிசடையுடன் கூடிய சிரத்தில் கங்காதேவி திகழ, பிறைசூடிய பெருமானாக... வலது கையில் உடுக்கை, இடது கையில் அக்னி ஏந்தி, காற்சிலம்புடன் கம்பீரமாக தரிசனம் தருகிறார். திருவாதிரைத் திருநாளை ஒட்டி பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் அனுதினமும் காலையில் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கும் மாணிக்கவாசகருக்கும் விசேஷ அபிஷேக- ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆடல்வல்லானுக்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொள்வதால் இன்னல் நீங்கும்; இல்லறம் சிறக்கும்.

கோயில் தொடர்புக்கு 04554-249480 /செல் 99407 65298

பக்தனுக்கு மரியாதை!

நடராஜ பெருமானின் திருவருளைப் பெற்று அவருடன் ஐக்கியமான மாணிக்க வாசகரை இங்கே ஸ்ரீநடராஜராகவே கருதி வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனத்தன்று... விரித்த சடைமுடியுடன், நடனக் கோலத்தில்... மாணிக்கவாசகரை ஸ்ரீநடராஜராகவே அலங்கரிக்கின்றனர். திருவாசகம் தந்த பக்தனை கௌரவிக்க, இறைவன் தரும் மரியாதை இது என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆதிரைத் திருநாளில் ஆண்டவனின் கோலத் தில் இந்த அடியவரை தரிசிக்கக் கண்கோடி வேண்டும்!

தவிர, மார்கழி திருவாதிரை யன்று இங்கே நடைபெறும் கோபூஜையும் திருவீதியுலாவும் பிறவிப் பிணி தீர்க்கும் அற்புத வைபவங்கள் ஆகும்.

Comments