சிறந்த பஞ்சாங்கம் எது?

ஹோமம், யாகம், வேள்வி மூன்றுக்குமான வித்தியாசம் என்ன?

ஒரு தெய்வத்தை மகிழ்விக்க சிறந்த பூஜை, அர்ச்சனை, அபிஷேகம், நிவேதனம், ஸ்தோத்திர பாராயணம் போன்ற பல்வேறு வழிமுறைகளில் ஹோமம் மற்றும் யாகம் என்னும் வழிமுறையும் ஒன்று.

தேவதோத்தேசேந திரவிய த்யாகோ யாக: அதாவது, ஒரு தெய்வத்தைக் குறித்து நமக்குச் சொந்தமான திரவியத்தை(பொருளை) தியாகம் செய்தல் யாகம் எனப்படும். அதாவது, முறையாக அக்னி (நெருப்பு) மூட்டி அதில் அந்த தெய்வத்துக்கான மந்திரங்களைச் சொல்லி பொருட்களைச் சமர்ப்பித்தல் ஹோமம் அல்லது யாகம் எனப்படும்.

ஆகவேதான் (ஹோமம் செய்பவர்கள்) ஹோமம் செய்யத் தகுந்த பல பொருட்களையும் மந்திரங்களுடன் ‘ஸ்வாஹா’ என்று சொல்லி அக்னியில் போடும் போது, அந்த ஹோமத்தை, யாகத்தை பொருட்செலவு செய்து நடத்தும் யஜமானர், ஹோம குண்டத்தின் அருகில் அமர்ந்து கொண்டு, ‘விஷ்ணவே இதம் ந மம’ - அக்னியில் போடப்படும் இந்தப் பொருள் மகாவிஷ்ணுவைச் சேர்ந்தது, என்னுடையதல்ல என்று (மந்திரம்) சொல்லுவார். இவ்வாறு சொல்லுவதே யாகம் எனப்படும். இதைச் சொல்லுபவர்களுக்கே யாகப் பலன் கிட்டும்.

வேள்வி என்றால், வேண்டுதல் எனப் பொருள். தெய்வத்திடம் மனமுருகி வேண்டுதலே வேள்வி எனப்படுகிறது. ஹோமம் என்பது சிறிய அளவுகளில் வீடுகளில் செய்வது. இதையே பெரிய அளவில் கோயில் போன்ற இடங்களில் செய்வது வேள்வி/யாகம் என வழக்கில் சொல்கிறோம்.


பிதுர் சேஷம் என்பதை யாரெல்லாம் சாப்பிடலாம்? அறியாமல் பிறர் தருபவற்றைச் சாப்பிட்டுவிட்டால், இதற்கு என்ன பரிகாரம்?

இவ்வுலகில் பலகாலம் மனிதராக வாழ்ந்து இறந்துபோன அனைவரும் பித்ருக்கள் எனப்படுகிறார்கள். சேஷம் என்றால் மிகுதி எனப் பொருள். ஆக, பித்ரு சேஷம் என்றால் மறைந்த முன்னோர்கள் உபயோகித்த மிகுதி எனப்பொருள்.

அதாவது, மறைந்த முன்னோர்களுக்காக நாம் செய்யும் தர்ப்பணம், சிராத்தம் (திதி தருதல்) போன்றவற்றில் உபயோகப்படுத்திய பொருட்களின் மிகுதியே பித்ரு சேஷம் எனப்படும். இந்த பித்ரு சேஷத்தை (சிராத்தத்துக்காக சமைத்த உணவை) இறந்தவரின் ரத்த சம்பந்தமுள்ள உறவினர்கள் மட்டுமே சாப்பிடலாம்.

அதாவது - பிள்ளைகள், பேரன்கள், பேத்திகள், கூடப் பிறந்தவர்கள், அண்ணன் தம்பிகள், சகோதரிகள், பெரியப்பா, சித்தப்பா, அவரது மகன்கள் போன்ற நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பித்ரு சேஷத்தைச் சாப்பிடலாம். ஆகவே நெருங்கிய உறவினர்களோ - அதாவது யாரெல்லாம் பித்ரு சேஷம் சாப்பிடத் தகுதியானவர்களோ , அவர்கள் அனைவருக்கும் தெரிவித்து விட்டு சிராத்தத்தைச் செய்ய வேண்டும். சிராத்தத்தில் கலந்து கொள்ளும் பங்காளிகளை, பித்ரு சேஷம் சாப்பிட வைக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

இறந்தவருக்கு ரத்த சம்பந்தமில்லாத மற்றவர்கள், பித்ரு சேஷத்தைச் சாப்பிடக் கூடாது. அவ்வாறு அவர்கள் சாப்பிட்டால், சிராத்தம் முழுமையான பலனைத் தராமல் போகலாம். ஆகவே, இதுபோன்ற நியமங்களைத் தெரிந்துகொண்டு சிரத்தையுடன் அவற்றைக் கடைபிடித்து முன்னோர்களின் சிராத்தத்தை நடத்த வேண்டும்


பாம்புப் பஞ்சாங்கம், மடத்துப் பஞ்சாங்கம், திருக்கணிதம் என பல பஞ்சாங்கங்கள் உள்ளன. துல்லியமான கணிப்புக்கு எது சிறந்தது?

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் ஐந்து விதமான விபரங்களைத் தெரிவிப்பதால் இதற்கு பஞ்ச+அங்கம் எனப் பெயர். இந்தப் பஞ்சாங்கத்திலுள்ள விபரங்களையும் படித்து அறிந்து கொள்வதாலேயே பற்பல நன்மைகள் கிடைக்கின்றன.

திதேஶ்ச ஶ்ரியமாப்நோதி வாராத் ஆயுஷ்ய வர்தனம்

நக்ஷத்ராத் ஹரதே பாபம் யோகாத் ரோக நிவாரணம்

கரணாத் கார்ய ஸித்திஶ்ச பஞ்சாங்க பலமுத்தமம்

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்தவுடன் இன்று என்ன திதி என்று அறிவதால், செல்வம் பெருகும்.

கிழமையை அறிவதால் ஆயுள் வளரும். நட்சத்திரம் அறிவதால் பாபங்களில் சிறிது குறையும். யோகம் அறிவதால் ரோகம் விலகும். கரணம் அறிவதால் காரியம் ஸித்தியாகும். ஆகவேதான் ஒவ்வொரு நாளும் காலையில் பஞ்சாங்க விபரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

இவற்றில் வானசாஸ்திர அடிப்படையில் (நவ)கிரகங்களின் சஞ்சாரம் கணக்கிடப்பட்டு வெளியிடப்படுகின்றன.

பல்லாயிரக்கணகான வருஷங்களுக்கு முன்பாகவே தொலைநோக்குப் பார்வையுள்ள நமது மகரிஷிகள் வான்வெளியில் சஞ்சரிக்கும் கிரகங்களை சரியாகக் (டெலஸ்கோப் போன்ற கருவிகள் இல்லாமலே) கணக்கிட்டார்கள். அத்துடன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளியைக் கணித்து அன்றைய திதி என்ன என்பதை அறிந்து கொண்டார்கள்,

இவ்வாறே கிழமை, நட்சத்திரம் ஆகியவற்றையும் அறிந்து கொண்டு, தெய்வ வழிபாடு, பித்ரு தர்ப்பணம் போன்றவற்றை சரியான காலத்தில் அனுஷ்டித்தார்கள். அத்துடன் பிற்கால சந்ததியினருக்கும் பயன்படும் விதமாக, இந்த வழிமுறையை ஒரு பார்முலாவாக - சிறு சிறு வாக்கியங்களாக எழுதி வைத்தார்கள். அந்த வாக்கியங்களை - குறிப்பாக வரருசி என்னும் மகரிஷியின் வாக்கியத்தை (பார்முலாவை) ஒட்டி பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது.

ஆகவேதான் இதற்கு வாக்கியப் பஞ்சாங்கம் எனப் பெயர். ஆனால் அவ்வாறு எழுதப்பட்ட வாக்கியங்களில் ஒரு விதியையும் சேர்த்தார்கள் - அதாவது, சுமார் நானூறு வருஷங்களுக்கு ஒருமுறை சில திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று. ஆனால், பல ஆயிரம் வருஷங்களாக இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டதா இல்லையா என்பது தெரியாததால், சில வருஷங்களுக்கு முன் கருவிகளை உபயோகித்து கிரகங்களின் சஞ்சாரத்தைக் கணக்கிட்டார்கள். ‘த்ருக்’ என்றால் பார்வை. பார்வையின் அடிப்படையில் கணிக்க ஆரம்பித்ததால், இந்தக் கணித முறை ‘த்ருக் கணித முறை’ எனப்படுகிறது.

தற்காலத்தில் வெவ்வேறு பெயர்களுடன் நூற்றுக்கணக்கான பஞ்சாங்கங்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால், இவை அனைத்தும் இரண்டு குழுக்களாகத்தான் இருக்கின்றன. ஒன்று வாக்கியப் பஞ்சாங்கம், மற்றொன்று த்ருக் கணித பஞ்சாங்கம் (மடத்துப் பஞ்சாங்கம் என்று தனியாகக் கிடையாது).

ஆனாலும் இவற்றுக்குள் மிகப்பெரும் வேறுபாடு ஏதும் கிடையாது. ஆகவே, முன்னோர்கள் எந்தப் பஞ்சாங்கத்தை அனுசரித்து வந்தார்களோ அதையே நாமும் கடைப்பிடிப்பதுதான் சிறந்தது. இருந்தாலும், ஜோதிஷ விற்பன்னர்கள் பலரும் ஜாதகம் கணிக்க உபயோகிப்பது த்ருக் கணித பஞ்சாங்கமே!

Comments