நந்தி திருமணம்

சிலாத முனிவரின் புதல்வர் ஜபேசர். இவரின் தவத்தை மெச்சிய சிவபெருமான், கயிலையில் சிவகணத் தலைவர் பொறுப்பளித்தார். அவர்தான் திருநந்தி தேவர். இவருக்கு வசிஷ்ட முனிவரின் பெண் சுயசா தேவி எனும் சுயம்பிரபா தேவியை பங்குனி மாதம் திருமணம் செய்து கொடுத்தார். இத்திருமணம் நடந்த இடம் திருமழபாடி.

கல்யாண நாளில் திருவையாற்று ஈசன் பஞ்சநதீஸ்வரர், அன்னை அறம் வளர்த்த நாயகி சமேதராக விடியற்காலையே, திருவையாற்றிலிருந்து கண்ணாடிப் பல்லக்கில் புறப்பட்டு மேள தாளங்களுடன் கொள்ளிட நதியைக் கடந்து பிற்பகல் திருமழ பாடி எழுந்தருளுகிறார். திருமழபாடி திருக்கோயிலில் சுந்தராம்பிகா சமேதராக வைத்தியநாத சுவாமி எழுந்தருளியிருப்பார். இவர்கள் முன்னிலையில் நந்திகேஸ்வரர் கல்யாணம் வெகு விமரிசையுடன் நடைபெறும். இந்தத் தெய்வத் திருமணத்தில் பங்கேற்றால், தோஷங்கள் நீங்கும் என்பதும், விரைவில் திருமணப்பேறு கிட்டும் என்பதும் நம்பிக்கை.

மண்டையப்பம்நாகர்கோயிலுக்கருகிலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு வேண்டிக்கொண்டு பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் ஆகிய மூன்றையும் சேர்த்து அப்பம் செய்து ‘மண்டையப்பம்’ என்ற பெயரில் படைக்கின்றனர். இவ்வாறு படைத்தால் தீராத தலைவலியும் தீரும் என்று நம்புகின்றனர்.

தென் காளஹஸ்தி

ராகு - கேது தோஷம் நீங்கவும், திருமணத்தடை விலகவும் தஞ்சை அம்மாபேட்டை வழியில் புன்னை நல்லூரிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள கத்தரி நத்தம், காளஹஸ்தீசுவரரைத் தரிசிப்பது விசேஷம். திங்கட்கிழமை நாளில் இங்குள்ள திருக்குளத்தில் நீராடி வழிபட்டால் ராகு - கேது தோஷம் நீங்கும். திருமணத்தடை விலகும். இவ்வூர் தென் காளஹஸ்தி என்றும் போற்றப்படுகிறது.

கும்மாயம்

கும்பகோணம் சாரங்கபாணி பெருமாளுக்கு பயத்தம்பருப்பு, வெல்லம், நெய் கொண்டு தயாரித்து படைக்கும் நைவேத்தியத்தின் பெயர் கும்மாயம்.


வாலுக்கு குங்குமம் ஏன்?தம்முடைய நியதிப்படி, சனீஸ்வரர் அனுமனைப் பிடிக்க வேண்டிய காலம். சனீஸ்வரர் அனுமனைப் பிடிக்கத் தொடர்ந்தார். அனுமன் ஓர் அறையில் கதவைத் தள்ளி நுழைந்தார். அப்போது அனுமனின் வால் மட்டும் கதவின் இடுக்கில் மாட்டிக் கொண்டது. எனினும், அந்த வாலும் சனியின் கையில் சிக்கவில்லை. கடைசியில் சனியிடம் அனுமன் கேட்டார்: ‘பிடிப்பது எத்தனை ஆண்டுகள்?’ சனி, ‘ஏழரை ஆண்டுகள்’ என்றார். ஏழரை ஆண்டுகளும் இங்கேயே ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருப்பேன். உன்னால் முடிந்தால் என்னைப் பிடித்துக் கொள்" என்றார் அனுமன். அவரின் பக்தியை மெச்சி, வேறு வழியில்லாமல் விட்டுவிட்டார் சனீஸ்வரன்.

இதற்குப் பின்தான் ஆஞ்சநேயரின் வாலை வழிபடும் வழக்கம் உருவாயிற்று. 41 நாட்கள் அனுமனின் வாலில் குங்குமம் வைத்து துளசி மாலை சாத்தி வழிபட, எல்லாவித தோஷங்களும் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.



Comments