ஒரு துன்பமில்லா வாழ்வு!

நம்மில் துன்பமில்லாத வாழ்வினை வேண்டாதவர் எவர் உளர்? வேண்டாமென்பவர் எவர் உளர்?
"அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே!' என விளித்து அபிராமி அன்னையை வேண்டும் அபிராமி பட்டர்கூட "ஒரு துன்பமில்லாத வாழ்வும் வேண்டும்' என்ற வேண்டுதலை முன் வைக்கிறார்.
எல்லோரும் விரும்பும் அந்தத் துன்பமில்லாத வாழ்வினை அடைவதென்பது எளிதானது. அதற்காக நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளும் எளிதானதுதான். அந்த எளிதான வழிமுறைகளை நாம் காண இருக்கிறோம்.
எளிது என்பது சொல்வதற்கு எளிதாகத் தான் இருக்கிறது. ஆனால் ஆழ்வார்களும், நாயன்மார்களும், ஹரிதாஸ்களும் இறையருள் பெறுவதற்காக அவர்கள் பட்ட துன்பங்களும் கொஞ்சமா நஞ்சமா! அவர்களுக்கே அவ்வளவு அல்லல் எனும் போது நாமெல்லாம் எம்மாத்திரம் என்று அலறுபவர்களுக்கு நல்லதொரு மார்க்கத்தைச் சொல்லப்போகிறது.
பக்தியிலோ பலவகை உண்டு. ஆழ்வார்களும், நாயன்மார்களும் கொண்ட பக்தி வேறு நாம் கொண்டிருக்கும் பக்தி வேறு. கீதையிலே பகவான் தன்னிடம் பக்தி கொண்டு தன்னை வழிபடுபவர்களை நான்கு வகையாகப் பிரிக்கிறார்.
ஒன்று, துக்கத்தை அடைந்தவன் தன்னை வழிபடுகிறான் என்கிறார். அதாவது துன்பம் வரும்வரை பகவானை நினையாமல், இன்னல் வந்தவுடன் விழுந்து விழுந்து வணங்குவது ஒரு வகை.
இரண்டு, இறைத் தத்துவத்தை அறிய விரும்புகிறவன் தன்னை வணங்குகிறான் என்கிறார். அதாவது முதலில் சொன்னதைப்போல் அல்லாமல், துன்பம் வந்த பின்னர் வணங்காமல், இன்பமோ துன்பமோ அதையெல்லாம் ஒரு மூலையில் மூட்டைக் கட்டி வைத்த விட்டு, பகவானை, பகவத் தத்துவத்தை அறிய விரும்புகிறவன் இன்னொரு வகை.
மூன்று, தான் விரும்புவதை அடைவதற்காகத் தன்னை வழிபடுகிறவன் என்கிறார். அதாவது, தனக்கு எது வேண்டுமோ, அந்த நேரத்திற்கு என்ன பொருள் வேண்டுமோ அதை அடைவதற்காக மட்டும் வழிபடுவது மற்றொரு வகை. இத இறைத் தத்துவத்தை அறிய விரும்புவனினின்றும் முற்றிலும் மாறுபட்டது. அது, இறைத் தத்துவத்தை அடைய... இது, தான் விரும்பியதை அடைய.. சரியாகச் சொன்னால் இது காரிய சித்திக்காக பக்தி.
நான்கு, பகவத் தத்துவ ஞானத்தைப் பெற்றவன் தன்னை வணங்குகிறான் என்கிறார். அதாவது இரண்டாவது வகையினின்றும் இது மாறுபட்டது அல்ல என்றாலும், நான்காவது வகையை அடைய இரண்டாவது வகைதான் முதல்படி எனக் கொள்ளல் வேண்டும். இறைத்தத்துவத்தை அறிய விரும்பி, பகவானை வணங்கி, அதை அடையப் பெற்ற நிலையில் பக்குவ நிலையை அடைந்த நிலையில் பகவானை வணங்குவது என்பது பிறிதொரு வகை.
ஆக இந்த நான்கு நிலைகளில் நாம் எங்கிருக்கிறோம் என்பது அவரவர்களின் மனதிற்குத்தான் தெரியும். துன்பம் விலக, விரும்பியதைப் பெற, இறைத் தத்துவத்தை அறிய, அறிந்த பின் பகவானை வணங்க என பக்தியில் பல வகை இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் அவரவர்கள் பகவானை வேண்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் வேண்டுதல் என்பதில் ஓர் ஆத்மார்த்தம் இருத்தல் வேண்டும். ஆழ்ந்த பிணைப்பு இருத்தல் வேண்டும். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். நாமொரு வீட்டைக் கட்டுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
கட்டி முடித்தவுடன் ஒவவொரு அறையிலும் தேவையான இடங்களில் குழல் விளக்குகளைப் பொருத்தி, மின் விசிறிகளை அமைத்து, குளிர்சாதனப்பெட்டி, குளிர்பதனப்பெட்டி, அரைப்பான், துவைப்பான், தொலைக்காட்சிப் பெட்டி, என சகலத்தையும் வைத்து விட்டாலும், கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை எனில் அனைத்தும் காட்சிப் பொருள்களாகத்தானே இருக்கும்.
நம்மில்கூட பலரின் பக்தி இப்படிப் பட்டதாகத்தான் இருக்கிறது. பூஜைக்குத் தேவையான பூ, பழம் இத்யாதிகளைத் தடபுடலாக பகவானின் முன் வைத்த விடுவோம். ஆனால் எல்லாம் இருந்தும் மன இணைப்பு பகவானிடம் இல்லையாயின், தயார் செய்த எல்லாமும் வெறும் ஆடம்பரமாகத்தான் தோற்றமளிக்குமே தவிர அதிலே ஆத்மார்த்தம் இருக்காது, பலனும் கிடைக்காது.
பகவான் எப்போதும் ஆர்ப்பாட்டத்தைவிட ஆத்மார்த்தத்தைத்தான் விரும்புவார். இதையே கீதையில் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி, ததஹம் பக்த்யு பஹ்ருதம் அஸ்னாமி ப்ரயதாத்மன; என்கிறார்.
அதாவது எனக்க எதைக் கொடுத்தாலும், ஒரு இலையோ, ஒரு பூவோ, ஒரு பழமோ, அல்லது நீரோந இப்படி எதைக் கொடுத்தாலும், அதைப் பரிசுத்தமான பக்தியுடன் தரும் போது நான் அதைப் பரம திருப்தியுடன் ஏற்றுக் கொள்கிறேன். அதை நிவேதனமாக ஏற்று சந்தோஷத்துடன் புசிக்கிறேன் என்கிறார்.
அப்படியானால் ஆடம்பரமாகச் செய்வது சரியல்ல என்பதல்ல பொருள். ஆடம்பரமோ சாதாரணமோ எதுவாக இருந்தாலும் பரிசுத்தமான பக்தி வேண்டும். அவ்வளவே!
மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரரின் பரிபூர்ண அருளைப் பெற்றவரும், அத்யந்த பக்தருமான ஸ்ரீ அப்பண்ணாசார்யர் அருளிய ஸ்ரீமத் ராகவேந்திர ஸ்தோத்திரத்தில் பரிசுத்த பக்தியைப் பற்றி மிகவும் சிலாகிக்கிறார்.
நாம் கொண்டிருப்பது பக்தியா, சுத்த பக்தியா, பரிசுத்த பக்தியா, சாதாரண பக்தியா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? அதற்கான அளவுகோல் எதேனும் உள்ளதா? என்றால் இல்லாமல் இல்லை.
பரவலாக நாடு முழுவதும் மழை பெய்யும் போது ஓரிடத்தில் மேக மூட்டத்துடன் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தெரியும். வேறிடத்தில் லேசான தூறலாய் இருக்கும். இன்னொரு இடத்தில் இடி மின்னலுடன் கூடிய பலமான மழையாய் இருக்கும். பேய்க் காற்றுடன் சூறாவளியாகவும் சில இடத்தில் பொழியும்.
வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு விதமாகப் பெய்தாலும் அதற்கான பொதுப் பெயர் மழை என்பதுதான். வானத்திலிருந்து பூமியில் நீர் விழுந்தால் அது மழை எனப்பட்டாலும் விழும் வேகத்தை வைத்து பூ மழை, தூமழை, அடை மழை, பேய் மழை என வெவ்வேறு பெயர்கள் பெறுவதைப் போல நம் மனத்திலிருந்து எழும் பக்தி இறைவனின் தாளில் சென்று சேரும் போது தன்மையை வைத்து ந்த பக்தியின் பெயரும் அது சுத்த பக்தியா, பரிசுத்த பக்தியா, மேலோட்டமான பக்தியா என வகைப்படுத்தப்படுகிறது.
சாஸ்திரம் பக்தியை ஒன்பது விதமாகப் பிரித்திருக்கிறது. துன்பமில்லாத வாழ்விற்கு எவ்வித பக்தியெல்லாம் எளிமையானது?
நமது மனதை வாட்டும் துன்பங்களில் பலவகை உண்டென்றாலும் பிரதானமாக இரண்டு வகைத் துன்பங்களைச் சொல்லலாம். ஒன்று இந்த ஜன்மத்தில் நாம் செய்யும் நல்லது கெட்டதுகளால் வருவது. இன்னொன்று சென்ற ஜென்மத்தில் அல்லது ஜன்மங்களில் செய்த செயல்களால் வருவது. எந்த காரணத்தால் நமக்குத் துன்பம் வந்தாலும் அதைக் கண்ட நாம் துவளுதல் கூடாது. எதிர்த்து நின்று எதிர்கொள்ள வேண்டும் என்பது தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வாக்கு.அதோடு துன்பம் வரும் நேரத்தில் கலங்காமல் மகிழ்வுடனும் இருக்கச் சொல்கிறார்.
மேலும் மனதால் அவற்றை விலக்கவும் வேண்டும் என்கிறார். வெள்ளம் போன்று நம்மை அடித்துச் செல்லும் வகையில் துன்பங்கள் வந்தாலும் அவற்றை நீக்கும் வழியினை மனத்தால் நினைத்தால் அத்துன்பமெல்லாம் அடித்துச் சென்று விடும். அறிவுடையாரின் செயல் இப்படித்தான் இருக்கும் என்கிறார்.
எல்லாம் சரிதான், படிப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறத. ஆனால் இவற்றைச் செயல்முறைப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்லவே என்று சிலருக்கு தோன்றக்கூடும்.
துன்பம் வந்தால் அடுத்த என்ன செய்வது, ஏது செய்வது என்றா மனம் எண்ணுகிறது? அதற்கு எங்கே அவகாசம் இருக்கிறது? பெரும்பாலானோரின் நிலைமை இப்படி இருக்க அப்புறம் எங்கே நகைப்பது? மனதை மகிழ்வாய் வைத்துக் கொள்வது? என்றும் நினைக்கத் தோன்றும்.
ஆனால் எதுவும் ஒரே நாளில் நிகழ்ந்து விடுவதில்லை. துன்பம் வரும்போது மனதைக் கலங்கவிடாமல் நம்வசமாக்க முடியும்.


Comments