பகல் பத்து இரவு பத்து

ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால், நான்முகனைப் படைத்தார்.
அந்த பிரம்மாவை வதம் செய்ய இரண்டு அசரர்கள் வந்தார்கள். அவர்களைத் தடுத்த திருமாலிடமும் அவர்கள் சண்டைக்கு வந்தார்கள். அந்த அசுரர்களை அடக்கி வதைத்தார் திருமால். அதனால் நல்லறஇவ பெற்ற அவர்கள், நாங்கள் உம் அருளால் சித்தி பெற்று ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்ய வேண்டும் என்று வரம் வேண்டினார்கள்.
அவர்கள் வேண்டுகோளை ஏற்ற திருமால் மார்கழி சுக்ல ஏகாதசியன்று விண்ணகத்தின் வடக்க நுழைவாயிலைத் திறந்தார். அதன் வழியாக சத்ய லோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார். அப்போது அந்த அசுரர்கள், மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சொர்க்கவாசல் திருநாளை சிறந்த உற்சவமாக அனைவரும் பூவுலகில் கடைபிடிக்க வேண்டும். அன்று அவ்வாசல் வழியே எழுந்தருளும் அனைவரும் மோட்சம் பெற வேண்டும் என்று பிரார்த்தித்தனர். திருமாலும் அதன்படியே அனுக்ரஹித்தார்.
அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசி திருநாளாக எல்லா திருமால் திருக்கோயில்களிலும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பகல் பத்து உற்சவமும் அன்று முதல் 10 நாள் இராப்பத்து உற்சவமும் கொண்டாடப்படுகிறது. பகல் பத்து, இராப்பத்த உற்சவங்களில் ஆழ்வார்களின் பிரபந்தங்கள் முழுவதுமாக எம்பெருமான் திருமன்பு பாராயணம் செய்யப்படுகிறது.
திருக்கோயில்களில் திருமாலின் திருவுருவம் நடுவில் பிரதானமாக எழுந்தருளியிருக்க ஆழ்வார்கள் ஒரு புறமம் ஆசார்யர்கள் ஒரு புறமும் எழுந்தருளியிருக்கக்கூடிய இந்த அற்புதக் காட்சியை இந்த இருபது நாள் மட்டுமே தரிசிக்கு வாய்ப்புக் கிடைக்கும்.
பொதுவாகவே திருக்கார்த்திகை முதல் விஷ்ணு ஆலயங்களில் உள்ள மூலவர்களுக்கு தைலக்காப்பு நடைபெற்றுவிடுவதால் மூலவர் தரிசனம் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று முதல் அந்த தரிசனம் மீண்டும் கிடைக்கும்.
முதல் பத்து நாட்கள் திருமங்கையாழ்வாரை முன்னிட்டு கொண்டாடப்படுவது மரபு. இதனை திருமொழித் திருநாள் என்பார். வைகுண்ட ஏகாதசி முதல் பத்து நாள் நம்மாழ்வாரை முன்னிட்டு போற்றப்படுகிறது. இதுவே திருவாய்மொழித் திருநாள் என்பார்.
இராப்பத்த கடைசி நாளில் நம்மாழ்வார் முக்தி அடைவதாகவும், மீண்டும் நம் பொருட்டு அரங்கன் அவரை நமக்குத் திரும்ப அளிப்பதாகவும் திருவிழா அமையும்.
ஆழ்வார் கோஷ்டியிலுள்ள நம்மாழ்வாரை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தாங்கலாக எழுந்தருளச் செய்து கொண்டு பெருமானின் திருவடியில் சேர்ப்பார்கள். அப்போது ஆழ்வார் திருவுருவம் முழுவதுமாக துளசி தளங்களால் மூடப்படும். இது நம்மாழ்வார் மோட்சம் அடைந்துவிட்டதை குறிக்கும்.
பிறகு நம் சார்பில் உலகம் உய்ய எம்பெருமானிடம் அர்ச்சகர், "நம்மாழ்வாரைத் தந்தருளவேணும்' என்று பிரார்த்தனை செய்வார். அப்போது சில குறிப்பிட்ட பிரபந்தங்கள் பாராயணம் செய்யப்படும். பின்பு துளசி தளங்களை விலக்கி மீண்டும் ஆழ்வார் கைத்தாங்கலாக எழுந்தருளச் செய்து கொண்டு அவருக்குரிய ஸ்தானத்தில் அமர்த்துவர். இதுவே நம்மாழ்வார் மோட்சம் எனப்படும் வைபவமாகும்.
ஒவ்வொரு திருமால் திருக்கோயிலிலும் இம்முறை கடைபிடிக்கப்படும். இதனை திருவடிதொழல் என்று அழைப்பார்கள். இதை தரிசிப்பவர்கள் பாக்கியசாலிகள்.
கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டம் சென்றவர் யாரும் இல்லாமையாலே அது மூடப்பட்டிருந்தது. ஆழ்வார் வைகுந்தம் புகுந்தபோதுதான், அதாவது வைகுண்ட ஏகாதசி நன்னாளான மார்கழி சுக்ல ஏகாதசி அன்றுதான் அத திறக்கப்பட்டது. இதனைக் கொண்டாட திருமங்கையாழ்வார் ஏற்படுத்திய வைபவமே வைகுண்ட ஏகாதசி திருவிழா என்பர்.

Comments